சென்னையும் குற்றங்களும்

பொதுவாகத் தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் நடக்கும் குற்றங்களை விசாரித்து குற்றவாளிகளைக் கண்டு பிடிப்பதில் நமது காவல் துறையின் பணி பாராட்டுக்குரியது.

வெளி மாநிலத்திலிருந்து வந்து சட்டசபை உறுப்பினரைக் கொலை செய்த குற்றத்தைக் கண்டுபிடித்தாகட்டும், குழந்தை ஒன்றை கடத்தி பணம் பறிக்க முயன்று உயிரைப் பறித்து விட்ட மாணவர்களின் செயலாகட்டும், தமது கடன் தொல்லையை மறைக்க களவு நடந்ததாக நாடகமாடிய தம்பதியினரின் குட்டை உடைத்ததிலாகட்டும், காவல் துறை வேகமாகச் செயல்பட்டு செயலின் அடிவேரைக் கண்டு பிடித்து விட்டது.

அதன் பிறகு நீதிமன்றங்களில் வழக்கு நடத்தி தண்டனை வாங்கிக் கொடுப்பதில் நீண்ட தாமதம் ஏற்படுவது ஒருபுறம் இருந்தாலும், 'தவறு செய்தால் அதை மறைத்து வாழ்ந்து விட முடியாது' என்று நம்பிக்கை குற்றவியல் துறையிலாவது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. சரவணபவன் அதிபராக இருந்தாலும் சரி, காஞ்சி மடத் தலைவராக இருந்தாலும் சரி 'குற்றம் குற்றமே!' என்று செயல்பட முடிவது சமூக அமைப்புக்கு அவசியமானது.

'எவ்வளவுதான் திட்டமிட்டு புத்திசாலித்தனமாகச் செயல்பட்டாலும் குற்றங்களை தடயம் இல்லாமல் மறைக்க முடியாது' என்பது ஷெர்லக் ஹோம்ஸ் தத்துவம். ஒரு நிகழ்வு நடக்கும் போது, பல நூறு கண்கள் சாட்சிகளாக இருக்கும் வாய்ப்புகள் உண்டு. குற்றத்திற்கு முந்தைய பல நாட்களின், குற்றம் நடந்த பிறகு பல் நாட்களின் ஒவ்வொரு அசைவும் தனது தடங்களை விட்டுப் போயிருக்கும்.

துப்பறியும் அலுவலர்கள் அரசியல் குறுக்கீடு இல்லாமல் சொந்த விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்து விட்டு, ஐம்புலன்களையும் விழிப்பாக வைத்துக் கொண்டு குற்றத்தில் தடயங்களைப் பின்தொடர்ந்தால் குற்றவாளியைப் பிடித்து விடலாம். அப்படி பிடித்து விடும் திறனைக் கொண்டுள்ள சென்னை காவல்துறைக்கு பாராட்டுக்கள்.

Comments

Popular posts from this blog

மெட்ராஸ் பாஷை - ஒரு இலக்கண பார்வை

27D

ஏதோ வண்டி ஓடிக்கினுகீது சார்! - ஜெயகாந்தன்