Sunday, December 31, 2006

சென்னையும் குற்றங்களும்

பொதுவாகத் தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் நடக்கும் குற்றங்களை விசாரித்து குற்றவாளிகளைக் கண்டு பிடிப்பதில் நமது காவல் துறையின் பணி பாராட்டுக்குரியது.

வெளி மாநிலத்திலிருந்து வந்து சட்டசபை உறுப்பினரைக் கொலை செய்த குற்றத்தைக் கண்டுபிடித்தாகட்டும், குழந்தை ஒன்றை கடத்தி பணம் பறிக்க முயன்று உயிரைப் பறித்து விட்ட மாணவர்களின் செயலாகட்டும், தமது கடன் தொல்லையை மறைக்க களவு நடந்ததாக நாடகமாடிய தம்பதியினரின் குட்டை உடைத்ததிலாகட்டும், காவல் துறை வேகமாகச் செயல்பட்டு செயலின் அடிவேரைக் கண்டு பிடித்து விட்டது.

அதன் பிறகு நீதிமன்றங்களில் வழக்கு நடத்தி தண்டனை வாங்கிக் கொடுப்பதில் நீண்ட தாமதம் ஏற்படுவது ஒருபுறம் இருந்தாலும், 'தவறு செய்தால் அதை மறைத்து வாழ்ந்து விட முடியாது' என்று நம்பிக்கை குற்றவியல் துறையிலாவது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. சரவணபவன் அதிபராக இருந்தாலும் சரி, காஞ்சி மடத் தலைவராக இருந்தாலும் சரி 'குற்றம் குற்றமே!' என்று செயல்பட முடிவது சமூக அமைப்புக்கு அவசியமானது.

'எவ்வளவுதான் திட்டமிட்டு புத்திசாலித்தனமாகச் செயல்பட்டாலும் குற்றங்களை தடயம் இல்லாமல் மறைக்க முடியாது' என்பது ஷெர்லக் ஹோம்ஸ் தத்துவம். ஒரு நிகழ்வு நடக்கும் போது, பல நூறு கண்கள் சாட்சிகளாக இருக்கும் வாய்ப்புகள் உண்டு. குற்றத்திற்கு முந்தைய பல நாட்களின், குற்றம் நடந்த பிறகு பல் நாட்களின் ஒவ்வொரு அசைவும் தனது தடங்களை விட்டுப் போயிருக்கும்.

துப்பறியும் அலுவலர்கள் அரசியல் குறுக்கீடு இல்லாமல் சொந்த விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்து விட்டு, ஐம்புலன்களையும் விழிப்பாக வைத்துக் கொண்டு குற்றத்தில் தடயங்களைப் பின்தொடர்ந்தால் குற்றவாளியைப் பிடித்து விடலாம். அப்படி பிடித்து விடும் திறனைக் கொண்டுள்ள சென்னை காவல்துறைக்கு பாராட்டுக்கள்.

Tuesday, December 26, 2006

பீட்டாவுக்கான சோதனை

சோதனை-1
சோதனை-2
சோதனை-3

Wednesday, December 06, 2006

27Dபொழுது போகாமல் விட்டத்தைப் பார்த்து யோசித்துக்கொண்டிருந்த போது தோன்றிய திட்டம் இது. உடனடியாக செயல் படுத்திப்பார்க்க, முதல் நாள் இரவே பட்டினப்பாக்கத்தில் ஒரு நண்பரின் வீட்டில் போய் 'டேரா' போட்டாகி விட்டது.
முதல் பேருந்து அதிகாலை 5.15க்கு என்று முன்னமே விசாரித்து வைத்து விட்டதால் இரவு கைப்பேசியில் அலாரம் வைத்து படுத்து விட்டேன். எப்போதும் படுத்தவுடனே சுழல் மறந்து கனவுகளில் கிழவிகளுடன் (வயசாகிடுச்சுல்ல!) கொஞ்சப் போய் விடுவது வழக்கம். ஆனால்.. அன்றைய இரவு ஏனோ உறக்கம் பிடிக்கவே இல்லை. புதிய இடம் என்பதால் இருக்கலாம். இப்படியும், அப்படியுமாக புரண்டு படுத்ததிலேயே அதிகாலை நான்கு மணியாகி விட்டது. எழுந்து காலைக்கடனை முடித்து, குளிர்ந்த நீரில் குளியல் (நம்புங்க! நெசமாத்தாங்க!!) போட்டு, பட்டினப்பாக்கம் பேருந்து நிலையம் வந்து விட்டேன்.

திட்டம் இது தான்.

நான் தினமும் வேலைக்கு போகும் (வித்லோகா-மைலாப்பூரில் இருக்கிறது) பேருந்து 27D. பட்டிணப்பாக்கம் T0 வில்லிவாக்கம். வட சென்னையையும் தென்சென்னையையும் இணைக்கும் பேருந்துகளில் இதுவும் ஒன்று. இதில் முதல் இரு ரவுண்ட் பயணத்தில் பயணிக்க வேண்டும். அதை பதிவு செய்ய வேண்டும். அவ்வளவே!


முதல் பயணத்திற்கு தயாராக பல பேருந்துகள் நின்றுகொண்டிருந்தன. நமக்கான பேருந்தைக் காணவில்லை. நிலையத்துக்குள் இருந்த தேனீர் கடையில் சக்கரை குறைவாய் தேனீருக்கு சொல்லி விட்டு, சிகரெட்டைப் பற்ற வைத்தேன். பாக்கெட்டில் இருந்த செல்போன் சிரித்தது. எடுத்துப் பார்த்தேன். "வந்துகொண்டே இருக்கிறேன். கடையில் டீ குடித்துக்கொண்டிரு!" என்று குறுஞ்செய்தி வந்திருந்தது.
அனுப்பியவர் நாம் பயணிக்கப் போகும் பேருந்தின் ஓட்டுனர் பழநி.

தேநீர் குடித்து, சிகரெட்டும் முடியும் போது வந்து சேர்ந்தார் பேருந்துடன். வண்டியை நிறுத்தி விட்டு பழநியும், நடத்துனர் சபாபதியும் தேநீர் குடிக்க வந்தனர். குடித்து விட்டு, பேசியபடியே வண்டியில் ஏறினோம். தலையில் முக்காடு போட்டு ஒரே ஒரு பெண்மணி மட்டும் அமர்ந்திருந்தார்.

அவருக்கு டிக்கெட் கொடுத்து விட்டு முன்னால் நான் இருந்த இருக்கைக்கு அருகில் வந்து விட்டார் சபாபதி.

இவர்கள் இருவரும் ஒரே வருடத்தில், ஒரு நாள் வித்தியாசத்தில் பணிக்கு சேர்ந்தவர்களாம். இவ்விருவரும் தொடக்கத்தில் வழித்தடம் எண் ஒன்றில் பணியாற்றிக்கொண்டிருந்தவர்கள். அதிலிருந்து இந்த வழித்தடத்திற்கு மாற்றப்பட்டவர்களாம். பணிக்குச் சேர்ந்த இந்த பதின்மூன்று வருடங்களாக ஒரே தடத்தில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். பணி அனுபவம் போல, இவர்களது நட்பும் பதினோரு வருடங்களாக தொடர்ந்து வருகிறது.

சரி! பயணக்குறிப்பிற்கு திரும்பலாம்.
பட்டினப்பாக்கத்திலிருந்து கிளம்பிய பேருந்து ஆர்ச் நிறுத்தம் வந்தவுடன் மேலும் நான்கு பெண்களும் இரண்டு ஆண்களும் ஏறிக்கொண்டார்கள். இங்கு ஏறிய பெண்களும் குளிர்க் காற்றுக்கு பயந்து முக்காடு போட்டிருந்தார்கள். கல்யாணி மருத்துவமனை நிறுத்தத்தில் ஒருவர் ஏறிக்கொண்டார். அங்கு இரண்டு பெண்கள் இறங்கிக்கொண்டார்கள்.

கடைசியாக ஏறியவர் தவிர மற்றவர்கள் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியை அடைவதற்குள் அடுத்தடுத்த நிறுத்தங்களில் இறங்கிக்கொண்டார்கள்.(அவர்கள் அனைவரும் மாநகராட்சியின் துப்புரவு பணியாளர்களாம்) பேருந்து டி.வி.எஸ் வரை காலியாக வந்தது. சாந்தி நிறுத்தத்தில் ஏழெட்டு பேர் ஏறிக்கொள்ள பயணம் தொடர்ந்தது. எக்மோரில் பத்துக்கும் அதிகமானோர் ஏறிய பின் தான் பேருந்து களைகட்டியது. அபிராமி தியேட்டர் வழியாக இ.எஸ்.ஐ வந்து அயனாவரம் சிக்னலில் இடது பக்கம் திரும்பி வில்லிவாக்கம் நோக்கி பேருந்து வேகமெடுத்தது.

வில்லிவாக்கத்தை சரியாக 6.25க்கு போய் அடைந்தோம். அது வரை முதல் பயணத்தில் பயணம் செய்திருந்த மொத்த பயணிகளின் எண்ணிக்கை வெறும் நாற்பது மட்டுமே! அடுத்த ரவுண்ட் 6.55க்கு துவங்கியது. இப்போது பெருவாரியாக எல்லா இருக்கைகளிலும் ஒரு பயணியாவது அமர்ந்து விட்டார்கள்.

கீழ்பாக்கம் மருத்துவமனை வருவதற்குள்ளாக எல்லா இருக்கைகளும் நிறைந்து, எட்டுப்பேர் நின்றுகொண்டிருந்தார்கள். சென்னையில் வழக்கமான முறையை தவிர்த்து, எல்லா பயணிகளிடமும் தானே சென்று பயணச்சீட்டு கொடுத்து வந்தார் நடத்துனர் சபாபதி.

எக்மோர் ரயில் நிலையத்தில் கொஞ்சம் பேர் இறங்கினார்கள். அதை விட, அங்கு ஏறிய பயணிகளின் எண்ணிக்கை அதிகம். அந்த கூட்டத்திலும் நீச்சலடித்தபடியே முன்னுக்கு வந்து சீட்டு கொடுத்து விட்டுப்போனார் நடத்துனர். (பொதுவாக சென்னை பேருந்துகளில் நடத்துனர்கள் பின் வாசல் அருகில் இருக்கும், தங்களது இருக்கையில் ஃபெவிகால் போட்டு அமர்ந்து இருப்பது தான் வழக்கம்.)

டி.வி.எஸ் நிறுத்தத்தில் கொஞ்சம் பேர் இறங்கினார்கள். முதல் பயணத்தை விட, இரண்டாவது பயணம் கொஞ்சம் உற்சாகம் தரக்கூடியதாக இருந்தது. காரணம், ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவிகள் அதிக அளவில் இருந்தது தான் என்று தனியா சொல்ல வேண்டுமா என்ன? அந்த கூட்டத்திலும் ஓட்டுனரும், நடத்துனரும் சொல்லும் தகவல்களையெல்லாம் குறிப்பெடுத்த படியே வந்து கொண்டிருந்தேன்.

அமெரிக்கன் எம்பஸி (ஆக்ஸ்போர்ட் பிரஸ் நிறுத்தம்) வந்ததும் மாணவிகள் இறங்குவதற்கு ஆயத்தமானார்கள். அப்போது நீலவண்ண சுடிதார் போட்ட ஒரு மாணவி என்னை நோக்கி வந்தார்.

"அங்கிள்! நீங்க ப்ரஸ்ல வேலை பாக்குறீங்களா?" என்று அப்பெண் கேட்டதுமே என் உற்சாகம் காலின் பெருவிரல் வழி கரைந்து வெளியேறி விட்டது.

"இல்லை" யென்பது போல சுரத்தில்லாமல் தலையாட்டினேன்.

"குறிப்பெல்லாம் எடுக்குறீங்களேன்னு கேட்டேன். எனக்கும் ஜர்னலிட் ஆகனும்கிறது தான் கனவு" என்று எனக்கு மேலும் வெறுப்பேத்தினார் அந்த நீல சுடிதார்.

"ஜர்னலிட் படிச்சுட்டு, விஷ்வல் மீடியாவுக்கு போங்க.., அங்க தான் சம்பளமும் நிறைய கொடுப்பாங்க" என்றேன் வெறுப்பை முகத்தில் காட்டாமல் சிரித்தபடி.

"ஓ..! டாங்க்ஸ் அங்கிள்" என்று மறுபடியும் ஒரு அங்கிள் சொல்லிவிட்டு இறங்கினார் நீல சுடிதார்.

நரைத்து போன தலையையும், வயதாகிப்போன உடம்பையும் மனதில் திட்டிக்கொண்டே பயணத்தை தொடர்ந்தேன். கல்யாணி மருத்துவமனையில் கொஞ்சம் பேரும், கலங்கரை விளக்கம் மற்றும் சாந்தோம் சர்ச்சில் மீதி கொஞ்ச பேரும் இறங்கினார்கள்.

பேருந்து பட்டினப்பாக்கத்தை அடையும் போது நேரம் 8.20, கடைசி நிறுத்தத்தில் பேருந்தில் என்னையும் சேர்த்து ஆறு பேர் தான் இருந்தோம். இரண்டாவது பயணத்தில் மொத்தம் பயணம் செய்திருந்தவர்களின் எண்ணிக்கை இருநூற்றி மூன்று பேர்.பட்டினப்பாக்கத்திற்கும் வில்லிவாக்கத்திற்கு இடைப்பட்ட தூரம் வெறும் இருபது கிலோமீட்டர் தான். ஆனால் பேருந்து பயண நேரம், ஒருமணி நேரம் இருபது நிமிடங்கள் ஆகிறது. காரணம் இந்த வழித்தடத்தில் மொத்தம் முப்பத்தியொன்பது நிறுத்தங்களும், பதினெழு சிக்னல்களும் இருக்கின்றன. அனேகமாக சென்னையில் ஓடும் வழித்தடங்களிலேயே இது தான் அதிக சிக்னல்களை கடக்கும் பேருந்தாக இருக்கும்.

சாந்தோம் சர்ச், கலங்கரை விளக்கம், ஆல் இந்தியா ரேடியோ, கல்யாணி மருத்துவமனை மற்றும் ஸ்டெல்லா மேரிஸ், அண்ணாசாலை, எக்மோர், கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை, ஐ.சி.எப் போன்ற முக்கியமான இடங்களை இந்த பேருந்து இணைக்கிறது. அயனாவரத்திலிருந்து எட்டு, மந்தைவெளி பணிமனை மூலம் எட்டு என்ற கணக்கில் மொத்தம் பதினாறு பேருந்துகள் தினம் இயக்கப்படுகின்றன.

நோயாளிகள், வெளியூர்ப் பயணிகள், வியாபாரிகள், கனவுகளைச் சுமந்து வரும் கல்லூரி மாணவிகள் என்று சகலதரப்பினரையும் சுமந்து போகும் இந்த 27D, மாநகரப்போக்குவரத்து துறையில் லாபகரமாக இயங்கும் வழித்தடங்களில் ஒன்று.