Thursday, August 23, 2007

சென்னை வலைப்பதிவர் சந்திப்பு..

என்றைக்கு: ஞாயிறு 26-ஆகஸ்ட்-2007
எப்போ: மாலை 5 முதல் 7 வரை
எங்கே: வுட்லேண்ட்ஸ் டிரைவ் இன்னின்
விழாக்களுக்கான ஹால்(Conference Hall), கதீட்ரல் ரோடு
நிகழ்ச்சி நிரல்:
* பதிவர் பட்டறையின் அடுத்த நகர்வு குறித்து விவாதித்தல் - மா.சிவகுமார்
* டி.எம்.ஐ நிறுவனத்தின் பணிகள் குறித்த அறிமுகம் - டி.எம்.ஐ சார்பாக நண்பர்கள் சொர்ணம் சங்கரபாண்டி மற்றும் சுந்தரவடிவேல்
* மேலும், இணையத்தமிழ் வளர்ச்சியில் முக்கியமான பங்குக்கு சொந்தக்காரரான நண்பர் சுரதா யாழ்வாணனும் இந்த சந்திப்பில் கலந்து கொள்கிறார்.

தொடர்புக்கு: மா.சிவகுமார்(98840 70556)- பாலபாரதி (99402 03132)


மிக குறைந்த இடைவெளியில் அறிவிக்க நேர்ந்துவிட்டது.. நண்பர்களின் வருகையும் இடமும் உறுதி செய்ய நாளாகி விட்டது..

அல்லாரும் மறக்காம வந்துருங்கபா..

மேப் :

சென்னை நினைவுகள் - உண்மைத்தமிழன் (விருந்தினர் பத்தி)

1995-ம் ஆண்டு ஜனவரி 1.

என் வாழ்க்கையில் நடந்த திருப்பங்களில் முதன்மையானது சென்னையில் கால் பதித்த இந்த நாள்தான்.

சென்னையில் நான் பார்க்கச் சென்று மீள முடியாமல் மூழ்கியது கன்னிமாரா நூலகத்தில்தான். திண்டுக்கல், மதுரை என்று வாசம் செய்த ஊர்களிலெல்லாம் நூலகங்களை இரண்டாவது வீடாக வைத்திருந்த நான் சென்னைக்கு வந்ததும் முதல் ஞாயிற்றுக்கிழமை கன்னிமாராவில்தான் கழித்தேன். எத்தனை, எத்தனை புத்தகங்கள்? படிக்க நேரம்தான் கிடைக்கவில்லை. இப்போதும் தொடர்ந்து பத்து வருடங்களாக அந்நூலகத்தின் உறுப்பினராக இருந்து வருகிறேன்.

தொடர்ந்து சென்னையை வலம் வர ஆரம்பித்தேன் புது மாப்பிள்ளை, பொண்ணுடன் ஊர், ஊராகச் சென்று விருந்து சாப்பிடுவானே அது மாதிரி..

எப்போதும் எனக்குப் பிரியத்திற்குரிய சினிமா தியேட்டர்களை, சாயந்தர வேளைகளில் குத்தகைக்கு எடுக்க ஆரம்பித்தேன். தமிழ்ப் படங்களைவிட ஆங்கிலப் படங்களே எனக்கு அதிகம் பிடித்தன. தேவி, சத்யம், ஆனந்த் மூன்று காம்ப்ளக்ஸ்களிலும் ஒரு விடுமுறை நாளில் நான்கு ஷோவும் பார்த்துவிட்டுத்தான் சைக்கிளில் அசோக் நகர் சென்றடைவேன். அன்றைக்கு எனக்கு இருந்த சினிமா ஆசையை வெறியாக மாற்றி என்னை வெறிநாய் கணக்காக அலையவிட்டது இந்த சென்னை மாநகரம்தான்.

நான் தொடர்ந்து பார்க்க நினைத்தது வண்டலூரில் வசித்து வரும் முதலையையும், நமது(யாருக்காவது ஆட்சேபணை உண்டா..?) மூதாதையரான கொரில்லா குரங்கையும்தான். பார்த்தேன். நமது மூதாதையர், நம்மைப் போலவே இருந்ததைக் கண்டு எனக்கு மகா ஆச்சரியம். கை குலுக்கி குசலம் விசாரிக்க நினைத்தேன். என்னைப் பார்த்தவுடன் மஞ்சள் கலர் பற்கள் முழுவதுமாகத் தெரிய காட்டியபடியே சிரித்ததைப் பார்த்து பயந்துபோய் கையைத் திருப்பி எடுத்துக் கொண்டேன். பரவாயில்லை.. என்றாவது ஒரு நாள் கை குலுக்கியே தீருவேன்..

முதலை, என்னை யானையை(!)விட பரவசப்படுத்திய ஒரு பிராணி. அதெப்படி இவ்ளோ பல்லு அதுக்கு? இதன் பற்களின் எண்ணிக்கையைவிட எனக்கு முதலையின் மீதான கேள்விக்குறிகளின் எண்ணிக்கை அதிகம். சர்க்கஸில் யானை, புலி, சிங்கம், கரடி, நரியெல்லாம் பார்த்தாச்சு.. இந்த முதலை மட்டும்தான் பாக்கியிருந்தது. அதையும் இங்கே டெண்ட் அடித்து பார்த்து, பின்பு சமயம் கிடைக்கும்போதெல்லாம் அவ்வப்போது வந்து பார்த்து இப்போது வண்டலூர் எங்கே இருக்கிறது என்று கேட்கும் நிலையில் இருக்கிறேன். காரணம் என்னை மாற்றிய சென்னை மாநகரம்..

மாதத்திற்கு 750 ரூபாய் சம்பளம் என்ற நிலையில் உழைக்க ஆரம்பித்த எனக்கு முதலில் சென்னை மாநகரம் வழங்கிய கொடை மலேரியா என்ற நோயை. திருவாளர் கொசு அவர்கள், கூவம் ஆற்றிலிருந்து படையெடுத்து வந்து அக்கரை ஓரமாகத் தங்கியிருந்த என்னை நொச்.. நொச்.. என்று நொச்சியெடுத்தார். கம்பெனி ஓனரின் அறிவுரைப்படி டார்டாய்ஸ் கொழுத்தியும் சாகாமல், டார்டாய்ஸின் தயாரிப்பையே கிண்டல் செய்வதைப் போல் போர்த்தியிருந்த போர்வைக்குள்ளும் வந்து கடித்து பேதியை உண்டாக்கியது.

நான் தங்கியிருந்த வீட்டின் பாத்ரூமைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் தினமும் ஒரு இடமாக மாறி மாறி படுத்துவிட்டேன். ம்ஹ¤ம்.. கொசுவார் என்னை விடவேயில்லை. கடைசியில் மானாவரி மகசூல் மாதிரி என்னை கொசுக்கூட்டம் என்னை அப்பிக் கொண்டதால் மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்லப்பட்டேன். அங்குதான் ஒரு பெண் மருத்துவர் மிகவும் அலட்சியமாகச் சொன்னார்.. வேறென்ன.. மலேரியாதான் என்று.. அன்று மாலையே என்னை மதுரைக்கு பார்சல் செய்தார்கள்.

ஆனாலும் மெரீனாவின் கடற்காற்றும், கன்னிமாராவின் புத்தகங்களும், சினிமா தியேட்டர்களும் "என்னை வா.. வா.. கண்ணா.." என்றழைக்க மீண்டும் சென்னை விஜயம். இப்போது சம்பளம் 250 ரூபாய் கூட கிடைத்து ஆயிரமானது.

காலை டிபன் 4 இட்லி, மதியம் 3 புரோட்டோ, இரவு 3 புரோட்டா, 1 ஆம்லேட் என்று சிக்கனத்திலும் சிக்கனமாகச் சாப்பிட்டு ஆறே மாதத்தில் மறுபடியும் டைபாயிடு காய்ச்சலை வாங்கிக் கொண்டுதான் மதுரை சென்றடைந்தேன்.

ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்களே.. அதேதான்.. உடல் நலமடைந்து சிக்கன் பிரியாணி சாப்பிடுகின்ற அளவுக்கு வந்தவுடன் அன்று இரவே சென்னைக்கு எடுத்தேன் டிக்கெட்டு. இப்போது வேறு ஒரு இடத்தில் வேலை. நல்ல வேலை. மூன்றரை மடங்கு சம்பள உயர்வுடன்.. கேட்கவா வேண்டும்..?

இதன்பின்தான் எனக்குள் புகுந்த விதி தலைகால் தெரியாமல் ஆட ரம்பித்தது. ஒரு நல்லவனை, பண்பானவனை எந்த அளவுக்கு அலைக்கழிக்க வைக்க முடியுமோ அத்தனையும் செய்தது இந்த சென்னை மாநகரம்.

வாங்குகின்ற சம்பளத்தில் அரைவாசி சினிமாவுக்கும், கால்வாசி டிரெஸ்ஸ¤க்கும், மீதி கால்வாசி வீட்டுச் செலவுக்கும் போய்விட.. வாழ்க்கை எப்போதும் கைல காசு, வாய்ல தோசை கதைதான்.. எந்தச் சேமிப்பையும் செய்யவிடாமல் என்னை ஆட்கொண்டன சென்னையின் வசீகரமான பக்கங்கள்.

இரவில் கொத்து புரோட்டா 3 ரூபாய்க்கு கிடைக்கிறதே என்றெண்ணி கையேந்தி பவனில் வெட்டு, வெட்டு என்று மூன்று வருடங்கள் வெட்டிய பிறகே எனக்குத் தெரிந்தது.. நான் வெட்டியது மே.. மே.. என்று ஈனஸ்வரத்தில் அனத்தும் ஆட்டின் கறியல்ல.. மா.. மா.. என்று அலங்காரமாக கனைக்கும் மாட்டின் கறி என்று.. அன்றைக்கு எத்தனை விரல்களை வாய்க்குள் விட்டால்கூட, வாந்தி வராது என்ற நிலை எனக்கு.. எப்படி வரும்?

வடபழனி ராம் தியேட்டரில் பிளாக்கில் டிக்கெட் வாங்கிவிட்டு பேண்ட்டின் பின்பாக்கெட்டைத் துழாவியபோது பர்ஸ் பிக்பாக்கெட்டில் காணாமல் போயிருந்தது.. தியேட்டர் முழுவதும் துழாவு துழாவென்று துழாவியபோது டிக்கெட் விற்றவனே நான்கு பேரை அழைத்து என் முன்னே நிறுத்தி சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி என்னுடைய பர்ஸில் இருக்கும் பணத்தில் 25 சதவிகிதம் எனக்கு.. 75 சதவிகிதம் அவர்களுக்கு என்று கையெழுத்திடாத சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி என் கண் முன்னாலேயே அவர்களிடமிருந்து பர்ஸை வாங்கி பணத்தைப் பிரித்துக் கொடுத்து "போய் படம் பாரு ராசா.." என்று சொல்லியனுப்பியபோது திரையில் 'கலைச்சேவை' செய்து கொண்டிருந்த ஷகீலாகூட, என் கண்ணுக்குத் தெரியாமல் என் காலியான பர்ஸே என் மனக்கண்ணில் அமர்ந்திருந்தது.

தங்கியிருந்த மேற்கு மாம்பலம் மேன்ஷனில் இரவு ஒரு வேளை மட்டும் தங்கிக் கொள்கிறேன் என்று வந்த தூரத்துச் சொந்தத்து நண்பன் ஒருவன் விடியும்போது என் அறை நண்பர்கள் மூன்று பேரின் பேக்கையும், பணத்தையும் அபேஸ் செய்து கொண்டு எஸ்கேப்பாயிருந்தபோது(என்ன கஷ்டமோ?) கட்டிய கைலியோடு மதியம்வரைக்கும் உட்கார வைத்து ஆளாளுக்கு கேள்வி மேல் கேட்க, திண்டுக்கல் மலைக்கோட்டை மாரியம்மனும், அபிராமியம்மனும், திருமலைக்கேணி முருகனும் துணைக்கு வராமல் நட்டாத்தில் என்னை விட்டபோதுதான் சென்னையின் தூர நேசம் எனக்குப் புரிந்தது.

தேவி தியேட்டரில் செகண்ட் ஷோ படம் பார்த்துவிட்டு எல்.ஐ.சி. பஸ்ஸ்டாப்பில் பஸ்ஸ¤க்கு காத்திருந்தபோது சந்தேக கேஸில் போலிஸிடம் மாட்டி, கடைசியில் பாக்கெட்டில் இருந்த சில்லரை காசுகளைகூட விடாமல் பிடுங்கிக் கொண்டு போன அந்த கான்ஸ்டபிள்களை இப்போது நினைத்தாலும் சுட்டுவிடலாம் என்று கோபம் வருகிறது. பின்ன தேவி தியேட்டர்ல இருந்து மேற்கு மாம்பலத்துக்கு நடந்து பாருங்க தெரியும்..

இந்தியக் குடிமகன்களில் நானும் ஒருவன் என்பதை நிரூபிக்க பாஸ்போர்ட் எடுக்க முயற்சித்தேன். வரிசையில் நின்றேன். என் முறை வருவதற்கே 3 மணி நேரம் ஆனது. அப்ளிகேஷனை வாங்கியவுடன் போட்டோ சரியில்லை. வேற போட்டா எடுத்திட்டு வாங்க என்று முகம் பார்க்காமலேயே சொன்ன அந்த ஊழியர் எனக்குப் பின்னால் வந்த மூஞ்சி இருக்கா இல்லையா என்ற தோரணையில் புகைப்படம் வைத்திருந்த ஒருவரிடமிருந்து 'கவரை'யும், அப்ளிகேஷனையும் வாங்கியது கண்டு என் காதில் புகை வந்ததுதான் மிச்சம்.

முதன்முதலாக டூவீலர் வாங்கிவிட்டு முதல் நாள் காலையிலேயே பீச் வரை வந்து கெத்தாக வாக்கிங் செய்துவிட்டு லஸ் கார்னரில் படு ஸ்பீடாகச் சென்று ஒரு மாருதி காரில் மோதி காரின் பின் பக்கக் கண்ணாடியை உடைத்தது எனக்கு நினைவிருக்கிறது. ஆனால் அக்காரில் இருந்து இறங்கிய அம்மணியைப் பார்த்து பரிதாபமாக முழிக்க, "புதுசா.. பார்த்து ஓட்டுங்க.." என்று சொல்லிவிட்டு அலட்சியமாகச் சென்ற அந்தத் தாரகையை இப்போதும் சினிமாவிலும், டிவியிலும் பார்க்கும்போதெல்லாம் கையெடுத்துக் கும்பிடுகிறேன்.

நான் பங்கு கொண்ட ஒரு ஷூட்டிங்கில் லேட்டாக வந்ததால் எனக்கு சாப்பாடு வராமல்போக, எனக்குச் சாப்பாடு போடாமல் நான் டேக்கிற்கு வரமாட்டேன் என்று சொல்லி என்னைச் சாப்பிட வைத்துவிட்டு பின்பு கேமிரா முன் வந்து நின்ற அந்த மிகப் பெரிய நடிகையின் செய்கையைப் பார்த்து(அன்றைக்குத்தான் நான் அவர்களை முதன் முறையாகப் பார்த்தேன்-இரண்டு மணி நேர நட்புதான்) சென்னையிலும் சில மக்கள் இருக்கிறார்கள் என்று உணர்ந்து கொண்டேன்.


எல்லாவற்றிற்கும் மேலாக,

1995-ம் ஆண்டு ஜனவரி 1. மாலை : 4.30 மணி. இடம் : சென்னை மெரீனா கடற்கரை.

12-B பஸ்ஸில் இருந்து இறங்கிய நான், கடலை நோக்கி நடந்த அந்தப் பத்து நிமிடங்கள் நான் நானாகவே இல்லை.

கடல் அருகில் நெருங்க, நெருங்க.. பிறந்த மண்ணில் இருந்து விலகி தூர தேசத்திற்குப் பயணமானவன் மீண்டும் பிறந்த மண்ணைத் தொட்டவுடன் அவன் இல்லம் அருகில் செல்லச் செல்ல அவனுக்குள் ஒரு கண் காணாத உற்சாகமும், தவிப்பும் ஏற்படுமே.. அது மாதிரியான ஒரு உணர்வு.

பிரமிப்பும், அச்சமும், பயமும், திகைப்பும் மனதில் மேலோங்கி நிற்க வங்காள விரிகுடா கடலில் கால் வைத்தவுடன் என்னையறியாமல் நான் சொன்ன வார்த்தை, "ஆத்தி.. எம்புட்டு தண்ணி.."

உண்மைதான். எனது பிரமிப்புக்கு காரணம், அந்த 25 வயதுவரை நான் கடல் என்ற ஒரு பூச்சாண்டியை நேரில் கண்டதில்லை.. திரைப்படங்களில் பார்த்ததோடு சரி..

இழுத்துச் செல்லும் அளவுக்கு பேராசையுடன் தேடி வந்த அலைகளில் புரண்டு எழுந்த நான் சிறுபிள்ளைத்தனமாக குதூகுலத்துடன் போட்டிருந்த உடையுடன் நனைந்து, நனைந்து எழுந்ததை வெட்கத்துடன் சொல்லித்தான் ஆக வேண்டும். இது வேறு வகை சந்தோஷம்.

சென்னை வாழ்க்கையில் நான் மிகப் பெரியதாக இன்றும் நினைத்துப் பார்ப்பது, கால் பதித்த அன்றைய மாலையே எனது வாழ்க்கையில் நான் பிரமிப்பாய் பார்த்தது, கேட்டது, நினைத்த வங்கக் கடலை நேரில் கண்டதுதான்.

அமைதியாய், அழகாய் பொங்கி வந்து கொண்டிருந்த கடலன்னை மூன்று வருடங்களுக்கு முன் சுனாமியாய் பொங்கியெழுந்து அவளை வணங்கி வந்த அப்பாவிகளை தன்னுள் இழுத்துக் கொண்ட செயல் சென்னையின் துரதிருஷ்டம்தான்.

சென்னை. வராதவர்களுக்கு சொர்க்கம். கேட்டவர்களுக்கு ஏக்கம். ஆனால் வந்தவர்களுக்கு.. விட்டுவிட்டுப் போகவும் முடியவில்லை. இருக்கவும் முடியவில்லை என்ற நிலைமை.

விலைவாசிகள் கிரையோஜெனிக் ராக்கெட்டில் மேலே மேலே போய்க் கொண்டிருக்க.. நியாயமான சம்பளம் கொடுக்கும் நல்லவர்களின் எண்ணிக்கை ஊழல் செய்யாத அரசியல்வாதிகளின் எண்ணிக்கையைப் போல் குறைந்து கொண்டே போக..

வரும்காலத்தில் சென்னையில் பிச்சைக்காரர்கள், பணக்காரர்கள், திருடர்கள்.. இந்த மூவர்கள் மட்டுமே இருக்க முடியும் என்றே நம்புகிறேன்.

Wednesday, August 22, 2007

சிங்காரச் சென்னை - தமிழ்நதி (விருந்தினர் பத்தி)

எழுத்துக்கும் எனக்குமிடையில் ஒருவித இடைவெளி விழுந்துவிட்டதை,தொடர்பறுந்த நிலையில் கைகட்டிப் பார்த்துக்கொண்டிருக்கும் இத்தருணத்தில்,சென்னைப் பட்டினம் பற்றி எழுதும்படி பொன்ஸ் கேட்டிருக்கிறார். சென்னையைப் பற்றி ஏற்கெனவே இரண்டு தடவைகள் எழுதிவிட்டேன். அதன் சாயல் இந்தப் பதிவிலும் இடம்பெறக்கூடும் என்ற அச்சம் மேலிடுகின்றபோதிலும் பிரியத்திற்குரியவர்கள் கேட்கும்போது மறுக்க முடியவில்லை. இந்த வரியை எழுதும்போது அடுத்த வரி என்ன எழுதப்போகிறேன் என்று எனக்குத் தெரியாது.

எந்த நகரமாக இருப்பினும் அவரவர் தனிப்பட்ட வாழ்க்கை முறை மற்றும் அப்போதைய மனோநிலையைப் பொறுத்தே பார்வைகளும் அமையும். மரணங்கள் மலிந்த பூமியில் சவப்பெட்டிகள் செய்பவன் மகிழ்ச்சியாக இருப்பதைப் போலொத்ததெனும் குரூரமான உதாரணத்தையே இங்கும் சுட்டவேண்டியிருக்கிறது. இரக்கமேயில்லாமல் வெயில் எறித்து எரிக்கும் கொடுங்கோடை நாட்களில் சென்னையைச் சபித்திருக்கிறோம். அதிலும் க்குவரத்து நெரிசலுள் மாட்டிக்கொள்ள நேரும்போது உடல் கொதித்துப் போகிறது. மனம் கோபத்தினால்
செய்யப்பட்டதாகிவிடுகிறது. உரசினால் பற்றிக்கொள்ளுமோ என்றஞ்சுமளவிற்கு உடல்கள் வெயிலை வேண்டுமளவிற்குக் குடித்தபிறகே வீடு வந்தடைகிறோம்.இம்மாநகரின் நடுத்தர வர்க்கத்தவர்களால் குடிதண்ணீரை மட்டுமே வாங்கமுடிகிறது. சுத்தமான காற்று இன்னும் விற்பனைக்கு வரவில்லை.மின்விசிறிகள் தோற்றுக்கொண்டிருக்கும் நெருப்புத்துண்டங்களாலாக்கப்பட்ட வீடுகளுள் வாழ்வதென்பதையும் வாழ்க்கை என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது.இடுப்புகளின் நொடிப்புகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் தொலைக்காட்சித் திரைகளில் எப்போதாவது பச்சைப் புல்வெளிகளும் மலர்களும் தென்படுகின்றன.

இன்றைக்கு சென்னையில் மழை பெய்தது நண்பர்களே! மழை என்றால் பெருமழை ஜன்னல்கள் சட்டங்களோடு அடித்துக் கும்மாளமிட்டன. 'பல்கனி'யில் கிடந்த 'அன்னா கரீனினா' நனைந்துபோனாள். வாசலில் நிற்கும் பெயர்தெரியாத மரம் மஞ்சளாய் பூத்திருக்கிறது. இந்த ஜன்னல் வழியாகப் பார்க்கும்போது மலைகளற்ற ஊட்டி போலிருக்கிறது என்று சொன்னால் நீங்கள் கோபித்துக்கொள்ள மாட்டீர்கள்தானே…? வேப்பமரங்களின் சிருங்காரமோ சொல்லத் தேவையில்லை.இலைகள் சுருண்ட கிளைகள் மழையின் அழகில் நாணித் தலையைத் தாழ்த்திக்கொண்டு விட்டாற்போலிருக்கின்றன. 'என்னைக் குளிர்த்து'என்று அவை தாழ்ந்து நிற்கிற அழகை அள்ளிக் கண்களுள் நிறைத்துக்கொள்ள இயலாமற் போனதையிட்டு வருத்தமாக இருக்கிறது. யன்னல் வழியாகத் தெரிந்த கடல் சற்று முன்னர் வரை வானத்தின் கருஞ்சேலையில் பாதியைத் தானும் இழுத்துப் போர்த்திக்கொண்டு
படுத்திருந்தது. கருமை தண்ணீராகக் கரைந்து வழிந்ததும் இப்போது நீலமாய் தன்னியல்பாய் அலையடித்துக்கொண்டிருக்கிறது.

சென்னையோ மடகாஸ்கரோ காலநிலையைப் பொறுத்தே நகரங்களின், கிராமங்களின் முகங்கள் எழுதப்படுகின்றன. இங்கே மழை தெருவெல்லாம் சிறுபிள்ளைபோல துள்ளிவிழுந்துகொண்டிருந்தபோது, விருதுநகரில் வசிக்கும் நண்பர் ஒருவர் கோபத்தோடு சொன்னார் 'இங்கே மொட்டை வெயிலடித்துக்கொண்டிருக்கிறது'என்று.'நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்'என்று கொசுறாய் ஒரு வரி சேர்த்துக்கொண்டார்.

மழை மலர்த்தும் வெயில் கொழுத்தும் சென்னையை வர வர பிடிக்கவாரம்பித்திருக்கிறது. பழகிய வீட்டைப் பிரிய மனம்வராத குடித்தனக்காரர்களைப் போல, இங்கு வாழும் நாட்கள் வளர வளர இந்த நிலத்துடனான நெருக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 'சென்னையில்
மரங்கள் இல்லை'என்பவர்களை ஒரு தடவை அடையாறு பக்கம் வந்து பார்க்கச் சொல்லவேண்டும். மரங்களடர்ந்த அந்தச் சாலையை மூடிய நிழல்கள் வெயிலுக்கு நிச்சயமாக வெறுப்பேற்றுவன.

'உலகம் அழிந்துபோகப்போகிறது... எல்லோரும் ஓடித் தப்பிக்கொள்ளுங்கள்'என்று யாரோ அப்போதுதான் வந்து அறிவித்துவிட்டாற்போல வீதிகளெங்ஙணும் வாகனங்கள் அலறியடித்துக்கொண்டு செல்வதைப் பார்க்கும்போது எரிச்சலாகத்தானிருக்கிறது.எங்கெங்கிலும் கையேந்தும் பிச்சைக்காரர்கள், தெருவோரங்களில் படுத்திருக்கும் நடைபாதைவாசிகள்,பசியோடு அலையும் தெருநாய்கள் இவர்களின்,இவற்றின் கண்களிலிருந்து குற்றவுணர்வோடு தப்பித்து ஓடவேண்டியுமிருக்கிறது. 'பக்கத்து வீட்டுக்காரனோடு தகராறு! குழந்தையைத் தரையில் அடித்துக் கொலை செய்த டீமாஸ்ரர்'என்ற பத்திரிகைத் தலைப்பைப் பார்த்துப் பதறவேண்டியிருக்கிறது. என்றாலும் 'போங்கடா… நீங்களும்…'என்று இந்த உயிரை எறிந்துவிட்டுப் பரலோகம் போய்விட முடிவதில்லை.

ஏனென்றால், இந்தச் சென்னையில் மரங்கள் இருக்கின்றன. பார்த்துக்கொண்டே…பார்த்துக்கொண்டே…. பார்த்துக்கொண்டே….இருக்கக்கூடிய கடல் இருக்கிறது.எப்போதாவது மழை பெய்கிறது. எனது புத்தக அலமாரியில் வாசிக்கப்படாத பல புத்தகங்கள் இருக்கின்றன.சில மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களுள் நல்ல இதயம் கொண்ட நண்பர்கள் இருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக நாங்கள்சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது விமானங்கள் வந்து குண்டு போடுவதில்லை.காலையில் நிச்சயமாக எழுந்திருக்க முடியும் என்ற நம்பிக்கையோடு உறங்கச்செல்ல முடிகிறது. மிக முக்கியமாக, பிள்ளைகள் உயிரோடு இருக்கிறார்கள்.

சென்னை/ பக்கத்துவீட்டு ஜன்னல் புன்னகை - த. அகிலன் (விருந்தினர் பத்தி)

சென்னை என்கிற வார்த்தை எனக்குத் தெரிகிறபோது. ஒரு 8 வயதிருக்கும். கட்டுங்கடங்காமல் காட்டுக்குள் குகைகளிற்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் விசத்திரக்குள்ளர்களையும், முகமூடி வீரர் மாயாவியையும் அவரது காதலி டயானாவையும் ராணி காமிக்ஸ் புத்தகத்தில் புரட்டி முடிந்து ஆவலடங்காமல் கடைசி மட்டைவரை படித்துவிடுகிறபோது எனக்கு தெரிந்த வார்த்தை சென்னை- 600018 என்று நினைக்கிறேன்.
பிறகு சென்னை இந்திய புத்தகங்கள் வழியாகவும் சினிமா வழியாகவும் மிகவும் பரிச்சயமான பக்கத்து வீட்டு ஜன்னலில் ஒளிர்கிற புன்னகை போலாகிவிட்டது. நான் சென்னையில் வசிக்கநேரிடும் என்று அப்போதெல்லாம் நான் நினைத்து பார்த்தது கிடையாது. இப்போது நான் ஒரு சென்னை வாசி. அதன் பிரமிப்புக்களை எல்லாம்தாண்டி அதன் வாழ்வியலுக்குள் என்னை நுழைத்துக்கொண்டு விட்ட சராசரி நகரவாசியான பின்பு எனது கற்பனையில் இருந்த சென்னை கொஞ்ச இடங்களில் தகர்ந்து போய்விட்டிருக்கிறது. கொஞ்ச இடங்களில் இன்னும் ஒரு பெரிய நாற்காலி போட்டு உட்கார்ந்து கொள்கிறது.

ஒரு திசை தெரியாப் பயணியைப்போல் நான் நுழைந்த ஆரம்பங்களில் சென்னை என்னை திக்குமுக்காட வைத்திருக்கிறது. இந்தப் பெருநகரின் வாய் எங்கே என்னை விழுங்கி ஏப்பம் விட்டுவிடுமோ என்கிற தயக்கம் இருந்துகொண்டே யிருந்தது. திருவிழாவில் தொலைந்து போன குழந்தையைப்போல் மிரள மிரள விழித்திருக்கிறேன். செம்மண் புழுதியுடன் குண்டுச்சத்தங்களால் நிறைந்து வழியும் ஊரிலிருந்து வந்த எனக்கு இந்த நகரத்தின் இரைச்சலும் பெற்றோல் புகையும் அதிசயமாகத்தான் இருந்தன. எனக்கு சென்னையில் முதல் முதலாக அழகாக தெரிந்தது விளம்பரத்தட்டிகள் தான். டயரில் இருந்து தங்கம் வரைக்கும் அழகழகான பிகர்களை போட்டோ புடீச்சு யப்பா எத்தினை வளைவுகள் நெளிவுகள் மேடுகள் ( நான் தெருக்களில் சொல்லேறன்.) எங்கெங்கு காணிலும் விளம்பரங்கள். எங்கேயாவது மண்டையோடு படம்போட்டு மிதிவெடி கவனம் என்கிற விளம்பரங்களை மட்டுமே பார்த்திருந்த எனக்கு இது ஆச்சரியமான ஒரு அனுபவமாக இருந்தது.

ஆனால் என்னதான் இருந்தாலும் எனக்கு சென்னை ஒரு அழுக்கு நகரம் என்கிற மாதிரியான உணர்வு இருந்து கொண்டேயிருக்கிறது. சென்னை குப்பையில் கிடக்கும் ஒரு வைரம் என்பதனாலோ!!.

சென்னைக்கு வந்த முதல்வாரத்தில் விக்கி அண்ணாவின் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது வியப்படங்கவில்லை எனக்கு. அது ஒரு அற்புதமான அனுபவம். எங்கேயோ ஒரு விமான நிலையத்தில் இருந்து இறங்கி வந்து குளிர்சாதன வசதி செய்யப்பட்ட வண்டிகளில் பயணித்து நட்சத்திர விடுதிகளில் தங்கி அப்படியே பறந்து விடுகிற எல்லோரும் சென்னையின் உயிரற்ற ஒரு வெறும் கூட்டை மட்டும் தான் பார்க்கலாம். சென்னையை உயிரும் துடிப்புமான சென்னையாகப் பார்க்க அதன் பேருந்துகளிலோ, மின்சார ரெயிலிலோ , அல்லது ஆட்டோக்களிலோ பயணம் செய்து பார்த்தால் மட்டுமே சென்னையை அதன் உயிர்த்துடிப்புடன் அதன் உயிரின் அசைவை அனுபவிக்கலாம்.

மெட்ராசை சுத்திப்பாக்க போறேன்
மெரினாவில் வீடு கட்டபோறென்….

ஒரு பாட்டிருக்கிறது இல்லையா. அப்படி மெரினாவில் ஒரு வீடுகட்டலாம் என்று ஒரு ஆசை வரும்.( சுனாமியும் தான் வரும்) மெரினாவை பார்க்கின்ற போதெல்லாம். தின்னத் தின்ன தீராத சுண்டலைப்போல மெரீனா நீண்டு கிடக்கும். அதன் அழகில் சொக்கிப்போய் கால்நனைக்கலாம் பூக்களாய் உடைந்து சிதறும் நுரையில் சென்னை அழுக்கல்ல அற்புதம் என்று தோன்றும் ஒரு கணம். இரவின் மெரீனா அழகோ அழகு. ஒரு பௌர்ணமி இரவில் மெரீனாவில் யாருமற்ற ஒரு மணற்பரப்பில் (அதைத் தேடிக் கண்டு பிடிப்பது கஸ்டம்) எனை மறந்து உட்கார்ந்து கொண்டிருந்திருக்கிறேன். அந்த அனுபவம் அற்புதமானதுதான். போன வருடப்பிறப்பன்று நான் சென்னையில் பார்த்த குதூகலம் என்னை ஆச்சரியப்படுத்தியது. அதை ஒரு பதிவாகவும் இட்டிருந்தேன். இரவின் மெரீனா மட்டுமா அழகு எங்காவது மொட்டைமாடியில் உட்கார்ந்து கொண்டு வெறுமனே கண்முன்னே விரிகிற சென்னையின் ஒளிப்புள்ளிகளை ரசித்தபடி இருக்கலாம் அதுவும் சுகானுபவம்.
மெரினா நிறைய வெள்ளந்திகளை அடையாளம் காட்டும். எங்கேயோ ஒரு கிராமத்தில் இருந்து தன் பொண்டாட்டியை கூட்டி வந்து எம்.ஜி.ஆர் சமாதியை காட்டி தொட்டு வணங்கிப்போகிறபோது எனக்கு புரிந்தது எம்.ஜி.ஆரின், அண்ணாவின் மீதும் மக்கள் கொண்டு அன்பும் அவர்களின் மக்கள் தொண்டும். அதற்கெல்லாம் ஒரு படி மேலே போய் எரிகிற தீபத்தின் வாயு வெளிவிடுகிற இரைச்சலை தலைவர் குரல் என்று பொண்டாட்டிக்கு விளக்கம் கொடுத்து அது கல்லறையில் காதுவைத்து "அப்படியா மாமா" என்று விழி விரிக்க ஒரு தெனாவெட்டாக வேட்டியை இன்னும் உயர்த்திக்கட்டியபடி நடக்கிற வெள்ளந்திகளை பார்த்துக்கொண்டேயிருக்கலாம்.


ஆட்டோக்காரர்கள் மீதான அச்சமும் கோபமும் எனக்கு ஏனோ ஊட்டப்பட்டிருக்கிறது. சென்னையின் துடிப்பு ஆட்டோக்கள் தான். ஆட்டோக்கள் இரையாத தெருக்கள் அனாதையைப்போல உணரும் என்று நினைக்கிறேன். மற்றபடி அட்ரஸ் இல்லாத தெருக்களையும் கூட ஆட்டோக்கள் அறியும். ஆட்டோக்காரர்கள் ஏமாற்றுக்காரர்கள் கடத்தல் காரர்கள் என்கிற மாதிரியான ஒரு பிம்பம் எனக்குள் இருந்தது. ஒரு வேளை சினிமாக்காரர்கள் பத்திரிகைகள் எற்படுத்திய பிம்பமாய் அது இருக்கலாம். ஆனால் சென்னையின் பஸ் ரூட்கள் இலக்கங்கள் தெரியாத ஆரம்ப நாட்களில் நான் ஆட்டோக்களின் ராஜாவாக இருந்தேன். எனக்கு ஆட்டோக்காரர்கள் ஊர் சுத்திகாட்டியதாய் தெரியவில்லை. (எனக்கே தெரியாம அல்வா கொடுத்துவிட்டார்களோ தெரியாது) ஆனால் ஒரு மழை நாளில் தீடீரென்று ஏறிய குமார் அண்ணாவின் ஆட்டோவில் இப்போதெல்லாம் போன்போட்டு வரச்சொல்லி ஏறிப்போகுமளவுக்கு நெருக்கமாகமுடிந்தது. அதனால் ஆட்டோக்காரார்களைக் குறை சொல்ல முடிவதில்லை. அதற்கெல்லாம் மேலாக போலீஸ்காரர்களின் பாசையில் சொன்னால் un timeல் பஸ்சைத் தவறவிட்டு மறித்த ஆட்டோக்காரக்கிழவர் சொன்ன கதைகள் அந்த மழைஇரவில் காக்கிச்சட்டையில் ஊறிய ஈரம்போல மனசில் பாரமாக அழுத்தியது. ஒரு புதிய தோழனைப்போல என்னிடம் ஏனோ கபகபவென்று எல்லாவற்றைப் பற்றியும் என்னுடன் பகிர்ந்து கொண்டாரே அந்த அந்நியோன்னியம். அந்த மழைஇரவில் சூடாகக் குடித்த ஒரு சிங்கிள் ரீக்கு நான் பணம் கொடுத்தேன் என்பதற்காக ஆட்டோவுக்குப்பணம் வேண்டாம் என்று அடம்பிடித்து மறுத்துவிட்டுப் போன அந்த கிழவரின் மனசு எல்லாமுமாக சோந்து ஆட்டோக்காரர்கள் பற்றிய அபிப்பிராயத்தை மாற்றியது. அந்த கிழவர் பேசும் போது சொன்னார் "சென்னைக்கு புதுசா அதான் பாத்தாலேதெரிதே. ரொம்ப உசாராஇருக்கணும் தம்பி. மோசக்காரப்பய ஊரு. நான் 46 வருசமா மெட்ராசில வண்டி ஓட்டுறேன். என்னை வாழவைக்கல தம்பி மெட்ராசு… அதிஸ்டம் வேணும்பா ஏமாத்துக்காரனுகதான் ஜயிக்கிறான். குரலுடைந்து பிறந்த அந்த வார்த்தைகள் இன்னமும் ஒலிக்கிறது.


ரங்கநாதன் தெருவுக்குள் முதல் முறைபோனால் மிரண்டு நசுங்கி வியர்த்துக் கொட்டிப்போகும். போகப்போகச் சரியாகும். என்னதான் கரும்புச் சக்கைகளை கவிழ்த்து தெருமுழுக்க கொட்டியிருந்தாலும் என்ன அழகு எத்தனை அழகு என்று பாடிக்கொண்டே திரும்பித் திரும்பி எதைப்பார்ப்பது எனத்தெரியாமல் (நான் கடைகளை சொல்றேன்) கழுத்து வலித்துப்போவதும் ஒரு சுகம்தான். அப்டியே ஒரு மாலை 5 மணிவாக்கில தி.நகர் போயிட்டு மாம்பலம் ரெயில்வே ஸ்ரேசன் வந்தீங்கன்னு வையுங்க பாக்கலாம் சென்னையின் ஜனத்தொகை எப்படிப்பட்டதென்று. ஏதாவது ஒரு கூபே வாசலுக்கு நேரே நிண்டீங்கண்டா சரி தானாவே உள்ள ஏத்துவாங்க. அவ்வளவு கூட்டம். என்னதான் ரயில்வேத்துறை பிரச்சாரம் பண்ணிணாலும் கம்பியைப்பிடித்து தொங்கிக்கொண்டே பயணம் செய்கிற வவ்வால்களின்(பதிவர் அல்ல) சாகசங்கள் காணச் சகியாதவை.

மற்றபடி மின்சார ரயில் அலைபாயுதே படத்தில் வருகிறமாதிரி மனசுக்குள் பூப்புக்கிற மத்தாப்பு அனுபவம் தான். ஏதோ அறியா வயதில் யாழ்தேவியில் பயணம் போன எனக்கு தடுக் துடுக் என்று அடிக்கடி கடக்கிற அல்லது வருகிற மின்சார ரயில் ஒரு புழகாங்கித அனுபவம் தான். ஆயிரம்தான் கூட்டம் இருந்தாலும் ரயில் பயணம் என்பது சிலிர்க்கும் அனுபவம் மெட்ரோ ரயிலில் ஏறாதவன் நரகத்துக்குப் போகட்டும் (யார்ப்பா யாரோ ஒரு ஆபீசர் குரல் கேக்குது அதுவே ஒரு நரகம் தான்னு) என்னதான் இருந்தாலும் சென்னையின் மின்சார ரயிலின் நிரந்தரப் பயணிகளை என்றைக்கு அது இறக்கிவிடப்போகிறதோ தெரியவில்லை.

அதான் நான் பிச்சைக்காரர்கனை சொல்கிறேன். என்னதான் சிலிர்க்கும் அனுபவமாயிருப்பினும். அவர்களின் பாடல் அல்லது இரக்கும் குரல் ஒலிக்கத் தொடங்குகையில் தண்டவாளத்தின் தடதடப்பு மனசுக்குள் தொற்றிக்கொள்கிறது. திடீரென்று வண்டியின் வேகத்தில் தொற்றி ஏறிக்கொள்கிற 5 வயது சிறுமியும் அவ ஆத்தாவும் வாசலருகில் உட்கார்ந்து கொள்கிறார்கள். ஆத்தா தோளில் முடிச்சுப்போட்டு இறுக்கிய இன்னுமொரு குழந்தை. அதுவும் சில ஆண்டுகளில் இப்படித்தான் ஆகும். அந்த 5 வயது சிறுமி திடீரென்று ஒரு ஜிம்னாஸ்டிக் காரியையைப்போல் சின்ன வளையத்தை வைத்துக்கொண்டு ஏதோ வித்தை மாதிரி செய்வாள் யாரும் பார்க்கிறார்களா என்பதெல்லாம் அவள் கவனிப்பதில்லை. பிறகு கைகளை நீட்ட தொடங்குவாள் மனிதர்களின் முகங்கள் இறுகத்தொடங்கும். அவள் பொருட்படுத்தாது நீட்டிக்கொண்டேயிருப்பாள் இன்னும் எவ்வளவு நாளைக்குத்தாள் நீட்டிக்கொண்டேயிருப்பாள்….

இன்னுமொரு மனவிழிப் பிச்சைக்காரர். வாயுள் அடங்கிப்போகும் குரலால் பாடியபடி பிச்சை எடுக்கிறார். அவர் குரல் வெளியே எழவேயில்லை கரங்கள் நீண்டிருக்கிறது. அவர் தனது தொழில் குறித்து வெட்கம் கொள்பவராய் எனக்கு பட்டது இருந்தும் அவர் கைகளை நீட்டுகிறார். என்னைக்கடக்கையில் நான் பார்த்தேன் அவரது மூடியவிழிகளில் நீரை. சென்னை கடக்க வேண்டிய துயரங்களில் முக்கியமானது இது.

கோடை வெயிலும், கூவத்தின் மணமும் இல்லாத சென்னையை யாரும் கற்பனை கூடச்செய்யமுடியாது. கூவத்தை கடக்கையில் எனக்குத் தோன்றும் "கந்தகத்தின் வாசனைவிடவும் கூவத்தின் மணம் மேலானது." எத்தனையோ சினிமாக்களில் பார்த்த நேப்பியர் பாலத்தை நேரில் பார்க்கிறபோது வியப்பேதும் எழவில்லை மாறாக ஏமாற்றம் மிஞ்சுகிறது. சின்னச்சின்ன துயரங்கள் இருந்தாலும் சென்னையில் மட்டும் தான் வாழ்வின் எல்லாத்தரப்பு வருமானமுள்ளவர்களாலும் பிழைக்க முடிகிறது அல்லது சாப்பிட முடிகிற நகரமாயிருக்கிறது. குப்பங்களும் கோபுரங்களும் இங்கேதான் சாத்தியம். ஆழ்வார் படத்துக்கு 600 ரூபாய்க்கு டிக்கெட்டும் பள்ளிக்கூடம் படத்துக்கு 60 ரூபாய் டிக்கெட்டும் இங்கேதான் சாத்தியம். பிளாட்பாரக்குழந்தையின் உலர்ந்த உதடுகளின் மேல் ஊற்றப்பட வேண்டிய பால் கட்டவுட்டுகளில் வழிவதும் இங்கேதான் சாத்தியம்.

நான் குப்பைபொறுக்கும் சிறுவர்கள் பற்றி விவரங்கள் சேகரிக்கசென்ற ஒரு நண்பருடன் தொற்றிக்கொண்டே போனபோது நிவேதா என்கிற எட்டு வயது சிறுமியைப் பார்த்தேன். நகரசபை குப்பை கொட்டுகிற இடத்தில் தார் சீட் போட்டு இருந்தது அவளது குடியிருப்பு. அண்ணா என்னைய போட்டோ பிடிப்பீங்களா என அப்பாவியாய்க் கேட்கிற அவளிடம் நீ பள்ளிக்கு போவியா எனக்கேட்டேன் மௌனமாயிருந்தாள். என்ன செய்வாய் பால்பாக்கெட் பொறுக்குவேன் என்கிறாள். குப்பைகளோடு குப்பைகளாய் வசிக்கிறார்கள்.

கடைசியில் அவளைப் போட்டோ எடுப்பதற்காக சரி எடுக்கிறன் நில்லு என்றபோது அவள் சொன்னாள் அண்ணா அந்த "விஜய் போட் பக்கத்தில வச்சி எடுங்க" அந்த குப்பை அள்ளும் மனிதர்கள் எல்லாருமாகச் சோ்ந்து விஜய்க்கு ஒரு வினைல் போர்ட்டு வைத்திருக்கிறார்கள். ரசிகர் மன்றமாம். அவள் வெள்ளந்தியாய்ச் சிரித்தாள் இங்க பாருங்கண்ணா என்பேரும் இருக்கு.

எல்லாவற்றைக் கடந்தும் சென்னை வாசிகளிடம் நேசமிருக்கிறது எங்கெங்கிருந்தோ வந்து அடைகிற கூடாயிருக்கிறது சென்னை.(ஹி ஹி ஹி நானும் ஒரு குஞ்சில்லையா அதாங் ஆ). ஆனாலும் நடுத்தர வர்க்கத்தின் குரலாய் எப்போதும் சென்னையில் எதிரொலித்துக்கொண்டேயிருக்கிறது.
சென்னைப்பட்டணம் எல்லாம் கட்டணம்.


என்னதான் இருந்தாலும் பக்கத்துவீட்டு ஜன்னலுக்குள்ளால் பார்த்த சென்னையின் புன்னகையை நேரில் பார்க்க இன்னமும் அழகு கூடித்தானிருக்கிறது. நான் இன்னமும் பார்த்துத்தீராத சென்னையின் பக்கங்கள் விரிந்து கொண்டேயிருக்கிறது. சென்னை தன் மாய இல்லை இல்லை நிஜ அழகால் எல்லாரையும் வளைத்துப்போட்டு விடுகிறது.

http://agiilankanavu.blogspot.com/

சென்னைக்குப் பொறந்த நாளு

168 ஆண்டுகளுக்கு முன்பாக, சென்னைப்பட்டினமாக உருவெடுத்த தினம் இன்று..

சென்னை தினத்தை முன்னிட்டு லலித் கலா அகாதமியுடன் இணைந்து இந்தியன் ரிசர்வ் வங்கி அறிவுக் களஞ்சியம் என்ற பெயரில் ஒரு கண்காட்சியை நடத்துகிறது. இக்கண்காட்சி வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெற இருக்கிறது.

லலித் கலா அகாதமி சேர்மன் பேராசிரியர் பாஸ்கரன் குத்துவிளக்கேற்றி நிகழ்வைத் துவங்கிவைத்தார்.
பல்வேறு கால கட்டத்தைச் சேர்ந்த இந்திய ரூபாய்களையும் காசுகளையும் இங்கே காட்சிப் படுத்தி உள்ளனர்கள்ள நோட்டுகளை அடையாளம் காட்டும் ரசாயன பயிற்சிகளையும் இலவசமாக செய்து காட்டுகின்றனர்


பார்வை பறிபோன பிறகு ஓவியர் மனோகர் வரைந்த சென்னை குறித்த சித்திரங்களையும் காட்சிப் படுத்தி யுள்ளனர்
சென்னை தினம் குறித்த பிற தளங்கள்.

1. விருபாவின் சென்னை வாரம்

2. சென்னை தின நிகழ்வுகள்

Monday, August 20, 2007

புறநகர் போக்குவரத்து நிலையம் - சில படங்கள்

சமீபத்தில் புறநகர் போக்குவரத்து நிலையம் சென்றிருந்தபோது எடுத்த சில படங்கள்

எல்லாம் சரி.. இந்த அம்பேத்கார் எந்த இடத்தில் இருக்கார்னு சொல்லுங்க பார்ப்போம்:

Thursday, August 09, 2007

பார்க்கிங் பிரச்சனைக்கு தீர்வு!

சென்னையின் முக்கியமான ஷாப்பிங் ஏரியா என்று சொல்ல வேண்டுமானால் அது டி.நகர் என்று தான் சொல்வோம், ஆனால் அங்க போனால் நம்மை வரவேற்கும் முக்கிய பிரச்சனை டிராபிக் அடுத்த விசயம் பார்க்கிங். இந்த பார்க்கிங் பிரச்சனைக்கு ஒரு தீர்வை நம்ம சென்னையை சேர்ந்த பொறியாளர் கண்பிடித்துவிட்டார் என்றே சொல்லலாம்! இன்று அதன் செலவு அதிகமாக இருக்கலாம் கொஞ்சம் காலத்தில் டெக்னாலஜி வளர்ச்சியால் மேலும் குறைந்த விலைக்கு அது வரக்கூடும். கீழே உள்ள வீடியோவை பாருங்க மேட்டர் புரியும்!Sunday, August 05, 2007

சென்னை வலைப்பதிவர் பட்டறை - அப்டேட் 2!


விக்கி நன்றியுரை கூற, பாலாபாய் பட்டறையின் ஒருங்கிணைப்பாளர்களை அறிமுகப்படித்தி வைத்தார் சென்னை வலைப்பதிவர் பட்டறை வெற்றிகரமாகவும், சிறப்பாக நடந்து முடிந்தது!!!

சென்னை வலைப்பதிவர் பட்டறை - அப்டேட்!சென்னை வலைப்பதிவர் பட்டறை தற்பொழுது நிலவரப்படி சுமார் 400க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்!!!

முதல் மாடியில் ஒரு அரங்கில் பினாத்தலார் flash பற்றி பினாத்திக்கிட்டு இருக்கார்!!!


சிங்கையிலிருந்து குழலி தொலைப்பேசியில் நிகழ்ச்சியின் நிலவரங்களை கேட்டறிந்தார் ;)


முதன்மை அரங்கில் இணையத்தில் இன்றைய நுட்பமும் நாளைய தொழிலும் என்ற தலைப்பில் அருண்குமார் உரையாற்றிக் கொண்டிருக்கிறார்!
இட்லிவடை முதன்மை அரங்கில் சைலண்டா ரிப்போர்ட் செய்வதாக செய்தி வெளியாகியுள்ளது! அதை தொடர்ந்து பல குழுக்கள் இட்லிவடையை கையும் மடிக்கணினியுமாய் பிடிக்க ரெடியாகி வருவதாக கேள்வி ;)