Sunday, November 19, 2006

சென்னை வலைப்பதிவர் சந்திப்பு

சரியாக நான்கு மணிக்கு, இராம.கி அவர்களின் தலைமையில் பாலபாரதியின் முன்னுரையுடன் இனிதே தொடங்கியது சென்னை வலைபதிவர் சந்திப்பு.

சந்தித்தவர்கள் விவரம் பின்வருமாறு:
அருள்குமார்
we the people
இராம.கி
ஜெ.சந்திரசேகரன்
லக்கிலுக்
த.அகிலன்
தே. நிலவன்
வினையூக்கி
ஓகை நடராஜன்
யெஸ். பாலபாரதி
ப்ரியன்
தமிழ்நதி
பா.ஜெயகமல்
கோ. சரவணன்
இரா.சமு.ஹமீது
எச்.எஸ்.முகமது ரஃபி
ரோசாவசந்த்
சிமுலேஷன்
எஸ்கே
பொன்ஸ்
மிதக்கும்வெளி
தங்கவேல்
டிபிஆர் ஜோசப்
சிவஞானம் ஜி
செந்தில்
கௌதம்
விக்னேஷ்
மரவண்டு கணேஷ்
(சந்திப்புப் பதிவேட்டின் வரிசைப்படியே..)

பதிவேட்டில் பெயர் எழுதாமல் விட்டுப் போனவை:)
டோண்டு
பூபாலன்
விஜய் - இட்லிவடையின் நிழற்பட வல்லுனர்

வலைதிரட்டிகளின் அடுத்த நகர்வு என்ற தலைப்பில் மா.சிவகுமாரின் கட்டுரை வாசிப்பைத் தொடர்ந்து அது குறித்தான ஆலோசனைகள் விவாதிக்கப்பட்டன. கணினித் தொழிற்நுட்பம் தெரிந்த பதிவர்கள் சேர்ந்து உதவி மையம் ஒன்று தொடங்கலாம் என்றார் விக்கி. அது குறித்த அறிவிப்பொன்று விக்கியின் பதிவில் விரைவில் வரும்.

சுமார் நாற்பதைம்பது பேரை எதிர்பார்த்து தேநீருக்குச் சொல்லி இருந்தபடியால், முதல் சுற்றுத் தேநீர் வினியோகம் இந்தக் கட்டுரைக்குப் பின் நடைபெற்றது. இந்த இடைவெளியில் இட்லிவடையின் போட்டோகிராபர் வந்து கூட்டத்தினரை பதிவில் போட மாட்டோம் என்ற உறுதிமொழியுடன் படம் பிடித்துவிட்டுச் சென்றார்.

பிஸ்கட்டும் தேநீருமாக, கொஞ்ச நேரக் குழுப் பேச்சுகளுக்குப் பின் ஈழத்தில் கிளிநொச்சியில் இருந்து பதிவெழுதிக் கொண்டிருந்த அகிலன் ஈழத்தமிழர்களின் இன்றைய நிலை பற்றிப் பேசினார். செஞ்சோலைச் சிறாரைப் பார்த்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். உயிர்பிழைத்த சில பிஞ்சுகளின் இன்றைய மனநிலை பற்றி அவர் சொன்னதைக் கேட்டுக் கூட்டம் சில நிமிடங்கள் பேச்சற்றுப் போயிற்று. கிளிநொச்சி பகுதியிலிருந்து தமிழ்ப் பதிவெழுதுபவர்கள் அகிலனும் நிலவனும் மட்டும் தான் என்பது புதிய செய்தி.மற்றொரு தேநீர் விநியோகத்துக்குப் பின்னர், பாலபாரதி தமிழ் வலைப் பதிவுகளில் சாதீயம் குறித்து சிற்றுரையாற்றினார். இது போன்ற சில தலைப்புகளில் இடும் விவாதங்கள் எந்த முடிவும் இல்லாமல் தொடர்வதைப் பற்றி விவாதம் திசை திரும்பியது. இப்படியான பதிவுகளின் கருத்துகள், எழுதுபவரைப் பற்றிய வாசகரின் முன் முடிவுகளைப் பொறுத்துத் தான் போய்ச் சேர முடியும் என்றார் ரோசாவசந்த். பூபாலன் என்ற தமிழ்ப் பதிவுகளின் நீண்டநாள் வாசகர், பார்வையாளராய் ஒரு விவாதத்தை அணுகும் போது தன் பழைய எண்ணம் தவறானதாகத் தெரியவந்தாலும், ஈகோ இல்லாமல் ஒப்புக் கொள்ள முடியும் என்று இம்மாதிரியான விவாதங்களின் பலன்களை எடுத்துரைத்தார்.அந்த விவாதத்தினைத் தொடர்ந்து, ஜோசப், பம்பாய் ஆங்கிலப் பதிவர்கள் போல தமிழ்ப்பதிவர்கள் சங்கம் ஒன்று அமைத்து பத்திரிக்கையாளர்களுக்கான சலுகைகளைப் பெற்றுத் தரவேண்டும் என்ற யோசனையை முன்வைத்தார். சிமுலேஷன், பதிவெழுதுபவர்களில் பலர் பொழுது போக்காக எழுதுவதால், பத்திரிக்கையாளர் என்ற அளவில் வருவது அத்தனை சுலபமில்லை என்ற தன் எண்ணத்தைத் தெரிவித்தார். சந்திரசேகரனின் பார்வையில் தத்தம் பகுதி நிகழ்வுகளை எழுதுவதன் மூலம் வலைபதிவர்களும் பத்திரிக்கையாளருக்கான வேலைகளைச் செய்பவர்கள் தாம் என்றார்.
இத்துடன் விவாதங்கள் ஒரு முடிவுக்கு வந்துவிடவே அதுவரை அதீத ஒழுங்குணர்வுடன் இருந்த அரங்கு சின்னச் சின்ன குழுக்களாகப் பிரிந்து ஒருவரோடு ஒருவர் பேசக் கூடியதாகியது.

சந்திப்புக்கு வந்திருந்த ஈழப் பெண்பதிவர் தமிழ்நதிக்கு, இம்மாதிரியான சந்திப்புகளுக்கு அதிகம் பெண் பதிவர்கள் வராதது ஆச்சரியமான விஷயமாக இருந்தது. சென்னையில் இருக்கும் பெண் பதிவர்களைப் பற்றி நான் சொல்ல, டோரண்டோவிலிருந்து வந்திருக்கும் தமிழ்நதி, கனடிய பதிவரான மதி பற்றிச் சொன்னார்.

கோவி கண்ணன், நாமக்கல் சிபி, பொட்டீக்கடை முதலியோர் தொலைபேசினார்கள். தருமி குறுஞ்செய்தி அனுப்பி உடனுக்குடன் தகவல்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டே இருந்தார். இந்த முறை சந்திப்பில் கட்டுரை வாசிப்பு, விவாதங்கள் என்றிருந்ததால் தொலைபேசி அழைப்புகளை அதிகம் கவனிக்கவும் முடியாமல் போய்விட்டது.

தலைமையேற்ற இராம.கி அவர்கள் வலைப்பதிவர்கள் புனைவுகளைக் கடந்து தொழிற்நுட்பம் மற்றும் அறிவியல் சார்ந்த நடப்புகளை அதிகம் எழுத வேண்டும் என்ற தனது அவாவினை வெளியிட்டார்.

தம் போன்ற கணினி அதிகம் தெரியாதவர்களுக்கு "வலைப்பதிவு தொடங்குவது எப்படி?" என்பதிலிருந்து புதுப் பதிவர் கையேடு போன்ற பதிவுகளை எழுதி ஓரிடத்தில் சேமிக்க வேண்டுமென்றார் எஸ்கே.

அதிகாரப்பூர்வமான நிழற்பட நேரத்துக்குப் பின்னர் கூட்டம் பார்வதி ஹாலை விட்டு மெதுவாக வெளியேறியது. அதன் பின்னரும் வாசலருகில் ஆங்காங்கே பேசிக் கொண்டிருந்துவிட்டு கொஞ்சம் கொஞ்சமாகப் பிரிந்து போனோம்.

இந்தச் சந்திப்பைப் பற்றி எதிர்பார்க்கப் படும் மற்ற பதிவுகள்:
1. சிவகுமாரின் "வலை திரட்டிகளின் அடுத்த நகர்வு" பற்றிய கட்டுரை
2. பாலபாரதியின் "வலைப் பதிவுகளில் சாதியம்" குறித்த கட்டுரை
3. ஜோசப் சாரின் வலைபதிவர் சங்கம் பற்றிய தெளிவான எதிர்பார்ப்பு விளக்கங்களுடனான கட்டுரை
4. விக்கியின் புதிய வலைபதிவர் உதவிமையத்தைப் பற்றிய அறிவிப்பு
5. மற்றும் வந்திருந்த வலைபதிவர்களின் தத்தம் அனுபவ கட்டுரைகள்.பிற்சேர்க்கை:
5.1. டோண்டு
5.2. விக்கி
5.3. லக்கிலுக்
5.4. சிவகுமார்
5.5. பொன்ஸ்
5.6. தமிழ்நதி
5.7 சிமுலேஷன்
5.8. வினையூக்கி
5.9. பாலபாரதி
5.10 அகிலன்

Tuesday, November 14, 2006

யாராச்சும் லாலுவுக்கு சொல்லுங்கப்பா..!

சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பார்சல் குடோன் சூளை பகுதியில் அமைந்துள்ளது. அதன் மொத்தப் பரப்பளவு நேரு உள்விளையாட்டு அரங்கத்தின் அளவு இருக்கும்.ஆங்கிலேய அரசுகாலத்தில் ரேசன் பொருட்களுக்கான குடோனாக பயன் படுத்தப்பட்டு வந்த இடம், இன்று மத்திய ரயில்வேயின் பொருட்கள் பாதுகாப்பு இடமாக மாறிப்போய் இருக்கிறது.இப்போதும் கூட இரண்டு பகுதிகளாகவே செயல் பட்டு வருகிறது. ஒரு பகுதி ரேசன் பொருட்களின் பாதுகாப்பிற்கும், மற்றொரு பகுதி நாட்பட்டுப்போன ரயிவே பார்சல்களை பாதுகாக்கவும்.சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வரும் பார்சல்கள் இருபது நாட்களுக்கு மேல் டெலிவரி எடுக்காமல் இருந்தால் இந்த குடோனுக்கு அனுப்பப்படுகின்றன. மெயின் கேட்டில் இருந்து ஐநூறு அடிகள் கடந்து வந்தால் தான் இந்த பார்சல் குடோனை அடைய முடியும். சமீபத்தில் பெய்த மழையால் இந்த பகுதி நீச்சல் குளம் போல காட்சி தருகிறது. கால் முழங்கால் முட்டி வரை சேற்றில் இறங்கி நடக்க வேண்டியும் உள்ளது.உள்ளே போக வேறு வழிகள் இருப்பதாகவும் தெரியவில்லை. தவிரவும் பத்துக்கும் அதிகமான ப்ரோக்கர்கள் உள்ளுக்குள்ளேயே இருக்கிறார்கள். நாம் போய் நின்றால் போதும், கையில் இருக்கும் ரசீதைப் பிடுங்கி, பார்சல் எங்கே இருக்கிறது என்று பார்த்து, மின்விசிறியின் கீழ் அமர்ந்து இருக்கும் அரசு அதிகாரியிடம் (அவருடைய வேலையைத்தான் இந்த ப்ரோக்கர் செய்கிறாரே..!) காட்டுகிறார். அவர் குறித்துக்கொண்டு அடுத்த அறையில் இருப்பவரிடம் லேட் டெலிவரிக்கான அபராதத்தொகையினை செலுத்தச்சொல்லுகிறார்.

எல்லாப் பணியும் முடிந்த பின் ரசீதை சரிபார்த்த அந்த அதிகாரி ப்ரோக்கரிடம் சைகை காட்ட அவர் நம்மிடம் வந்து, "சார் இருபது ரூபா தாங்க! ரெண்டு ஆபிஸருங்களுக்கும் சேர்த்து" என்று கேட்கிறார். நாம் மறுத்தோமானால் அங்கிருக்கும் காவலரின் உதவியோடு, நம் பார்சலில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, நமக்கான பார்சலை திறக்கிறேன் பேர்வழி என்று அலங்கோலப்படுத்தி விடுகின்றனர். அப்புறம் உடைந்து போன பார்சலை அள்ளிக்கொண்டா வரமுடியும்? மாற்று அட்டைப்பெட்டிக்கு அதே ப்ரோக்கரிடம் ஐம்பது ரூபாய் அழவேண்டும். இது தவிர, அவருக்கும் தனியாக கையூட்டு கொடுக்கவேண்டியதும் நம் கடமையாகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் எனக்கு வந்திருந்த ஒரு புத்தக அட்டைப்பெட்டியை எடுக்கப்போன போது நடந்த அனுபவமிது. குளங்கட்டி கிடக்கும் குடோனையும், கொள்ளையடிக்கும் அதிகாரிகள் குறித்தும் லாலுவுக்கு யாராச்சும் சொல்லுங்கப்பா...!

(ஆங்கில அறிவு கொண்ட புண்ணியவான்கள் இச்செய்தியை ஆங்கிலத்தில் வெளியிடுங்கள்.)