சென்னை வலைப்பதிவர் சந்திப்பு

சரியாக நான்கு மணிக்கு, இராம.கி அவர்களின் தலைமையில் பாலபாரதியின் முன்னுரையுடன் இனிதே தொடங்கியது சென்னை வலைபதிவர் சந்திப்பு.

சந்தித்தவர்கள் விவரம் பின்வருமாறு:
அருள்குமார்
we the people
இராம.கி
ஜெ.சந்திரசேகரன்
லக்கிலுக்
த.அகிலன்
தே. நிலவன்
வினையூக்கி
ஓகை நடராஜன்
யெஸ். பாலபாரதி
ப்ரியன்
தமிழ்நதி
பா.ஜெயகமல்
கோ. சரவணன்
இரா.சமு.ஹமீது
எச்.எஸ்.முகமது ரஃபி
ரோசாவசந்த்
சிமுலேஷன்
எஸ்கே
பொன்ஸ்
மிதக்கும்வெளி
தங்கவேல்
டிபிஆர் ஜோசப்
சிவஞானம் ஜி
செந்தில்
கௌதம்
விக்னேஷ்
மரவண்டு கணேஷ்
(சந்திப்புப் பதிவேட்டின் வரிசைப்படியே..)

பதிவேட்டில் பெயர் எழுதாமல் விட்டுப் போனவை:)
டோண்டு
பூபாலன்
விஜய் - இட்லிவடையின் நிழற்பட வல்லுனர்

வலைதிரட்டிகளின் அடுத்த நகர்வு என்ற தலைப்பில் மா.சிவகுமாரின் கட்டுரை வாசிப்பைத் தொடர்ந்து அது குறித்தான ஆலோசனைகள் விவாதிக்கப்பட்டன. கணினித் தொழிற்நுட்பம் தெரிந்த பதிவர்கள் சேர்ந்து உதவி மையம் ஒன்று தொடங்கலாம் என்றார் விக்கி. அது குறித்த அறிவிப்பொன்று விக்கியின் பதிவில் விரைவில் வரும்.

சுமார் நாற்பதைம்பது பேரை எதிர்பார்த்து தேநீருக்குச் சொல்லி இருந்தபடியால், முதல் சுற்றுத் தேநீர் வினியோகம் இந்தக் கட்டுரைக்குப் பின் நடைபெற்றது. இந்த இடைவெளியில் இட்லிவடையின் போட்டோகிராபர் வந்து கூட்டத்தினரை பதிவில் போட மாட்டோம் என்ற உறுதிமொழியுடன் படம் பிடித்துவிட்டுச் சென்றார்.

பிஸ்கட்டும் தேநீருமாக, கொஞ்ச நேரக் குழுப் பேச்சுகளுக்குப் பின் ஈழத்தில் கிளிநொச்சியில் இருந்து பதிவெழுதிக் கொண்டிருந்த அகிலன் ஈழத்தமிழர்களின் இன்றைய நிலை பற்றிப் பேசினார். செஞ்சோலைச் சிறாரைப் பார்த்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். உயிர்பிழைத்த சில பிஞ்சுகளின் இன்றைய மனநிலை பற்றி அவர் சொன்னதைக் கேட்டுக் கூட்டம் சில நிமிடங்கள் பேச்சற்றுப் போயிற்று. கிளிநொச்சி பகுதியிலிருந்து தமிழ்ப் பதிவெழுதுபவர்கள் அகிலனும் நிலவனும் மட்டும் தான் என்பது புதிய செய்தி.



மற்றொரு தேநீர் விநியோகத்துக்குப் பின்னர், பாலபாரதி தமிழ் வலைப் பதிவுகளில் சாதீயம் குறித்து சிற்றுரையாற்றினார். இது போன்ற சில தலைப்புகளில் இடும் விவாதங்கள் எந்த முடிவும் இல்லாமல் தொடர்வதைப் பற்றி விவாதம் திசை திரும்பியது. இப்படியான பதிவுகளின் கருத்துகள், எழுதுபவரைப் பற்றிய வாசகரின் முன் முடிவுகளைப் பொறுத்துத் தான் போய்ச் சேர முடியும் என்றார் ரோசாவசந்த். பூபாலன் என்ற தமிழ்ப் பதிவுகளின் நீண்டநாள் வாசகர், பார்வையாளராய் ஒரு விவாதத்தை அணுகும் போது தன் பழைய எண்ணம் தவறானதாகத் தெரியவந்தாலும், ஈகோ இல்லாமல் ஒப்புக் கொள்ள முடியும் என்று இம்மாதிரியான விவாதங்களின் பலன்களை எடுத்துரைத்தார்.



அந்த விவாதத்தினைத் தொடர்ந்து, ஜோசப், பம்பாய் ஆங்கிலப் பதிவர்கள் போல தமிழ்ப்பதிவர்கள் சங்கம் ஒன்று அமைத்து பத்திரிக்கையாளர்களுக்கான சலுகைகளைப் பெற்றுத் தரவேண்டும் என்ற யோசனையை முன்வைத்தார். சிமுலேஷன், பதிவெழுதுபவர்களில் பலர் பொழுது போக்காக எழுதுவதால், பத்திரிக்கையாளர் என்ற அளவில் வருவது அத்தனை சுலபமில்லை என்ற தன் எண்ணத்தைத் தெரிவித்தார். சந்திரசேகரனின் பார்வையில் தத்தம் பகுதி நிகழ்வுகளை எழுதுவதன் மூலம் வலைபதிவர்களும் பத்திரிக்கையாளருக்கான வேலைகளைச் செய்பவர்கள் தாம் என்றார்.




இத்துடன் விவாதங்கள் ஒரு முடிவுக்கு வந்துவிடவே அதுவரை அதீத ஒழுங்குணர்வுடன் இருந்த அரங்கு சின்னச் சின்ன குழுக்களாகப் பிரிந்து ஒருவரோடு ஒருவர் பேசக் கூடியதாகியது.

சந்திப்புக்கு வந்திருந்த ஈழப் பெண்பதிவர் தமிழ்நதிக்கு, இம்மாதிரியான சந்திப்புகளுக்கு அதிகம் பெண் பதிவர்கள் வராதது ஆச்சரியமான விஷயமாக இருந்தது. சென்னையில் இருக்கும் பெண் பதிவர்களைப் பற்றி நான் சொல்ல, டோரண்டோவிலிருந்து வந்திருக்கும் தமிழ்நதி, கனடிய பதிவரான மதி பற்றிச் சொன்னார்.

கோவி கண்ணன், நாமக்கல் சிபி, பொட்டீக்கடை முதலியோர் தொலைபேசினார்கள். தருமி குறுஞ்செய்தி அனுப்பி உடனுக்குடன் தகவல்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டே இருந்தார். இந்த முறை சந்திப்பில் கட்டுரை வாசிப்பு, விவாதங்கள் என்றிருந்ததால் தொலைபேசி அழைப்புகளை அதிகம் கவனிக்கவும் முடியாமல் போய்விட்டது.

தலைமையேற்ற இராம.கி அவர்கள் வலைப்பதிவர்கள் புனைவுகளைக் கடந்து தொழிற்நுட்பம் மற்றும் அறிவியல் சார்ந்த நடப்புகளை அதிகம் எழுத வேண்டும் என்ற தனது அவாவினை வெளியிட்டார்.

தம் போன்ற கணினி அதிகம் தெரியாதவர்களுக்கு "வலைப்பதிவு தொடங்குவது எப்படி?" என்பதிலிருந்து புதுப் பதிவர் கையேடு போன்ற பதிவுகளை எழுதி ஓரிடத்தில் சேமிக்க வேண்டுமென்றார் எஸ்கே.

அதிகாரப்பூர்வமான நிழற்பட நேரத்துக்குப் பின்னர் கூட்டம் பார்வதி ஹாலை விட்டு மெதுவாக வெளியேறியது. அதன் பின்னரும் வாசலருகில் ஆங்காங்கே பேசிக் கொண்டிருந்துவிட்டு கொஞ்சம் கொஞ்சமாகப் பிரிந்து போனோம்.

இந்தச் சந்திப்பைப் பற்றி எதிர்பார்க்கப் படும் மற்ற பதிவுகள்:
1. சிவகுமாரின் "வலை திரட்டிகளின் அடுத்த நகர்வு" பற்றிய கட்டுரை
2. பாலபாரதியின் "வலைப் பதிவுகளில் சாதியம்" குறித்த கட்டுரை
3. ஜோசப் சாரின் வலைபதிவர் சங்கம் பற்றிய தெளிவான எதிர்பார்ப்பு விளக்கங்களுடனான கட்டுரை
4. விக்கியின் புதிய வலைபதிவர் உதவிமையத்தைப் பற்றிய அறிவிப்பு
5. மற்றும் வந்திருந்த வலைபதிவர்களின் தத்தம் அனுபவ கட்டுரைகள்.



பிற்சேர்க்கை:
5.1. டோண்டு
5.2. விக்கி
5.3. லக்கிலுக்
5.4. சிவகுமார்
5.5. பொன்ஸ்
5.6. தமிழ்நதி
5.7 சிமுலேஷன்
5.8. வினையூக்கி
5.9. பாலபாரதி
5.10 அகிலன்

Comments

Sivabalan said…
பொன்ஸ,

பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி
பொன்ஸ் லிங் தப்பு !

எஸ்கே,பொன்ஸ்,மிதக்கும்வெளி - முன்றுக்கும் ஒரே
http://sugunadiwakar.blogspot.com/
இணைப்பாக உள்ளது ! சரி பண்ணவும் !
பதிவுக்கு நன்றி.
Anonymous said…
Thts a nice writeup Pons :)

Can u mail me the photos to my mail id (vignesh[at]vicky[dot]in), so that i can use those pics in my blog.

hey i'll give u the credit definitely :)

-- Vicky
நல்ல சந்திப்புதான். இந்த மாதிரி அடிக்கடி பண்ணுங்க. ஒண்ணுமில்லைன்னாலும் நேரில் பார்த்து பேசும் போது சிலரிடம் இருக்கும் காழ்ப்புணர்வு குறையலாம்.
பொன்ஸ் அவர்களே,

நெருப்பு நரி பாவித்தால் படங்கள் வலையேற்ற இயலும். எக்ஸ்ப்ளோரர் எப்போதுமே அழும்பு செய்யும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
பொன்ஸ்,

உங்களையெல்லாம் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. பெண்கள் அதிகம் வராதது சங்கடமாகத்தான் இருந்தது. அதை உங்கள் அழகான சிரிப்பு ஈடுகட்டிவிட்டது. அடுத்த தடவை நிறையப் பெண்கள் கலந்துகொள்வார்கள் என்று நம்புவோம்.
பொன்ஸ்!

கேட்கவே மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது. எங்கள் மக்களின் துயர்குறித்தும், வலைப்பதிவு நண்பர்கள் சந்திப்பில், நடைபெற்ற கருத்துப்பகிர்வும், புரிதலும் குறித்தும், அறியும்போது ஆறுதலாக இருக்கிறது.

இதற்குக் காரணமான, சந்திப்பு ஏற்பாட்டாளர்களுக்கும், கருத்துப் பகிர்ந்த நண்பர் அகிலனுக்கும், இத்தகவலை உடன் வலையேற்றி எங்களுக்கு அறியத்தந்தமைக்கும், மிக்க நன்றி.
Boston Bala said…
---சந்திரசேகரனின் பார்வையில் தத்தம் பகுதி நிகழ்வுகளை எழுதுவதன் மூலம் வலைபதிவர்களும் பத்திரிக்கையாளருக்கான வேலைகளைச் செய்பவர்கள் தாம்---

மிக சிறப்பான கருத்து. ஆனால், எத்தனை பதிவுகள், நிகழ்வுகளையும் personal blog-ஆகவும் எழுதுகிறது...

பலரும் 'இது தப்பு', 'இது சரி' என்று பொதுப்படையாகத்தானே எழுதுகிறோம் :-)

கவரேஜுக்கு நன்றி!
விஜய் இட்லிவடைக்காகப் புகைப்படம் எடுப்பது முன்னரே தெரியுமா?
விக்கி அவர்களின் கருத்திலிருந்து
முரன்படுவதாகத் தோன்றுகின்றதே!
நன்றி கல்ப் தமிழன், சிவபாலன், டிசே, பாஸ்டன் பாலா.

கோவி, சரி செய்துவிட்டேன்..

புகைப்படங்கள் விரைவில் அனுப்புகிறேன் விக்கி,

//ஒண்ணுமில்லைன்னாலும் நேரில் பார்த்து பேசும் போது சிலரிடம் இருக்கும் காழ்ப்புணர்வு குறையலாம்.
//
ஒண்ணுமில்லாமத் தான் ரொம்ப நாள் பேசிப் பார்த்தாச்சே.. அதான் இந்த முறை ஒரு agendaவுடன் பேசிப் பார்த்தோம்.. இது இன்னும் நன்றாகவே இருந்தது.

//நெருப்பு நரி பாவித்தால் படங்கள் வலையேற்ற இயலும்//
நன்றி டோண்டு அவர்களே. இது வேறு பிரச்சனை. அகலப் பட்டையில் இடமில்லாமை.

//உங்கள் அழகான சிரிப்பு //
தமிழ்நதி, இப்படி எல்லாம் சொல்லி பயமுறுத்தினீங்கன்னா, அடுத்த முறை யாரும் வருவாங்களா என்ன?! :)))

//எங்கள் மக்களின் துயர்குறித்தும், வலைப்பதிவு நண்பர்கள் சந்திப்பில், நடைபெற்ற கருத்துப்பகிர்வும், புரிதலும் குறித்தும், அறியும்போது ஆறுதலாக இருக்கிறது.
//
உண்மை தான் மலைநாடன். சென்னையில் ஈழப் பதிவர்கள் பங்கு கொள்ளும் முதல் சந்திப்பு இது. இனிவரும் சந்திப்புகளில் இந்தப் பங்கீடு இன்னும் அதிகரிக்கும் என்று நம்புகிறோம்.


//விஜய் இட்லிவடைக்காகப் புகைப்படம் எடுப்பது முன்னரே தெரியுமா?//
அதெல்லாம் தெரியாது சிஜி, போட்டோ வந்துவிட்டது என்ற செய்திக்குப் பின்னர், யாராய் இருக்கும் என்று மண்டையைப் பிய்த்துக் கொண்டதால் கண்டுபிடித்தது :)))

அந்த போட்டோகிராபரின் நிழற்படத்தையும் கூடிய விரைவில் பதிவுகளில் இடுவதாக உள்ளோம்.
சூடாகப் பரிமாறியமைக்கு நன்றி:-)
நல்ல பதிவு. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
தலைவரே!

சென்னைப்பட்டினத்தின் வலைப்பதிவாளர் சந்திப்பில் உங்களுக்கு கொடுக்கப்பட்ட தொடுப்பு தவறாக இருக்கிறது.

உங்களுடைய வலைப்பூ http://madippakkam.blogspot.com

அவர்கள் குறிப்பிட்டிருப்பதைப் போல luckylook.blogspot.com அல்ல

(எனக்கு வலைப்பூ சுனாமியார் பாசறையிலிருந்து வந்த மின்னஞ்சல்)
அதர்-அனானி ஆப்ஷன் ஏன் இங்கே இல்லை என்று அமுகவினர் கொந்தளித்துப் போயிருக்கிறார்கள். ஆவன செய்யவும்.

வலைப்பதிவர் சந்திப்பு குறித்த அமுகவினரின் சிந்தனைகளும் இங்கே கட்டாயம் பதிவு செய்யப்படவேண்டும்.
இரண்டாவது வீடியோ ஓடலியே மேடம்.... :-(((((
சந்திப்பு நன்றாக சென்றிருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. தகவல்களுக்கு நன்றி.
கானா பிரபா, கைப்புள்ள, செந்தில்குமரன் நன்றி

//அவர்கள் குறிப்பிட்டிருப்பதைப் போல luckylook.blogspot.com அல்ல//
ஹி ஹி.. லக்கி, மாத்திட்டேன்..

//அதர்-அனானி ஆப்ஷன் ஏன் இங்கே இல்லை என்று அமுகவினர் கொந்தளித்துப் போயிருக்கிறார்கள்//
பதிவு போடுங்க தல, எங்க ஊர் அனானிகள் கூட ரொம்ப ஆசையா இருக்காங்க.. ஆனா சென்னபட்டினத்துல அனானிக்கு இடமில்லையே!! :(

பாலா, இப்போ ஓடுதா?
சந்திரசேகரன்,
நீங்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க உங்கள்/என் பின்னூட்டங்கள் எடுக்கப் படுகின்றன.

சந்திப்பைப் பற்றிய உங்கள் பார்வையிலான பதிவொன்றை மிகவும் எதிர்பார்க்கிறோம்..
வலைப்பூ பதிவாளர்களின் சங்கத்தைக் குறித்து சீனியர் ராகவன் சாரின் பதிவில் ஒரு சிறிய பின்னூட்டமாய் எழுதியுள்ளேன்.

ஒரு சங்கத்தை அதிகாரபூர்வமாக பதிவு செய்ய என்னென்ன தேவை என்பதை விசாரித்துவிட்டு பிறகு விரிவான ஒரு தனி பதிவை வெளியிடுகிறேன்..
பொன்ஸ்,

புகைப்படத்தில் இருப்பவர்களின் பெயர்களை அவர்கள் அமர்ந்திருக்கும் வரிசைப்படி குறிப்பிட்டால் நன்றாயிருக்கும் என்று நினைக்கிறேன்.

முடிந்தால் செய்யுங்கள்.
ஜோசஃப் அவர்களே,

பலவலைப்பதிவர்கள் போட்டோக்களுக்கு போஸ் கொடுக்கவே தயங்கி நின்று விட்டனர். போஸ் கொடுத்தவர்கள் கூட பலர் தங்கள் பெயரை குறிப்பிட்ட போட்டோவுடன் அடையாளப்படுத்த விரும்பவில்லை. ஆகவேதான் நான் எனது பதிவில் அதற்கெல்லாம் கவலைப்படாத 60 வயது இளைஞன் டோண்டு ராகவனைத் தவிர வேறு யாரையும் அடையாளப்படுத்தவில்லை.

மற்றப்படி உங்களைத் தெரியாதவர் யார்?

அன்புடன்,
டோண்டு ராகவன்
thiru said…
செய்திகளுக்கு நன்றி பொன்ஸ்!
சந்திப்பை வர்ணணை செய்த நல்லதொரு பதிவு... நன்றிகள்...

இதில் லக்கிலுக் ஆருங்க
நிலவனும் அகிலனும் கலந்து கொண்டது இன்னும் என்னால் நம்ப முடியாமல் தானுள்ளது.
விரிவான அறிக்கைக்கு நன்றி.
டோண்டு சார், நட்ட நடுவிலே அமர்ந்து செண்டர் ஆப் அட்ராக்ஷனாக உள்ளார் ஐ மீன் போட்டோவில்.
Santhosh said…
இது போன்ற சந்திப்புக்கள் நிகழ்வதும் கருத்துக்கள் பறிமாறப்படுவதை கேட்பதற்கு(படிப்பதற்கு) நன்றாக உள்ளது.
//ஜோசப், பம்பாய் ஆங்கிலப் பதிவர்கள் போல தமிழ்ப்பதிவர்கள் சங்கம் ஒன்று அமைத்து பத்திரிக்கையாளர்களுக்கான சலுகைகளைப் பெற்றுத் தரவேண்டும் என்ற யோசனையை முன்வைத்தார்//
நாம் பத்திரிக்கையாளர்கள் அளவிற்கு முன்னேறவில்லை. இதுல சலுகைகள் வேறு. சங்கம் அப்படின்னு ஒண்ணை ஆரம்பிச்சால் சலுகைகள் இல்லாம் இருக்கவே முடியாதா என்ன?

பொன்ஸ்,
இரண்டாவது வீடியோ இன்னும் தெரியவில்லை.
நன்றி பொன்ஸ். நம்ம பொழப்பு இவ்வளவு சீரியசா போவது பற்றி மிக்க மகிழ்ச்சி.. ஏனோதானோன்னு எழுதிக்கொண்டிருக்கும் (என்னைய்ம் சேர்த்த) பலருக்கும் இதுபோன்ற விவாதங்களும் சந்திப்புக்களும் வலைப்பதிவு சீரியசான வேலை என்பதை நினைவுகூறுகின்றன.

வாழ்க வளர்க.
நாம் பத்திரிக்கையாளர்கள் அளவிற்கு முன்னேறவில்லை. ? //

உண்மைதான்.. ஆனால் நம்முடைய நோக்கம் இதுவாகத்தான் இருக்க வேண்டும். பத்திரிகையாளர்கள் ஒன்றும் பிறவியிலேயே எழுத்தாளர்களாக இருக்கவில்லை..

பத்திரிகையாளராக பரிணமிக்கக்கூடிய தகுதி நம் தமிழ்மணத்திலேயே பலருக்கு இருப்பதை நான் கண்கூடாகக் காண்கிறேன். இது சாத்தியம், இது நம்மால் முடியும் என்ற மன உறுதிதான் நமக்கு தேவை..

இதுல சலுகைகள் வேறு. சங்கம் அப்படின்னு ஒண்ணை ஆரம்பிச்சால் சலுகைகள் இல்லாம் இருக்கவே முடியாதா என்ன//

நம்முடைய சங்கம் எந்தவொரு சலுகைகளையும் யாரிடமும் கோராது. எங்களுக்கும் ஒரு பத்திரிகை நிரூபருடைய அந்தஸ்த்தை தாருங்கள் என்பதைத் தவிர.
மற்றப்படி உங்களைத் தெரியாதவர் யார்?//

அப்படியா ராகவன் சார்?

காலர தூக்கி விட்டுக்க வேண்டியதுதான்:))
அய்யோ என்ன பொன்ஸ நான் வந்திட்டு போனதைப பற்றி எழுதலையா..?

ம் தென்றலாய் வந்தேன் :)
ஒண்ணுமில்லைன்னாலும்..

அதென்ன கொத்தனார் அப்படி சொல்லிட்டீங்க.. நல்லா மட்டுமல்ல நல்ல விஷயங்களையும் பரிமாறிக்கொள்ளக் கூடிய கூட்டமாகவே இருந்தது.. இனியும் இருக்கும்..

நேரில் பார்த்து பேசும் போது சிலரிடம் இருக்கும் காழ்ப்புணர்வு குறையலாம்.//

வலைப்பூக்களில் எழுதுபவையெல்லாம் காழ்ப்புணர்வை ஏற்படுத்துமா என்ன? அந்த அளவுக்கு மனப்பக்குவம் இல்லாதவர்களா நம் நண்பர்கள்..I don't think so.. எப்போதும் சொல்வதையே இப்போதும் சொல்கிறேன்..

நம்முடைய எந்த கருத்துக்கும் ஒரு மாற்றுக் கருத்து இருக்கும், இருக்க வேண்டும்.. இதை உணர்ந்துக்கொண்டால் காழ்ப்புணர்ச்சிக்கு இடமேது?
நன்றி திரு, சின்னக் குட்டி,

சின்னக் குட்டி, லக்கி புகைப்படத்துக்கு நிற்கவில்லை. நீங்கள் சென்னை வந்தால் சந்திக்கலாம் :)

வசந்தன், நிலவனும் அகிலனும் இந்தப் புகைப்படத்திலும் உள்ளார்கள்..

கால்கரி சிவா,
//டோண்டு சார், நட்ட நடுவிலே அமர்ந்து செண்டர் ஆப் அட்ராக்ஷனாக உள்ளார் ஐ மீன் போட்டோவில்.//
சரி சரி, சென்னப் பட்டினத்துலயுமா!!

சந்தோஷ், இரண்டாவது வீடியோ கொஞ்சம் பெரிதாகப் போய்விட்டது. அது பாலபாரதி பேசியது தான். அவரின் பதிவில் கட்டுரையாகவே வெளிவரும்.

//வலைப்பதிவு சீரியசான வேலை என்பதை நினைவுகூறுகின்றன.
//
உண்மைதான் சிறில்..

//அய்யோ என்ன பொன்ஸ நான் வந்திட்டு போனதைப பற்றி எழுதலையா..?
//
நிலவுநண்பன், ஓ, நீங்க தான் இட்லிவடையா? ;)
வந்தாரை வரவேற்கும் தமிழ்நாடு என்ற இலக்கணத்துக்கு அமைய நம் ஈழச்சகோதர்களை அழைத்த, பேச அனுமதியளித்த லக்கியார், பாலபாரதி மற்றும் தமிழக வலைப்பதிவு உறவுகளுக்கு என் நன்றிகள்.
G Gowtham said…
சந்தோஷ் சொன்னது..
//நாம் பத்திரிக்கையாளர்கள் அளவிற்கு முன்னேறவில்லை. //

tbr.joseph said..
//நம்முடைய நோக்கம் இதுவாகத்தான் இருக்க வேண்டும். பத்திரிகையாளர்கள் ஒன்றும் பிறவியிலேயே எழுத்தாளர்களாக இருக்கவில்லை..
பத்திரிகையாளராக பரிணமிக்கக்கூடிய தகுதி நம் தமிழ்மணத்திலேயே பலருக்கு இருப்பதை நான் கண்கூடாகக் காண்கிறேன். இது சாத்தியம், இது நம்மால் முடியும் என்ற மன உறுதிதான் நமக்கு தேவை..//

இப்ப ஜி.கௌதம்..
சந்தோஷ்.. உங்க கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. எழுத்தை ஆளும் எழுத்தாள தகுதி இங்கே வலைப்பூக்களில் பலருக்கு இருப்பதை நான் படித்து வியக்கிறேன். ஒரு நல்ல பத்திரிகையாளனுக்கான சமூக நோக்கமும் இங்கே நான் பார்த்தவரையில் பெரும்பான்மை!

ஒரு ரகசியம் சொல்கிறேன், காதைக் கொடுங்கள்.. ஒரு சில பதிவாளர்கள் பல முழு நேரப் பத்திரிகையாளர்களுக்கு இணையாக, தெளிவாகவே எழுதுகிறார்கள்.
இது குறித்து விளக்கம் கேட்டால் அப்புறம் நான் கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல்லெறிவது போலாகிவிடும்!

அதனால்தான் இந்த வலைப்பதிவாளர்களில் என்னால் இயலும்வரையில் ஒரு சிலரையாவது குங்குமம் வார இதழில் நான் எழுத வைக்கும் முயற்சியில் இருக்கிறேன்.
அதன் முதல் கட்டமாக வலைப்பூக்களில் வெளியான சில பதிவுகளை அப்படியே எடுத்து வெளியிட்டேன்.
அடுத்த கட்டமாக அவர்களாக குங்குமத்துக்கென பிரத்தியேகமாக எழுதி அனுப்பும் படைப்புகளை எடுத்துக்கொண்டேன்.
அதற்கும் அடுத்த கட்டமாக.. இப்போது நானே ஒரு சில பதிவர்களுக்கு அசைன்மெண்ட்டும் கொடுக்க ஆரம்பித்திருக்கிறேன்.
தடாலடி போட்டிகள் நடத்துவதெல்லாம் கூட இவ்வாறான என் ஆள் தேடல் முயற்சியே!
இந்தவாரம் கடைக்கு வந்திருக்கும் குங்குமம் இதழில்கூட சுமார் 16 பக்கங்களை எழுதியிருப்பது வலைப்பூக்கள் மூலமான எழுத்தாளர்களே!

அடித்து தூள் கிளப்புங்கள் வலைப்பதிவாளர்களே.. (என்னை வலைப்பதிவாளர் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம். இங்கே நான் ஜஸ்ட் ஐந்து மாதங்களுக்கு முன்புதான் புதிதாக முளைத்த சிறுவன்). :-)
G Gowtham said…
மறுபடியும் நான்தான்!
எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் குங்குமம் மட்டுமே இலக்காக இருக்காது. அல்லது குங்குமமேகூட இலக்கில் இல்லாமல் இருக்கலாம். என் கருத்து என்னவென்றால் இதை ஆரம்பமாகவைத்து வாருங்கள், வளருங்கள் தோழர்களே..
டோண்டுவின் வலது பக்கம் ஓகை.
அடுத்து நான்.எனக்கு முன்னால் SK
கெளதம்!

உங்ள் நேர்மையான கருத்துக்களுக்கும், முயல்வுகளுக்கும், பாராட்டுக்கள்.
கெளதம்ஜி,
குங்குமம் இதழில் பதிவுல இருந்து எடுத்துப் போடுவதா இருந்தா சம்மந்தப்பட்டவர்களிடம் ஒத்த வார்த்தை சொல்லிடுங்க.ஏதுனாச்சும் அஞ்சு பத்து, இலவச இதழ் லோக்கல் முகவரிக்கு அனுப்பணும் என்றும் வலையுல எழுத்தாளர்கள் சார்ப்பாய் கோரிக்கை வைக்கிறேன்.


பொன்ஸ், பதிவுக்கு சம்மந்தமில்லாத பின்னுட்டத்துக்கு மன்னிகவும்.
சிஜி,

சிங்கப்பூர் சட்டைதான் நம்ம எஸ்.கே. அவர்களா?
ஆமாம் துளசி...துயரநிகழ்வு ஒன்றால்
முடியிழந்திருந்தார்.....
fhygfhghg said…
ஓ நம்ம தலைவர் முத்து தமிழினி வந்திருந்தாரா...
G Gowtham said…
பாராடுக்களுக்கு நன்றி மலைநாடான்!

ramachandranusha,
//குங்குமம் இதழில் பதிவுல இருந்து எடுத்துப் போடுவதா இருந்தா சம்மந்தப்பட்டவர்களிடம் ஒத்த வார்த்தை சொல்லிடுங்க.ஏதுனாச்சும் அஞ்சு பத்து, இலவச இதழ் லோக்கல் முகவரிக்கு அனுப்பணும் என்றும் வலையுல எழுத்தாளர்கள் சார்ப்பாய் கோரிக்கை வைக்கிறேன்.//
இந்த நிமிடத்திலிருந்து அமல் படுத்த முயற்சிக்கிறேன்.
குறைந்தபட்சம் இரண்டு இதழ்களாவது அனுப்ப முயல்கிறேன்.
வலைப்பூக்களில் இருந்து கட் அண்ட் பேஸ்ட் செய்து குங்குமத்தில் வெளியிடுவதை விட நேரடியாக பலரையும் குங்குமத்தில் எழுதவைக்க வேண்டும் என்பதே என் ஆசை..

//பொன்ஸ், பதிவுக்கு சம்மந்தமில்லாத பின்னுட்டத்துக்கு மன்னிகவும்.//
என்னையும் பொன்ஸ்...!
Santhosh said…
கவுதம் ஜி,
நிறைய பேருக்கு திறமை இருக்கிறது ஒத்துக்கொள்கிறேன். ஆனால் எவ்வுளவு பேர் சமூக பார்வையோடு எழுதுகிறார்கள் என்பதே என்னுடைய கேள்வி. உங்களுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை இங்க பாதி நேரம (நீங்க தமிழ்மணத்தின் முகப்பில் பாத்தா தெரியும் சாதா பதிவுகளை விட சாதி பதிவுகள் தான் சில சமயம் அதிகமா இருக்கும்) ஜாதி சண்டைகள் தவிர வேற எதுவும் நடப்பது இல்லை, அப்புறம் கருத்து சுதந்திரம் பத்தி சொல்ல தேவையே இல்லை உங்க கருத்துக்கு எதிர் கருத்து சொல்பவர்கள் பெரும்பாலும் உங்க ஜென்ம எதிரி தான், நக்கல் நையாண்டி பத்தி சொல்லவே வேண்டாம் நான் யாரை வேண்டுமானாலும் நக்கல் அடிப்பேன் என்னை நக்கல் அடித்தால் அவ்வுளவு தான் நானும் என்னுடைய கூட்டமும் சேர்ந்து உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவோம. நாம் பத்திரிக்கையாளர் ஆக பயணிக்க வேண்டிய தூரம் வெகு தொலைவில் இருக்கிறது. திறமை என்பது அது சமூகத்திற்கு பயன்படும் விதத்தில் செல்வவிடப்படும் பொழுதே முழுமை அடைகிறது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து :)).
thiru said…
//திறமை என்பது அது சமூகத்திற்கு பயன்படும் விதத்தில் செல்வவிடப்படும் பொழுதே முழுமை அடைகிறது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து :)).//

உண்மை

Popular posts from this blog

மெட்ராஸ் பாஷை - ஒரு இலக்கண பார்வை

27D

ஏதோ வண்டி ஓடிக்கினுகீது சார்! - ஜெயகாந்தன்