Thursday, September 28, 2006

"சென்னை நமது பெருமை"

ஒரு நகரம் பெரு நகரமாக வளம் பெற என்ன வேண்டும்?

நகருக்கு என்று ஒரு அடையாளமும், அதன் மீதான ஒவ்வொருவரின் பெருமையும்தான் ஒரு மாநகர வாழ்க்கையை நிலை பெறச் செய்ய முடியும்.

சென்னையில் வசிப்பவர்களில் நிறைய பேருக்கு இது சோறு போடும் இடம். 'பல்லைக் கடித்துக் கொண்டு ஓட்டி விட்டால், ஓய்வு பெற்று நம்ம ஊரில் போய் கடைசி காலத்தைக் கழிக்கலாம்' என்று வாழ்பவர்கள் உண்டு. சென்னையையே தமது ஊராகக் கொண்டு சென்னையில் பெருமை கொண்டு வாழ்பவர்களின் எண்ணிக்கை இப்படி சகித்துக் கொண்டு வாழ்பர்களின் எண்ணிக்கையை விடக் குறைவாகத்தான் இருக்கும் என்று படுகிறது.

சென்னையின் பெருமை உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரையோ, வள்ளுவர் கோட்டமோ, தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியோ மட்டும் இல்லை. இவற்றை எல்லாம் உள்ளடக்கியது இன்னும் மேலானது இங்கு வாழும் இங்கு வந்து போகும் மக்களின் பங்களிப்பு. அதற்கு ஒரு அடையாளம் வேண்டும்.

மும்பைகார், அம்சி மும்பை, சிட்டி ஆஃப் ஜாய் (கல்கத்தா), கார்டன் சிட்டி (பெங்களூர்) என்று சென்னைவாசிகளுக்கு ஒரு அடையாளம் இருக்கிறதா? அந்த அடையாளத்தில் ஒவ்வொருவரும் பெருமை கொள்ள முடியுமா? அந்த அடையாளம் நீண்ட கால நோக்கில் நிலைத்து இருப்பதாக பெரும்பான்மை மக்கள் தம் வாழ்க்கையுடன் பொருத்திக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும்.

அது தமிழில் இருக்க வேண்டியது வெளிப்படை. ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடத்தில் மொழி பெயர்ப்புகளும் வேண்டும். "சென்னை நமது பெருமை", Chennai is our pride என்று சொல்ல எளிதாகவும், நினைவில் நிற்பதாகவும், அடையாளம் கிடைப்பதாகவும் வேண்டும்.

நகரில் வசிக்கும் ஒவ்வொருவரும், உள்ளே வரும் ஒவ்வொருவரும் சென்னையில் சுற்றி வரும் போது ஒரு மாற்றம் உணர வேண்டும்.

சொத்து வரி கட்டுபவர்கள், தொழில் வரி கட்டுபவர்கள் என்று மாநகராட்சிக்கு வருமானம் அளிப்பவர்களுக்கு ஒரு அடையாள அட்டை வழங்கப்படலாம். "சென்னை நமது பெருமை" என்பது உங்கள் பணத்தில் சாத்தியமாகிறது என்பதை வலியுறுத்தும் வண்ணம் அந்த அட்டை அமைய வேண்டும். அந்த அட்டை வைத்திருப்பவர்களுக்கு சில சின்னச் சின்ன சலுகைகள் வழங்கலாம். சிறப்பு வாகன நிறுத்தம் போல.

இந்த வழியில் அட்டை பெற முடியாதவர்கள் ஒரு சிறு கட்டணம் செலுத்தி இன்னொரு வண்ண அட்டை பெறலாம். பேருந்தில், ரயிலில், விமானத்தில் உள்ளே வரும் ஒவ்வொருவருக்கும் தற்காலிக "சென்னை நமது பெருமை" என்று பொறித்த அட்டை பயணச்சீட்டுடன் கொடுக்கப்படலாம்.

(அடையாள அட்டைக்கு எதிராக அரசமைப்பு எதிர்ப்புகள், மனித உரிமை எதிர்ப்புகள் உண்டு. ஆனால், ஏதோ ஒரு உருவில் நாம் அடையாளங்களை சுமந்து கொண்டுதான் உள்ளோம். ரேஷன் கார்டு, கடவுச் சீட்டு, ஓட்டுநர் உரிமம் என்று. )

  • சென்னை நமது பெருமையாக இருக்கும் போது அதன் தெருக்களை சுத்தமாகப் பேணுவது ஒவ்வொருவரின் கடமையாக மாறி விடும்.
  • சாலை போடுவதில் முறைகேடு நடக்கும் போது தட்டிக் கேட்க தோன்றும்.
  • சாலையில் துப்புபவர்கள் வெட்குமாறு சமூக மன நிலை மாறி விடும்.
  • சாலை விதிகளை மதித்தால் நமது பெருமையைக் கட்டிக் காக்கலாம் என்று அறிவுறுத்துவது எளிதாகி விடும்.

  • ஆட்டோ ஓட்டுனர்கள் அழுக்கு லுங்கிக் கட்டிக் கொண்டு, அழுது வடியும் முகத்தோடு, பயணிகளிடம் அடாவடியாகப் பேசுவது நமக்குப் பெருமையில்லையே. பொது போக்குவரத்து சேவை ஊழியர்கள், தூய வேட்டி/சட்டை அல்லது இன் செய்யப்பட்ட பேன்ட்/டி-சர்ட்டுடன், மலர்ந்த முகத்தோடு, பேசி நடந்து கொள்ள வேண்டும்.

ஆங்காங் சீன அதிகாரத்தின் கீழ் வருவது தொடர்பாக சாங்காயில் பொது விழா ஒன்று நடந்தது. (1997ல்). மக்கள் சதுக்கம் எனப்படும் பொது இடத்தில் லட்சக் கணக்கான மக்கள் கூடி நள்ளிரவு பன்னிரண்டு மணியைக் கொண்டாடினார்கள். லாரி வைத்துக் கூப்பிட்டு வராமல், அரசுப் பிரச்சாரத்தைக் கேட்டு, பிரிட்டனை மண்டியிட வைத்து தனது அடகு வைக்கப்பட்ட செல்வத்தை சீனா மீட்டுக் கொண்டதைக் கொண்டாடும் பெருமையில் கூடினார்கள் நகர மக்கள்.

அந்த வார இறுதியில், எனக்கு சீன மொழி கற்றுக் கொடுக்கும் கல்லூரியில் படிக்கும் பெண் வந்தாள். இந்த கொண்டாட்டத்தை, திருவிழாவைப் பற்றி உயர்வாகச் சொன்னேன். "அதெல்லாம் சரிதான், அடுத்த நாள் காலையில் அந்தத் திடலில் இருந்து அள்ளிய குப்பையின் எடை பதினைந்து டன்னாம், நாளிதழில் வெளியிட்டு இருந்தார்கள், சாங்காய் வாசிகள் எல்லோரும் தலை குனிய வேண்டிய உண்மை" என்று வருத்தப்பட்டாள்.

குப்பை போடுவது மனித இயற்கை, அதைத் திரட்டுவது நகராட்சியின் கடமை, அந்த விபரங்களை விளம்பரப்படுத்தி, குடிமக்களின் பெருமையை தூண்டி விட்டு, அடுத்த முறையாவது கொஞ்சம் ஒழுங்கைக் கொண்டு வர முனைவது பெருநகரின் வெற்றிக்குத் தேவை.

சிங்காரச் சென்னை என்று ஸ்டாலின் நகரத் தந்தையாக இருந்த போது நகரைத் தூய்மைப்படுத்தவும் போக்குவரத்து வசதிகளைப் பெருக்கவும் முயற்சிகள் மேற்கொண்டார். அதன் பிறகு அது அப்படியே பெயரிழந்து போய் விட்டது. அப்படி இல்லாமல் திட்டமிட்டு தொடர்ச்சியாக இந்த அடையாளத்துக்கு உரம் சேர்க்க வேண்டும்.
  • நகரத் தந்தை (மேயர்) ஒருவர், நகரில் வசிக்கும் பிரபலங்கள், நகரில் செயல்படும் நிறுவனங்கள் தொடர்ச்சியாக இந்த அடையாளத்திற்கு உரம் சேர்க்க வேண்டும்.
  • நகரத் தந்தை என்பவர் கட்சி அரசியலில் மாட்டிக் கொண்டு சீரழிபவராக இல்லாமல், நகர மக்கள் யாவரையும் தலைமை ஏற்று நடத்தும் திறன் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • சகோதர நகரங்கள் என்று வெளி நாட்டு நகரங்களுடன் உறவுகள் வளர்ப்பது, பெருமை சேர்க்கும் விளையாட்டுப் போட்டிகள், திரைப்பட விழாக்கள், வணிக நிகழ்ச்சிகள் நடத்துவதை ஒருங்கிணைத்து சென்னை என்ற பெயரை உலகில் பிரபலமாக்கும் முயற்சிகள் வேண்டும்.

2020ன் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் நடக்க சாத்தியங்கள் இருக்கிறதா? 2008ல் பெய்ஜிங், 2012ல் லண்டன், 2016ஐ விட்டு விடுவோம். 2015ல் சென்னை பெயரை போட்டியில் சேர்க்க என்ன வசதிகள் என்ன அமைப்புகள் தேவை என்று நகரத் தந்தை எதிர்கால குறிக்கோள் வரையறுக்கலாம்.

Friday, September 22, 2006

சென்னை : சிலிகான் சமவெளி

சென்னை கடந்த நான்கு வருடங்களாக ஒரு மிகப்பெரிய சிலிகான் புரட்சியை அமைதியாக செய்து வருகிறது... ஆறு மாதங்களுக்கு முன் எடுத்த ஒரு சர்வேயில் 2005-2006 ஆண்டில் மட்டும் நம் சென்னையில் மென்பொருள் நிறுவனங்களுக்கு சுமார் ஒரு கோடியே பத்து லட்சம் சதுர அடி அளவுக்கு கட்டமைப்பு தேவைகள் என CMDAவிடம் விண்ணப்பித்துள்ளன. அனைத்து விண்ணப்பங்களும் ஏற்கப்பட்டு இடம் ஒதுக்கப்பட்டு, தற்சமயம் சென்னை மற்றும் அதைச் சுற்றி உள்ள இடங்களில் அவை விண்ணைத் தொடும் கட்டிடங்களாக வளர்ந்துவருகிறன. இன்று சென்னையில் வளர்ந்துவிட்ட மென்பொருள் நிறுவன கட்டிடங்களும், கட்டப்பட்டுவரும் மென்பொருள் நிறுவன கட்டிடங்களும் மேலே உள்ள சென்னை வரைபடத்தில் பார்க்க முடியும்.

இனி சென்னையில் வானளாவிய, விண்ணைத் தொடும் கட்டிடங்களும் (Skyscrappers) சாதாரண விசயமாக விரைவில் ஆகக்கூடும். CMDAவிடம் அனுமதி பெற்று கட்டப்பட்டு வரும் பலவற்றில் ஒரு சில வரைவு படங்கள் எனக்கு சிக்கின. அவை உங்கள் பார்வைக்கு. ஒரு ஹைடெக் நகரமாக மாறப்போகும் சென்னை, இனி நம்மை மட்டும் அல்ல, அனைத்து மென்/கணிப்பொறி நிறுவனங்களை தன் வசபடுத்தப்போகிறது என்பதில் எனக்கு ஐயமில்லை.

குறிப்பிடும் படியான சில விவரங்கள்:

CTS தன் பங்குக்கு சுமார் பத்து லட்சம் சதுர அடி அளவுக்கு தன் அலுவலகத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.

IBM தன் அலுவலக பரப்பளவை சென்னையில் சுமார் ஒன்பது லட்சம் ச.அடி வளர்த்துக்கொள்ள திட்டமிட்டுள்ளது.

TCS மற்றும் சத்யம் தலா எட்டு லட்சம் ச.அடி அளவுக்கு சென்னையில் தங்களை விரிவாக்க திட்டமிட்டு அதற்கான இடம் மற்றும் கட்டுமான பணியும் முடிவடையும் தருவாயில் உள்ளது.

இன்போசிஸ்க்கு சுமார் ஏழு லட்சம் ச.அடி அலுவலக கட்டிடம் உருவாகி வருகிறது.
மற்ற நிறுவனங்களின் தேவைகள் : 2005- 2006 எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு:

ABN AMRO - நான்கு லட்சம் ச.அடி
Accenture - ஆறு லட்சம் ச.அடி
Alcatel - ஒரு லட்சம் ச.அடி
Alstom - ஒரு லட்சம் ச.அடி
American Express - இரண்டு லட்சம் ச.அடி
CMC - இரண்டு லட்சம் ச.அடி
Convergys - மூன்று லட்சம் ச.அடி
Convansys - மூன்று லட்சம் ச.அடி
EDS - மூன்று லட்சம் ச.அடி
Flextronics - ஆறு லட்சம் ச.அடி
Ford - மூன்று லட்சம் ச.அடி
Goldman Sachs - 4 லட்சம் ச.அடி
HP - மூன்று லட்சம் ச.அடி
IGATE - இரண்டு லட்சம் ச.அடி
Mastek - மூன்று லட்சம் ச.அடி
Merrill Lynch - இரண்டு லட்சம் ச.அடி
Nokia - இரண்டு லட்சம் ச.அடி
Sidemen's - ஒரு லட்சம் ச.அடி
Sify - இரண்டு லட்சம் ச.அடி
Sintel - இரண்டு லட்சம் ச.அடி
Slash Support - இரண்டு லட்சம் ச.அடி
Sutherland - இரண்டு லட்சம் ச.அடி
Verizon - இரண்டு லட்சம் ச.அடி
Wipro - ஆறு லட்சம் ச.அடி

இவை அனைத்தும் 2005-2006 எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு. இன்று தேவைகள் மேலும் உயர்ந்து வருகிறது.

Siruseri Techno Park:

டாடா கன்சல்டன்சி தன் பங்கிற்கு சுமார் இருபத்தி எட்டு ஏக்கர் பரப்பளவில் பன்னிரண்டு கட்டிடங்களை கொண்ட ஒரு கணிபொறிப் பூங்காவை 2007-ல் துவக்க திட்டமிட்டு, சிறுசேரியில் Siruseri Techno Park என்று பெயரிட்டு கட்டி வருகிறது. இதில் 20,000 கணிப்பொறியாளர்களுக்கு வேலை வாய்ப்புள்ளதாகவும் TCS தகவல் வெளியிட்டுள்ளது.

இவை அல்லாமல் Dell, Microsoft, Sun Microsystems என அனைத்து பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்களும் சென்னையை நோக்கி வருகிறது. இன்றைய சென்னையின் உள்கட்டமைப்பு, மனித வளம், அரசின் ஆதரவு என பல காரணங்கள் இந்த மென்பொருள் நிறுவனங்களை சென்னையை பார்க்க உறுதுணையாக இருந்திருக்க வேண்டும்.

உயர்ந்து வரும் இந்த IT கட்டிங்கள் நமக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கக் கூடும். அதே சமயம் சில பிரச்சனைகளும் வரக்கூடும். இந்த IT கம்பெனிகளின் வளர்ச்சியால் உயர்ந்து வரும் ரியல் எஸ்டேட் விலை மற்றும் வீட்டு வாடகை, சாதாரண மக்களை பாதிக்ககூடும். உதாரணத்துக்கு, சென்னையின் suburb என்று கருதப்பட்ட துரைப்பாக்கத்தில் நான்கு - ஐந்து வருடங்களுக்கு முன் ஒரு 1000 ச.அடி வீட்டு வாடகை சுமார் ரூ 1000 இருந்தது, இன்று ரூ 5000 - 7000 வரை எட்டிவிட்டது. ஒரு Ground நிலம் இரண்டு லட்சம் கூட இல்லாமல் இருந்தது. இன்று பன்மடங்காக உயர்ந்து சுமார் இருபது லட்சம் என்ற அளவுக்கு வளர்ந்துவிட்டது. இதே நிலைதான் சென்னையை சுற்றியுள்ள மற்ற இடங்களிலும் காணப்படுகிறது. இதே போல் தனி மனித வருமானம், செலவு திறன் என்பவை இதற்கு அனுசரித்தாற் போல் உயர்ந்தால் இது ஆரோக்கியமானதாக இருக்ககூடும். எனினும் இதன் உண்மையான தாக்கம் என்பது, போக போகதான் நமக்குத் தெரியவரும். அரசு இது போன்று எழும் சில பிரச்சனைகளை ஆராய்ந்து, இதற்கான கட்டுப்பாட்டு வரைமுறை இயந்திரத்தை இன்றே இயக்கத் துவங்கினால், வரும் காலத்தில், சாதாரண நடுத்தர மக்கள் எதிர்நோக்க உள்ள பிரச்சனைகள் கட்டுப்படுத்தபடலாம்.

இவையன்றி இத்தனை அலுவலகங்கள் வருமாயின், அவற்றுக்குத் தேவையான தண்ணீர், மின்சாரம், சாலை மற்றும் போக்குவரத்து போன்ற வசதிகளைப் பெருக்குவதற்கான வழிவகைகளில் அரசாங்கம் கவனம் செலுத்தி, அதை தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.

எது எப்படியோ இன்று, படித்து, சுமாரான ஆங்கிலத்தில் பேச்சுத் திறன் பெற்ற இளைஞர்களுக்கு வேலையில்லை என்ற குறை கண்டிப்பாக இல்லாமல் செய்துவிடும் இந்த IT நிறுவனங்களின் அசுரவளர்ச்சி என்பது நிதர்சனமான உண்மை. தமிழகத்தில் வருடத்துக்கு சுமார் ஒரு லட்சம் பொறியியல் பட்டதாரிகளும், பல லட்சம் ஏனைய பட்டதாரிகளும் உருவாக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவரும் இதனால் நன்கு பயன் பெறுவார்கள்.


இப்படி ஒரு அசத்தல் ரிப்போர்ட் பார்க்கும் போது இனி நம் சென்னைவாசிகளோ/ தமிழர்களோ வேலைக்காக பூனே, நொய்டா, பங்களூரு என பல நகரங்களுக்கு படை எடுக்க வேண்டிய தேவை எழாது என்பது நிச்சயம்.

இந்த வளர்ச்சி அடுத்த சில ஆண்டுகளில் நம் சென்னையை இந்தியாவின் சிலிகான் சிட்டியாக உருவெடுக்கும் என்று பெருமிதம் கொள்வோம்.

புள்ளிவிரங்களுக்கு நன்றி: MARG & Business Week.

Wednesday, September 20, 2006

ஹலோ! சென்னை கால் டாக்ஸி!

ஒரு காலத்தில் சொந்த வாகனமில்லாத சென்னை மக்கள், தனியார் போக்குவரத்துக்கு ஆட்டோக்களை மட்டுமே நம்பிக் கொண்டிருந்தர். ஆனால் சென்னை நகரை இன்று ஆள்வது கால் டாக்ஸிக்கள். ட்ராவல்ஸ் கார்கள் போல் அல்லாமல், கூப்பிட்ட இடத்துக்கு கூப்பிட்ட நேரத்துக்கு வந்து நிற்கும் கால் டாக்ஸி சேவைகள் தொடங்கியது 2000த்தில் தான்.வியாபார நிலையங்கள், ஆபரணங்கள், மருந்து விற்பனை என்று பல தளங்களிலும் கால் பதித்திருந்த பாரதி(BARATHI) நிறுவனம் தான் சென்னையின் முதல் கால் டாக்ஸி நிறுவனம். 2000ல் 36 கார்களுடன் தொடங்கிய இந்த நிறுவனத்துக்கு இன்று இருநூறுக்கும் அதிகமான சிற்றுந்துகள் இயங்கிக் கொண்டிருக்கிறன. பாரதி நிறுவனத்தின் கார்கள் எல்லாமே மாருதி ஆம்னி மட்டுமே. சிறு இடைவெளிகளிலும் புக முடிந்த அமைப்பு, நான்கு பயணிகள் வரை இருக்கை வசதி, பொருட்களை அதிகம் எடுத்துச் செல்ல முடிந்த வசதி, என்பதோடல்லாமல், ஆம்னி வண்டிகளில் வயர்லெஸ் வகைக் கருவிகள் பொருத்தவும் வசதி இருப்பது ஒரு காரணம்.


சென்னையின் மற்றொரு குறிப்பிடத் தகுந்த கால் டாக்ஸி நிறுவனம் பாஸ்ட் ட்ராக்(Fast Track). 2001இல் செயல்படத் துவங்கிய இந்த நிறுவனத்தின் மேலாளர் துரைராஜனுக்கு, இந்தத் துறை பற்றிய யோசனை வந்தது பெங்களூர் மற்றும் சிங்கப்பூரில் இருக்கும் கால் டாக்ஸிக்களைப் பார்த்துத் தானாம்.


பொதுவில் எல்லா நிறுவனங்களும் ஆம்னியையே விரும்பும்போது, சென்னை கால் டாக்ஸி, ஈஸி கால் டாக்ஸி போன்ற சில நிறுவனங்கள் அம்பாஸிடர் கார்களைப் பயன்படுத்துகின்றன. அம்பாசிடர் கார்களின் வசதியான இருக்கைகளும், அவற்றின் குறைந்த விலையுமே இதற்குக் காரணம். மற்றபடி, சிக்சாக்(zigzag cool taxi) போல், எல்லா வித வாகனங்களும் வைத்திருப்பவர்களும் இருக்கிறார்கள்.

கால் டேக்ஸியின் குறைந்த அளவு தூரத்துக்கான கட்டணம் 50ரூபாயில் தொடங்குகிறது. அதன்பின் மீட்டருக்கு 9 ரூபாய் என்று கட்டணம் வசூலிக்கிறார்கள். 30 நிமிடங்களுக்கு மேலே போனால் மட்டுமே காத்திருத்தலுக்கான கட்டணம். இரவு 11 முதல் காலை 5 மணி வரையிலான சேவைக்கு 50% அதிக கட்டணம்.

GPS, வயர்லெஸ் கருவிகள் போன்ற வசதிகள் இருப்பதால், கால் டேக்ஸிக்கு அழைத்து 15 நிமிடங்களுக்குள் வீட்டு வாசலில் வந்து நிற்கிறது வண்டி. ஒரு முறை பெயர், வீட்டு தொலைபேசி எண், முகவரி எல்லாம் கொடுத்துவிட்டால், அடுத்த முறை பேசும் போது வெறும் தொலை பேசி எண்ணை வைத்து வீட்டு முகவரி, அடையாளம் எல்லாம் சொல்லிவிடுகிறார்கள்.

கால் டாக்ஸிக்கள் நாம் சொல்லும் இடங்களுக்குப் போவது மட்டுமில்லாமல், சுற்றுலாத் தலங்கள், தீம் பார்க்குகளுக்கும் பேக்கேஜ் கட்டணங்கள் வைத்திருக்கிறார்கள். உதாரணத்துக்கு, பாஸ்ட் டிராக் கிஷ்கிந்தாவுடனும், zigzag மாயாஜால், MGM உடனும் இந்த மாதிரியான சேவை சார்புப் பிரிவுகளை வைத்திருக்கிறார்கள்.

இதுவல்லாமல், சென்னையின் கார்ப்பொரேட் தனியார் மென்பொருள் நிறுவனங்களும் கூட இந்த கால் டாக்ஸி நிறுவனங்களுடன் ஒப்பந்த உடன்படிக்கை செய்திருக்கிறார்கள். அதன்படி, சில கால் டேக்ஸி நிறுவனங்கள் சில மென்பொருள் நிறுவனங்களுக்காக தன் வண்டிகளில் பெரும்பாலானவற்றை ஒதுக்கிவைப்பதும், 5% முதல் 10% வரை கட்டணங்களில் தள்ளுபடி தருவதும் கூட உண்டு. ஈஸி கால் டேக்ஸி விப்ரோவுடனும், பாஸ்ட் டிராக் சி.டீ.எஸ்(CTS)ஸுடனும் இது போன்ற ஒப்பந்த அடிப்படையில் இயங்குகின்றன. இது போன்ற மென்பொருள் நிறுவனங்களை மட்டுமே நம்பி தமது சொந்த டாக்ஸியைக் கால் டாக்ஸியாக ஓட்டுபவர்களும் உண்டு.

பொதுவில் கால் டாக்ஸிக்களால், டிராவல் கார்களுக்கு எந்தவித தொழில் போட்டியும் இல்லை என்று சொல்கிறார்கள்.

வளர்ந்து வரும் சென்னையின் மக்கள் தொகைக்கு இது போன்ற போக்குவரத்து வசதிகள் பெரிய வரம். அதிலும், ஆட்டோக்களின் தனியுடைமையாக இருந்த தனியார் போக்குவரத்தில் கிட்டத் தட்ட ஆட்டோக்கள் கேட்கும் கூலியை கால் டாக்ஸியில் இன்னும் கொஞ்சம் அதிகம் கொடுத்து வசதியாக உட்கார்ந்தும், பொருட்களை வைத்துக் கொண்டும் போக முடிந்தது பெரிய விடுதலையாகத் தான் சென்னை மக்கள் உணர்கிறார்கள்.

சென்னையின் கால் டாக்ஸி நிறுவனங்களின் முழுமையான பட்டியல்கள்:
சென்னை ஆன்லைன்
சென்னை விஷன்

Thursday, September 14, 2006

சென்னை:புராதன முருகன் ஆலயம் கண்டுபிடிப்பு


தமிழகத்தில் சங்க காலத்தில் உருவாக்கப்பட்டதாகக் கருதப்படும் முருகன் கோயில் ஒன்றின் இடிபாடுகளை இந்திய அகழ்வாரய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

நிலத்துக்குக் கீழ் ஆலயம்

மகாபலிபுரத்துக்கு வடக்கே சாலாவான் குப்பம் என்னும் இடத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்த ஆய்வாளர்கள் அங்கு சுனாமி தாக்குதலுக்கு பின்னர் மண்ணின் அடியில் இருந்து வெளிவந்து காணப்பட்ட ஒரு கல்வெட்டை கண்டுள்ளனர்.


அகழ்வு வேலைகள் தொடருகின்றனஅதில் கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு படையெடுத்து வந்து, ஆட்சி செய்த இராஷ்டிரகூடர்கள் அங்கிருந்த ஒரு கோயிலுக்கு மானியங்கள் வழங்கியதாகக் கூறப்பட்டிருந்தது.


அதனை அடுத்து அங்கு ஆய்வு நடத்திய போது, அந்தப் பகுதிக்கு அருகிலே மண்ணில் புதைந்த நிலையில் ஒரு முருகன் ஆலயத்தைக் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

அகழ்வு வேலைகள் தொடருகின்றன

அகழ்வுப் பணியில் மும்முரம்ஆனால் ஆய்வுகளை அவர்கள் தொடர்ந்த போது, அந்த கோயிலின் அடியில் மேலும் மண்ணில் புதைந்த நிலையில் மற்றொமொரு கோயிலும் காணப்பட்டுள்ளது.


அகழ்வுப் பணியில் மும்முரம்

அதாவது முதலில் பல்லவர்களால் சங்க காலத்தில் கட்டப்பட்ட ஒரு கோயில், சுனாமி அலைகளால் சேதமடையவே, அதன் மீது மீண்டும் மற்றுமொரு கோயில் பின்னர் ஆண்ட மன்னர்களால் கட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்று கூறுகிறார் சென்னை அகழ்வாராய்ச்சித் துறையைச் சேர்ந்த டி. சத்யமூர்த்தி அவர்கள்.


மீட்கப்பட்ட சில தூண்கள்பின்னர் இரண்டாவது கோயிலும்(மேலே இருந்த கோயில்) சுனாமியால் தாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.


இந்தக் கோயில் கி.மு 2வது நூற்றாண்டுக்கும் கி.பி முதலாவது நூற்றாண்டுக்கும் இடைப்பட்டதாக இருக்க வேண்டும் என்று கருதப்படுவதாகவும் ஆய்வுகள் தொடர்வதாகவும் சத்யமூர்த்தி கூறினார்.


மீட்கப்பட்ட சில தூண்கள்

நன்றி: பி.பி.சி

இணையம் குறித்து சென்னையில் மாநாடு

இணையம் குறித்து சென்னையில் மாநாடு

இணையத்தில் தகவல் பரிமாற்றம் நடைபெறும் முறையினை பிரதிபலிக்கும் வகையில் மாநாடுபிளாக்கிங் தகவல் பரிமாற்ற முறை வேகமாக பரவி வருகின்றது

இணையதளத்தில் தகவல்பரிமாற்றம் நடைபெறும் முறையின் எதிர்காலநிலையை பிரதிபலிக்கும் விதமாக, தமிழகத் தலைநகர் சென்னையில் செப்டம்பர் மாதம் ஒன்பது மற்றும் பத்தாம் தேதிகளில் தேசிய அளவிலான இரண்டு நாள் மாநாடு ஒன்று நடைபெற்றது.

தகவல் தொழில்நுட்பத்துறையில் மிகப்பெரிய புரட்சியாக கருதப்படும் இன்டர்நெட் எனப்படும் இணையத்தில் தகவல்களை பரிமாறிக்கொள்ளும் முறைகளில் பிளாக்கிங் என்கிற நடைமுறை தற்போது அதிவேகமாக பிரபலமடைந்துவருகிறது. இதை தமிழில் வலைப்பதிவுகள் என்றும் வலைப்பூக்கள் என்றும் வலைப்பின்னல்கள் என்றும் பல பெயர்களில் அழைக்கிறார்கள்.

பத்திரிகைத்துறையின் ஆரம்பகாலகட்டத்தில் கையெழுத்துப்பிரதிகள் நடத்தப்பட்டன. அதாவது தனிமனிதர் ஒருவர் தனக்கு பிடித்த விடயங்கள் பற்றிய தனது கருத்துக்களை கையால் எழுதி தனிச்சுற்றுக்கு விடுவது கையெழுத்துப்பிரதியாக விளங்கிவந்தது. ஏறக்குறைய அதேபோன்றதொரு விடயம் தான் இணையத்தில் வலைப்பதிவுகளாக உருவெடுத்திருக்கிறது.இந்திய அளவில் வலைப்பதிவுகளை உருவாக்குபவர்கள் சென்னையில் தான் அதிகம் என்கிறது புள்ளி விபரங்கள்

அதாவது, இணையத்தில் உலவத்தெரிந்த யார் வேண்டுமானாலும் இந்த வலைப்பதிவுகளை உருவாக்கலாம். இதற்கு கட்டணம் எதுவும் இல்லை. இதற்கு பெரிய தொழில்நுட்ப அறிவும் தேவையில்லை. பேசுவதில், எழுதுவதில் மற்றவர்களோடு கருத்துப்பரிமாறுவதில் ஆர்வம் இருக்கும் யாரும் இந்த வலைப்பதிவுகளை உருவாக்கலாம்.

ஒருவகையில் இந்த வலைப்பதிவுகள், தனிமனிதர்களின் இணையதள தகவல் மற்றும் கருத்துப்பரிமாற்றத்திற்கான எதிர்கால தனிமனித ஊடகங்களாக உருவெடுத்து வருகின்றன.

இந்திய அளவில் இப்படிப்பட்ட வலைப்பதிவுகளை உருவாக்குபவர்கள் அதிகம்பேர் சென்னையில் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

நன்றி : பி பி சி

மேலும் : சுட்டி : பட்டிக்காட்டான் பார்த்த மிட்டாய்க்கடை - BlogCamp

Thursday, September 07, 2006

Sub-way கலாட்டா

இரு வாரங்களுக்கு முன்பு, வார விடுமுறைக்கு ஊருக்கு சென்று விட்டு கோவை விரைவுவண்டியில் கிளம்பி சென்னை வந்து சேர்ந்தேன். இரவு சுமார் 9:45 மணி இருக்கும். சென்னை மத்திய இரயில் நிறுத்தத்தில் இருக்கும் சுரங்க வழியில் புகுந்து, சுரங்கத்தில் சாலையை கடந்து, தாம்பரம் நோக்கிச் செல்லும் இரயில் பிடிக்க சுரங்க பாதையை உபயோகித்தேன். சுரங்கப்பாதையை உபயோகித்து சாலையை கடக்க வேண்டும் என்பது இலக்கு. நடந்தது?

அன்று என்ன ஆயிற்றோ? சுரங்கப்பாதை உள்ளே மின்சாரம் இல்லை. ஒரே (ஒரு?) இருட்டு. சுரங்க பாதையை உபயோகிப்பவர்கள் உள்ளே தங்கள் கைபேசியில் இருக்கும் சிறு வெளிச்சத்தின் மூலம் கடந்தார்கள். கைபேசி இல்லாதவர்கள், அடுத்தவர் வெளிச்சத்தை இரவல் வாங்கி உபயோகித்தார்கள். அதுவும் உள்ளே கடப்பவர்களைப் பார்க்க வேண்டுமே. உள்ளே இறங்கியதும் வேக வேகமாக நடக்க ஆரம்பித்தார்கள். எல்லாம் திருட்டு பயம் தான். அது அவர்கள் நடையில் நன்றாகவே தெரிந்தது. எனக்கோ geographical பிரச்சினை. கண்ணை கட்டி ஒரு சுற்று சுற்றி விட்டால் எந்த திசையில் இருக்கிறோம் என்பதே தெரியாது. (இந்த பிரச்சினை பெரும்பாலும் பெண்களுக்கு அதிகமாம்).

சுரங்க அமைப்புப் படி, நான் சுரங்கத்தில் இறங்கி நடந்து, கொஞ்ச தூரத்தில் இடது பக்கம் திரும்பி நடந்து, பின் படிகள் ஏற வேண்டும். உள்ளே அங்கிருந்த ஒரு நடை பாதை கடைக்காரர் இரு மெழுகுவர்த்திகளை ஏற்றி தொண்டு புரிந்தார். எனக்கு முன்னால் சென்ற பெண்மனி ஒருவர் அவசர அவசரமாக நடந்துக் கொண்டிருந்தார். உள்ளே நடந்த இந்த கலாட்டாக்களை கவனித்து குழம்பிப் போய், கவணிக்காமல், இடது பக்கம் திரும்பாமல் நேரே இருந்த படி வழியாக மேலே வந்தேன். புரிந்ததா என் குழப்பம். மேலே வந்து பார்க்கிறேன், ஒரு கணம் எங்கே இருக்கிறேன் என்று குழம்பி விட்டேன். சில வினாடிகளில் சுதாரித்துக் கொண்டு நான் செய்த தவறை தெரிந்து கொண்டு எனக்கு மனதுக்குள் ஒரே சிரிப்பு. என்னையும் அறியாமல் சிரித்து விட்டேன். எதிரில் இருந்த காவல்துறை ஊழியர் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார் (அல்லது, ஒரு மாதிரியாக பார்ப்பது போன்ற உணர்வு). என் முட்டாள்தனத்தை உணர்ந்து, பின் என்ன செய்ய, மீண்டும் சுரங்கப்பாதை உபயோகித்து சாலையை கடந்தேன்.

Monday, September 04, 2006

குழந்தை எழுத்தாளர் திருவிழா - சென்னை

சென்னையில் குழந்தை எழுத்தாளர் திருவிழா என்ற அறிவிப்பு எங்கள் அலுவலக மடலில் வந்த போதே இதற்குப் போயே தீர்வது என்று முடிவெடுத்துவிட்டேன்.

சென்னை ராணி மேரி கல்லூரியில் சனி ஞாயிறு என்று இரண்டு நாள் திருவிழாவாக நடந்த இந்த நிகழ்ச்சி, குழந்தை இலக்கியம் எழுதும் எழுத்தாளர்களுக்கான விழா அல்ல.


கதை எழுதுபவர்களே, 8 முதல் 14 வயதான குழந்தைகள் தான் - தமிழகத்தின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த சின்னஞ் சிறு குழந்தைகள்.

மூன்று மாதங்களுக்கு முன்பு, தமிழ்நாட்டின் கிராமங்களிலும் சேரிகளிலும் கல்வி, சுகாதாரம் மற்றும் கிராமப்புற வளர்ச்சிப் பணிகளில் ஈடுபடும் தன்னார்வ அமைப்பான எய்ட் இந்தியா, குழந்தைகளுக்கான சிறுகதைப் போட்டிகளை நடத்தியது.

தமிழ்நாட்டின் ஆயிரக்கணக்கான கிராமங்கள் தோறும், சுமார் 15000 குழந்தைகள் போட்டிகளில் கலந்து கொண்டனர். கிராமம், வட்டாரம், மாவட்டம் என்று பல நிலைகளில் வெற்றி பெற்ற சுமார் 180 குழந்தைகளுக்கு சென்னை ராணி மேரி கல்லூரியில் இரண்டு நாள் பயிலரங்கங்கள் கடந்த சனி, ஞாயிறில் நடந்தன.பொம்மை செய்தல், கணித விளையாட்டுக்கள், எளிய அறிவியல் பரிசோதனைகளைப் பற்றிய விளக்கங்கள், காகித மடிப்புக் கலை, இசையும் இசை சார்ந்த விளையாட்டுக்களும், கேலிச் சித்திரம் வரையும் பயிற்சி, களிமண் சிற்பம் செய்தல், அட்டை பொம்மை செய்தல் முதலிய பல விளையாட்டு சார்ந்த கல்வி வகுப்புகளில் குழந்தைகள் பங்கு பெற்றனர். இவை தவிர மந்திரக் காட்சிகள், கடற்கரைப் பயணம், தொலைநோக்கி மூலம் வானத்தைப் பார்ப்பது, பாம்பு மற்றும் முதலைப் பண்ணை சுற்றுலா, புதையல்வேட்டை என்று பல நிகழ்ச்சிகள் குழந்தைகளுக்காக ஏற்பாடு செய்யப் பட்டிருந்தன.
பல்வேறு கிராமங்களிலிருந்தும் வந்திருந்த சின்னச் சின்னக் குழந்தைகள் பொம்மைகள் செய்வதும், காதிங்களை மடித்து யானை முகங்கள் செய்தலும் பார்க்க மிக அழகான காட்சி. (இன்னும் நிறைய முகங்கள் செய்திருந்தார்கள்.. நம்ம கண்ணுக்கு வேறே ஏதாவது பட்டால் தானே :) )

எழுத்தாளர்கள் யூமா வாசுகியும், கூத்தலிங்கமும் வந்திருந்து குழந்தைகளுக்கு கதைப் பயிலரங்கங்களும் நடத்தினர்.

குழந்தை எழுத்தாளர்கள் மிகவும் பிஸியாக அங்கும் இங்கும் ஓடிக் கொண்டே படித்துக் கொண்டிருந்ததால், யாரையும் பேட்டி காண அவகாசம் வாய்க்கவில்லை.எய்ட் இந்தியா சத்தமில்லாமல் செய்துவரும் இன்னுமொரு விஷயம் யுரேகா என்னும் நடமாடும் புத்தக நிலையம். சிறுவர் புத்தகங்கள் அதிகம் இருந்தாலும், கிராமப்புறக் குழந்தைகளுக்கு இவை கிடைப்பது அபூர்வம். அப்படியே கிடைக்கும் ஒன்றிரண்டு புத்தகங்களையும் இந்தச் சிறுவர்கள் ஏனோ படிக்க ஆர்வம் காட்டுவதில்லை. இந்தக் குறைகளைக் களைய வந்தது தான் யுரேகா புத்தக நிலையம்.
குழந்தை இலக்கிய எழுத்தாளர்களை வைத்து கதை அட்டைகள் உருவாக்கப் படுகின்றன. இவை, குழந்தைகளின் வீடுகளுக்கே கொடுத்தனுப்பப் படுகின்றன. குழந்தைகள் கதை அட்டைகளைப் படித்துவிட்டு அடுத்த குழந்தைக்குக் கொடுத்துவிட வேண்டும். இது போன்ற நடமாடும் நூலகங்களால், கிராமப்புறக் குழந்தைகளுக்கும் கதைகளைப் பற்றி அறிய ஒரு வாய்ப்பு கிட்டுகிறது.

இன்று தமிழகத்து கிராமங்களில் 1800 யூரேகா நூலகங்கள் உள்ளன. குழந்தைகளுக்கு மட்டுமன்றி, பெரியவர்களுக்கும் இந்த நூலகங்கள் தொடர் கல்விக் கூடங்களாகும்.

"ஸ, ரி, க," என்று விளையாட்டாய் இசை கற்றுக் கொண்டிருந்த குழந்தைகளைப் பார்த்துக் கொண்டே படியிறங்கியபோது, அதே கல்லூரி வளாகத்தின் பாதி கட்டி முடிந்த புதிய கட்டிடத்தின் தளத்துக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த பத்து வயது நிரம்பாத சிறுமியின் உருவம் நாம் இன்னும் போக வேண்டிய தூரத்தை நினைவுப்படுத்துவது போல் மனதை என்னவோ செய்தது.

Friday, September 01, 2006

உறவின் அழைப்பு!!!

நாகேஸ்வர ராவ் பூங்கா, மயிலாப்பூர்

ஊரல்ல, உறவாகவே கலந்துவிட்ட சென்னையின் இதயப் பகுதியில் வலைபதிவர் சந்திப்பு...

மயிலையின் நாகேஸ்வர ராவ் பூங்காவில் மாலை 5.45 மணி முதலே உங்கள் அனைவரையும் எதிர்பார்க்கிறோம்..

முன்னறிவிப்புகளும், வார இறுதி நாட்களிலும் வைத்திருக்கலாம் என்னும் நண்பர்களின் வருத்தங்கள் புரிந்தாலும், திடீரென ஏற்பாடாகி விட்டன எல்லாமும்...

வழியும், பிற விவரமும் வேண்டுமெனின், நண்பர்களைத் தொடர்பு கொள்ளலாம் :

பாலபாரதி - 99400 45507
குப்புசாமி - 98409 84328

போன அறிவிப்புப் பதிவில் நேர்ந்துவிட்ட தவறுகள் இந்த முறையும் நேராமல் இருக்க, அனானி பின்னூட்டங்கள் அறவே நிறுத்திவைக்கப் படுகின்றன. அனானி பின்னூட்டங்களினால் மனம் வருந்திய அன்பர்களுக்கும் எங்கள் மன்னிப்புகள்.