Wednesday, December 06, 2006

27Dபொழுது போகாமல் விட்டத்தைப் பார்த்து யோசித்துக்கொண்டிருந்த போது தோன்றிய திட்டம் இது. உடனடியாக செயல் படுத்திப்பார்க்க, முதல் நாள் இரவே பட்டினப்பாக்கத்தில் ஒரு நண்பரின் வீட்டில் போய் 'டேரா' போட்டாகி விட்டது.
முதல் பேருந்து அதிகாலை 5.15க்கு என்று முன்னமே விசாரித்து வைத்து விட்டதால் இரவு கைப்பேசியில் அலாரம் வைத்து படுத்து விட்டேன். எப்போதும் படுத்தவுடனே சுழல் மறந்து கனவுகளில் கிழவிகளுடன் (வயசாகிடுச்சுல்ல!) கொஞ்சப் போய் விடுவது வழக்கம். ஆனால்.. அன்றைய இரவு ஏனோ உறக்கம் பிடிக்கவே இல்லை. புதிய இடம் என்பதால் இருக்கலாம். இப்படியும், அப்படியுமாக புரண்டு படுத்ததிலேயே அதிகாலை நான்கு மணியாகி விட்டது. எழுந்து காலைக்கடனை முடித்து, குளிர்ந்த நீரில் குளியல் (நம்புங்க! நெசமாத்தாங்க!!) போட்டு, பட்டினப்பாக்கம் பேருந்து நிலையம் வந்து விட்டேன்.

திட்டம் இது தான்.

நான் தினமும் வேலைக்கு போகும் (வித்லோகா-மைலாப்பூரில் இருக்கிறது) பேருந்து 27D. பட்டிணப்பாக்கம் T0 வில்லிவாக்கம். வட சென்னையையும் தென்சென்னையையும் இணைக்கும் பேருந்துகளில் இதுவும் ஒன்று. இதில் முதல் இரு ரவுண்ட் பயணத்தில் பயணிக்க வேண்டும். அதை பதிவு செய்ய வேண்டும். அவ்வளவே!


முதல் பயணத்திற்கு தயாராக பல பேருந்துகள் நின்றுகொண்டிருந்தன. நமக்கான பேருந்தைக் காணவில்லை. நிலையத்துக்குள் இருந்த தேனீர் கடையில் சக்கரை குறைவாய் தேனீருக்கு சொல்லி விட்டு, சிகரெட்டைப் பற்ற வைத்தேன். பாக்கெட்டில் இருந்த செல்போன் சிரித்தது. எடுத்துப் பார்த்தேன். "வந்துகொண்டே இருக்கிறேன். கடையில் டீ குடித்துக்கொண்டிரு!" என்று குறுஞ்செய்தி வந்திருந்தது.
அனுப்பியவர் நாம் பயணிக்கப் போகும் பேருந்தின் ஓட்டுனர் பழநி.

தேநீர் குடித்து, சிகரெட்டும் முடியும் போது வந்து சேர்ந்தார் பேருந்துடன். வண்டியை நிறுத்தி விட்டு பழநியும், நடத்துனர் சபாபதியும் தேநீர் குடிக்க வந்தனர். குடித்து விட்டு, பேசியபடியே வண்டியில் ஏறினோம். தலையில் முக்காடு போட்டு ஒரே ஒரு பெண்மணி மட்டும் அமர்ந்திருந்தார்.

அவருக்கு டிக்கெட் கொடுத்து விட்டு முன்னால் நான் இருந்த இருக்கைக்கு அருகில் வந்து விட்டார் சபாபதி.

இவர்கள் இருவரும் ஒரே வருடத்தில், ஒரு நாள் வித்தியாசத்தில் பணிக்கு சேர்ந்தவர்களாம். இவ்விருவரும் தொடக்கத்தில் வழித்தடம் எண் ஒன்றில் பணியாற்றிக்கொண்டிருந்தவர்கள். அதிலிருந்து இந்த வழித்தடத்திற்கு மாற்றப்பட்டவர்களாம். பணிக்குச் சேர்ந்த இந்த பதின்மூன்று வருடங்களாக ஒரே தடத்தில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். பணி அனுபவம் போல, இவர்களது நட்பும் பதினோரு வருடங்களாக தொடர்ந்து வருகிறது.

சரி! பயணக்குறிப்பிற்கு திரும்பலாம்.
பட்டினப்பாக்கத்திலிருந்து கிளம்பிய பேருந்து ஆர்ச் நிறுத்தம் வந்தவுடன் மேலும் நான்கு பெண்களும் இரண்டு ஆண்களும் ஏறிக்கொண்டார்கள். இங்கு ஏறிய பெண்களும் குளிர்க் காற்றுக்கு பயந்து முக்காடு போட்டிருந்தார்கள். கல்யாணி மருத்துவமனை நிறுத்தத்தில் ஒருவர் ஏறிக்கொண்டார். அங்கு இரண்டு பெண்கள் இறங்கிக்கொண்டார்கள்.

கடைசியாக ஏறியவர் தவிர மற்றவர்கள் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியை அடைவதற்குள் அடுத்தடுத்த நிறுத்தங்களில் இறங்கிக்கொண்டார்கள்.(அவர்கள் அனைவரும் மாநகராட்சியின் துப்புரவு பணியாளர்களாம்) பேருந்து டி.வி.எஸ் வரை காலியாக வந்தது. சாந்தி நிறுத்தத்தில் ஏழெட்டு பேர் ஏறிக்கொள்ள பயணம் தொடர்ந்தது. எக்மோரில் பத்துக்கும் அதிகமானோர் ஏறிய பின் தான் பேருந்து களைகட்டியது. அபிராமி தியேட்டர் வழியாக இ.எஸ்.ஐ வந்து அயனாவரம் சிக்னலில் இடது பக்கம் திரும்பி வில்லிவாக்கம் நோக்கி பேருந்து வேகமெடுத்தது.

வில்லிவாக்கத்தை சரியாக 6.25க்கு போய் அடைந்தோம். அது வரை முதல் பயணத்தில் பயணம் செய்திருந்த மொத்த பயணிகளின் எண்ணிக்கை வெறும் நாற்பது மட்டுமே! அடுத்த ரவுண்ட் 6.55க்கு துவங்கியது. இப்போது பெருவாரியாக எல்லா இருக்கைகளிலும் ஒரு பயணியாவது அமர்ந்து விட்டார்கள்.

கீழ்பாக்கம் மருத்துவமனை வருவதற்குள்ளாக எல்லா இருக்கைகளும் நிறைந்து, எட்டுப்பேர் நின்றுகொண்டிருந்தார்கள். சென்னையில் வழக்கமான முறையை தவிர்த்து, எல்லா பயணிகளிடமும் தானே சென்று பயணச்சீட்டு கொடுத்து வந்தார் நடத்துனர் சபாபதி.

எக்மோர் ரயில் நிலையத்தில் கொஞ்சம் பேர் இறங்கினார்கள். அதை விட, அங்கு ஏறிய பயணிகளின் எண்ணிக்கை அதிகம். அந்த கூட்டத்திலும் நீச்சலடித்தபடியே முன்னுக்கு வந்து சீட்டு கொடுத்து விட்டுப்போனார் நடத்துனர். (பொதுவாக சென்னை பேருந்துகளில் நடத்துனர்கள் பின் வாசல் அருகில் இருக்கும், தங்களது இருக்கையில் ஃபெவிகால் போட்டு அமர்ந்து இருப்பது தான் வழக்கம்.)

டி.வி.எஸ் நிறுத்தத்தில் கொஞ்சம் பேர் இறங்கினார்கள். முதல் பயணத்தை விட, இரண்டாவது பயணம் கொஞ்சம் உற்சாகம் தரக்கூடியதாக இருந்தது. காரணம், ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவிகள் அதிக அளவில் இருந்தது தான் என்று தனியா சொல்ல வேண்டுமா என்ன? அந்த கூட்டத்திலும் ஓட்டுனரும், நடத்துனரும் சொல்லும் தகவல்களையெல்லாம் குறிப்பெடுத்த படியே வந்து கொண்டிருந்தேன்.

அமெரிக்கன் எம்பஸி (ஆக்ஸ்போர்ட் பிரஸ் நிறுத்தம்) வந்ததும் மாணவிகள் இறங்குவதற்கு ஆயத்தமானார்கள். அப்போது நீலவண்ண சுடிதார் போட்ட ஒரு மாணவி என்னை நோக்கி வந்தார்.

"அங்கிள்! நீங்க ப்ரஸ்ல வேலை பாக்குறீங்களா?" என்று அப்பெண் கேட்டதுமே என் உற்சாகம் காலின் பெருவிரல் வழி கரைந்து வெளியேறி விட்டது.

"இல்லை" யென்பது போல சுரத்தில்லாமல் தலையாட்டினேன்.

"குறிப்பெல்லாம் எடுக்குறீங்களேன்னு கேட்டேன். எனக்கும் ஜர்னலிட் ஆகனும்கிறது தான் கனவு" என்று எனக்கு மேலும் வெறுப்பேத்தினார் அந்த நீல சுடிதார்.

"ஜர்னலிட் படிச்சுட்டு, விஷ்வல் மீடியாவுக்கு போங்க.., அங்க தான் சம்பளமும் நிறைய கொடுப்பாங்க" என்றேன் வெறுப்பை முகத்தில் காட்டாமல் சிரித்தபடி.

"ஓ..! டாங்க்ஸ் அங்கிள்" என்று மறுபடியும் ஒரு அங்கிள் சொல்லிவிட்டு இறங்கினார் நீல சுடிதார்.

நரைத்து போன தலையையும், வயதாகிப்போன உடம்பையும் மனதில் திட்டிக்கொண்டே பயணத்தை தொடர்ந்தேன். கல்யாணி மருத்துவமனையில் கொஞ்சம் பேரும், கலங்கரை விளக்கம் மற்றும் சாந்தோம் சர்ச்சில் மீதி கொஞ்ச பேரும் இறங்கினார்கள்.

பேருந்து பட்டினப்பாக்கத்தை அடையும் போது நேரம் 8.20, கடைசி நிறுத்தத்தில் பேருந்தில் என்னையும் சேர்த்து ஆறு பேர் தான் இருந்தோம். இரண்டாவது பயணத்தில் மொத்தம் பயணம் செய்திருந்தவர்களின் எண்ணிக்கை இருநூற்றி மூன்று பேர்.பட்டினப்பாக்கத்திற்கும் வில்லிவாக்கத்திற்கு இடைப்பட்ட தூரம் வெறும் இருபது கிலோமீட்டர் தான். ஆனால் பேருந்து பயண நேரம், ஒருமணி நேரம் இருபது நிமிடங்கள் ஆகிறது. காரணம் இந்த வழித்தடத்தில் மொத்தம் முப்பத்தியொன்பது நிறுத்தங்களும், பதினெழு சிக்னல்களும் இருக்கின்றன. அனேகமாக சென்னையில் ஓடும் வழித்தடங்களிலேயே இது தான் அதிக சிக்னல்களை கடக்கும் பேருந்தாக இருக்கும்.

சாந்தோம் சர்ச், கலங்கரை விளக்கம், ஆல் இந்தியா ரேடியோ, கல்யாணி மருத்துவமனை மற்றும் ஸ்டெல்லா மேரிஸ், அண்ணாசாலை, எக்மோர், கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை, ஐ.சி.எப் போன்ற முக்கியமான இடங்களை இந்த பேருந்து இணைக்கிறது. அயனாவரத்திலிருந்து எட்டு, மந்தைவெளி பணிமனை மூலம் எட்டு என்ற கணக்கில் மொத்தம் பதினாறு பேருந்துகள் தினம் இயக்கப்படுகின்றன.

நோயாளிகள், வெளியூர்ப் பயணிகள், வியாபாரிகள், கனவுகளைச் சுமந்து வரும் கல்லூரி மாணவிகள் என்று சகலதரப்பினரையும் சுமந்து போகும் இந்த 27D, மாநகரப்போக்குவரத்து துறையில் லாபகரமாக இயங்கும் வழித்தடங்களில் ஒன்று.
30 comments:

இலவசக்கொத்தனார் said...

சரிதான். நீங்க டிக்கெட் எடுத்தீங்களா?

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

ஏனுங்க கொத்தனாரே.., ஒங்களை பதில்களின் நாயன்னு நம்பிக்கிட்டு இருந்தேன். நீங்களே கேள்வ்வி கேக்குறீங்களே...?

(அய்யா, அடியேனிடம் ஆல் ரூட் பாஸ் இருக்கு)

Anonymous said...

\\பட்டினப்பாக்கத்திற்கும் வில்லிவாக்கத்திற்கு இடைப்பட்ட தூரம் வெறும் இருபது கிலோமீட்டர் தான். ஆனால் பேருந்து பயண நேரம், ஒருமணி நேரம் இருபது நிமிடங்கள் ஆகிறது. காரணம் இந்த வழித்தடத்தில் மொத்தம் முப்பத்தியொன்பது நிறுத்தங்களும், பதினெழு சிக்னல்களும் இருக்கின்றன. அனேகமாக சென்னையில் ஓடும் வழித்தடங்களிலேயே இது தான் அதிக சிக்னல்களை கடக்கும் பேருந்தாக இருக்கும்.
மாநகரப்போக்குவரத்து துறையில் லாபகரமாக இயங்கும் வழித்தடங்களில் ஒன்று.\\


இதை விஜயகாந்த் கோர்ட் சீன்ல பேசுறாமாதிரி ஒரு சில திருத்தங்களுடன் கற்பனைசெய்து பார்த்தேன் நல்லா சிரிப்பு வந்தது.

(பட்டினப்பாக்கத்திலிருந்து வில்லிவாக்கத்திற்கு இடையில உள்ள தூரம் வெறும் இருபது கிலோமீட்டர். ஆனால் பேருந்து பயண நேரம், ஒருமணி நேரம் இருபது நிமிடங்கள். காரணம் இந்த வழித்தடதில மொத்தம் முப்பத்தியொன்பது ஸ்டாப்பும், பதினெழு சிக்னல்களும் இருக்கு சென்னையில் ஓடுர வழித்தடங்களிலேயே இது தான் அதிக சிக்னல்களை கடக்கும் பேருந்தாக இருக்கும். ஆனா இந்த பஸ்னால வருர வருமானம் கவர்ண்மெண்டுக்கு ஒரு நாளைக்கு இவ்வளவு, ஒரு வாரத்துக்கு இவ்வளவு, ஒரு மாசத்துக்கு இவ்வளவு, ஒரு வருஷத்துக்கு இவ்வளவு....)

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

ஸயீத்... ,

புதியவராக இருக்கீங்களே.. வாங்கப்பூ.. வாங்க..!
விசயக்காந்தை கிண்டல் பண்ணினா, இட்லி வடையார் கோமம் கொண்டு, என் பேர்லயோ, ஒங்க பேர்லயோ கருத்து கணிப்பு நடத்திடப் போறார். பார்த்து..!!

✪சிந்தாநதி said...

//எப்போதும் படுத்தவுடனே சுழல் மறந்து கனவுகளில் கிழவிகளுடன்//

இதை எழுதியது பாலபாரதிதானா என்று சந்தேகமாக இருக்கிறது?

//ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவிகள் அதிக அளவில் இருந்தது தான் என்று தனியா சொல்ல வேண்டுமா என்ன//

இது ok

//அங்கிள்!//

குழந்தையைப் பார்த்து கேட்கிற கேள்வியா இது?

//நரைத்து போன தலையையும், வயதாகிப்போன உடம்பையும்//

?????

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

ஏதோ தப்பு நடந்துடுச்சு... அதுக்காக இப்படியா.. பத்தி பிரிச்சு காட்டுறது.

நற..நற..நற...

✪சிந்தாநதி said...

'வயதாகிப்போன உடம்பில்' பல் இருக்கா என்ன?

Anonymous said...

\\விசயக்காந்தை கிண்டல் பண்ணினா, இட்லி வடையார் கோமம் கொண்டு, என் பேர்லயோ, ஒங்க பேர்லயோ கருத்து கணிப்பு நடத்திடப் போறார். பார்த்து..!!\\

ஐயய்யோ இது வெறும் காமெடி சீன் தான் இட்லி வடைக்கிட்ட சொல்லிருங்க.

பாவம் கருத்துக்கணிப்பெல்லாம் நடத்துனா நா(ன்)ம தாங்காமாட்டோம்.

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

ஆஹா... சிந்தாநதி, ஒரு முடிவோடு தான் இருக்கீங்களா...?

ஆமா எனக்கும் பரிசுன்னு சொன்னீங்களே.. அது என்னங்க.. இப்படி ரவுண்டி கட்டி அடிக்கிறது தானா?

:-((((

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

சிந்தாநதி,

கால்டாக்ஸியைத் தான் அனுப்ப வேண்டியதிருக்கும். ஜாக்கிரதை!
:-)))

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

இட்லி வடையாரே கவனிக்க.. தோழர் பயப்படுகிறார், பாவம் விட்டுடலாம்.
:-)))

✪சிந்தாநதி said...

பரிசு பட்டையில் இருக்கு.
பட்டைய கிளப்பறது நீங்க!

கால்டாக்சி அனுப்பற அளவுக்கு சில்லற வச்சிருக்கீங்களா? சுமாரா 700 கிமீ தூரம் வரும்

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

நன்றி சிந்தாநதி!

ஆனாலும் போங்கப்பா.., இன்னும் எனக்கு பாட்டு கேட்க முடியலை. :-(((

எஸ்.எஸ்.டி போட்டு, ஒங்க ஊர் ஆட்டோவையாவது, எங்க ஊர் மாட்டு வண்டியையாவது அனுப்பி வைப்போன்ல... :-)))

✪சிந்தாநதி said...

ஆமா அன்னைக்கு அரட்டைக்கு வந்துட்டு திடீர்னு காணாம போயிட்டீங்களே! (ரேடியோ பாடம் அப்புறமா மின்னஞ்சல்ல அனுப்பறேன்.)

✪சிந்தாநதி said...

//எஸ்.எஸ்.டி போட்டு, ஒங்க ஊர் ஆட்டோவையாவது, எங்க ஊர் மாட்டு வண்டியையாவது அனுப்பி வைப்போன்ல... ?//
அப்ப தயாராதான் இருக்கீங்க! சாக்கிரதயா தான் இருக்கணும்.

ஆமா பா க ச எல்லாம் எங்க போயிட்டாங்க! யாரையும் காணோமே?

செந்தழல் ரவி said...

மெட்ராஸ் போய்வந்தமாதிரி இருக்கு...

சேதுக்கரசி said...

//ஆமா பா க ச எல்லாம் எங்க போயிட்டாங்க! யாரையும் காணோமே?//

பா.க.ச தான் பஸ்லயே இருந்தாங்களே.. நீல சுடிதார் போட்டுக்கிட்டு, அங்கிள் அங்கிள்-னுக்கிட்டு..

சேதுக்கரசி said...

//எப்போதும் படுத்தவுடனே சுழல் மறந்து கனவுகளில் கிழவிகளுடன் (வயசாகிடுச்சுல்ல!) கொஞ்சப் போய் விடுவது வழக்கம்.//

என்னது தமிழ்மணத்தில் ஒரே பஸ் ஃபீவரா இருக்கு.. ஆனாலும் இதை ரசிச்சேன் :-D

Anonymous said...

chennai busaa hayyo andha college pona naatkal daan ninaivukku varudhu doi.
good post

✪சிந்தாநதி said...

//பா.க.ச தான் பஸ்லயே இருந்தாங்களே.. நீல சுடிதார் போட்டுக்கிட்டு, அங்கிள் அங்கிள்-னுக்கிட்டு..//

அது சரி!

Boston Bala said...

மொத்தம் பன்னிரெண்டு ஸ்டேஜ் என்கிறார்கள்: Metropolitan Transport Corporation [Chennai] Limited - MTC

எனக்குப் பிடித்தமான தடம்: 45B

Anonymous said...

என்ன இருந்தாலும் சென்னை பேருந்துல் பயணம் செய்யுறதே ஒரு தனி சுகம் தான்.. நல்ல கட்டுரை தல!
தலீவா, தில் இருந்தா 70'ல பீக் டைம்ல ஒரு தபா (காலை மற்றும் மாலை) போய் வந்து ஒரு பதிவு போடுங்க.

வெற்றி said...

பாலபாரதி,
படிப்பதற்கு நல்ல சுவாரசியமாக இருந்தது. வாழ்த்துக்கள்.


பி.கு:- உங்கள் பதில் மின்கடிதம் கிடைத்தது. உங்களின் உதவிக்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேனோ தெரியாது. நன்றி. பின்னர் விபரமாக எழுதுகிறேன்.

கோபிநாத் said...

கலக்கிட்டிங்க..
குளிர்காலத்துல, அதுவும் காலையில, அதுவும் "27D"யில அருமையான திட்டம்

\\"ஓ..! டாங்க்ஸ் அங்கிள்" என்று மறுபடியும் ஒரு அங்கிள் சொல்லிவிட்டு இறங்கினார் நீல சுடிதார்.\\

கவலபடதா...சகோதர...அந்த கருமாரி.. :))

கோபிநாத் said...
This comment has been removed by a blog administrator.
ஓகை said...

சயீத், புள்ளிவிவர விவரிப்பை விஜகாந்த் பானியில் படிக்கச் சொன்னது அருமையான கற்பனை.

27D ஒரு தனிப்பட்ட வழித்தடம். 45Bயைப் போலவே. எட்வர்ட் எலியட்ஸ் சாலை மற்றும் கதீட்ரல் சாலை வழியாக இதும் 29Cயும் மட்டுமே செல்லும் என நினைக்கிறேன். ஒரு பாதியில் 45B செல்லும். முன்பு ஒருமுறை நினைத்துப் பார்த்ததுண்டு. வில்லிவாக்கத்தையும் பட்டிணப்பக்கத்தையும் இணைத்து ஒரு வழித்தடத்தை எப்படி யூகித்தார்கள் என்று.

'பேருந்தும் பாவையரும் பார்வைகளும் பாலபாரதியும்' என்றுகூட தலைப்பிட்டிருக்கலாம்.

பட்டிக்காட்டான் said...

//"அங்கிள்! நீங்க ப்ரஸ்ல வேலை பாக்குறீங்களா?" என்று அப்பெண் கேட்டதுமே என் உற்சாகம் காலின் பெருவிரல் வழி கரைந்து வெளியேறி விட்டது//

சொ.செ.சூ...?

ஆழியூரான்.

Anonymous said...

Good blog.
>>காரணம் இந்த வழித்தடத்தில் மொத்தம் முப்பத்தியொன்பது நிறுத்தங்களும், பதினெழு சிக்னல்களும் இருக்கின்றன. அனேகமாக சென்னையில் ஓடும் வழித்தடங்களிலேயே இது தான் அதிக சிக்னல்களை கடக்கும் பேருந்தாக இருக்கும்.

May be 21G crosses more signals than this. Between kotturpuram bridge and Guindy railway station alone, 21G crosses 5 signals. This is a small distance that 21G travels between Parrys and Tambaram. I am sure 21G crossed more signals than 27D.

Anonymous said...

எனக்கு 27D பயணம் செய்த உணர்வு ஏற்பட்டது.
சரி எப்போ ... 27D படம் Direct பண்ண போரீர் ..........

சோமி said...

நல்ல பதிவு.நல்ல முயற்சி இன்னும் விபரங்கள் தந்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.
இப்பதான் நிறைய புதுப் பேருந்துகள் வந்திருகில்ல அதப் பத்தியும் எழுதுறது. உந்துருளியில(அதாங்க மோட்டர்பைக்) போக ஆரம்பிச்ச பிறகு பேருந்துப் பயணம் அரிதானது. எனக்கு நெருக்கமான வழித்தடம் 27H,47D,29C ஆகியன
குறிப்பு: சென்னையின் பிரபல பெண்கள் கல்லூரிகள் இந்த வழித்தடங்களில் இருபதற்கும் எனக்கு இந்த வழித்தடங்கள் நெருக்கமாவதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.