ஏதோ வண்டி ஓடிக்கினுகீது சார்! - ஜெயகாந்தன்

னது நரைத்த மீசையைக் கம்பீரமாக நீவிக்கொண்டு - ''வண்டியா ஸார் வேணும்?'' என்று ஜட்காவுக்குள்ளே படுத்து இருந்த துரைசாமி மிகவும் மரியா தையாக வண்டியைவிட்டுக் கீழிறங்கி நின்றார்.
 ''நீங்க எத்தனை வருஷமா ஜட்கா ஓட்டிக்கினு இருக்கீங்க?'' என்ற ஒரு கேள்விதான் நான் கேட்டேன். மனுஷன் ஒரு பேட்டிக்கு அல்ல - ஒரு சிறு கதைக்கு அல்ல - ஒரு நாவலுக்கு வேண்டிய விஷயங்களை ஓர் இலக்கியத்தில் வரும் குணச்சித்திரம் போன்று சொல்லஆரம் பித்துவிட்டார். அவ்வளவு சுவை யாக என்னால் அவற்றைத் திருப்பிச் சொல்ல முடியாது என்பதை ஒப்புக்கொள்கிறேன்.
''அம்பது வருஷத்துக்கு மேலே ஆயிடுச்சி ஸார், நானும் ஜட்கா ஓட்ட ஆரம்பிச்சு'' என்று தொடங்கியவுடன், தொடக்கத்திலேயே உதடு பிதுக்கலுடன் ஒரு (ஜீணீusமீ) நிதானம். ''அப்போஎல்லாம் ஸார்'' என்று சொல்லி, ஒரு சிறு மௌனம்... அப்புறம் மீசை நீவல்... உதடுகளுக்குள் ஓர் ஏலாமைச் சிரிப்பு... பின்னர் ஒரு பெருமூச்சு!
''ம்... இப்பத்தானே டாக்சிங்க, காருங்க எல்லாம் வந்துடுச்சு. இந்தத் தொயிலுக்கு மரியாதியே பூடிச்சு ஸார்... அந்தக் காலத்திலே வண்டிகளும் குதிரைங்களும் என்னமா இருக்கும் தெரியுமா? அப்பவல்லாம் தெருவுங்கள்ளே இந்த மாதிரி எலக்டிரி வெளக்குஎல்லாம் ஏது? கிருஷ்ணாயில் லைட்டுதான் ஸார் எரியும். சிந்தாரிப்பேட்டை, டவுனு, வண்ணாரப்பேட்டை, ராயபுரம்... இதெல்லாம் துண்டு துண்டா ஊருங்க... எயும்பூருக்கும் நுங்கம்பாக்கத்துக்கும் நடுவுலே ஒரே காடு ஸார். ஜட்கா வண்டிக்காரன் ஏயு மணிக்கு மேலே வர மாட்டானே. ஒரே திருட்டு பயம். வயிமறிச்சி அடிப்பானுங்க... அப்படியெல்லாம் 'ஓ’ன்னு கெடந்த பட்டணம் ஸார்... இப்ப சொலிக்குது.
அப்பல்லாம் காருங்க ஏது? தொரைமாருங்க ஒருத்தர் ரெண்டு பேருகிட்டே காரு இருக்கும். மத்த பெரிய மனுஷாளுங்கள்ளாம் - வக்கீலுங்க, டாக்டருங்க, ஆபீசருங்க எல்லாரும் ஜட்கா விலேதான் போவாங்க. அப்பல் லாம்... குதிரைங்களும், வண்டிங் களும் சும்மா 'சம்னு’ இருக்கும் ஸார் அந்தக் காலத்திலே. சவாரி நெறையா இருந்தாத்தானே ஸார் கொஞ்சம் வண்டியே ஸோக் பண்ணி வெச்சிக்கலாம்? இங்கே தான் ஈ ஓட்டுதே! தோ பாரு ஸார் கீஞ்சி போன பாயி, கித்தான் - இத்தே போட்டு டாப் இருக்குது. மாத்தணும். துட்டுக்கு எங்கே போறது? சம்பாரிச்சாலும் இல்லாகாட்டியும் குதிரைக்கு மூணு ரூவா தீனி ஆவுது. நம்ப எப்பிடியோ தள்ளிக்கலாம். அது பாவம், வாயில்லா சீவனாச்சே... அது கண்ணுலேருந்து ஒரு சொட்டு தண்ணி தரையிலே உய்ந்தா, குடும்பமே அயிஞ்சு போயிடும் ஸார்... நம்ப வாத்தி யார் முஸல்மான் ஒருத்தர் இருந்தாரு; அவரு அவங்க பாஷையிலே சொல்லுவாரு'' என்று உருதுவில் நீளமாகப் பழமொழி சொல்லி விட்டு ''எனக்கு ரெண்டு மூணு பாஷை தெரியும் ஸார்'' என்று பெருமைப்பட்டுக் கொள்ளுகிறார் துரைசாமி.
''நம்ப குதிரை ரொம்ப அறிவு ஸார்... வூட்டெ வுட்டு கௌம்பினா நேரா டீக்கடையாண்ட வந்து நின்னுக்குது ஸார். நான் டீக் குடிக்கறனோ இல்லையோ, இதுக்கு ரெண்டு கடலை முட்டாயி, இல்லாட்டி பிஸ் கோத்து எதுனாச்சும் வாங்கிக் குடுத்துடணும். பாவம், கொயந்தை மாதிரி ஸார்.
அந்தக் காலத்திலே தாசிங்களுக்கெல்லாம் நான் வண்டி ஓட்டி இருக்கிறேன் ஸார். ரத்தினக் கம்பளம் போட்டுத் தாம்பாளத்திலே வெத்திலை பாக்கெல்லாம் வெச்சிக்கினு ரொம்ப ஸோக்கா குந்திக்கினு வருவாங்க. வண்டிக்கே, அவங்க குந்திக்கினா ஒரு அலங்காரமா இருக்கும் ஸார்.
நெறைய சம்பாதிச்சேன் ஸார் அப்போ. ஆந்திரா ஸைட் எல்லாம் கொஞ்ச நாளு போயி சுத்திக்கினு வந்தேன். இப்ப ஆவுதே ஸார் எனக்கு அறுவத்தஞ்சிக்கு மேலே... இருபத்தி அஞ்சி வயசிலே சிந்தாரிப் பேட்டையிலே ஒரு ஐயிரு வூட்லே வண்டி ஓட்டிக்கினு இருந்தேன். அப்பத்தான் கண்ணாலம். ஐயிருதான் செஞ்சு வெச்சாரு... நானு பாத்து ஆசைப்பட்டேன், அவரு முடிச்சி வெச்சாரு. ஒரு பையன் இருக்கான். பொண்ணு இருக்குது. சம்சாரம் இல்லே... பொண்ணு தான் சமைச்சுப்போடுது.
இப்ப யாரு ஸார் ஜட்கா வண்டியிலே ஏர்றாங்க? ஜென்லாஸ்பித்திரியிலே பொணம் உயுந்தா ஏத்திக்கிற சவாரிதான்... அந்த சவாரிக்கி எம்மாம் போட்டி ஸார்! அப்பாலே ஆந்திராக்காரங்க வந்தாங்கன்னா சவாரி. ஆந்திராக்காரங்க நல்லவங்க ஸார். கவுடு, சூது தெரியாது. அவங்களைப்பத்தி நம்ப குதிரைக்கே தெரியும் ஸார்... ஸென்ட்ரல் டேசன்லே ஆந்திராக்காரங்களை ஏத்திக்கினாக்கா நம்ப குதிரையே ரூட் போட்டுக்கினு பூடும் ஸார்... எப்படித் தெரியுமா?
உயிர் காலேசு, பீச்சு, செத்த காலேசு - என்.டி.ராமாராவ் வூடு... வாஹினி ஸ்டூடியோ - இப்படி வரிசையாப் பூடும் ஸார் - அன்னிக்கி கொஞ்சம் நல்ல துட்டு - குதிரைக்கும் நல்ல தீனிதான்!
குதிரையெ - மாடு, கழுதை மாதிரி தரையிலே படுத்துக்கினு இருந்து பார்த்திருக்கியா, ஸார்? யாரும் மனுஷாளுங்க இல்லாத நேரம் பாத்துப் படுக்கும். ஆளைக்கண்டா எய்ந்திருச்சிக்கும்... அவ்வளவு கருவம் அதுக்கு - படுத்துக்கினு இருந்திச்சின்னா அது குதிரையா, ஸார்? மணல்லே கொண்டுபோயி வுட்டா பொறண்டு எந்திருச்சு உதறிக்கும்... இவ்வளவு கவுரதையா இருக்குதுல்லே - ஆனா, சமயத்திலே வண்டியோட ரோட்மேலே படுத்துக்குனு சண்டித்தனம் பண்ணும். நாம்ப பேசறதெல்லாம் கூட அதுக்குத் தெரியும் ஸார்... நான் நம்ப குதிரை கையிலே பேசிக்கினு இருப்பேன்... அதுவும் கவனமாக் கேக்குது ஸார்.
எப்பவும், வண்டிக்கு பொட்டை தான் ஸார் நல்லது. ஆண் குதிரையும் வெச்சிக்கலாம். சமயத்துலே பொட்டைக் குதிரையைக் கண்டா வண்டியோட போயி மறிக்கும்... ஆம்பளைக் குதிரை வெச்சிருக்கறவங்க அத்தே சாக்கிரதையாப் பார்த்துக்கணும். பொட்டையின்னா பரவாயில்லே. ஜோடி சேர்ந்துக்கினா நமக்குக் குட்டி லாபம். ஆனா, ஆண் குதிரைக்கி இடுப்புப் பூடும் ஸார். அதுக்கோசரம்தான்...
ஒரு தபா - சிந்தாரிப்பேட்டை ஐயிரு வூட்டுலே வேலை செஞ்சிக்கினு இருந்தப்போ - அங்கியும் பொட்டைக் குதிரைதான் - என் சிநேகிதக்காரன் ஒருத்தன் இன்னொரு எடத்திலே வண்டி ஓட்டிக்கினு இருந்தான். அவங்கையிலே இருந்தது ஆண் குதிரை. ஒரு நாளு அவனும் நானும் வயிலே பார்த்துக்கினோம். இதுங்களும் - எதுங்களும்? குதிரைங்களும் பாத்துக்கிச்சுங்களாங் கட்டியும்... அவங் குதிரை வந்து வந்து நம்ப குதிரையை மறிக்குது ஸார். இதுவும் அதுங்கிட்டே பாஞ்சி பாஞ்சிக்கினு போவுது ஸார்! அதுவும் மனுஷாள் மாதிரி தானே ஸார்? ஆண்டவன் அந்த வாயில்லா சீவனை வண்டியிலே பூட்டறதுக்கோசரம் மட்டுமா படைச்சிருக்கான்? நான் ஆசைப் பட்ட பொண்ணுக்குக்கூட அம்மாங் கஸ்டப்படல்லே ஸார்... இந்த ரெண்டு வாயில்லா சீவன் களைச் சேத்து வெக்கறத்துக்கோசரம் ரொம்பப் பாடுபட்டேன் ஸார்... அவன் மொதலாளிக்குத் தெரியாமெ என் சிநேகிதக்காரன் கையிலே இருவது ரூவா லஞ்சம் குடுத்து, இருட்டின அப்புறம் நீ அந்தக் கைக்கா வா, நான் இந்தக் கைக்கா வரேன்னு நேப்பியர் பார்க்காண்ட வந்து ஜோடி சேத்தோம் ஸார். அப்பல்லாம் குதிரை வண்டிக்காரன்னா ஜாலியா இருப்பான் ஸார். ம்... அதெல்லாம் ஒரு காலம்... இப்ப நம்பளுக்கு வயசு ஆச்சு. காலமும் மாரிப் பூடிச்சி... ஏதோ, வண்டி ஓடிக்கினுக்கீது... ஸார்!''

நன்றி: விகடன்.

Comments

Popular posts from this blog

மெட்ராஸ் பாஷை - ஒரு இலக்கண பார்வை

எழுத்தறிய நூலகங்கள்