Tuesday, February 27, 2007

ஆர்ப்பரிக்கும் கடலலை - Fusion

அந்திவானத்தில் சூரியன் நிகழ்த்திய நிற வேடிக்கைக்கு போட்டியாய் மேடையில் வர்ண ஒளிவிளக்குகள் ஜாலம் காட்டிக் கொண்டிருந்தன. என்றும் கடல் அலையின் சத்தம் ஓங்கி இருக்கும் இடத்தில், மக்களின் சத்தத்தில் கடல் அடங்கி இருந்தது. இடம் கண்டுபிடித்து மண்ணில் கால் புதைய நடைக்கையிலேயே கணீரென ஒரு பெண் குரல் பாட்டு பாடியபடி இருந்தது. அடடா நேரமாச்சோ என்றபடி ஓடிப்போனால், அட அது ஒலிப்பெருக்கிச் சோதனை.ஆம், நீங்கள் நினைப்பது சரிதான் அது பெசன்ட் நகர் கடற்கரையில் 'சென்னை சங்கமத்தின்' நிறைவுநாள் நிகழ்ச்சியேதான். இனி நேரடி ரிப்போட்.

மாலை 6 மணிக்கு நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கும் எனச் சொல்லியிருந்தார்கள். சரியாக 6.10 க்கு நிகழ்ச்சி ஆரம்பமானது. அப்போதே அநேக முக்கிய விருந்தினர்களும் வந்துவிட்டிருந்தார்கள். இந்த பத்து நிமிட தாமதம் கூட ஒலி ஒளி அமைப்பு ஏற்பாடு தாமதத்தினால்தான்.

முதலில் 'சென்னை சங்கமம்' நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் (அவர் தன் பெயரை குறிப்பிடவில்லை) சிறப்பு விருந்தினர் அமைச்சர் பரிதி இளம்வழுதி, இறையன்பு I.A.S, அமைச்சர் தங்கம் தென்னரசு, கனிமொழி, இந்திரகுமாரி, ராஜாமணி அம்மையார், மலேசிய அமைச்சர் சாமிவேலுவின் துணைவியார் ஆகியோரை வரவேற்று பேசினார். தொடர்ந்த அவர், "இந்த நிகழ்ச்சி எந்தக் கட்சிக்கும் சார்பானதல்ல; எவருக்கும் எதிரானதல்ல; ஆத்திகரும் உண்டு நாத்திகரும் இக்குழுவில் உண்டு என்று பேசிமுடித்தார்."(ஏனோ?)அதை தொடர்ந்து திரு. இறையன்பு அவர்கள் நிகழ்ச்சி உருவான விதம், உதவி செய்தவர்கள் ஆகியோர் பற்றி பேச வந்தார். அவர் பேச்சில் செயலில் வல்லவர் என்பதை மீண்டுமொருமுறை மேடையில் நிரூபித்துக் காட்டினார். சுமார் 4 வாரங்களில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், தமிழ்மையம் எல்லோரும் நினைப்பதுப்போல் அரசாங்கத்திடம் இதற்கென தனியாக நிதியேதும் பெறவில்லை எனவும், தங்கும் வசதிகள் போக்குவரத்துக்கு மட்டுமே அரசாங்கம் உதவிதாகவும் சொன்னார்.தொடர்ந்து பேசும்போது "பாரதி, 'வள்ளியை பார்த்த முருகன் மரமாக நின்றான்' என்று எழுதினான், நம் நாட்டுப்புறப் பாடலோ 'வள்ளி என்றால் கொடி அக்கொடி படர முருகன் மரமானான்' என்று அழகுப்படுத்துகிறது" என்று நம் நாட்டுப்புறக் கலையின் பெருமையை எடுத்துச் சொன்னார். "மக்கள் நல்லதைப் புறம்தள்ளுவதில்லை, நாம் தாராமல் போனால் அவர்கள் போலியைத் தேடிச் செல்கிறார்கள். சென்னை சங்கமம் நல்லது தந்தது; மக்கள் ஏற்றுக் கொண்டார்கள்" என்றார்.தொடர்ந்து அவர் அதிகாரிகள் சிலருக்கு நன்றிச் சொல்லிச் செல்ல அடுத்து வந்த அமைச்சர் திரு. பரிதி இளம்வழுதி அவர்கள் வாழ்த்துரையை இல்லை கவிதையை வாசித்து அமர்ந்தார்.

வரவேற்பும் வாழ்த்தும் முடியும்போது நேரம் 6.30 ஆகி இருந்தது. முரசு கொட்ட, மேளம் இணைய, தப்பட்டம் தட்ட, நாதஸ்வரம் வழிய, மேற்கத்திய வாத்தியம் இசைய

"திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கலர்த்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ்
வங்கண் உலகுஅளித்த லான்.

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு
மேரு வலம்திரி தலான்.

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி உலகிற்கு அவனளிபோல்
மேநின்று தாஞ்சுரத்த லான். "


என்ற பாடலுடன் ஆரம்பம் இசை நிகழ்ச்சி. இங்கேயே பல மக்கள் கால்கள் ஆட்டம் போட ஆரம்பித்துவிட்டன.தொடர்ந்து திருக்குறள் பாடல் இசைக்கவும் அடுத்து வந்தது பறையடி. எல்லா கலைஞர்களும் வரிசைக்கு பத்தாய் ஒரு வரிசையில் நிற்க ஆட்டம் ஆரம்பமானது, மெதுவாக ஆரம்பித்த ஆட்டம் முன்னுக்கும் பின்னுக்குமாய் கலைஞர்கள் கலைந்து சாமி வந்தவர்களாய் ஆடி உச்சத்தை அடையும்போது கூட்டம் 'ஹோ' வென ஒலியெழுப்ப மீண்டும் பழைய மெதுநடைக்கு திரும்பி மீண்டும் உச்சம் இப்படியே ஆடுபவர் மட்டுமல்ல கேட்டு நின்றவர்களின் கால்களும் ஆட அதிர பறையடி நிகழ்ச்சி தொடர்ந்தது 20 நிமிடங்களுக்கு மேல்.அதைத் தொடர்ந்து தப்பாட்டம். இதிலும் கூட்டம் அதிர அதிர ஆட்டம். பறைக்கு ஆட ஆரம்பித்த கூட்டத்தை இவர்களும் நிறுத்தவிடவில்லை. அதை தொடர்ந்த மயிலாட்டக்காரர்களும், ஆடி அதிர்ந்து இருந்த மனங்களை ஆசுவாசப்படுத்தி அமைதியாக்க வந்தது நாகூர் அப்துல் ஹமீது குழுவின் இறைப்பாடல்.தொடர்ந்து வந்த கோவை கமலாவின் முருக பாடலில் மீண்டும் ஆட்டத்தில் கூட்டம். அடுத்து வந்தது "தாண்டியா" ஆட்டத்தில் இசைக்கப்படுவதை போன்ற அல்லது அதே மேளம், பெயர் தெரியவில்லை. ஆரம்பத்திலிருந்தே வேகமான இசையால் கட்டிப்போட்ட இக்கலைஞர்கள் பற்களால் பெரிய மேளத்தை பற்றியபடி சுற்றி இசைக்க, கூட்டம் கிறுகிறுத்து நின்றது. துடிப்புடன் இருப்பதால் தான் துடுப்பாட்டம் எனப் பெயர்பெற்றதோ என்று எண்ண வைத்தது. குழந்தைகள் சில நேரங்களில் 'லலலலலலலலலல' என வேகமாய் சொல்லுமே அந்த வேகத்தில் பாட அந்த வேகத்தில் சலங்கை ஒலித்தது.கேரள மேளம் முழங்க ஆரம்பித்த போது, இதுவரை ஆர்ப்பரித்த கூட்டம் கப்சிப். ஆட வைக்க கூடிய வேகம்தான்; அதிர வைக்கின்ற இசைதான்; ஆனாலும் கூட்டத்தில் சலனமில்லை மொத்தக் கண்களும் கலைஞர்களின் மேலே மொய்த்திருந்தன. காரணம்? இல்லாமல் இல்லை; ஜால்ரா இசைக்கும் கலைஞர்கள் படகோட்டும் பாவனையில் அமர்ந்து இசைத்ததும், களறி சண்டைப் போன்ற பாவனையும், 'ஓஹோ' ஒலியும்தான்.

கடைசி நிகழ்ச்சியாய் ஒரு பாடல் மேற்கத்திய இசையில் ஆரம்பிக்க இடையில் தப்பாட்டம் குழு, மேளக்குழு, பறைக்குழு, மயிலாட்டம் குழு, எல்லாம் இணைந்துக் கொள்ள மெல்ல மெல்ல மேற்கத்திய இசை அடங்க சுனாமி ஆடிய கரையில் தமிழ் இசையின் ருத்தரதாண்டவம்.ஏற்கனவே மணி இரவு 9.40 ஆகி இருந்ததால் சீக்கிரமே நன்றியுரையை முடித்த கனிமொழி, "ஒரு இனத்தை மீட்டு எடுக்கவேண்டுமானால் அதன் தொடக்கம் அவ்வினத்தின் கலையினை மீட்டெடுப்பதில் ஆரம்பிக்கவேண்டும் அதையே செய்ய தமிழ் இயக்கம் விரும்பியது. இன்னும் இவ்விழா நான்கைந்து வருடங்கள் தொடரும் அதன் பின் இது தமிழ் இயக்கத்தின் விழாவாக இல்லாமல் மக்களின் விழாவாக மாறும்" என்றார்.நன்றியுரை முடிந்ததும் மேடையில் எல்லா இசை கலைஞர்களும் இணைந்து இசைக்க வான வேடிக்கை நிகழ்ந்தது. குழந்தைகளும் இளைஞர்களும் கலைஞர்களுடன் மேடையேறி குத்தாட்டம் போட்டார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு இசை ஒருகிணைத்தவர் வளரும் இசையமைப்பாளர் பால்.ஜேகப்

சந்தோசம் :

* நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போதே ஒராயிரம் பேர் இருந்திருப்பார்கள். நிகழ்ச்சியின் இடையில் ஐந்து முதல் ஆராயிரம் பேர் இருந்தார்கள். பணக்காரர்கள், நடுத்தர வர்க்கத்தினர் எல்லோரையும் இழுத்து வந்தது.

* எல்லா பாடலின் இடையிடையே திட்டமிட்டோ , எதேச்சையாகவோ நாதஸ்வரத்தில் 'செந்தமிழ் நாடெனும் போதினிலே' வழிந்த பாடல்.

* மேடைக்குக் கீழ் குழந்தைகளின் நடனம்.

* பெருந்திரளான பெண்கள் கூட்டத்தின் கைத்தட்டல்கள்.

* ஒருங்கிணைப்பாளர்கள், விருந்தினர்கள் மேடையை விட்டு மக்கள் கூட்டத்திற்கு பின்னால் அமர்ந்து ரசித்தது.

* ரசித்து ருசித்து அமைச்சர். தென்னரசுவின் கை , கால் போட்ட தாளம்.

* முக்கிய விருந்தினர் அனைவரும் கடைசிவரை இருந்தது.

* வெளிநாட்டவர்கள் போட்ட ஆட்டம்.
சங்கடம்:

* மேடையை உயரமாய் அமைத்துவிட்டு முன் வரிசையில் காவல்துறையை நிறுத்திவிட்டு மேடையில் நிகழ்வதைப் பார்க்க ஆடும் தட்டியினை ஒட்டி நின்ற மக்களை விரட்டி அமர்ந்து பார்க்கச் சொன்ன காவல்துறை.

* மேடைக்குப் பின் ஆடிய வெளிநாட்டவர்களை மிரட்டி ஆடாமல் நிறுத்திய காவலர்கள்

* அடுத்த / முடிந்த நிகழ்ச்சியின் பெயர் அறிவிக்காமை. பலபேர் பெயர் தெரியாமலேயே ரசித்திருந்தார்கள்.

* நிகழ்ச்சிக்கு பின் மேடையில் குத்தாட்டம் ஆட ஏறிய மக்களை, வேடிக்கை பார்த்த காலவர்கள், சிறிது நேரம் சென்று, அவர்களைத் தூக்கி மேடைக்கு கீழ் வீசியது.(அதில் ஒரு வெளிநாட்டவரும்)

CNN-IBN தொலைக்காட்சியில் வந்த சில வீடியோ காட்சிகள்:இது ப்ரியனின் வீடியோ:


அலுவலகத்தில் ப்ளாக்கர் அகதியாகிவிட்ட ப்ரியனுக்காக
- பொன்ஸ் :))

Monday, February 26, 2007

சென்னை சங்கமம் - பார்க்க வாங்க!

மக்களே!

பட்டினக்காரர்களின் கவனக்குறைவால் சென்னை சங்கமம் நிகழ்ச்சியின் செய்தியை நீங்க மிஸ் பண்ணியிருப்பீங்க! அந்த குறையை சரி செய்ய, இன்று நிறைவு நாள் நிகழ்ச்சிகள் கலை கட்டப்போகுது, அதையாவது அனைவரும் போய் பார்ப்போம்!

இன்று மாலை 6 மணியளவில் பெசன்ட் நகர் கடற்கரையில், சென்னை கூத்து என்ற பெயரில் நிறைவு நாள் நிகழ்ச்சிகள் நடைப்பெற உள்ளன! சென்னை கூத்தில் ராக் வகை பாடல்களை நம் தமிழ் கலாச்சாரத்துடன் இணைத்து ஒரு Fusion நிகழ்ச்சியாக தமிழகத்தின் தமிழகத்தின் தலை சிறந்த ராக் பாடல் குழுக்களும், தலை சிறந்த கிராமிய நடன குழுக்களும் ஒன்றாக சேர்ந்து , ஒரு புது வகை அனுபவத்தை தரப்போகிறார்கள்! வானவேடிக்கை, வானவெடி நிகழ்ச்சிகள் என்று அசத்தப்போகிறார்கள்! இந்த நிகழ்ச்சி இனிமையான மாலை நேரத்தில், அலைகடல் அருகே தூள் கிளப்பபோகுது! இதற்கு அனுமதி முற்றிலும் இலவசம்! குடும்பத்தோட போய் என்ஜாய் பண்ணுங்க சென்னைவாசிகளே!

இடம்: பெசன்ட் நகர் கடற்கரை
நேரம்: மாலை 6:00 மணி
தேதி : பிப் 26, 2007
அனுமதி: இலவசம்

Friday, February 23, 2007

சென்னை சங்கமம் - நேரடி ரிப்போர்ட

சென்னை சங்கமம் – பறையடி மற்றும் கோலாட்டம்!

பெப்ருவரி 21 அன்று மாலை சென்னை கோட்டூர்புரத்தில் மாநகராட்சியால் புதியதாக அமைக்கப்பட்ட பூங்காவில் சென்னை சங்கமம் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கோலாட்டமும், பறையடியும் கோலாகலாமாக நடந்தது. அதற்கு முன்பாகவே புலிவேஷம் கட்டியவர் கலக்கிக் கொண்டிருந்தார். பூம் பூம் மாடு போன்று மனிதர்களே வேடம் அணிந்து குழந்தைகளை மகிழ்வித்துக் கொண்டிருந்தார்கள்.

எதிர்பார்ப்புக்கு மாறாக மக்கள் பெரும் கூட்டமாக கூடியிருந்தார்கள். சாலையோர சிறிய பூங்காவான அதிலேயே சுமார் 300 முதல் 350 பேர் வரை கூடியிருந்து நிகழ்ச்சிகளை ரசித்தார்கள். சுமார் 100 முதல் 150 குழந்தைகள் வரை வந்திருந்து அட்டகாசம் செய்து கொண்டிருந்தார்கள்.

கோலாட்டம் என்பது நாம் சினிமாவில் பார்த்து ரசிக்கும் "தாண்டியா" நடனம் போல இல்லாமல் மிக மிக வித்தியாசமாக இருந்தது. 20 வீரர்கள் வட்டமாக நின்றுக் கொண்டு சுமார் இரண்டரை அடி நீளம் கொண்ட மூங்கில் கழி வைத்து விளையாடினார்கள். இவர்களது ஆட்டத்துக்கேற்ப ஒரு கலைஞர் "உடுக்கை" எனப்படும் இசைக்கருவியை அசுரத்தனமாக வாசித்தார்.

இது வெறும் நடனமாக இல்லாமல் கோல் சண்டை போலிருந்தது. 20 பேரும் ஒருவரையொருவர் கோலால் அதிவேகமாக தாக்கிக் கொண்டனர். அப்போது மூங்கில் கழிகள் மோதும் சத்தம் சரியான "Beat"ல் டக், டக் என சீரான ஒலிச்சீராக அமைந்தது. வீரர்கள் அனைவரும் வெள்ளை முழுக்கை பனியனும், வேட்டியும் அணிந்திருந்தனர். சுமார் 20 நிமிடம் அதிவேகத்தோடு இந்த ஆட்டம் நடைபெற்றது. பங்கு பெற்றவர்கள் அனைவரும் 18 முதல் 25 வயது வரை இருந்த வாலிபர்களே.

அடுத்ததாக தமிழர்களின் பாரம்பரிய இசைக்கருவியான பறையடி நிகழ்ந்தது. சுமார் 20 கலைஞர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள். 10 பேர் ஒரு புறமும், 10 பேர் மறுபுறமும் எதிர் எதிராக நின்றுக் கொண்டு பறையடித்தார்கள். அவர்களுக்கு இடையே சுமார் 10 அடி இடைவெளி இருந்தது. இந்த அணிவரிசைக்கு இருபுறமும் இரண்டு நையாண்டி மேளக் கலைஞர்களும் மேளம் இசைத்துக் கொண்டிருந்தார்கள்.

பறையடித்துக் கொண்டே மெதுவாக நடனம் ஆடியபடி இந்த வரிசையிலிருந்து அந்த வரிசைக்கு கலைஞர்கள் மெதுவாக இடம்பெயர்ந்தனர். இவர்கள் ஒரே சீராக ராணுவ அணிவகுப்பு போல இடம்பெயர்ந்தது கண்ணுக்கு விருந்தாக அமைந்தது. நேரம் செல்ல செல்ல பறையின் ஒலி கொஞ்சம் கொஞ்சமாக ஒரே சீராக உயர்ந்து வந்தது.

ஒரு கட்டத்தில் அந்தப் பகுதியே அதிரும் வண்ணமாக பறை ஒலியும், நையாண்டி மேள ஒலியும் உச்சஸ்தாயியில் ஒலித்தது. அப்போது பறையடித்த கலைஞர்களும் இசையின் வேகத்துக்கேற்ப சுனாமி வேகத்தில் சுழன்று ஆடினார்கள். அதிவேகமாக ஆடியதால் சோர்வு அடையும் கலைஞர்களுக்கு ரெஸ்ட் கொடுக்கும் விதத்தில் 10 பேர் நடனமாடும்போது 10 பேர் அமைதியாக பறையடித்தப் படியுமாக ஒரு டெக்னிக் அவர்களுக்குள் இருந்தது. இவர்களின் நிகழ்ச்சியை மேற்பார்வை செய்த பயிற்சியாளர் அவ்வப்போது விசில் அடித்து இவர்களுக்கு சிக்னல் செய்து கொண்டிருந்தார். நையாண்டி மேளம் இசைக்கும் கலைஞர்கள் நொடிக்கு 5 முறையாவது மேளத்தை தட்டியிருப்பார்கள். அவ்வளவு வேகம்!

மேனாட்டு இசை தான் தலைசிறந்தது என்று வாதாடுபவர்கள் இந்நிகழ்ச்சியை கண்டிருந்தால் தமிழகத்தின் பாரம்பரிய இசையின் மகத்துவத்தை கண்டுணர்ந்திருப்பார்கள். மேனாட்டு இசை முறைகளான ராக், ராப் இசை நிகழ்ச்சிகளை விட மெட்டும், ஒலியளவும் இந்நிகழ்ச்சியில் சிறப்பாக அமைந்திருந்தது. ராக் இசை நிகழ்ச்சியின் போது வெளிப்படும் சத்தம் ஒரு ஜெட் விமானத்தின் சத்தத்தை விட அதிகமாக இருக்கும் என்று ராக் ரசிகர்கள் கூறுவார்கள். எந்தவிதமான ஒலி பெருக்கும் ஆம்ப்ளிபயர்களின் வசதி இல்லாமலேயே இனிமையான பெரும் சத்தத்தை பறை மற்றும் நையாண்டி மேளம் மூலமாக இசைக்க முடியும் என்பதை நேற்று நேரில் கண்டுணர்ந்தேன்.

பறையடித்த வீரர்கள் கறுப்புக் கலரில் டீ-சர்ட்டும், வெள்ளை வேட்டியும் அணிந்திருந்தனர்.

நிகழ்ச்சியை காண ஹாலந்து நாட்டில் இருந்து ஒரு ஐரோப்பிய தம்பதிகள் தங்கள் குழந்தைகள் இருவருடன் வந்திருந்தனர். சென்னை சங்கமம் என்ற இந்த நிகழ்ச்சியை காணமட்டுமே தாங்கள் ஐரோப்பாவில் இருந்து வந்ததாக சொன்னார்கள். கலைஞர்கள் இசைக்கும் இசைக்கருவிகளின் பெயரை ஆர்வமாக கேட்டுத் தெரிந்துக் கொண்டார்கள். உங்கள் நாட்டின் பாரம்பரிய இசை மிகச் சிறப்பானதாக இருக்கிறது. நடனமும் அருமை என்று கலைஞர் ஒருவரிடம் ஆங்கிலத்தில் சொன்னார்கள். அக்கலைஞருக்கு ஆங்கிலம் தெரியாது என்றாலும் ஏதோ பாராட்டுகிறார்கள் என்று புரிந்து கொண்டு தமிழில் "நன்றி" என்று சொன்னார்.

ஒவ்வொரு நிகழ்ச்சி முடிந்ததும் எழுந்த கரகோஷம் விண்ணை எட்டியது. பார்வையாளர்களின் அபரிதமான வரவேற்பை அக்கலைஞர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்றே தோன்றுகிறது. கைத்தட்டல் எழுந்தபோது அவர்களின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி அதை எடுத்துக் காட்டியது.

பூங்கா முழுவதுமே குழந்தைகளின் அராஜகம் தான். பறையடி முடிந்ததுமே ஒரு சுட்டிக் குழந்தை அந்த இசைக்கருவியை வாங்கித்தரும்படி தன் தந்தையிடம் அடம்பிடித்துக் கொண்டிருந்தது. அந்தக் கருவியை வைத்திருந்த கலைஞர் குழந்தை அருகில் வந்து குச்சியை கையில் கொடுத்து அடிக்கச் சொல்லி விளையாடிக் கொண்டிருந்தார். அடித்து முடித்ததுமே பறையைத் திருப்பித் தரமாட்டேன் என்று அக்குழந்தை அடம்பிடிக்க கலைஞர் தர்மசங்கடமாக நெளிந்தது செம நகைச்சுவை.

நிகழ்ச்சி முடிந்ததுமே குழுவில் இருந்த ஒருவர் நிகழ்ச்சி சுமார் அரைமணிநேரம் தாமதமாகத் தொடங்கியதற்காக அங்கே காத்துக் கொண்டிருந்த குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்டார்.

மேலும் அவர் ஒற்றுமையை வலியுறுத்தும் ஒரு சிறு பாடல்பாட குழந்தைகளையும் சேர்ந்து பாட வேண்டிக் கொண்டார்.

"ஒரு கை தட்டும்போது
ஓசையே இல்லை!
பத்து கை சேர்ந்தபோது
யாருமே இல்லை!
சின்னமாடு நாலு சேர்ந்தபோது
சிங்கம் கூட மிரண்டு ஓடிச்சாம்!"

என்று உச்சஸ்தாயியில் அவர் பாட குழந்தைகளும் சேர்ந்து பாடினார்கள். அங்கிருந்த ஹாலந்து நாட்டு தம்பதிகளும் மழலைத் தமிழில் அவர்களோடு சேர்ந்து பாடினர்.

நிகழ்ச்சி ஏற்பாட்டில் சில குறைபாடுகள் இருந்ததாக தெரிந்தது. குறைபாடுகள் என்று சொல்ல முடியாது. முதல்தடவை நடத்துவதால் இப்பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கலாம். நம் ஊர் பூங்காக்களின் ஒளிவசதி உங்களுக்குத் தெரிந்திருக்கும் J மிகக்குறைந்த வெளிச்சத்தில் அந்தக் கலைஞர்கள் Performance காட்டவேண்டியதாக இருக்கிறது. இதனால் நிகழ்ச்சியை படமும் எடுக்க முடியவில்லை. எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்காக பிரத்யேகமான அதிக ஒளி தரும் மின்விளக்குகளை பொருத்த வேண்டும்.

மேலும் நிகழ்ச்சி நடந்த இடத்தில் சிறு சிறு சரளைக் கற்களாக இருந்ததால் நடனம் ஆடும் கலைஞர்கள் (வெறும் காலோடு ஆடுகிறார்கள்) கல் காலில் குத்தி சிரமப்பட்டார்கள். இதுபோல நிகழ்ச்சி நடக்கும் இடங்களில் ஆற்று மணலை பரப்பி வைக்கலாம்.

நல்லவேளையாக திடீர் கடைகள் எதுவும் முளைக்காமல் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் பார்த்துக் கொண்டார்கள். இல்லாவிட்டால் வேர்க்கடலை தொடங்கி செல்போன் கடைவரை முளைத்து நிகழ்ச்சியை ரசிக்க செய்ய விடாமல் கடலை போட்டிருக்க வேண்டியது தான். எனினும் குழந்தைகள் அதிகமாக கூடும் இடம் என்பதால் பஞ்சு மிட்டாய், சர்க்கரைப் பாகில் பொம்மைகள் செய்து தயாரிக்கும் மிட்டாய் போன்ற கடைகளை நிகழ்ச்சி அமைப்பாளர்களே நடத்தலாம்.

சென்னபட்டினத்துக்காக - லக்கிலுக்

Wednesday, February 21, 2007

சென்னை சங்கமம் – பண்பாட்டை மீட்டெடுக்கும் முயற்சி!சென்னை மக்களின் கலை, கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் தலங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக "தமிழ் மய்யம்" அமைப்பு "சென்னை சங்கமம்" என்ற ஒருவார விழாவினை நடத்த முன்வந்துள்ளது. தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் உதவியும் இவ்விழாவிற்கு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இளைய தலைமுறையினருக்கு அறிமுகமில்லாத தமிழகத்தின் பண்பாட்டுக் கலைகளையும், கிட்டத்தட்ட அழிந்துப்போன தமிழின அடையாளங்களையும் மீட்டெடுக்கும் விதத்தில் இந்நிகழ்ச்சிகள் அமையும் என நிகழ்ச்சிப் பொறுப்பாளர்கள் உறுதியளித்திருக்கிறார்கள். 200க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் சென்னையின் பல்வேறு இடங்களில் பெப்ருவரி 21 முதல் 26 வரை நடத்தப்படும் எனத் தெரிகிறது. தமிழக அரசும் இந்நிகழ்ச்சியை ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்த உறுதி அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இக்கலாச்சார நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தேவாரமும், திருப்புகழும் சென்னையின் புகழ்பெற்ற பூங்காக்களில் பாடப்படும் என்றும், தமிழர்களின் இசைக்கலாச்சார அடையாளமான நாதஸ்வர நிகழ்ச்சிகளும் அவற்றோடு ஒன்றிணைந்து நடத்தப்படும் என்று விழா பொறுப்பாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

மரங்கள் மீது வர்ணங்கள் பூசி வித்தியாசமான ஓவியங்கள் வரையும் முறையும் இவ்விழாவில் அறிமுகப்படுத்தப் படுகிறது. கவிதைப் போட்டி மற்றும் இலக்கியப் போட்டிகளும் உண்டு. பல்வேறு திரையரங்குகளில் தமிழரின் கலாச்சாரத்தையும், தமிழ் மொழியின் மேன்மையையும் விளக்கும் திரைப்படங்களும் திரையிடப்படுகிறது. தமிழக அரசின் செய்தித்துறை நிகழ்ச்சி நடக்கும் இடங்களைத் தருவதற்கு பொறுப்பேற்றிருக்கிறது.

இவ்விழாவுக்கான துவக்க விழா நிகழ்ச்சி பெப்ருவரி 20 மாலை சென்னன ஐ.ஐ.டி. வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியை மாண்புமிகு தமிழக முதல்வர் கருணாநிதி தொடக்கி வைத்தார்.


நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இலவசம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. என்னென்ன நிகழ்ச்சிகள் நடைபெறப் போகிறது, எந்தெந்த இடங்களில், எந்த நேரங்களில் நடைபெறும் என்று அறிய விரும்புபவர்கள் இங்கே பார்க்கவும்.
முழுமையாக பார்க்க

சென்னபட்டினத்துக்காக.. எழுதியவர்:- லக்கிலுக்

தொடர்புள்ள இடுகைகள்:
1. ப்ரின்ஸின் பதிவு