"சென்னை நமது பெருமை"

ஒரு நகரம் பெரு நகரமாக வளம் பெற என்ன வேண்டும்?

நகருக்கு என்று ஒரு அடையாளமும், அதன் மீதான ஒவ்வொருவரின் பெருமையும்தான் ஒரு மாநகர வாழ்க்கையை நிலை பெறச் செய்ய முடியும்.

சென்னையில் வசிப்பவர்களில் நிறைய பேருக்கு இது சோறு போடும் இடம். 'பல்லைக் கடித்துக் கொண்டு ஓட்டி விட்டால், ஓய்வு பெற்று நம்ம ஊரில் போய் கடைசி காலத்தைக் கழிக்கலாம்' என்று வாழ்பவர்கள் உண்டு. சென்னையையே தமது ஊராகக் கொண்டு சென்னையில் பெருமை கொண்டு வாழ்பவர்களின் எண்ணிக்கை இப்படி சகித்துக் கொண்டு வாழ்பர்களின் எண்ணிக்கையை விடக் குறைவாகத்தான் இருக்கும் என்று படுகிறது.

சென்னையின் பெருமை உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரையோ, வள்ளுவர் கோட்டமோ, தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியோ மட்டும் இல்லை. இவற்றை எல்லாம் உள்ளடக்கியது இன்னும் மேலானது இங்கு வாழும் இங்கு வந்து போகும் மக்களின் பங்களிப்பு. அதற்கு ஒரு அடையாளம் வேண்டும்.

மும்பைகார், அம்சி மும்பை, சிட்டி ஆஃப் ஜாய் (கல்கத்தா), கார்டன் சிட்டி (பெங்களூர்) என்று சென்னைவாசிகளுக்கு ஒரு அடையாளம் இருக்கிறதா? அந்த அடையாளத்தில் ஒவ்வொருவரும் பெருமை கொள்ள முடியுமா? அந்த அடையாளம் நீண்ட கால நோக்கில் நிலைத்து இருப்பதாக பெரும்பான்மை மக்கள் தம் வாழ்க்கையுடன் பொருத்திக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும்.

அது தமிழில் இருக்க வேண்டியது வெளிப்படை. ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடத்தில் மொழி பெயர்ப்புகளும் வேண்டும். "சென்னை நமது பெருமை", Chennai is our pride என்று சொல்ல எளிதாகவும், நினைவில் நிற்பதாகவும், அடையாளம் கிடைப்பதாகவும் வேண்டும்.

நகரில் வசிக்கும் ஒவ்வொருவரும், உள்ளே வரும் ஒவ்வொருவரும் சென்னையில் சுற்றி வரும் போது ஒரு மாற்றம் உணர வேண்டும்.

சொத்து வரி கட்டுபவர்கள், தொழில் வரி கட்டுபவர்கள் என்று மாநகராட்சிக்கு வருமானம் அளிப்பவர்களுக்கு ஒரு அடையாள அட்டை வழங்கப்படலாம். "சென்னை நமது பெருமை" என்பது உங்கள் பணத்தில் சாத்தியமாகிறது என்பதை வலியுறுத்தும் வண்ணம் அந்த அட்டை அமைய வேண்டும். அந்த அட்டை வைத்திருப்பவர்களுக்கு சில சின்னச் சின்ன சலுகைகள் வழங்கலாம். சிறப்பு வாகன நிறுத்தம் போல.

இந்த வழியில் அட்டை பெற முடியாதவர்கள் ஒரு சிறு கட்டணம் செலுத்தி இன்னொரு வண்ண அட்டை பெறலாம். பேருந்தில், ரயிலில், விமானத்தில் உள்ளே வரும் ஒவ்வொருவருக்கும் தற்காலிக "சென்னை நமது பெருமை" என்று பொறித்த அட்டை பயணச்சீட்டுடன் கொடுக்கப்படலாம்.

(அடையாள அட்டைக்கு எதிராக அரசமைப்பு எதிர்ப்புகள், மனித உரிமை எதிர்ப்புகள் உண்டு. ஆனால், ஏதோ ஒரு உருவில் நாம் அடையாளங்களை சுமந்து கொண்டுதான் உள்ளோம். ரேஷன் கார்டு, கடவுச் சீட்டு, ஓட்டுநர் உரிமம் என்று. )

  • சென்னை நமது பெருமையாக இருக்கும் போது அதன் தெருக்களை சுத்தமாகப் பேணுவது ஒவ்வொருவரின் கடமையாக மாறி விடும்.
  • சாலை போடுவதில் முறைகேடு நடக்கும் போது தட்டிக் கேட்க தோன்றும்.
  • சாலையில் துப்புபவர்கள் வெட்குமாறு சமூக மன நிலை மாறி விடும்.
  • சாலை விதிகளை மதித்தால் நமது பெருமையைக் கட்டிக் காக்கலாம் என்று அறிவுறுத்துவது எளிதாகி விடும்.

  • ஆட்டோ ஓட்டுனர்கள் அழுக்கு லுங்கிக் கட்டிக் கொண்டு, அழுது வடியும் முகத்தோடு, பயணிகளிடம் அடாவடியாகப் பேசுவது நமக்குப் பெருமையில்லையே. பொது போக்குவரத்து சேவை ஊழியர்கள், தூய வேட்டி/சட்டை அல்லது இன் செய்யப்பட்ட பேன்ட்/டி-சர்ட்டுடன், மலர்ந்த முகத்தோடு, பேசி நடந்து கொள்ள வேண்டும்.

ஆங்காங் சீன அதிகாரத்தின் கீழ் வருவது தொடர்பாக சாங்காயில் பொது விழா ஒன்று நடந்தது. (1997ல்). மக்கள் சதுக்கம் எனப்படும் பொது இடத்தில் லட்சக் கணக்கான மக்கள் கூடி நள்ளிரவு பன்னிரண்டு மணியைக் கொண்டாடினார்கள். லாரி வைத்துக் கூப்பிட்டு வராமல், அரசுப் பிரச்சாரத்தைக் கேட்டு, பிரிட்டனை மண்டியிட வைத்து தனது அடகு வைக்கப்பட்ட செல்வத்தை சீனா மீட்டுக் கொண்டதைக் கொண்டாடும் பெருமையில் கூடினார்கள் நகர மக்கள்.

அந்த வார இறுதியில், எனக்கு சீன மொழி கற்றுக் கொடுக்கும் கல்லூரியில் படிக்கும் பெண் வந்தாள். இந்த கொண்டாட்டத்தை, திருவிழாவைப் பற்றி உயர்வாகச் சொன்னேன். "அதெல்லாம் சரிதான், அடுத்த நாள் காலையில் அந்தத் திடலில் இருந்து அள்ளிய குப்பையின் எடை பதினைந்து டன்னாம், நாளிதழில் வெளியிட்டு இருந்தார்கள், சாங்காய் வாசிகள் எல்லோரும் தலை குனிய வேண்டிய உண்மை" என்று வருத்தப்பட்டாள்.

குப்பை போடுவது மனித இயற்கை, அதைத் திரட்டுவது நகராட்சியின் கடமை, அந்த விபரங்களை விளம்பரப்படுத்தி, குடிமக்களின் பெருமையை தூண்டி விட்டு, அடுத்த முறையாவது கொஞ்சம் ஒழுங்கைக் கொண்டு வர முனைவது பெருநகரின் வெற்றிக்குத் தேவை.

சிங்காரச் சென்னை என்று ஸ்டாலின் நகரத் தந்தையாக இருந்த போது நகரைத் தூய்மைப்படுத்தவும் போக்குவரத்து வசதிகளைப் பெருக்கவும் முயற்சிகள் மேற்கொண்டார். அதன் பிறகு அது அப்படியே பெயரிழந்து போய் விட்டது. அப்படி இல்லாமல் திட்டமிட்டு தொடர்ச்சியாக இந்த அடையாளத்துக்கு உரம் சேர்க்க வேண்டும்.
  • நகரத் தந்தை (மேயர்) ஒருவர், நகரில் வசிக்கும் பிரபலங்கள், நகரில் செயல்படும் நிறுவனங்கள் தொடர்ச்சியாக இந்த அடையாளத்திற்கு உரம் சேர்க்க வேண்டும்.
  • நகரத் தந்தை என்பவர் கட்சி அரசியலில் மாட்டிக் கொண்டு சீரழிபவராக இல்லாமல், நகர மக்கள் யாவரையும் தலைமை ஏற்று நடத்தும் திறன் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • சகோதர நகரங்கள் என்று வெளி நாட்டு நகரங்களுடன் உறவுகள் வளர்ப்பது, பெருமை சேர்க்கும் விளையாட்டுப் போட்டிகள், திரைப்பட விழாக்கள், வணிக நிகழ்ச்சிகள் நடத்துவதை ஒருங்கிணைத்து சென்னை என்ற பெயரை உலகில் பிரபலமாக்கும் முயற்சிகள் வேண்டும்.

2020ன் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் நடக்க சாத்தியங்கள் இருக்கிறதா? 2008ல் பெய்ஜிங், 2012ல் லண்டன், 2016ஐ விட்டு விடுவோம். 2015ல் சென்னை பெயரை போட்டியில் சேர்க்க என்ன வசதிகள் என்ன அமைப்புகள் தேவை என்று நகரத் தந்தை எதிர்கால குறிக்கோள் வரையறுக்கலாம்.

Comments

அடடா இன்றைக்குத்தான் ஒழுங்கா இந்த பதிவைப் பார்க்கிறேன். நானும் சேரலாமா?
சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊர போல வருமா என்று பாடியப்படி,
இன்னொரு சென்னை வாசி
அருமையான ஐடியாக்கள்.

கூட்டம் சேரும் இடத்தில் குப்பை இல்லாமல் இருக்காது. உடனுக்குடன் அப்புறப்படுத்தணும்.
நகரசபைக்கு வரி கட்டுறோமுல்லே?

இங்கேயும் கிறிஸ்மஸுக்கு ஒரு மாசம் முந்தி,'சேண்ட்டா பரேட்'ன்னு நடக்கும். ரெண்டு மணி நேரத்துக்கு
பரேடு போகும் பாதைகளில் கார்ப் போக்குவரத்து இருக்காது. மூணு லட்சம் ஜனங்க இருக்குற ஊர். ஒரு
லட்சத்துக்குமேலே பார்வையாளர்கள் கூடுவோம். பரேடின் கடைசி அலங்கார வண்டி கிறிஸ்மஸ் தாத்தா.
மக்களுக்கு கிறிஸ்மஸ் வாழ்த்து சொல்வார். அவரைப் பிந்தொடந்து ஒரு போலீச் பட்ரோல் கார். ஆச்சா...
அதைத் தொடர்ந்து வருவது நகராட்சியின் ரப்பிஷ் ரிமூவல். தெருவே பளிச். லட்சம்பேர் கூடுன அடையாளமே
இருக்காது.
அருமையான பதிவு சிவகுமார்!
//2015ல் சென்னை பெயரை போட்டியில் சேர்க்க என்ன வசதிகள் என்ன அமைப்புகள் தேவை என்று நகரத் தந்தை எதிர்கால குறிக்கோள் வரையறுக்கலாம்.//

சபாஷ்! சரியான objective!
இப்படி எல்லாம் வச்சா தான், குறைந்த பட்சம் தூரமாவது போவோம்.
கோவையில் ஒரு சிறுதுளி வெற்றி பெறும் போது, சென்னை மட்டும் சளைக்கலாமா?

இதையும் பாருங்களேன்,
http://www.ilovechennai.com/dreamfuture/
ஓய்வு பெற்று நம்ம ஊரில் போய் கடைசி காலத்தைக் கழிக்கலாம்'
எங்களில் பலர் இப்படியும் உண்டு.

முதலில் கவனிக்க வேன்டியது- சாலைகளை.
ரோடில் ஓடும் வண்டிகளுக்கு ஏற்ற அளவில் ரோடு போடுவது.தேவை ஏற்பட்டால் நில ஆக்கிரமிப்பு செய்யவேண்டும்.அதே சமயத்தில் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த நிவாரனம் வழங்கப்படவேண்டும்.
அடுத்து குடிதண்ணீர் பிரச்சனை.
டோக்கன் கொடுப்பது இதெல்லாம் மேலே சொன்ன சிலவற்றை அடைந்தபிறகு ஆரம்பித்தால் பெருமையாக இருக்கும் இல்லாவிட்டால் கேளிக்கூத்தாக போக வாய்புள்ளது.அதை பெருக்கி குப்பைதொட்டியில் போட வேலை ஆட்கள் தேவைப்படும்.
சிவகுமார்ஜி,

சென்னையில பெரிய பிரச்சனையே இந்த குப்பை தான்.. மற்ற எல்லா நகரங்களுடன் ஒப்படும் போது சென்னை மட்டும் ரொம்ப மோசமா இருக்கு. வி.இ.பி கள் இருக்குமிடங்கள் படு சுத்தமாக இருக்கும். நம்ம சென்னை சென்டரல் ஸ்டேஷன் லிருந்து , முக்கிய இடங்களில் கூட மிக மோசமாத்தான் வச்சி இருக்காங்க.. நடுவில் கொஞ்ச நாள் நீங்க சொன்ன மாதிரி சுத்தமாத்தான் இருந்தது.. இப்ப ரொம்ப கஷ்டம்.

இதற்கு அரசோ (அ) தன்னார்வளர்கள் (மெரினா வை சுத்தம் செயத மாதிரி), சேர்ந்து ஒரு முயற்சி எடுத்தாங்கன்னா நல்லா இருக்கும்.

சில நகரங்களில், மக்கள் தன் சொந்த செலவில், தங்களது குடியிருப்பு, தங்களுது தெரு என்று சுத்தம் செய்து கொள்கிறார்கள். அதுப்போல ஒற்றுமை க்கூட நம் சென்னை வாசிகளுக்கு இல்லை என்பது வருந்த தக்க விஷயம்.
கரெக்ட் சிவகுமார்,

2015க்குள் அப்படியே திருப்பெரும்பூதூர்க்கு போரூர்-பூந்தமல்லி வழியாக எம்.ஆர்.டி.எஸ் டிரெய்ன் விட வேண்டும்.

சென்னைக்கான இன்றைய அசிங்க அடையாளமான கூவம் நாற்றத்தை மாற்றி அடையாறு + கோவம் நதிகளை மீட்டெடுக்கும் புதிய தலைமுறை கழிவுநீர் மேலாணமைத் திட்டம் செயல் படுத்தப்பட வேண்டும்.

இல்லைன்னா 2020ஒலிம்பிக்குச் சென்னை வரும் வெளிநாட்டினர்க்கு சென்னையின் அடையாளம் கூவம் நாற்றம்தான் என்பது சாஸ்வதமாகி விடும் அபாயம் இருக்கிறது

அன்புடன்,

ஹரிஹரன்
//நானும் சேரலாமா?//

வாங்க,

நாலைந்து பேர் சேர்ந்து இந்தப் பதிவு ஆரம்பித்திருக்கிறோம். கள நடவடிக்கைளிலும் இறங்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம். எப்படி மேலும் நண்பர்களையும் சேர்த்துக் கொண்டு செயல்படுவது என்று இனிமேல்தான் திட்டமிட வேண்டும். எல்லோரும் சேர்ந்து தேரிழுத்தால் கண்டிப்பாக மாற்றங்கள் வரும்.

அன்புடன்,

மா சிவகுமார்
//கூட்டம் சேரும் இடத்தில் குப்பை இல்லாமல் இருக்காது.//

அது சரிதான், ஆனால் நின்ற இடத்திலேயே துப்புவது, குப்பைத் தொட்டி அருகிலேயே இருந்தாலும் கண்ட இடத்தில் குப்பைய வீசுவது என்று பொதுமக்களும் பொறுப்பிலாமல் இருந்தால் எத்தனை வண்டிகள்தான் தூய்மையை காக்க இயங்க முடியும். இரண்டு பக்கமும் மாற்றம் வேண்டும்.

வரியும் எத்தனை பேர் கொடுக்கிறார்கள்?

அன்புடன்,

மா சிவகுமார்
வாங்க கண்ணபிரான் ரவிஷங்கர்,

கிருஷ்ணமூர்த்தி ராமன் உங்கள் நண்பரா?

இப்படி பல மூலைகளில் முயற்சிகள் ஆரம்பிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. பல் இளைஞர்கள் வெளிநாட்டு நகரங்களைப் பார்த்து விட்டு வந்ததும் ஒரு ஊக்கியாக செயல்படுகிறது என்று நினைக்கிறேன்.

அன்புடன்,

மா சிவகுமார்
சாலைகளை சீரமைப்பது,
குடிதண்ணீர் பிரச்சனை தீர்ப்பது,
குப்பை இல்லாமல் செய்வது
எம்ஆர்டிஎஸ் விடுவது
கூவத்தை மணக்கச் செய்வது

என்று இவை அனைத்துக்கும் இன்றைய சூழலில் அரசுகளை எதிர்நோக்கி நிற்கும் நிலை இருக்கிறது. கவிதா சொல்வது தன்னார்வலர்கள் தத்தமது பகுதிகளில் குழுக்களாக முயற்சிகளை ஆரம்பித்தால் மாற்றம் ஆரம்பிக்கும். அதற்கு ஒவ்வொருவரின் தனிப்பட்ட ஆர்வம் மட்டும் போதும். பெரிய பணச் செலவோ, அதிகாரமோ இல்லாமல் பல முன்னேற்றங்களை செய்து கொள்ளலாம்.

தூய்மையான சென்னை நமது பெருமை.
குப்பையில்லா சென்னை நமது பெருமை
போக்குவரத்து ஒழுங்கான சென்னை நமது பெருமை
கூவம் மணக்கும் சென்னை நமது பெருமை
தரமான சாலைகள் சென்னையின் பெருமை

என்று ஆர்வத்தைப் பொது வேலையின் மூலம் பரப்ப வேண்டும்.

அன்புடன்,

மா சிவகுமார்
வணக்கம் சார் ரொம்ப நல்ல விஷயம்....உங்க ஆலோசனை நிறைவேறினால் சென்னை நன்றாக இருக்கும்...
நிறைய அன்புடன்
வீரமணி
நல்ல பதிவு மா.சிவகுமார்

""நகரத் தந்தை என்பவர் கட்சி அரசியலில் மாட்டிக் கொண்டு சீரழிபவராக இல்லாமல், நகர மக்கள் யாவரையும் தலைமை ஏற்று நடத்தும் திறன் உள்ளவராக இருக்க வேண்டும்."""

சரியான கருத்து...

அல்லது கட்சி சார்ந்தவராகவே இருந்தாலும் மற்றவர்கள் அவர் நல்முயற்சிகளுக்கு முழு ஆதரவு தர வேண்டும்.
வீரமணி நன்றி.

வாங்க சரவணகுமார்,

உள்ளாட்சி தேர்தல்களில் கட்சி சார்ந்த வேட்பாளர்களை அனுமதிக்கும் முறையை மறுபரீசலனை செய்யலாம். பல ஆண்டுகளுக்கு முன்பு அப்படித்தான் இருந்தது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

வட்ட உறுப்பினர் என்பவர் குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் சாதாரண மனிதராக இருக்க வேண்டும். முழு நேர அரசியல்வாதியாக இல்லாமல் தன்னுடைய தொழிலையும் பார்த்துக் கொண்டு பொதுப் பணிக்கு நேரம் செலவிடும் குடியிருப்போர் நலச் சங்கத் தலைவர் போல இருந்தால் போதும்.

அன்புடன்,

மா சிவகுமார்
//மும்பைகார், அம்சி மும்பை, சிட்டி ஆஃப் ஜாய் (கல்கத்தா), கார்டன் சிட்டி (பெங்களூர்) என்று சென்னைவாசிகளுக்கு ஒரு அடையாளம் இருக்கிறதா? அந்த அடையாளத்தில் ஒவ்வொருவரும் பெருமை கொள்ள முடியுமா? அந்த அடையாளம் நீண்ட கால நோக்கில் நிலைத்து இருப்பதாக பெரும்பான்மை மக்கள் தம் வாழ்க்கையுடன் பொருத்திக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும்//

நேஷனல் ஜியோகிராஃபிக் சேனலில் மெகாசிட்டீஸ்(Mega cities) என்ற நிகழ்ச்சியினைப் பார்த்தேன். பிரேசில் நாட்டில் உள்ள சாவ் பாலோ நகரத்தின் பொருளாதாரத்தையும், சுற்றுப்புறச் சூழலையும் மேம்படுத்த பழைய குளிர்பான மற்றும் பீர் கேன்களை recycling செய்யும் பணி நடக்கிறது. சாவ் பாலோ என்பது உலகில் உள்ள 10 பெரிய நகரங்களில் ஒன்று. பீர் கேன்களை மூலை முடுக்குகளிலிருந்தெல்லாம் சேகரித்து recycling செய்வதால் சுற்றுப்புறச் சூழல் பாதுகாக்கப் படுகிறது. இந்த recycling ஐ நம்பி பல மக்கள் வாழ்வதால் அந்நகரத்தின் மூலமாகப் பொருளாதாரமும் பெருகுகிறது. இதே போல நியூயார்க் நகர வாசிகள் பெருமை கொள்வது அவர்கள் ஊரில் ஓடும் சப்வே டிரெயினை வைத்து தான். இதன் மூலமாக அந்நகரின் சாலை போக்குவரத்து சீரடைகிறது. Public transportஐ மக்கள் உபயோகிப்பதால் சுற்றுப்புறச் சூழலும் பாதுகாக்கப் படுகிறது.

அது போல ஒவ்வொரு நகரத்திற்கும் ஒரு சிறப்பு அல்லது ஒரு spirit உண்டு என்பது என் கருத்து.

சென்னையைப் பொறுத்தவரை வெளி மாநிலத்தவர்கள்(வெளிநாட்டவர்கள் பற்றி தெரியவில்லை) பார்ப்பது "பாரம்பரியமும் புதுமையும்" ஒன்று கூடிய நகரம், மென்பொருளுக்குப் பெயர் பெற்ற நகரங்களில் ஒன்று. ஆனால் சென்னை அவப்பெயர் போக்குவரத்து தேவைகளினால் தான் என்பது என் கருத்து. குறிப்பாக ஆட்டோக்களினால் மிகவும் கெட்ட பெயர் பெற்றிருக்கிறது, இதனை மாற்ற எதாவது அரசு செய்ய வேண்டும்.
அன்புள்ள சிவகுமார், நானும் ஒரு பதிவராக உங்களது பதிவில் இணைந்து கொள்ளலாமா? எனக்கும் சென்னைமேல் அதீத காதலுண்டு. சென்னையின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி குறித்து பல எண்ணங்கள் என்னிடமும் உள்ளன. மேலும் நான் சென்னையில்தான் வசிக்கிறேன். சென்னையில் சென்றவருட வரலாறு காணாத மழை குறித்த புகைப்படங்களை சென்னை பற்றிய எனது பதிவில் (http://www.chennaithanga.blogspot.com) இட்டுள்ளேன். பார்க்கவும். உங்களது பதிலை எதிர்பார்க்கிறேன்.

Popular posts from this blog

மெட்ராஸ் பாஷை - ஒரு இலக்கண பார்வை

27D

ஏதோ வண்டி ஓடிக்கினுகீது சார்! - ஜெயகாந்தன்