Tuesday, February 27, 2007

ஆர்ப்பரிக்கும் கடலலை - Fusion

அந்திவானத்தில் சூரியன் நிகழ்த்திய நிற வேடிக்கைக்கு போட்டியாய் மேடையில் வர்ண ஒளிவிளக்குகள் ஜாலம் காட்டிக் கொண்டிருந்தன. என்றும் கடல் அலையின் சத்தம் ஓங்கி இருக்கும் இடத்தில், மக்களின் சத்தத்தில் கடல் அடங்கி இருந்தது. இடம் கண்டுபிடித்து மண்ணில் கால் புதைய நடைக்கையிலேயே கணீரென ஒரு பெண் குரல் பாட்டு பாடியபடி இருந்தது. அடடா நேரமாச்சோ என்றபடி ஓடிப்போனால், அட அது ஒலிப்பெருக்கிச் சோதனை.ஆம், நீங்கள் நினைப்பது சரிதான் அது பெசன்ட் நகர் கடற்கரையில் 'சென்னை சங்கமத்தின்' நிறைவுநாள் நிகழ்ச்சியேதான். இனி நேரடி ரிப்போட்.

மாலை 6 மணிக்கு நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கும் எனச் சொல்லியிருந்தார்கள். சரியாக 6.10 க்கு நிகழ்ச்சி ஆரம்பமானது. அப்போதே அநேக முக்கிய விருந்தினர்களும் வந்துவிட்டிருந்தார்கள். இந்த பத்து நிமிட தாமதம் கூட ஒலி ஒளி அமைப்பு ஏற்பாடு தாமதத்தினால்தான்.

முதலில் 'சென்னை சங்கமம்' நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் (அவர் தன் பெயரை குறிப்பிடவில்லை) சிறப்பு விருந்தினர் அமைச்சர் பரிதி இளம்வழுதி, இறையன்பு I.A.S, அமைச்சர் தங்கம் தென்னரசு, கனிமொழி, இந்திரகுமாரி, ராஜாமணி அம்மையார், மலேசிய அமைச்சர் சாமிவேலுவின் துணைவியார் ஆகியோரை வரவேற்று பேசினார். தொடர்ந்த அவர், "இந்த நிகழ்ச்சி எந்தக் கட்சிக்கும் சார்பானதல்ல; எவருக்கும் எதிரானதல்ல; ஆத்திகரும் உண்டு நாத்திகரும் இக்குழுவில் உண்டு என்று பேசிமுடித்தார்."(ஏனோ?)அதை தொடர்ந்து திரு. இறையன்பு அவர்கள் நிகழ்ச்சி உருவான விதம், உதவி செய்தவர்கள் ஆகியோர் பற்றி பேச வந்தார். அவர் பேச்சில் செயலில் வல்லவர் என்பதை மீண்டுமொருமுறை மேடையில் நிரூபித்துக் காட்டினார். சுமார் 4 வாரங்களில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், தமிழ்மையம் எல்லோரும் நினைப்பதுப்போல் அரசாங்கத்திடம் இதற்கென தனியாக நிதியேதும் பெறவில்லை எனவும், தங்கும் வசதிகள் போக்குவரத்துக்கு மட்டுமே அரசாங்கம் உதவிதாகவும் சொன்னார்.தொடர்ந்து பேசும்போது "பாரதி, 'வள்ளியை பார்த்த முருகன் மரமாக நின்றான்' என்று எழுதினான், நம் நாட்டுப்புறப் பாடலோ 'வள்ளி என்றால் கொடி அக்கொடி படர முருகன் மரமானான்' என்று அழகுப்படுத்துகிறது" என்று நம் நாட்டுப்புறக் கலையின் பெருமையை எடுத்துச் சொன்னார். "மக்கள் நல்லதைப் புறம்தள்ளுவதில்லை, நாம் தாராமல் போனால் அவர்கள் போலியைத் தேடிச் செல்கிறார்கள். சென்னை சங்கமம் நல்லது தந்தது; மக்கள் ஏற்றுக் கொண்டார்கள்" என்றார்.தொடர்ந்து அவர் அதிகாரிகள் சிலருக்கு நன்றிச் சொல்லிச் செல்ல அடுத்து வந்த அமைச்சர் திரு. பரிதி இளம்வழுதி அவர்கள் வாழ்த்துரையை இல்லை கவிதையை வாசித்து அமர்ந்தார்.

வரவேற்பும் வாழ்த்தும் முடியும்போது நேரம் 6.30 ஆகி இருந்தது. முரசு கொட்ட, மேளம் இணைய, தப்பட்டம் தட்ட, நாதஸ்வரம் வழிய, மேற்கத்திய வாத்தியம் இசைய

"திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கலர்த்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ்
வங்கண் உலகுஅளித்த லான்.

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு
மேரு வலம்திரி தலான்.

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி உலகிற்கு அவனளிபோல்
மேநின்று தாஞ்சுரத்த லான். "


என்ற பாடலுடன் ஆரம்பம் இசை நிகழ்ச்சி. இங்கேயே பல மக்கள் கால்கள் ஆட்டம் போட ஆரம்பித்துவிட்டன.தொடர்ந்து திருக்குறள் பாடல் இசைக்கவும் அடுத்து வந்தது பறையடி. எல்லா கலைஞர்களும் வரிசைக்கு பத்தாய் ஒரு வரிசையில் நிற்க ஆட்டம் ஆரம்பமானது, மெதுவாக ஆரம்பித்த ஆட்டம் முன்னுக்கும் பின்னுக்குமாய் கலைஞர்கள் கலைந்து சாமி வந்தவர்களாய் ஆடி உச்சத்தை அடையும்போது கூட்டம் 'ஹோ' வென ஒலியெழுப்ப மீண்டும் பழைய மெதுநடைக்கு திரும்பி மீண்டும் உச்சம் இப்படியே ஆடுபவர் மட்டுமல்ல கேட்டு நின்றவர்களின் கால்களும் ஆட அதிர பறையடி நிகழ்ச்சி தொடர்ந்தது 20 நிமிடங்களுக்கு மேல்.அதைத் தொடர்ந்து தப்பாட்டம். இதிலும் கூட்டம் அதிர அதிர ஆட்டம். பறைக்கு ஆட ஆரம்பித்த கூட்டத்தை இவர்களும் நிறுத்தவிடவில்லை. அதை தொடர்ந்த மயிலாட்டக்காரர்களும், ஆடி அதிர்ந்து இருந்த மனங்களை ஆசுவாசப்படுத்தி அமைதியாக்க வந்தது நாகூர் அப்துல் ஹமீது குழுவின் இறைப்பாடல்.தொடர்ந்து வந்த கோவை கமலாவின் முருக பாடலில் மீண்டும் ஆட்டத்தில் கூட்டம். அடுத்து வந்தது "தாண்டியா" ஆட்டத்தில் இசைக்கப்படுவதை போன்ற அல்லது அதே மேளம், பெயர் தெரியவில்லை. ஆரம்பத்திலிருந்தே வேகமான இசையால் கட்டிப்போட்ட இக்கலைஞர்கள் பற்களால் பெரிய மேளத்தை பற்றியபடி சுற்றி இசைக்க, கூட்டம் கிறுகிறுத்து நின்றது. துடிப்புடன் இருப்பதால் தான் துடுப்பாட்டம் எனப் பெயர்பெற்றதோ என்று எண்ண வைத்தது. குழந்தைகள் சில நேரங்களில் 'லலலலலலலலலல' என வேகமாய் சொல்லுமே அந்த வேகத்தில் பாட அந்த வேகத்தில் சலங்கை ஒலித்தது.கேரள மேளம் முழங்க ஆரம்பித்த போது, இதுவரை ஆர்ப்பரித்த கூட்டம் கப்சிப். ஆட வைக்க கூடிய வேகம்தான்; அதிர வைக்கின்ற இசைதான்; ஆனாலும் கூட்டத்தில் சலனமில்லை மொத்தக் கண்களும் கலைஞர்களின் மேலே மொய்த்திருந்தன. காரணம்? இல்லாமல் இல்லை; ஜால்ரா இசைக்கும் கலைஞர்கள் படகோட்டும் பாவனையில் அமர்ந்து இசைத்ததும், களறி சண்டைப் போன்ற பாவனையும், 'ஓஹோ' ஒலியும்தான்.

கடைசி நிகழ்ச்சியாய் ஒரு பாடல் மேற்கத்திய இசையில் ஆரம்பிக்க இடையில் தப்பாட்டம் குழு, மேளக்குழு, பறைக்குழு, மயிலாட்டம் குழு, எல்லாம் இணைந்துக் கொள்ள மெல்ல மெல்ல மேற்கத்திய இசை அடங்க சுனாமி ஆடிய கரையில் தமிழ் இசையின் ருத்தரதாண்டவம்.ஏற்கனவே மணி இரவு 9.40 ஆகி இருந்ததால் சீக்கிரமே நன்றியுரையை முடித்த கனிமொழி, "ஒரு இனத்தை மீட்டு எடுக்கவேண்டுமானால் அதன் தொடக்கம் அவ்வினத்தின் கலையினை மீட்டெடுப்பதில் ஆரம்பிக்கவேண்டும் அதையே செய்ய தமிழ் இயக்கம் விரும்பியது. இன்னும் இவ்விழா நான்கைந்து வருடங்கள் தொடரும் அதன் பின் இது தமிழ் இயக்கத்தின் விழாவாக இல்லாமல் மக்களின் விழாவாக மாறும்" என்றார்.நன்றியுரை முடிந்ததும் மேடையில் எல்லா இசை கலைஞர்களும் இணைந்து இசைக்க வான வேடிக்கை நிகழ்ந்தது. குழந்தைகளும் இளைஞர்களும் கலைஞர்களுடன் மேடையேறி குத்தாட்டம் போட்டார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு இசை ஒருகிணைத்தவர் வளரும் இசையமைப்பாளர் பால்.ஜேகப்

சந்தோசம் :

* நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போதே ஒராயிரம் பேர் இருந்திருப்பார்கள். நிகழ்ச்சியின் இடையில் ஐந்து முதல் ஆராயிரம் பேர் இருந்தார்கள். பணக்காரர்கள், நடுத்தர வர்க்கத்தினர் எல்லோரையும் இழுத்து வந்தது.

* எல்லா பாடலின் இடையிடையே திட்டமிட்டோ , எதேச்சையாகவோ நாதஸ்வரத்தில் 'செந்தமிழ் நாடெனும் போதினிலே' வழிந்த பாடல்.

* மேடைக்குக் கீழ் குழந்தைகளின் நடனம்.

* பெருந்திரளான பெண்கள் கூட்டத்தின் கைத்தட்டல்கள்.

* ஒருங்கிணைப்பாளர்கள், விருந்தினர்கள் மேடையை விட்டு மக்கள் கூட்டத்திற்கு பின்னால் அமர்ந்து ரசித்தது.

* ரசித்து ருசித்து அமைச்சர். தென்னரசுவின் கை , கால் போட்ட தாளம்.

* முக்கிய விருந்தினர் அனைவரும் கடைசிவரை இருந்தது.

* வெளிநாட்டவர்கள் போட்ட ஆட்டம்.
சங்கடம்:

* மேடையை உயரமாய் அமைத்துவிட்டு முன் வரிசையில் காவல்துறையை நிறுத்திவிட்டு மேடையில் நிகழ்வதைப் பார்க்க ஆடும் தட்டியினை ஒட்டி நின்ற மக்களை விரட்டி அமர்ந்து பார்க்கச் சொன்ன காவல்துறை.

* மேடைக்குப் பின் ஆடிய வெளிநாட்டவர்களை மிரட்டி ஆடாமல் நிறுத்திய காவலர்கள்

* அடுத்த / முடிந்த நிகழ்ச்சியின் பெயர் அறிவிக்காமை. பலபேர் பெயர் தெரியாமலேயே ரசித்திருந்தார்கள்.

* நிகழ்ச்சிக்கு பின் மேடையில் குத்தாட்டம் ஆட ஏறிய மக்களை, வேடிக்கை பார்த்த காலவர்கள், சிறிது நேரம் சென்று, அவர்களைத் தூக்கி மேடைக்கு கீழ் வீசியது.(அதில் ஒரு வெளிநாட்டவரும்)

CNN-IBN தொலைக்காட்சியில் வந்த சில வீடியோ காட்சிகள்:இது ப்ரியனின் வீடியோ:


அலுவலகத்தில் ப்ளாக்கர் அகதியாகிவிட்ட ப்ரியனுக்காக
- பொன்ஸ் :))

12 comments:

சிவபாலன் said...

பொன்ஸ்

சூப்பர்..

கலக்கிடீங்க..

We The People said...

சிவா,

கலக்கனது ப்ரியன், ஒரு பூனை, நாய்குட்டி போட்டோ இல்லைனதும் புரிஞ்சுக்கவேண்டாமா இது பொன்ஸ் வேலையில்லைன்னு!!! என்னமோ போங்க!

கவிதையா எழுதியிருக்காரு ப்ரியன்! சூப்பர்

சிவபாலன் said...

ஜெய் சங்கர்,

அடடா, கடைசி வரியை படிக்காமல் போயிட்டேன்...

சரி விடுங்க.. பொன்ஸ்.. சூப்பரை வாபஸ் வாங்கி கொள்கிறேன்..

ப்ரியன் உங்களுக்கு ஒரு "ஓ", வாழ்த்துகள்!!

திரு said...

நல்ல கொண்டாட்டம். :) நமக்கு தான் போக முடியலை :(

ஒருங்கிணைப்பாளர் ஜெகத் கஸ்பார்? நமக்கு தெரிஞ்ச நண்பர்.

மலைநாடான் said...

ஆக மொத்தம் இப்ப நீங்க தொழில்முறைச் செய்தியாளராயிட்டடீங்க:)

ப்ரியனுக்காக.. தமிழ்மணம்பூங்காவுக்காக.. அடுத்தது என்ன?
சீ. என். என்னுக்காகவா?:)

மலைநாடான் said...

ப்ரியன்!

அருமை. அடுத்த தேர்வு நீங்கதான்.:)

சிறில் அலெக்ஸ் said...

சூப்பர். ரெம்ப நன்றி. ஒரு மாசம் கழிச்சு நடந்திருக்கக் கூடாதா?

ஹ்ம்ம்ம்ம்.
:((

தேவ் | Dev said...

விளக்கமான விஷயம்.. சென்னப்பட்டின நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.. இது போன்ற நிகழ்ச்சிகள் நம் சென்னையில் நடக்கும் படச்த்தில் உங்கள் பக்கத்தில் சில முன்னறிவிப்புக்கள் வெளியிடலாம்.. நேரம்.. இடம் .. இது போன்றவைப் பிறப் பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் :)

We The People said...

Dev,

//இது போன்ற நிகழ்ச்சிகள் நம் சென்னையில் நடக்கும் படச்த்தில் உங்கள் பக்கத்தில் சில முன்னறிவிப்புக்கள் வெளியிடலாம்.. நேரம்.. இடம் .. இது போன்றவைப் பிறப் பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் :)//

நாங்க எழுதியிருந்தோம் தேவ்?!! நீங்க பார்க்கலையா?? எங்க முந்தய பதிவை பாருங்க தலைவா??!!!

தேவ் | Dev said...

ஆமாங்க நானும் மிஸ் பண்ணிட்டேன் பதிவை.. என்னை மாதிரி ஆளுங்களுக்கு ஒரு அறிவிப்பு பலகைத் தான் ரைட் ;-)

Pot"tea" kadai said...

good work priyan and pons...

thanks guys!

for the first time, i felt i am missing chennai

ஆழியூரான். said...

ம்....இந்த நேரம் பார்த்து சென்னையை விட்டு வந்துவிட்டேன். அடுத்த வருஷம் பாருங்க...உங்களுக்கு முன்னாடி நான் அங்க இருப்பேன்.

ஆமா...உங்க யானையை அழைச்சுட்டு போகலையா..?