சென்னை சங்கமம் – பண்பாட்டை மீட்டெடுக்கும் முயற்சி!
சென்னை மக்களின் கலை, கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் தலங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக "தமிழ் மய்யம்" அமைப்பு "சென்னை சங்கமம்" என்ற ஒருவார விழாவினை நடத்த முன்வந்துள்ளது. தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் உதவியும் இவ்விழாவிற்கு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இளைய தலைமுறையினருக்கு அறிமுகமில்லாத தமிழகத்தின் பண்பாட்டுக் கலைகளையும், கிட்டத்தட்ட அழிந்துப்போன தமிழின அடையாளங்களையும் மீட்டெடுக்கும் விதத்தில் இந்நிகழ்ச்சிகள் அமையும் என நிகழ்ச்சிப் பொறுப்பாளர்கள் உறுதியளித்திருக்கிறார்கள். 200க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் சென்னையின் பல்வேறு இடங்களில் பெப்ருவரி 21 முதல் 26 வரை நடத்தப்படும் எனத் தெரிகிறது. தமிழக அரசும் இந்நிகழ்ச்சியை ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்த உறுதி அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இக்கலாச்சார நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தேவாரமும், திருப்புகழும் சென்னையின் புகழ்பெற்ற பூங்காக்களில் பாடப்படும் என்றும், தமிழர்களின் இசைக்கலாச்சார அடையாளமான நாதஸ்வர நிகழ்ச்சிகளும் அவற்றோடு ஒன்றிணைந்து நடத்தப்படும் என்று விழா பொறுப்பாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
மரங்கள் மீது வர்ணங்கள் பூசி வித்தியாசமான ஓவியங்கள் வரையும் முறையும் இவ்விழாவில் அறிமுகப்படுத்தப் படுகிறது. கவிதைப் போட்டி மற்றும் இலக்கியப் போட்டிகளும் உண்டு. பல்வேறு திரையரங்குகளில் தமிழரின் கலாச்சாரத்தையும், தமிழ் மொழியின் மேன்மையையும் விளக்கும் திரைப்படங்களும் திரையிடப்படுகிறது. தமிழக அரசின் செய்தித்துறை நிகழ்ச்சி நடக்கும் இடங்களைத் தருவதற்கு பொறுப்பேற்றிருக்கிறது.
இவ்விழாவுக்கான துவக்க விழா நிகழ்ச்சி பெப்ருவரி 20 மாலை சென்னன ஐ.ஐ.டி. வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியை மாண்புமிகு தமிழக முதல்வர் கருணாநிதி தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இலவசம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. என்னென்ன நிகழ்ச்சிகள் நடைபெறப் போகிறது, எந்தெந்த இடங்களில், எந்த நேரங்களில் நடைபெறும் என்று அறிய விரும்புபவர்கள் இங்கே பார்க்கவும்.
முழுமையாக பார்க்க
சென்னபட்டினத்துக்காக.. எழுதியவர்:- லக்கிலுக்
தொடர்புள்ள இடுகைகள்:
1. ப்ரின்ஸின் பதிவு
Comments