Monday, January 29, 2007

முழு சென்னைவாசியாக 50 டிப்ஸ்

இன்னா நைனா? ஊருக்கு புச்சா? மொதல்ல இத படிச்சு கரீக்டா ஃபாலோ பன்னேன்னு வெச்சுக்க, நீ மெய்யாலுமே 100 பர்சன்ட் சென்னைவாசி ஆயிடலாம்...1. சினிமா சூட்டிங்னு நின்னு வேடிக்கை பார்த்து தொலையாதீங்க. அது நிஜ என்கவுன்ட்டரா இருக்க போகுது.


2. "சென்னைக்கு வந்துட்டோம்டா" அப்படீன்னு ஒரு பெருமிதம் உங்களோட வந்து ஒட்டிக்கும் (ஹி..ஹி..எனக்கு ஒட்டிகிச்சு இல்ல), அந்த பெருமிதத்தோட சென்னைல கால் வைக்கவும். முடிஞ்சா வலது கால வைக்கவும் (BTW, இப்படி யோசிக்கிற நேரத்துல ஏதாவது ஒரு பிக்பாக்கெட் உங்ககிட்ட வேலையை காட்டிடலாம், உசார் மாமே).


3. ஊருக்கு வந்து இறங்கி சென்ட்ரலோ அல்லது கோயம்பேடிலோ வெளியே வந்ததும், மேலே ஏதாவது ஏரோப்ளேன் சத்தம் கேட்டா அங்கேயே நின்னு வானத்தையே அன்னாந்து பார்க்கனும். (எப்படி அவ்ளோ பெரிய ஏரோப்ளேனுக்கு பெயின்ட் அடிப்பாங்கன்னு கேக்கக்கூடாது).


4. "மெட்ராஸ்லல்லாம் ஆட்டோகாரங்க நல்லா ஏமாத்திடுவாய்ங்கடா"-ன்னு எவனாச்சு ஒரு ஃபிரென்டு கண்டிப்பா உங்ககிட்ட சொல்லியிருப்பான். அதனால் கோயம்பேடிலோ, சென்ட்ரலிலோ இறங்கியதும், ஆட்டோ பிடிக்கிறத நிப்பாட்டனும். எவ்ளோ தூரமானாலும் நடராஜா சர்வீஸ், இல்ல அடிச்சு புடிச்சு மூட்டை முடிச்சோட பஸ் தான்.


5. இல்ல, உங்கள வரவேற்கரத்துக்குன்னே ஒரு இளிச்சவாயன் வந்து காத்திட்டிருப்பான். அவன பஸ்/இரயில் டிக்கெட் எடுக்க விட்டுடனும், ஏன்னா, அடுத்த நாள்ளேருந்து நீங்க தானே அவனுக்கும் சேர்த்து செலவு செய்யப் போறீங்க...("ப்ச், இரு மாப்ளே. நான் கொடுத்திருப்பேன் இல்ல").


6. வந்த மொத நாள் கண்டிப்பா பீச்சுக்கு போயிடனும், ஆமாம். உங்க பிரண்டோட போனீங்கன்னா அங்க 'எப்போ எப்போ என்னென்ன எங்கெங்கே' நடக்கும்ன்னு டூரிஸ்ட் கைடாட்டம் எக்ஸ்பிளெய்ன் பன்னுவார்.


7. கூட வந்தவன் இந்த ஊருல எப்படியெல்லாம் நடந்துக்கனும்னு கிளாஸ் வேற எடுப்பான். கவனமா கேட்டுக்கோங்க.


8. ஊருல பாக்க முடியாத 'படங்கள்' எல்லாத்தையும், இங்கன ஃப்ரீயா (டிக்கெட்டோடத்தான்) பாத்துடலாம்.


9. உச்சா போக இடமெல்லாம் தேடிக்கொண்டிருக்க அவசியமில்லை, இந்த சிங்கார சென்னையில். யாதும் டாய்லட்டே. ஜஸ்ட் ஜமாய்.


10. ரோட்டுல இருக்கிற சிக்னல் எல்லாம் வண்டியில போறவங்களுக்குத் தான். அதனால எப்போ வேணும்னாலும் ரோட்ட க்ராஸ் பன்னலாம். வண்டிகளும் க்ராஸ் பன்னும், உங்க மேல. (அதுகென்ன, ஒரு இன்சூரன்ஸ் எடுத்திட்டாப் போச்சு).


11. இங்க சிக்னல்ல தனக்கு பச்சை விழுந்ததும் நகர ஆரம்பிக்கறத விட, அடுத்தவனுக்கு மஞ்சள் விழ ஆரம்பித்ததும் பாதி ரோட்டுக்கு வந்துடுறவங்கதான் ஜாஸ்தி.


12. அட! இவங்களாவது பரவாயில்ல, மஞ்சள் விழுந்ததும் ஸ்லோ ஆகிடனும்ங்கிற தப்பான ரூல ஒடைக்க, சிகப்பு விழுந்த பிறகும் ரோட்ட க்ராஸ் பன்னுறவங்க தான் அதிகம். இதுக்கு எங்க ஊருல சொல்லுற டெக்னிகல் வேர்டு 'சிக்னல் ஜம்ப்'. (ஒருவேளை, ரெட்டுக்கு மேல நாலாவதா ஒரு கலர எதிர்பாக்குறாங்களோ?).


13. க்ரீன் விழுந்ததும், பத்து வண்டிக்கு பின்னால இருக்கிறவனும் ஹாரன் அடிச்சுட்டே இருப்பான், என்னவோ அவனுக்கு முன்னால நிக்கிறவனெல்லாம் வேண்டுதலுக்காக நிக்கிறவன் மாதிரி. கண்டுக்காத.


14. டிராஃபிக் போலீஸ்காரங்க வண்டிய நிப்பாட்டுனா, 'லொள்ளு சபா' மனோகர் ஸ்டைல்ல 'நாங்கல்லாம் ஐ.ஜி.யோட ஒன்னுவிட்ட சித்தப்பாக்கு ரெண்டாவது சம்பந்திக்கு வேண்ண்ண்ண்ண்டியவங்க'-ன்னு கையை ஆட்டிட்டே சொல்லிப்பாருங்க. 10/- ரூ வரை ரிடக்க்ஷன் கிடைக்கும்.


15. தலைகவசம் உயிர்கவசம்னு என்னதான் கவர்மென்ட் கத்தினாலும், இரண்டு கவசமும் போடாம போறது தான் எங்க ஸ்டைலு. இத கரெக்டா ஃபாலோ பன்னிட்டீங்கன்னா 'அந்த நாள் மட்டும் தான் உனக்கு கடைசி நாள்'.


16. எங்க எங்க ட்ராபிக் ஜாஸ்தியா இருக்குன்னு ரேடியோ மிர்ச்சி சுசித்ரா கரெக்டா சொல்லுவாங்க. ஏன்னா, ஜாம் பன்னினவனும் ரேடியோ மிர்ச்சி கேட்டுட்டு தான் ஜாம் பன்னியிருப்பான்.


17. படம் பாக்க தியேட்டர் போறீங்கன்னு வெச்சிக்கங்க, டிக்கெட் 40 ரூபான்னா கையில 80 ரூபாவாவது இருக்கனும். ஏன்னா, color படம்னாலும், டிக்கெட் Black தானே.


18. என்னதான் லைன்ல நின்னு டிக்கெட் வாங்கினா சீக்கிரம் வாங்கிடலாம்னாலும், முண்டி அடித்து வாங்குதல் சென்னைவாசிக்கு அழகு.


19. 'எச்சில் துப்பும் பழக்கம் உள்ளவர்கள், தியேட்டரின் இரு பக்கமும் இருக்கும் கடைசி இருக்கைக்கு போகவும்'-ன்னு போர்டெல்லாம் எதிர்பார்க்க கூடாது. நாமளே புரிஞ்சிக்கனும்.


20. சென்னைல பான்பராக்கெல்லாம் தடை செய்யப்பட்டது. அதனால ஹான்ஸ் மட்டுமே யூஸ் பன்னுங்க. ஆங்காங்கே பெயின்ட் பன்னுங்க.


21. முக்கியமா நம்ம சீட்டுல கரெக்டா உக்காரக்கூடாது. அடுத்தவன் வந்து உங்களுக்கு உங்க சீட்டை கரெக்டா காட்டுவான்.


22. 'முன் சீட்டில் காலை வைக்காதே' அப்படீன்னு கரெக்டா தியேட்டர் நிர்வாகம் 'நியாபகப்படுத்திடும்'. கவலயேபடாதீங்க.


23. நாளைக்கு என்னென்ன படம் ரிலீஸ் ஆகுதுன்னு தெரிஞ்சுக்கனும்னா இன்னைக்கு ரிட்சி ஸ்ட்ரீட் போனீங்கன்னா தெரிஞ்சுக்கலாம். அங்கே தான் ரிலீஸ் ஆகப் போற படத்தோட ஒரிஜினல் டி.வி.டி கிடைக்கும்.


24. கடைசி ரெண்டு நாள் மட்டும் ஈ.பி. பில், டெலிஃபோன் பில் போன்ற இத்யாதிகளை கட்டவும். ஏன்னா, மத்த சொச்ச நாளுக்கு அங்க இருக்கிறவங்களுக்கு ரெஸ்ட் கொடுக்கலாம் இல்ல.


25. பாரதியார், காமராசர் வீடு எங்க இருக்குன்னு தெரிஞ்சுக்கிறத விட, பரங்கிமலை ஜோதி எங்க இருக்குன்னு தெரிஞ்சுகிட்டு உங்க ஜெனரல் நாலட்ஜ இம்புரூவ் பன்னிக்கோங்க. (என்னது? பாரதியார், காமராசர்லாம் யாரா?)


26. கையில ஒரு மார்க்கர் இருந்தா போதும், யாருமில்லாத நேரத்துல இரயில் பூரா உங்க so called கவிதய செதுக்கலாம்.


27. கூடவே ஒரு ப்ளேடு இருந்தா போதும், தையல் போடுறவங்களுக்கு வேலை போட்டு கொடுக்கலாம், இரயில் சீட்டை கிழித்து. ('என்னது? கட்டை சேர் போட்டிருந்தாவா? ஒரு சுத்தியல் எடுத்திட்டு போங்க...')


28. 'வழியில் சுமைகளை வைக்காதீர்கள்' அப்படீன்னு இருக்கிறதை மறைத்து அவனையே சுமையாக்கி இருப்பான். கண்டுக்காதீங்க. அவன் இறங்கியதும் அந்த இடம் உங்களுக்கு தான்.


29. டி.டி.ஈ டிக்கெட் கேட்கும் போது தான் உங்க பாக்கெட்டையே சுத்தம் பன்னனும். உங்க பாக்கெட் உள்ளார இருக்கிற எல்லா பழைய டிக்கெட்டையும் அவர்கிட்ட கொடுத்து சரியானதை தேர்வு செய்ய சொல்லுங்க. (இந்த விஷயத்துல பொன்னுங்க தான் ஹான்ட் பேக் எக்ஸ்பர்ட்ஸ்)


30. பஸ்ஸிலோ/டிரெனிலோ கடைசி நிறுத்தத்துல இறங்கிறதா இருந்தாலும், உள்ளார நெரிய்ய எடம் விட்டுட்டு, புட்ஃபோர்டு பக்கத்துல தான் முண்டியடுச்சு நிக்கனும் (கேட்டா, காத்து வாங்கன்னு சொல்லிறலாம்).


31. மழ காலத்துல சப்-வே எல்லாம் வாட்டர் டாங்கா மாறிடும். வெயில் காலத்துல உள்ளார ரொம்ப புழுக்கமா இருக்கும். 6 மணிக்கு மேல பாதுகாப்புக்கு உத்திரவாதம் இல்ல. அதனால, லெவெல் கிராசிங்க குணிஞ்சு தான் க்ராஸ் பன்னனும்.


32. குளிக்கனும்னு ஆசை இருந்தா, ஒரு தண்ணி வண்டி பக்கத்துலேயே போங்க. அஞ்சு நிமிசம் போனாலும் அதுல இருந்து சிந்துற தண்ணீலயே குளிச்சுடலாம் (பாத்துப்பா, அது கழிவுநீர் வண்டியா இருந்து தொலச்சிட போகுது).


33. எதுக்கும் பஸ் ஸ்டாஃபுக்கு 50 அடி தள்ளியே நில்லுங்க. எல்லா பஸ்ஸும் அங்க தான் நிக்கும் (அண்ணன் விவேக்கை கேளு, சொல்வார்).


34. 13Bக்கு வெயிட் பன்னுரீங்கன்னா, மொத பஸ்ஸ மிஸ் பன்னவும். ஏன்னா பின்னாடியே காலியா இன்னொரு 13B வரும்.


35. 2 ரூ டிக்கெட்டுக்கு 100 ரூ கொடுங்க. அப்போ தான் கண்டக்டருக்கும் கொஞ்சம் போல வேல கொடுத்தா மாதிரி இருக்கும்.


36. புட்போர்டு அடிக்கிறதுக்கு ஸ்பெஷல் ட்ரெய்னிங் வேணும் இல்லியா? அப்படியே பஸ்ஸ தள்ளுறதுக்கும் கொஞ்சம் ட்ரெய்னிங் எடுத்துக்கோங்க. ஏன்னா, எங்க ஊரு பஸ்ஸு அப்போ அப்போ மக்கர் பண்ணும்.


37. புட்போர்டு அடிக்கரீங்கன்னா நீல நிற / கருப்பு நிற சட்டை அனியவும். போலீஸ்காரங்ககிட்ட அந்த ரெண்டு கலர்ல தான் இங்க் இருக்கு.


38. எடம் புடிக்க எதை வேணும்னாலும் யூஸ் பன்னலாம். கர்ச்சீப், செருப்பு, ஃபைல் இப்படி. எக்ஸ்ட்ராவா ஒரு இடம் போட்டு, உங்க பக்கத்துல டீஸன்டானவருக்கு மட்டும் உட்கார இடம் கொடுக்கலாம். (அவர் பிக்பாக்கட்டா கூட இருக்கலாம், யாருக்கு தெரியும்)


39. வீட்டுல போர் அடிக்குதுன்னு வாக்கிங் எல்லாம் கிளம்பிடாதீங்க. வரும் போது 'புழுதி தான் நம்ம சட்டை'-ன்னு பாடிகிட்டே வரவேண்டியிருக்கும்.


40. ஓட்டல்ல சாப்பிடரீங்கன்னா அந்த ஓட்டல் தண்ணீரையே குடிக்கவும் பயன்படுத்தவும். வாட்டர் பாக்கெட்டை விட அது தான் உங்களுக்கு ஸேப்.


41. ஓட்டல்ல பில் கட்ட பணம் இல்லைன்னா 'கிரண்டர் ஸ்விட்ச் எங்கே?'-ன்னு அப்பிரானியா கேக்காதீங்க. அப்புறம் அதுக்கும் சேத்து(?) உங்கள மாவா ஆட்டிடுவாங்க.


42. உங்ககிட்ட யாராச்சும் வழி கேட்டாங்கன்னா தெரியலைன்னு மட்டும் சொல்லாதீங்க. சென்னை மக்கள பத்தி தப்பா இல்ல நெனப்பாங்க. அதனால ஏதாவது ஒரு வழி சொல்லி அனுப்புங்க. மறுபடியும் வழி கேட்டவர பாக்கவா போரீங்க?


43. திடீர்னு ட்ராஃபிக் ஜாம் ஆகிடுச்சுன்னு வெச்சுக்கங்க, உடனே உங்க வண்டிய ஒன்வேயில ஓட்டிட்டு போனீன்னா, ஜாமுக்கு கூட எக்ஸ்டிராவா டொமேட்டோ சாஸ் சேர்த்த மாதிரி இருக்கும்.


44. உங்க பக்கத்துல போற ஆட்டோ திடீர்ன்னு ஒரு 'S' அடிப்பான். அவன் ஸேப்பு. பயத்துல நீங்க தான் உங்க வண்டிய விட்டுடுவீங்க. அதனால, வண்டு ஓட்டுறதுன்னா கண்ண மூடிகிட்டு ஓட்டினாதான் பொழைக்க முடியும்.


45. என்னதான் டாக்குமென்ட்ஸை பக்காவா வெச்சிருந்தாலும் எப்படியும் போலீஸுக்கு பணம் கட்டித்தான் ஆகனும். ஸோ, எதுக்கு டாக்குமென்ட்ஸை பத்தி கவலைப்படுறீங்க?


46. நம்ம வீட்ட நாம தான் சுத்தமா வெச்சுக்கனும். அதனால குப்பையெல்லாம் தெருவில கொட்டிடுங்க.


47. உங்க வீட்டுக்கு பக்கத்து வீடு காலியா இருந்துச்சுன்னா, யூ ஆர் லக்கி. உங்களுக்கு பெரிய குப்பைதொட்டி கிடைச்சுதுன்னு அர்த்தம். ஜமாய்.


48. ஒரு எடத்துல மட்டும் நிறைய வண்டிங்க + மக்கள் கூடியிருந்தாங்கன்னா, அது நிச்சயம் கல்யாண மண்டபம் அல்லது டாஸ்மாக். இந்த ரெண்டுல ஒன்னு தான் இருக்க முடியும்கிறது நீயூட்டனின் நான்காவது விதி.


49. புதுசா சிமென்ட் ரோடு போடுறாங்கன்னு வெச்சுக்கங்க, அது காயுரதுக்கு முன்ன மொத வேலையா, உங்க அழகான கால் தடத்தை பதிஞ்சு அமிர்தலிங்கம்...ஐ ஆம் ஸாரி ஆர்ம்ஸ்ட்ராங் ரேஞ்சுக்கு ஒரு கலக்கு கலக்குங்க.


50. இதையெல்லாம் விட முக்கியமானது, மெட்ராஸ் எல்லை வரைக்கும் இப்படி நான் மேலே சொன்ன மாதிரி தான் டமில் பேசனும். எழுதும் போது, ஸ்பெல்லிங் மிஸ்டீக் இருந்தாலும் கண்டுக்கப்படாது. ஓ.கே?இந்த அனைத்து டிப்ஸ்களையும் கரீக்டா ஃபாலோ பன்னினா, இந்த நாள் மட்டும் அல்ல, வருடத்தின் எல்லா நாட்களும் உங்களுக்கு இனிய நாளாகவும், சென்னைக்கு கேடுகாலமாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை. இன்னா நாஞ்சொல்றது?

Saturday, January 13, 2007

குறும்பட விழா -செ.பு.க 3

சென்னை புத்தக கண்காட்சியின் பிரிவாக, சர்வதேச-தேசிய குறும்படம் மற்றும் ஆவணப் படத் திரைவிழா நேற்று புத்தக கண்காட்சியின் மூன்றாவது நாளில் தொடங்கியது. பபாசி மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் ஏற்பாடு செய்திருக்கும் இந்தத் திரைவிழா, புத்தக கண்காட்சி அரங்கத்துக்கு வெளியே, சுட்டிவிகடனின் குழந்தைகள் அரங்கத்தை அடுத்து A.K. செட்டியார் அரங்கத்தில் நடக்கிறது

செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி வந்திருந்து தொடங்கி வைத்தார்.

திரையிடப்படும் படங்கள் பற்றிய விவரம்:


முழுமையாக பார்க்க

இயக்குனர் சிவக்குமார் பேசுகையில், த.மு.எ.சங்கத்தினரின் முயற்சியில் தமிழக எழுத்தாளர்கள் பலரும் பங்குபெற்ற குறும்பட பயிற்சிப் பட்டறை போன வருட இறுதியில் நிகழ்ந்தது என்றும், அதன் தொடர்ச்சியாக, இளம் தமிழ் எழுத்தாளர்கள் பலரும், குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் எடுக்கும் வேலையில் தற்போது மும்முரமாக உள்ளனர் என்றும் குறிப்பிட்டார். மீண்டும் பிப்ரவரியில் கூடி இப்படி எடுக்கப்பட்ட குறும்படங்கள் குறித்த விவாதங்கள் நடைபெறப் போவதாகவும் தெரிவித்தார்.

[கண்காட்சி அரங்கத்திற்கு வெளியில் இருப்பதால், அநேகமாக இந்தத் திரைவிழாவுக்கு எந்தக் கட்டணமும் இல்லை என்று நினைக்கிறேன். ;)]

Friday, January 12, 2007

சென்னை புத்தகத் திருவிழா Day - 2

முதல் நாள் படங்கள் இங்கே

இரண்டாவது நாள் செய்திக்கு இங்கே

Wednesday, January 10, 2007

மைலாப்பூர் திருவிழா சில காட்சிகள்

சென்னை மைலாப்பூர் பகுதியில் இயங்கி வரும் மைலாப்பூர் டைம்ஸ் பத்திரிக்கையும், சுந்தரம் பைனான்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய மைலாப்பூர் திருவிழா ஜனவரி 4 முதல் 7ம் தேதி வரை சிறப்பாக நடந்து முடிந்தது.

கரகாட்டம், பொய்க்கால் ஆட்டம், நாடகம், இசை விழா, குழந்தைகளுக்கான போட்டி மட்டுமன்றி, இல்லாத்தரசிகளுக்கான போட்டிகள், கோலப்போட்டி, சமையல் போட்டி என நான்கு நாட்கள் ஒரே ஜமாய் தான்.

தினமும் அத்திருவிழாவினை கவர் செய்து செய்திகள் தர திட்டமிட்டிருந்தோம். ஆனால் அது நிறைவேறாமல் போனது. தனிப்பட்ட பணிகளினால் குழு உறுப்பினர்கள் அனைவருமே சிக்குண்டு போனோம்.

அதனால் முழுவிழாவினையும் கவர் செய்ய முடிய வில்லை. அவ்வப்போது எட்டிப்பார்த்து எடுத்த படங்களுடன் இந்த பதிவு.
மைலாப்பூர் நினைவு படுத்தும் புகைப்பட கண்காட்சி நடந்தது. கடந்த வருட புகைப்படத்தில் ஆர்வத்துடன் தன்னைத் தேடும் தேடும் ஒருவர்.
புகைப்படங்களை பார்வையிடும் மக்கள்.
அதே மக்கள் தான் வேறு நிமிடங்களில்.. :)
கட்டைகால் நடனம். படம் உதவி தினமலர்.

கோலம் போடும் வெளிநாட்டுப் பெண்மணி. படம் உதவி: தினமலர்
கோலமிடும் அழகு. லாங்க் ஷாட்!
சின்னசிறு கைவினைப் பொருட்களுக்காக கடைதிறந்திருந்த ஸ்டெல்லமேரிஸ் மாணவிகள்.மருதாணியில் (கைகளில்) கோலம் போட்டு விழாவினை சிறப்பித்த ஸ்டெல்லாமேரிஸ் மாணவிகள். படம் உதவி: தினமலர்.

Friday, January 05, 2007

122 ஆண்டு பழமையான வாத்தியகருவி!


சென்னை கோட்டை கிறிஸ்தவ கோவிலில்
122 ஆண்டு பழமையான வாத்திய கருவி மீண்டும் இசைக்கப்படுகிறது
இங்கிலாந்தில் இருந்து நிபுணர் வந்து சரி செய்தார்
சென்னை, ஜன.4-

சென்னை கோட்டை கிறிஸ்தவ கோவிலில் 122 ஆண்டு பழமையான இசைக் கருவி பழுது பார்க்கப்பட்டு மீண்டும் இசைக்கப்படுகிறது.

உலகமெங்கும் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் கீர்த்தனை, பாமாலை, சங்கீத பாடல்கள் பாடப்படுவது வழக்கம். பாடல்களை பாடும் போது பின்னணி இசைக்கு ஆர்கன் என்ற வாத்தியக் கருவி பயன்படுத்தப்படுகிறது.
தேவாலயங்களில் ஆர்கனுக்கு என்று தனி இடம் தரப்படுகிறது. அதுவும் மிகப் புனிதமாக கருதப்படும் `ஆல்டர்' பகுதிக்கு அருகே ஆர்கன் வைக்கப்பட்டு இருக்கும். அதன் முன்னால் பாடகர் குழுவுக்கு இடம் ஒதுக்கப்படுவது வழக்கம்.

சென்னை கோட்டையில் மிகப் பழமையான தேவாலயம் உள்ளது. செயின்ட் மேரிஸ் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த தேவாலயம் 1680-ம் ஆண்டு கட்டப்பட்டது.
இந்த தேவாலயத்துக்கு இங்கிலாந்தில் இருந்து ஆர்கன் அனுப்பப்பட்ட வரலாறும் சுவையானது. ஏற்கனவே உள்ள பழைய ஆர்கனை தவிர்த்து விட்டு, செயின்ட் மேரிஸ் தேவாலயத்திற்கென்று புதிய ஆர்கனை வாங்க வேண்டும் என்று 1883-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது.

ஆர்கன் வாங்க தேவாலயம் சார்பில் தரப்படும் பங்களிப்பு தவிர, மீதி தொகையைப் பெற பல இடங்களுக்கு கடிதங்கள் எழுதினார்கள். ஏற்கனவே இருந்த பழைய ஆர்கனை புனித இம்மானுவேல் தேவாலயத்துக்கு ரூ.500-க்கு மேரிஸ் தேவாலய பிரதிநிதிகள் விற்பனை செய்தனர். இந்தத் தொகை புது ஆர்கன் வாங்குவதற்காக வசூலிக்கப்படும் தொகையில் சேர்க்கப்பட்டது. 1894-ம் ஆண்டு தொடக்கத்தில் செயின்ட் மேரிஸ் தேவாலயத்துக்கு ஆர்கன் வந்து சேர்ந்தது.
இந்த ஆர்கனின் விலை அந்தக் காலத்திலேயே 7ஆயிரத்து 120 ரூபாய். ஆர்கனை கொண்டு வருவதற்கான இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று அப்போதைய அரசின் தேவாலயத்துறைக்கு தேவாலய நிர்வாகிகள் கடிதம் எழுதினார்கள்.
பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு ஆர்கனின் விலை ஒருவழியாக 6ஆயிரத்து120 ரூபாயாக குறைக்கப்பட்டு, அதற்கான வரி மட்டும் வசூலிக்கப்பட்டது. செயின்ட் மேரிஸ் தேவாலயத்தில் 11.6.1894 அன்று ஆர்கன் நிறுவப்பட்டது.


கடந்த 110 ஆண்டுகளுக்கும் மேலாக மேரிஸ் தேவாலயத்தில் இசைத்துக் கொண்டிருந்த ஆர்கன், ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு பழுதானது. அதிலிருந்த பாதிக்கும் மேற்பட்ட பைப்புகள் வேலை செய்யவில்லை. இதை சரி செய்வதற்கு எத்தனையோ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இறுதியாக இங்கிலாந்தில் உள்ள மிட்லேண்ட் ஆர்கன் என்ற ஆர்கன் தயாரிப்பு கம்பெனியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் கிரே சென்னைக்கு வரவழைக்கப்பட்டார். அவர் கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கடும் முயற்சிகளை மேற்கொண்டு ஆர்கனை சரி செய்தார். கடந்த டிசம்பர் முதல் வாரத்தில் பழுது பார்க்கும் பணி முடிந்தது. கடந்த 100 ஆண்டுகளாக என்ன இனிய இசையை வழங்கியதோ அதே இசையை வழங்க இந்த ஆர்கன் தயாராக உள்ளது.

இதைத் தொடர்ந்து ஆர்கனை மறு அர்ப்பணிப்பு செய்வதற்கான விழா நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த விழாவின் போது ஆர்கனை இசைப்பதற்காக லண்டனில் இருந்து டிரினிட்டி (கேம்பிரிட்ஜ்) கல்லூரி பேராசிரியர் ரிச்சர்ட் மார்லோ அழைக்கப்பட்டுள்ளார்.
செயின்ட் மேரிஸ் தேவாலயத்தில் 7-ந் தேதி மாலை 6 மணிக்கு நடக்கும் மறுஅர்ப்பணிப்பு விழாவில் ஆர்கன் இசை நிகழ்ச்சியை அவர் நடத்துவது மட்டுமல்லாமல், சென்னையில் பல இடங்களுக்குச் சென்று இசைக்குழு பற்றிய கருத்தரங்கை நடத்த உள்ளார். உலகப் புகழ் பெற்ற அந்த ஆர்கனிஸ்ட் நடத்தும் இசை விழாவில் கலந்து கொள்வதற்காக தங்களை கிறிஸ்தவர்கள் தயார்படுத்தி வருகின்றனர்.
---

Thursday, January 04, 2007

சென்னை காவல்துறைக்கு வயசு 150தென்னிந்தியாவில் வாசலான சென்னையின் மாநகர காவல்துறை தன் 150 வருடத்தை ஜனவரி 4-ல் சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்து வருவது தெரிந்ததே. இதன் ஏற்பாடுகள் நடந்து வந்தாலும், காவல்துறைக்கு பொதுமக்கள் மத்தியில் எந்த விதமான மதிப்பு இருக்கிறது என்று பார்த்தால், நிலைமை சொல்லிக் கொள்கிறார் போல இல்லை தான். ஆனால், கடந்த 2-3 வருடங்களுக்கு முன்பிருந்த நிலைமையோடு ஒப்பிட்டு பார்த்தால், நிலைமை பொதுவாக ஒரு முன்னேற்றம் காணாப்படுகிறது என்றே சொல்லலாம்.

பெரும்பாலும் காவல் துறையின் மீது சொல்லப்படும் குற்றங்கள் லஞ்சம், முரட்டுத்தனம் என்று பல குற்றச்சாட்டுக்கள். 70 இலட்சம் மக்கள் தொகை கொண்ட நகரம். இங்கு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 24000+ மக்கள் வசிக்கின்றனர். பொது மக்களின் நண்பனாக இருக்க வேண்டிய காவல்துறை மக்களின் வில்லனாகிப் போனது வேதனை தான்.

"ஒரு போலீஸ் என்ன துரத்தி வந்துச்சு"
"அப்புறம்?"
"நல்ல வேளை. ஒரு ரெளடி என்னை காப்பாற்றினான்"

- போன்ற துணுக்குகள் சர்வ சாதா'ரண'மாக வெளிவந்துக் கொண்டிருந்தது. அந்தக் காலகட்டத்தில் தான் முன்னாள் அதிரடிப்படைத் தலைவரான நடராஜ் சென்னை காவல்துறை ஆணையளராக பதவி ஏற்றார். நட்ராஜ் காலகட்டத்தில் சில என்கவுன்டர்கள் நடந்தன. சென்னையில் தாதாக்களின் கொட்டங்கள் அடக்கி வைக்கப்பட்டன. (விருமாண்டி படத்தை பார்த்து, காவல்துறையினர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கடா மீசை வைத்தவர்).

பின் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவை (பர்சனலாக) புகழ்ந்து பேசி வைக்க, அதன் பின் தேர்தல் ஆணையத்துடன் நடந்த மோதலில் அவர் மாற்றப்பட்டார். அப்பொழுது பதவி ஏற்றவர் தான் இப்பொழுது இருக்கும் ஆணையாளார் லத்திகா சரண். இவர் தான் பெருமைமிகு சென்னையின் முதல் பெண் கமிஷனர். ஆட்சி மாறியதும் வழக்கம் போல கமிஷனரும் மாற்றப்படுவார் என்ற பழைய சித்தாந்த்தத்தை உடைப்பெற்று லத்திகா சரணே தொடர்ந்து கமிஷனராக தொடர்ந்தார். இது காவல்துறை அரசியல் கலப்பில்லாமல் 'காட்டிக்கொள்ளப்பட' ஒரு வாய்ப்பாக அமைந்தது. இவர் காலகட்டத்தில் காவல்துறை கொஞ்சம் சுதந்திரமாகவே செயல்பட்டது எனலாம், அதாவது, முன்பிருந்ததை விட. அதேபோல தண்ணிச்சையாக முடிவெடுக்கும் உரிமையும் பெற்றது.லத்திகா சரண் வந்ததும், முன்பிருந்த நட்ராஜின் ரூட்டையே ஃபாலோ பன்னினார் எனலாம். வரிசையாக என்கவுன்டர்கள். அதன் பயனாக தாதாக்களின் கொட்டம் அடங்கியது. வீரமணி முதல் ஃபங்க் (funk, bunk அல்ல) குமார் வரை நடத்தப்பட்ட என்கவுன்டர்கள், காவல்துறை தன்னுடைய ஹீரோயிசத்தை காட்டியது. இதற்கு முக்கியமான ஒரு காரணம் காவல்துறையின் டீம்.

சைலேந்திர பாபு, வட சென்னை காவல்துறை ஆணையர் ரவி, கூடுதல் ஆணையர் ஜாங்கிட் போன்றவர்களை தேடி கண்டுபிடித்து ஒரு டீம் ஆக்கப்பட்டது. விஜயகுமார் இதில் ஒரு முக்கியமான நபர். ஜாங்கிட் வட மாநில கொள்ளையர்களை அவர் மாநிலத்திற்கு சென்று திறமையாக விசாரனை செய்து பிடித்து வந்தவர். பின் அவர் சென்னை காவல்துறையில் சேர்க்கப்பட்டார்.

காவல்துறையில் நடந்து வரும் மாற்றங்கள்.

* முக்கியமானது, பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைப்பது. ஒரு போலீஸ் அதிகாரி இவ்வாறு கூறினார், "நாங்கள் திருந்த தயாராக இருக்கிறோம். எங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்", கூடியிருந்த பொதுமக்களின் அப்லாஸுடன்.

* காவல்துறையினரை பார்த்து பயப்படாமல், அவர்களும் தம் நண்பர்கள் தாம் என்ற எண்ணம் வரவழைப்பது. (இதற்காக சில நாட்களுக்கு முன் காவல்நிலையங்களின் வண்ணத்தை சிகப்பில் இருந்து மஞ்சள் நிறத்திற்கு மாற்றினார்கள்).

* இன்றும் இரவில் இரண்டாம் ஷிஃப்ட் முடிந்து செல்கையிலும், பின் தூக்கம் வராமல் தேநீர் குடிக்க அதிகாலை 4 மணி வாக்கில் வெளியே வந்தால், நான் இருக்கும் ஏரியாவில் ரோந்து போலீஸ் இருப்பதை பார்க்கலாம்.

* முக்கியமாக, போக்குவரத்து காவலர்களின் கண்ணியம். நான் கண்டது. வழக்கமாக வண்டி ஓட்டும் பொழுது கைபேசியில் அழைப்பு வந்தால் ஓரமாக வண்டியை நிறுத்தி பேசுவேன். ஒரு முறை ரயிலுக்கு நேரமானதால், வண்டி ஓட்டிக் கொண்டே பேசிக்கொண்டு வந்தேன். ஒரு போலீஸ் "செல்ஃபோன் டிரைவிங்கா? எப்படி கண்டிபிடிச்சேன் பார்த்தீயா?" என்று சந்தோஷத்தில் என்னை ஓரங்கட்டினார். அங்கிருந்த அதிகாரி எனக்கு அபராதம் போட்டு, அட்வைஸ் செய்ய ஆரம்பித்து விட்டார். "உன் கூட பேசின ஃபிரண்டு ஆஸ்பத்திரியில் வந்து சில பழங்கள் பிஸ்கட்ட கொடுத்துட்டு போயிடுவான். வலியை அனுபவிக்கிறது நீ தான. எத்தனை தடவ சொன்னாலும் திருந்த மாட்டேங்கரீங்க. பட்டபிறது திருந்த முடியாம போயுடும்".

* இப்பொழுதெல்லாம் சாலையை கடக்க உதவும் முதியோர்களை, காவலர்கள் கூட சென்று சாலையை பத்திரமாக கடக்க உதவுகிறார்கள்.

* விபத்து நடந்த இடத்தில், ஒருவருக்கு ஆசுவாசப்படுத்த ஒரு பாட்டிலில் தண்ணீர் கொண்டு வந்து அவர் காலை கழுவி மசாஜ் செய்தார் ஒரு காவலர்.

* சமீபத்தில் அர்விந்த் கொலையில், கொலையை தடுக்க முடியவில்லையென்றாலும் (8:30க்கே கொலை செய்யப்பட்டுவிட்டான், ஆனால் ரவிக்கு தகவல் வந்தது 9 மணிக்கே. அதுவும் அரவிந்த் பெற்றோர் அல்ல. அவர் குடும்பத்தினருக்கு தெரிந்த ஒரு நபர் பேசினார். ஆனால், அரவிந்த் வீட்டின் முகவரி கூட அவரால் கொடுக்க முடியவில்லை), தென் சென்னை இணை ஆணையர் துரைராஜ் தலைமையிலான படை 2 நாட்களில் கொலையாளிகளை பிடித்து விட்டனர்.

* இன்னும் முக்கியமான ஒரு படை, சென்னை காவல் சைபர்கிரம் பிரிவு. பல வழக்குகளில் பாதிக்கப்பட்டவருக்கு நீதி வாங்கித் தந்திருக்கிறது இந்த பிரிவு. உண்மையிலேயே சபாஷ் போட வேண்டிய பிரிவு இது.

* அபிராமி தியேட்டர் ராமநாதன் சென்னை காவல் துறையினரின் செயலை பாராட்டும் விதமாக இரு சினிமாவை எடுத்து இருக்கிறார். படத்தில் நடித்த எல்லோருமே நிஜ காவல் துறையினர் என்பது கூடுதல் தகவல். அப்படம் இன்றைய கொண்டாட்டத்தில் திரையிடப்படுகிறது. நாளை கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள ஜனாதிபதி அப்துல் கலாம் சென்னை வருகிறார்.


சரி! சென்னை காவல்துறை என்ன மகான்கள் இருக்கிற துறையா என்று கேட்பவர்களுக்கு...மகான்கள் இருக்கிற துறை இல்லை தான், ஆனால் நல்லவற்றை தட்டிக் கொடுப்பது அவர்களை ஊக்கப்படுத்துவதாக அமையும் அல்லவா? காவலர் வேலை வெறும் சம்பள வேலையாக இல்லாமல், அது ஒரு பெருமைமிகு கடமை என்று பொதுமக்களாகிய நாம் தான் உணர வைக்கவேண்டும்.

இருண்ட காட்டுக்குள் இருக்கிறீர்கள். ஒரு தீக்குச்சி இருந்தால் எங்கிருக்கும் எல்லா விளக்கையும் ஏற்றி விடலாம் தான். ஆனால் அந்த முதல் தீக்குச்சியை தேடி எடுப்பது தான் சவால். அந்த முதல் தீக்குச்சியைத் தான் தேடிக்கொண்டிருக்கிறது சென்னை காவல் துறை.
--
ஆக்கம்:- சீனு.

(அவர் பீட்டாவுக்கு மாறாததினால் என்னால் பதியப்படுகிறது.)

Monday, January 01, 2007

ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்


இனிய வலைப்பதிவர்கள் அனைவருக்கும் எங்கள் குழுவின் சார்பாக '2007 ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!'

நாட்காட்டி உதவி:- இங்கேயிருந்து..