122 ஆண்டு பழமையான வாத்தியகருவி!


சென்னை கோட்டை கிறிஸ்தவ கோவிலில்
122 ஆண்டு பழமையான வாத்திய கருவி மீண்டும் இசைக்கப்படுகிறது
இங்கிலாந்தில் இருந்து நிபுணர் வந்து சரி செய்தார்




சென்னை, ஜன.4-

சென்னை கோட்டை கிறிஸ்தவ கோவிலில் 122 ஆண்டு பழமையான இசைக் கருவி பழுது பார்க்கப்பட்டு மீண்டும் இசைக்கப்படுகிறது.

உலகமெங்கும் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் கீர்த்தனை, பாமாலை, சங்கீத பாடல்கள் பாடப்படுவது வழக்கம். பாடல்களை பாடும் போது பின்னணி இசைக்கு ஆர்கன் என்ற வாத்தியக் கருவி பயன்படுத்தப்படுகிறது.
தேவாலயங்களில் ஆர்கனுக்கு என்று தனி இடம் தரப்படுகிறது. அதுவும் மிகப் புனிதமாக கருதப்படும் `ஆல்டர்' பகுதிக்கு அருகே ஆர்கன் வைக்கப்பட்டு இருக்கும். அதன் முன்னால் பாடகர் குழுவுக்கு இடம் ஒதுக்கப்படுவது வழக்கம்.

சென்னை கோட்டையில் மிகப் பழமையான தேவாலயம் உள்ளது. செயின்ட் மேரிஸ் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த தேவாலயம் 1680-ம் ஆண்டு கட்டப்பட்டது.
இந்த தேவாலயத்துக்கு இங்கிலாந்தில் இருந்து ஆர்கன் அனுப்பப்பட்ட வரலாறும் சுவையானது. ஏற்கனவே உள்ள பழைய ஆர்கனை தவிர்த்து விட்டு, செயின்ட் மேரிஸ் தேவாலயத்திற்கென்று புதிய ஆர்கனை வாங்க வேண்டும் என்று 1883-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது.

ஆர்கன் வாங்க தேவாலயம் சார்பில் தரப்படும் பங்களிப்பு தவிர, மீதி தொகையைப் பெற பல இடங்களுக்கு கடிதங்கள் எழுதினார்கள். ஏற்கனவே இருந்த பழைய ஆர்கனை புனித இம்மானுவேல் தேவாலயத்துக்கு ரூ.500-க்கு மேரிஸ் தேவாலய பிரதிநிதிகள் விற்பனை செய்தனர். இந்தத் தொகை புது ஆர்கன் வாங்குவதற்காக வசூலிக்கப்படும் தொகையில் சேர்க்கப்பட்டது. 1894-ம் ஆண்டு தொடக்கத்தில் செயின்ட் மேரிஸ் தேவாலயத்துக்கு ஆர்கன் வந்து சேர்ந்தது.
இந்த ஆர்கனின் விலை அந்தக் காலத்திலேயே 7ஆயிரத்து 120 ரூபாய். ஆர்கனை கொண்டு வருவதற்கான இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று அப்போதைய அரசின் தேவாலயத்துறைக்கு தேவாலய நிர்வாகிகள் கடிதம் எழுதினார்கள்.
பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு ஆர்கனின் விலை ஒருவழியாக 6ஆயிரத்து120 ரூபாயாக குறைக்கப்பட்டு, அதற்கான வரி மட்டும் வசூலிக்கப்பட்டது. செயின்ட் மேரிஸ் தேவாலயத்தில் 11.6.1894 அன்று ஆர்கன் நிறுவப்பட்டது.


கடந்த 110 ஆண்டுகளுக்கும் மேலாக மேரிஸ் தேவாலயத்தில் இசைத்துக் கொண்டிருந்த ஆர்கன், ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு பழுதானது. அதிலிருந்த பாதிக்கும் மேற்பட்ட பைப்புகள் வேலை செய்யவில்லை. இதை சரி செய்வதற்கு எத்தனையோ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இறுதியாக இங்கிலாந்தில் உள்ள மிட்லேண்ட் ஆர்கன் என்ற ஆர்கன் தயாரிப்பு கம்பெனியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் கிரே சென்னைக்கு வரவழைக்கப்பட்டார். அவர் கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கடும் முயற்சிகளை மேற்கொண்டு ஆர்கனை சரி செய்தார். கடந்த டிசம்பர் முதல் வாரத்தில் பழுது பார்க்கும் பணி முடிந்தது. கடந்த 100 ஆண்டுகளாக என்ன இனிய இசையை வழங்கியதோ அதே இசையை வழங்க இந்த ஆர்கன் தயாராக உள்ளது.

இதைத் தொடர்ந்து ஆர்கனை மறு அர்ப்பணிப்பு செய்வதற்கான விழா நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த விழாவின் போது ஆர்கனை இசைப்பதற்காக லண்டனில் இருந்து டிரினிட்டி (கேம்பிரிட்ஜ்) கல்லூரி பேராசிரியர் ரிச்சர்ட் மார்லோ அழைக்கப்பட்டுள்ளார்.
செயின்ட் மேரிஸ் தேவாலயத்தில் 7-ந் தேதி மாலை 6 மணிக்கு நடக்கும் மறுஅர்ப்பணிப்பு விழாவில் ஆர்கன் இசை நிகழ்ச்சியை அவர் நடத்துவது மட்டுமல்லாமல், சென்னையில் பல இடங்களுக்குச் சென்று இசைக்குழு பற்றிய கருத்தரங்கை நடத்த உள்ளார். உலகப் புகழ் பெற்ற அந்த ஆர்கனிஸ்ட் நடத்தும் இசை விழாவில் கலந்து கொள்வதற்காக தங்களை கிறிஸ்தவர்கள் தயார்படுத்தி வருகின்றனர்.
---

Comments

தாணு said…
இதன் பெயர் பைப் ஆர்கனா? மூசிக்கில் மிகுந்த நாட்டமுள்ள என் கணவர் போன்றோருக்கு பயன் தந்த விபரம். நன்றி
தகவலுக்கு நன்றி.
மிக நல்ல இனிமையான செய்தி....இங்கு தேவாலயங்கள் தோறும் இந்த இசைக்கருவி காணலாம். இசையையும் கேட்கலாம்.
யோகன் பாரிஸ்

Popular posts from this blog

மெட்ராஸ் பாஷை - ஒரு இலக்கண பார்வை

ஏதோ வண்டி ஓடிக்கினுகீது சார்! - ஜெயகாந்தன்

எழுத்தறிய நூலகங்கள்