சென்னை நினைவுகள் - உண்மைத்தமிழன் (விருந்தினர் பத்தி)
1995-ம் ஆண்டு ஜனவரி 1. என் வாழ்க்கையில் நடந்த திருப்பங்களில் முதன்மையானது சென்னையில் கால் பதித்த இந்த நாள்தான். சென்னையில் நான் பார்க்கச் சென்று மீள முடியாமல் மூழ்கியது கன்னிமாரா நூலகத்தில்தான். திண்டுக்கல், மதுரை என்று வாசம் செய்த ஊர்களிலெல்லாம் நூலகங்களை இரண்டாவது வீடாக வைத்திருந்த நான் சென்னைக்கு வந்ததும் முதல் ஞாயிற்றுக்கிழமை கன்னிமாராவில்தான் கழித்தேன். எத்தனை, எத்தனை புத்தகங்கள்? படிக்க நேரம்தான் கிடைக்கவில்லை. இப்போதும் தொடர்ந்து பத்து வருடங்களாக அந்நூலகத்தின் உறுப்பினராக இருந்து வருகிறேன். தொடர்ந்து சென்னையை வலம் வர ஆரம்பித்தேன் புது மாப்பிள்ளை, பொண்ணுடன் ஊர், ஊராகச் சென்று விருந்து சாப்பிடுவானே அது மாதிரி.. எப்போதும் எனக்குப் பிரியத்திற்குரிய சினிமா தியேட்டர்களை, சாயந்தர வேளைகளில் குத்தகைக்கு எடுக்க ஆரம்பித்தேன். தமிழ்ப் படங்களைவிட ஆங்கிலப் படங்களே எனக்கு அதிகம் பிடித்தன. தேவி, சத்யம், ஆனந்த் மூன்று காம்ப்ளக்ஸ்களிலும் ஒரு விடுமுறை நாளில் நான்கு ஷோவும் பார்த்துவிட்டுத்தான் சைக்கிளில் அசோக் நகர் சென்றடைவேன். அன்றைக்கு எனக்கு இருந்த சினிமா ஆசையை வெறியாக மாற்றி என்னை வெறிநாய் கணக்...