Wednesday, September 20, 2006

ஹலோ! சென்னை கால் டாக்ஸி!

ஒரு காலத்தில் சொந்த வாகனமில்லாத சென்னை மக்கள், தனியார் போக்குவரத்துக்கு ஆட்டோக்களை மட்டுமே நம்பிக் கொண்டிருந்தர். ஆனால் சென்னை நகரை இன்று ஆள்வது கால் டாக்ஸிக்கள். ட்ராவல்ஸ் கார்கள் போல் அல்லாமல், கூப்பிட்ட இடத்துக்கு கூப்பிட்ட நேரத்துக்கு வந்து நிற்கும் கால் டாக்ஸி சேவைகள் தொடங்கியது 2000த்தில் தான்.வியாபார நிலையங்கள், ஆபரணங்கள், மருந்து விற்பனை என்று பல தளங்களிலும் கால் பதித்திருந்த பாரதி(BARATHI) நிறுவனம் தான் சென்னையின் முதல் கால் டாக்ஸி நிறுவனம். 2000ல் 36 கார்களுடன் தொடங்கிய இந்த நிறுவனத்துக்கு இன்று இருநூறுக்கும் அதிகமான சிற்றுந்துகள் இயங்கிக் கொண்டிருக்கிறன. பாரதி நிறுவனத்தின் கார்கள் எல்லாமே மாருதி ஆம்னி மட்டுமே. சிறு இடைவெளிகளிலும் புக முடிந்த அமைப்பு, நான்கு பயணிகள் வரை இருக்கை வசதி, பொருட்களை அதிகம் எடுத்துச் செல்ல முடிந்த வசதி, என்பதோடல்லாமல், ஆம்னி வண்டிகளில் வயர்லெஸ் வகைக் கருவிகள் பொருத்தவும் வசதி இருப்பது ஒரு காரணம்.


சென்னையின் மற்றொரு குறிப்பிடத் தகுந்த கால் டாக்ஸி நிறுவனம் பாஸ்ட் ட்ராக்(Fast Track). 2001இல் செயல்படத் துவங்கிய இந்த நிறுவனத்தின் மேலாளர் துரைராஜனுக்கு, இந்தத் துறை பற்றிய யோசனை வந்தது பெங்களூர் மற்றும் சிங்கப்பூரில் இருக்கும் கால் டாக்ஸிக்களைப் பார்த்துத் தானாம்.


பொதுவில் எல்லா நிறுவனங்களும் ஆம்னியையே விரும்பும்போது, சென்னை கால் டாக்ஸி, ஈஸி கால் டாக்ஸி போன்ற சில நிறுவனங்கள் அம்பாஸிடர் கார்களைப் பயன்படுத்துகின்றன. அம்பாசிடர் கார்களின் வசதியான இருக்கைகளும், அவற்றின் குறைந்த விலையுமே இதற்குக் காரணம். மற்றபடி, சிக்சாக்(zigzag cool taxi) போல், எல்லா வித வாகனங்களும் வைத்திருப்பவர்களும் இருக்கிறார்கள்.

கால் டேக்ஸியின் குறைந்த அளவு தூரத்துக்கான கட்டணம் 50ரூபாயில் தொடங்குகிறது. அதன்பின் மீட்டருக்கு 9 ரூபாய் என்று கட்டணம் வசூலிக்கிறார்கள். 30 நிமிடங்களுக்கு மேலே போனால் மட்டுமே காத்திருத்தலுக்கான கட்டணம். இரவு 11 முதல் காலை 5 மணி வரையிலான சேவைக்கு 50% அதிக கட்டணம்.

GPS, வயர்லெஸ் கருவிகள் போன்ற வசதிகள் இருப்பதால், கால் டேக்ஸிக்கு அழைத்து 15 நிமிடங்களுக்குள் வீட்டு வாசலில் வந்து நிற்கிறது வண்டி. ஒரு முறை பெயர், வீட்டு தொலைபேசி எண், முகவரி எல்லாம் கொடுத்துவிட்டால், அடுத்த முறை பேசும் போது வெறும் தொலை பேசி எண்ணை வைத்து வீட்டு முகவரி, அடையாளம் எல்லாம் சொல்லிவிடுகிறார்கள்.

கால் டாக்ஸிக்கள் நாம் சொல்லும் இடங்களுக்குப் போவது மட்டுமில்லாமல், சுற்றுலாத் தலங்கள், தீம் பார்க்குகளுக்கும் பேக்கேஜ் கட்டணங்கள் வைத்திருக்கிறார்கள். உதாரணத்துக்கு, பாஸ்ட் டிராக் கிஷ்கிந்தாவுடனும், zigzag மாயாஜால், MGM உடனும் இந்த மாதிரியான சேவை சார்புப் பிரிவுகளை வைத்திருக்கிறார்கள்.

இதுவல்லாமல், சென்னையின் கார்ப்பொரேட் தனியார் மென்பொருள் நிறுவனங்களும் கூட இந்த கால் டாக்ஸி நிறுவனங்களுடன் ஒப்பந்த உடன்படிக்கை செய்திருக்கிறார்கள். அதன்படி, சில கால் டேக்ஸி நிறுவனங்கள் சில மென்பொருள் நிறுவனங்களுக்காக தன் வண்டிகளில் பெரும்பாலானவற்றை ஒதுக்கிவைப்பதும், 5% முதல் 10% வரை கட்டணங்களில் தள்ளுபடி தருவதும் கூட உண்டு. ஈஸி கால் டேக்ஸி விப்ரோவுடனும், பாஸ்ட் டிராக் சி.டீ.எஸ்(CTS)ஸுடனும் இது போன்ற ஒப்பந்த அடிப்படையில் இயங்குகின்றன. இது போன்ற மென்பொருள் நிறுவனங்களை மட்டுமே நம்பி தமது சொந்த டாக்ஸியைக் கால் டாக்ஸியாக ஓட்டுபவர்களும் உண்டு.

பொதுவில் கால் டாக்ஸிக்களால், டிராவல் கார்களுக்கு எந்தவித தொழில் போட்டியும் இல்லை என்று சொல்கிறார்கள்.

வளர்ந்து வரும் சென்னையின் மக்கள் தொகைக்கு இது போன்ற போக்குவரத்து வசதிகள் பெரிய வரம். அதிலும், ஆட்டோக்களின் தனியுடைமையாக இருந்த தனியார் போக்குவரத்தில் கிட்டத் தட்ட ஆட்டோக்கள் கேட்கும் கூலியை கால் டாக்ஸியில் இன்னும் கொஞ்சம் அதிகம் கொடுத்து வசதியாக உட்கார்ந்தும், பொருட்களை வைத்துக் கொண்டும் போக முடிந்தது பெரிய விடுதலையாகத் தான் சென்னை மக்கள் உணர்கிறார்கள்.

சென்னையின் கால் டாக்ஸி நிறுவனங்களின் முழுமையான பட்டியல்கள்:
சென்னை ஆன்லைன்
சென்னை விஷன்

6 comments:

வல்லிசிம்ஹன் said...

நன்றி பொன்ஸ்.
இவ்வளவு விவரம் கால் டாக்ஸி பத்தித் தெரியாது.

ஆட்டொவில் முதுகு சில சமயம் பதம் பார்க்கப் படுகிறது.
என்ன என் மாதிரி முழங்கால் வலிக்காரர்கள் ஒம்னியில் ஏறுவதற்கு ஒரு ஸ்டூல் போட்டால் நன்றாக இருக்கும்:-0)

dondu(#4800161) said...

கால் டாக்ஸி பற்றிய எனது பதிவை இங்கு பார்க்கலாம். http://dondu.blogspot.com/2005/11/blog-post.html

"கால் டேக்ஸியின் குறைந்த அளவு தூரத்துக்கான கட்டணம் 50ரூபாயில் தொடங்குகிறது. அதன்பின் மீட்டருக்கு 9 ரூபாய் என்று கட்டணம் வசூலிக்கிறார்கள். 30 நிமிடங்களுக்கு மேலே போனால் மட்டுமே காத்திருத்தலுக்கான கட்டணம். இரவு 11 முதல் காலை 5 மணி வரையிலான சேவைக்கு 50% அதிக கட்டணம்."
முதல் மூன்று கிலோமீட்டர்களுக்கு 30 ரூபாய். அடுத்து ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 10 ரூபாய் (9 அல்ல). சிக்னல்களில் காத்திருப்பு என்று வரும்போது ஸ்டாப் வாட்ச் ஆன் ஆகும். இரண்டரை நிமிடங்களுக்கு ஒரு ரூபாய் என்ற கணக்கில் ஆட்டமேடிக்காக மீட்டரில் ஏறி விடும்.

இப்போது இன்னொரு டெவெலப்மெண்டும் சேர்ந்துள்ளது. மினிமம் 30 ரூபாய் என்றிருந்தாலும் அதை இன்ஃபார்மலாக 125 ரூபாய் என்று வைத்துள்ளார்கள். அதாவது நீங்கள் பத்தரை கிலோமீட்டருக்குக் குறைந்த தூரம் சென்றால் சிறிது நட்டம்தான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஜயராமன் said...

பொன்ஸ்,

உருப்படியான பதிவு. ஆனால், மேம்போக்காக இருப்பதுபோல தோன்றுகிறது. இந்த கால் டாக்ஸிகளில் பல பிரச்சனைகளும், விவகாரங்களும் இருக்கின்றன. அவற்றை நீங்கள் கோடி கூட காட்டவில்லை என்பது ஆச்சரியமாக இருந்தது. ஒருவேளை, கால்டாக்ஸி பற்றி நல்லதாக மட்டுமே எழுதுவது விளம்பரமோ என்னவோ?

ராகவன் சொன்னது போல இதில் மினிமம் அவஸ்தை வேறு.

பாரதி டாக்ஸி ஆதிமூலம். நன்றாகத்தான் பண்ணுகிறார்கள். நான் எப்போதும் கூப்பிடுவது அவர்களைத்தான். ஆனால், அவர்கள் இப்போது ப்ராண்சைஸ் மாடலில் நடத்துகிறார்கள். வாகனங்கள் ட்ரைவர்களுடையது. மினிமம் பணம் மாதமாக வாங்கிக்கொண்டு பிஸினஸ் வருகிறதோ இல்லையோ டிரைவர்களிடம் பிடுங்கிக்கொள்கிறார்கள். இதெல்லாம், நான் போகும்போது பல டிரைவர்களின் கம்ப்ளையண்ட்களை கேட்க நேர்ந்ததால் தெரிந்தது.

மற்றபடி ஸ்பீட் ப்ராப்ளம், பயணிகளை கேட்காமல் சிகரெட், பாட்டு என்று சில அடாவடிகளும் ஆரம்பித்துவிட்டன. ஆனால், ரொம்பவும் குறைச்சலாக. சட்டவிரோத காஸ் சிலிண்டர் உபயோகம் வேறு. டிக்கிகளில் சாமான்களையே வைக்க முடியாது. பழைய பல வண்டிகள் மராமத்து ரொம்பவும் சுமார். இப்படி சில இடறல்கள்.

இதை பற்றியும் எழுதுங்கள்.

நன்றி

We The People said...

பொன்ஸ் சில திருத்தங்கள் தேவைப்படும் போல தெரிகிறதே!

குறைந்தபட்ச கட்டணம் Non-AC - 2கீ.மீ க்கு - ரூ30/-

//அதன்பின் மீட்டருக்கு 9 ரூபாய் என்று கட்டணம் வசூலிக்கிறார்கள்//

அதன்பின் கீலோமீட்டருக்கு 10 ரூபாய்.

மீட்டருக்கு 9 ரூ வாங்கினா நம்ம நெலமை என்ன ஆவது!!!

குறைந்தபட்ச கட்டணம் AC Ford Ikon - 2கீ.மீ க்கு - ரூ50/-

அதன்பின் கீலோமீட்டருக்கு 20 ரூபாய் என்று நினைக்கிறேன்.


அதே போல்
//இரவு 11 முதல் காலை 5 மணி வரையிலான சேவைக்கு 50% அதிக கட்டணம்.//

இரவு சேவை கட்டணம் 25% அதிகமாக வசூலிக்கப்படுகிறது! 50% அல்ல.

டோண்டு சார் சொல்லுவது போல்:
//இன்ஃபார்மலாக 125 ரூபாய் என்று வைத்துள்ளார்கள். அதாவது நீங்கள் பத்தரை கிலோமீட்டருக்குக் குறைந்த தூரம் சென்றால் சிறிது நட்டம்தான்.//


அப்படி ஒரு மேட்டர் இருப்பதாக தெரியவில்லை, குறிப்பாக பாரதி, Fast Track போன்றவை அப்படி வாங்குவதாக தெரியவில்லை.

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

நல்ல பதிவு.
ஒரு முறை காலை 4.30 வாங்க என்று சொல்லி போன் செய்து முகவரி கொடுத்தேன். காலை 4.15க்கே வந்து வீட்டு வாசலில் காத்துக்கிடந்தது டாக்ஸி.
அது போல மீட்டருக்கு மேல/கீழ கொடு என்று அடம் கிடையாது.
நாமாக கொடுத்தால் தான் டிப்ஸ் கூட வாங்குகிறார்கள் டிரைவர்கள்.
மற்றபடி சிகரெட்,பாட்டு போன்றவைகள் டிரைவர்கள் வாடிக்கையாளரின் அனுமதி இல்லாமல் பயன்படுத்துவதில்லை. அல்லது நாம் பாட்டுப்போடு என்றால் போடவும் செய்கிறார்கள்.
குறைகளை மட்டும் சொல்லுவதால் என்னவாகிவிடப்போகிறது?
நிறைவான விஷயங்கள் அதிகம் இருக்க குறைகள் பெரியதாக உறுத்துவதில்லை என்பது தான் உண்மை.

துளசி கோபால் said...

பொன்ஸ்,

நல்ல பதிவு.
மனசுலே வச்சுக்கிட்டேன்.

நம்ம அனுபவம் கொஞ்சம் வேற மாதிரி இருந்துச்சு, ஒரு 6 மாசத்துக்கு முந்தி(-: