ஒரு வழிப்பாதை

கிண்டி ரயில் நிலையம் அருகில் பாலம் ஏறி இறங்கி, போராடி சர்தார் படேல் சாலையில் திரும்ப வலது புறம் ஒதுங்கினால் செல்லம்மாள் கல்லூரி அருகில் வலது புறம் திரும்ப முடியாது என்று பலகை.

சில நாட்கள் முன்பு நாளிதழில் படித்திருந்த ஒரு வழிப்பாதை ஏற்பாடு மங்கலாக நினைவு வந்தது. கிண்டியிலிருந்து அடையாறு செல்ல வேண்டுமானால் செல்லம்மாள் கல்லூரியின் எதிரில் காத்திருந்து திரும்பாமல், ஒரு வழிப்பாதையாகி விட்ட அடுத்த பகுதியில் சின்னமலை வரை போக வேண்டும். சின்ன மலையிலிருந்து வலது புறம் திரும்பி ராஜ்பவன் நோக்கிப் போகும் போது சைதாப்பேட்டையிலிருந்து கிண்டி போக வேண்டிய வண்டிகளும் சேர்ந்து கொள்கின்றன.

ராஜ்பவன் எதிரில் இடது புறம் திரும்பி அடையாறு. வலது புறம் திரும்பி சர்தார் படேல் சாலையிலிருந்து வரும் வாகனங்களுடன் சேர்ந்து கொண்டு வேளச்சேரி சாலைக்குப் போக வேண்டும் வேளச்சேரி நோக்கிப் போக வேண்டியவர்கள்.

சில கிலோமீட்டர்கள் கூடுதலாக சுற்ற வேண்டியிருந்தாலும், எங்கும் தேங்காமல், காத்திருக்காமல் நான்கு சாலை நிறுத்தங்களை முற்றிலும் ஒழித்து விட்ட இந்த ஏற்பாடு ஏதோ கனவுலகம் போலத் தோன்றியது.

வேளச்சேரியிலிருந்து வந்து அடையாறு போக வேண்டியவர்களுக்கும், கிண்டியிலிருந்து வந்து வேளச்சேரி சாலையில் நுழைய வேண்டியவர்களுக்கும்தான் அதிக தூரப் பயணம். இத்தனை வாகனங்களும் கூடுதலாக செலவழிக்க வேண்டியிருக்கும் எரிபொருள், ஒவ்வொரு நிறுத்தத்திலும் நிற்கும் போது செலவாகும் எரிபொருள், அதனால் ஏற்படும் மன அழுத்தம், நேர விரயம் இவற்றுடன் ஒப்பிடும் போது பெரிய அளவிருக்காது.

மாலை ஐந்தரை மணிக்கு இவ்வளவு எளிதான பயணம், இரவு ஒன்பது மணிக்கு வரும் போதும் எந்தக் குளறுபடியும் இல்லை. காலை வேளைகளில் கூட சுமுகமாக போகிறது என்று நண்பர் அப்புறம் சொன்னார்.

நுங்கம்பாக்கத்தில், எழும்பூரிலிருந்து வரும் போது சாஸ்திரி பவனுக்கு முன்பிருக்கும் சாலை, அதில் வந்து வலது புறமாக திரும்பும் போது உத்தமர் காந்தி சாலையின் ஒரு பகுதி, அதிலிருந்து வலது புறம் திரும்பி ஸ்டெர்லிங் சாலையின் ஒரு பகுதியில் இருக்கும் ஒரு வழிப்பாதையும் இப்படித்தான் இருக்கும்.

இத்தகைய தீர்வுகளை உருவாக்கி, திட்டமிட்டு, நடைமுறைப்படுத்தும் சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறைக்கு ஒரு ஜே.

Comments

சிவகுமார்ஜி, நாங்கள் இருப்பது வேளச்சேரி, தினமும் ராஜ்பவன் வழியாக, வேலைக்கு வரும் நான், இந்த ஒருவழி திட்டத்தை பேப்பரில் பார்த்ததிலிருந்து ஒரே டென்ஷன். என்ன இப்படி ஒரு கி.மீ சுத்தவேண்டி இருக்கிறதே.. என்று புலம்பி கொண்டு இருந்தேன்.

அதுவும் வாகனங்கள் X (கிராஸ்) செய்ய வேண்டிய நிர்பந்தம்.

1. அதாவது வேளச்சேரியிலிருந்து சைதாப்பேட்டை, அடையாறு செல்லும் வாகனங்கள் - வலதுபுறமாக திரும்பும், கிண்டி போகும் வாகனங்கள் இடது புறமாக திரும்பும், இரண்டு வாகனங்களும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ள சந்தர்ப்பம் நிறைய உண்டு.

2. அதே பிரச்சனை வேளச்சேரி, கிண்டி செல்லும் வாகனங்களும், அடையாறு செல்லும் வாகனங்கலும் ஒரு இடத்தில் X இப்படி கடக்க வேண்டியுள்ளது.

இந்த இரண்டு இடங்களும் நான் சிரமமாக நினைக்கிறேன்..மேலும் பாதச்சாரிகள் கடக்கவும், சைக்கிலில் செல்பவர்கள் கடக்கவும் மிகுந்த சங்கடமாக உள்ளது.

ஆனால் எதிர்பார்த்த பயமும், எரிச்சலும் இப்போது கண்டிப்பாக இல்லை, 2, 3 சிக்னலில் நிற்காமல், வண்டி தான் பாட்டுக்கும் எங்கும் நிற்காமல் செல்வதால் எனக்கு 5-10 நிமிடங்கள் மிச்சமாகிறது, மேலும் நீங்கள் சொல்வது போல டிராபிக் சிக்னல் டென்ஷன் இல்லை.

நல்ல திட்டம், பாதசாரிகள் எப்படி நினைக்கிறார்கல் என்று தெரியவில்லை.
Anonymous said…
வண்டியில செல்பவர்கள் விரைவாகச்செல்ல வேண்டும் என்று யோசித்து நடவடிக்கை எடுத்த சென்னைக் காவல் துறைக்கும், அதன் ஆணையாளர், நாஞ்சில் குமரனக்கும் பாராட்டுக்கள். அதே சமயம், பாதசாரிகள், மாணவர்கள் மற்றும் வாயில்லா கால்நடைகள் ஆகியவை கிண்டி ஹால்டா சந்திப்பு போன்ற இடங்களில் சாலைக்கடக்கும் போது படும் இன்னல்கள் சொல்லி மாளாது. சில பல சமயங்களில்,வண்டிகள் இடித்து தள்ளிவிட்டு கண்மூடித்தனமாக சென்றுவிடுவதும் தினப்படி வாடிக்கையாகிவிட்டது. காவல் துறை இதையும் கவனித்தால் நன்றாக இருக்கும்.

தீபக் வாசுதேவன்

Popular posts from this blog

மெட்ராஸ் பாஷை - ஒரு இலக்கண பார்வை

ஏதோ வண்டி ஓடிக்கினுகீது சார்! - ஜெயகாந்தன்

எழுத்தறிய நூலகங்கள்