பதிவர் சந்திப்பு - சில பதிவுகள்

கண்ணதாசன் பதிப்பகம் என்ற பலகை வைத்திருந்த தெருவினுள் நுழைந்து வண்டியை பூங்காவின் பின் வாசலில் நிறுத்தி விட்டு நுழைந்தேன். வெயில் இன்னும் தாழ்ந்திருக்கவில்லை. சிமென்டு பாவியிருந்த நடைபாதை வழியே சுற்றிக் கொண்டு வந்தால், தூரத்தில் பளபளக்கும் மொட்டைத் தலை தென்பட பாலபாரதியின் இருப்புப் பளிச்சிட்டது. பாலா, சிறில் அலெக்ஸ், உண்மைத் தமிழன் உட்கார்ந்திருந்தார்கள். வழக்கமான இடத்துக்குச் சற்று தள்ளி நிழலில் இருந்தார்கள்.

சிறில், இப்போது பழகிப் போனபடி, உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தார். (அருகிலிருந்த நிழல் மேடையில் இன்னொரு குழுவின் சந்திப்பு நடந்து கொண்டிருந்தது.) வெயில் குறையும் வரை இங்குதான் உட்கார வேண்டும். பாலா சரியாக மூன்றரை மணிக்கு சந்திப்பை ஆரம்பித்து விட்டார். தனியாகப் பேசிக் கொண்டிருந்த போஸ்டன் பாலா, விக்கி, ஐகாரஸ் பிரகாஷும் சேர்ந்து கொள்ள அதற்குள் ராமகி ஐயா, தருமி ஐயா, பாலராஜன் கீதா, வந்து சேர்ந்து விட வட்டம் பெரிதாகியிருந்தது. அப்போதே பத்து பேருக்கு கிட்ட சேர்ந்து விட்டோம் என்று நினைவு.

முதலில் சாகரனுக்கு அஞ்சலி செலுத்தும் சிறுமலர் வெளியீடு, நான் கொடுக்க பாலராஜன் கீதா பெற்றுக் கொண்டார். ஒரு நிமிட மௌன அஞ்சலி. பெட்டகம் குறித்து சிறில் பேசுவார் என்று அவரை முதலில் ஆரம்பிக்கச் சொன்னார் பாலா, திரையரங்கில் ஆரம்ப நிமிடங்களில் ஒவ்வொருவராக வந்து சேர முதல் காட்சிகள் கொஞ்சம் சிரமப்பட வேண்டியிருக்கும்.

  • இணையப் பயனாளிகளில் மூத்த குடிமக்களான சிறில், போஸ்டன் பாலா, ஐகாரஸ் பிரகாஷ் சேர்ந்து கொள்ள பெட்டகம் குறித்த விளக்கமான விவாதம் நடந்தது. பாலபாரதி தனது சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு படுத்திக் கொண்டார். இன்னும் அதிகமான பேருக்குப் பலன் கிடைக்கும்படி எல்லோரும் கேட்க முடியாததுதான் ஒரே குறை. அந்த வெயில் சூட்டிலும் கூட்டம் சமாளித்துத் துவங்கி விட்டது.
  • அடுத்து போஸ்டன் பாலா ஸ்னாப் ஜட்ஜ் குறித்துப் பேசினார். தினமும் மூன்று மணி நேரம் வலைப்பதிவுகளைப் படிக்க ஒதுக்கிக் கொண்டு தமிழ்மணம் முகப்பு, தேன்கூடு முகப்பு பதிவுகளை மட்டுமில்லாமல் பரவலாகப் படிக்கும் வழக்கம் வைத்துக் கொண்டால் இன்னும் நிறையப் பலன் பெறலாம். அந்த முறையில்தான் ஸ்னாப்ஜட்ஜ் செய்து வருவதாகவும் இன்றைக்கு அது பலருக்கு ஒரு பரிந்துரை பக்கமாக மாறியிருப்பதையும் குறிப்பிட்டார். நாள் முழுவதும் தமிழ் மண முகப்பை மீண்டும் மீண்டும் பார்த்து, பின்னூட்டமிடப்பட்டவை மூலமாக படித்து சிறிது சிறிதாக நேரம் செலவழிப்பதைத் தவிர்த்து அதே மொத்த நேரத்தை தொடர்ச்சியாக செலவிடுவது என்ற அவரது முறை பிடித்திருந்தது.

    இதில் இன்னொரு நன்மை, பகலில் செய்யும் மற்ற வேலைகள் பாதிக்கப்படாது.

  • வலைப்பதிவர் தொழில் நுட்ப உதவிக் குழு குறித்து விக்கி பேசினார். தீபா என்ற பதிவரும் பொன்சும் தொடர்ந்து எழுதி வருவதால் பலனுள்ளதாகவும், இன்னும் சிறப்பாக செயல்படாததற்குக் காரணம் சிவகுமார், சிறில், விக்கி போன்றவர்கள் பங்களிக்காதது என்றும் சரியாகச் சொன்னார். 'பல பொறுப்புகளை ஏற்றுக் கொண்டதால் சில விட்டுப் போகின்றன' என்று நான் சொல்ல நினைத்த அதே சாக்கை சிறில் சொல்லி விட்டார்.

  • ஓசை செல்லா அடுத்த மாதம் 20ம் தேதி கோயம்புத்தூரில் குளிரூட்டப்பட்ட அகலப்பட்டை இணைய வசதி கொண்ட அரங்கில் பதிவர் பட்டறை நடத்தும் திட்டத்தை அறிவித்தார். வெறும் பேச்சோடு நின்று விடாமல் செயல் முறையில் பதிவர் நுட்பங்களைக் காட்டுவதுதான் பட்டறை (முகாம்) என்று விளக்கினார். வழக்கம் போல தனது இணைய உலக அனுபவங்களை சுவையாக விவரித்தார்.

    எதிர் முனையில் இருந்தவர்கள் தனி கச்சேரியில் இறங்கியிருந்தார்கள்.

  • மாற்று, கூகிள் ரீடர் குறித்து பொன்ஸ் பேச இருந்ததை சிறிலின் உரையிலேயே விவாதித்து விட்டதால் அவற்றைத் தொட்டுச் சென்று தனது பேச்சை முடித்துக் கொண்டார் பொன்ஸ். அந்த நேரத்தில் புகை பிடிக்க ஒரு கூட்டம் தனியாகப் போய் விட கூட்டம் தொய்வடைய ஆரம்பித்து. பொன்ஸ் வாங்கி வந்திருந்த சரவணபவன் முறுக்கு எல்லோருக்கும் ஒரு சுற்று போனது.

தருமி ஐயா பேச ஆரம்பிக்கும் போது, முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து வட்டம் பெரிதாகியிருந்தது. எல்லோரையும் அருகில் வரச் சொல்லி பேச ஆரம்பித்தார். அந்த நேரத்தில், இருப்பதை மாற்ற விரும்பாத பெரும்பான்மையைக், கிளம்ப வைத்து வட்டத்தை வழக்கமான இடத்தில் உருவாக்க வைத்தார் பாலபாரதி. இப்போது வட்டம் நெருக்கமாக ஒரு கல்லூரி வகுப்பறையை ஒத்து அமைந்து விட்டது. இந்த வட்டத்தில் அருகில் கிடைத்தவர் நாமக்கல் சிபி. கோயம்புத்தூர் முகத்துடன் கூட்டத்தைக் கலகலப்பாக்கிக் கொண்டிருந்தார்.

  • 'நீங்கள் எல்லாம் உங்கள் அறிவின் வீச்சால், எண்ணங்களின் ஆழத்தால், நம்பிக்கைகளின் உறுதியால் என்னைப் பிரமிக்க வைக்கிறீர்கள், ஐம்பது வயதான கல்லூரி பேராசிரியர்களிடம் கூட இந்த தெளிவு இல்லை' என்று எல்லோருக்கும் ஒரு நல்ல உணர்வைத் தூண்டி விட்டு இதை அடுத்த நிலைக்கு எப்படி எடுத்துச் செல்வது என்று பேசினார்.

  • தமிழ் வலைப்பதிவுகள் ஒரு திங்க் டேங்க் ஆக மாறலாம் என்ற தனது ஆவலை வெளிப்படுத்தினார், 'ஏற்கனவே அப்படித்தான் இருக்கிறது, ஒரு பொருளில் விவாதம் ஆரம்பித்து விட்டால் ஒவ்வொருவரும் தமது கருத்தைச் சொல்ல நடுநிலையான வாசகருக்கு தாமே முடிவு செய்து கொள்ளும் வசதி ஏற்பட்டுள்ளது' என்று சிலர் பதில் சொன்னார்கள்.

  • 'பின்னூட்ட நிலவரத்தைக் காட்டுவதில் 40 என்ற கட்டுப்பாட்டை நல்ல நடவடிக்கை' என்று தருமி ஐயா ஆரம்பிக்க சிலர் அதை ஆதரிக்க, அனானி முன்னேற்றக் கழகத்தினருக்கு ரசித்திருக்காது. கடந்த 24 மணி நேரத்தில் மறுமொழியப்பட்ட இடுகைகள் பக்கங்களை வைத்துக் கொண்டு தமது பணியைத் தொடர்ந்து செய்வதாக ஒரு மனதாகக் குறிப்பிட்டார்கள்.

  • அனானியாக எழுதுவதைக் குறைத்துக் கொள்ளும் படிக் கேட்டுக் கொண்டார். ஒரு பெயரும் அதற்குப் பின் ஒரு முகமும் தெரிந்தால் அந்த எழுத்தை புரிந்து கொள்வதற்கு வசதியாக இருக்கும் என்றார். பின்னர் வண்டியில் செல்லும் போதும் வினையூக்கியும், -நான் உணர்ந்த- ஒருவரைச் சந்தித்த பிறகு அவரது பதிவுகளைப் படிக்கும் போது வரும் நெருக்கத்தை சொன்னார்.

  • 'அனானியாக இருப்பது இணையத்தின் முதல் உரிமை. அதை எப்படி மாற்றச் சொல்கிறீர்கள்' என்று செல்லா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். 'எந்தக் கட்டும் இல்லாது சட்ட திட்டம் இல்லாமல் செயல்படுவது இணைய உலகு' என்ற செல்லாவை சக்கர வியூகத்தில் மாட்டிக் கொண்ட அபிமன்யூ போல எல்லோரும் தாக்க ஆரம்பித்தோம். அவர் திறமையாக சமாளித்து தனது கருத்தில் உறுதியாக இருந்தார்.
இந்த நேரத்தில் மக்கள் தொலைக்காட்சிக் குழுவினரும், குங்குமம் நிருபர்களும் வந்து விட்டிருந்தனர். படப்பிடிப்பு புகைப்படம் எடுத்தல் என்று இன்னும் களை கட்டியது.

தமிழ் இணையத்தில் துடிப்பாக இருந்தாலும் அதில் தமிழ்நாட்டில் இன்னும் பரவ வேண்டும் என்று தருமி ஐயா ஆரம்பித்து வைக்க பல கருத்துக்கள் உருவாயின:
  1. ஒருங்குறியில் தேடும் சேவைகள் தமிழுக்கு வரும் போது பிரபலமான பத்திரிகைகள் தமது இணைய நடவடிக்கைகளை ஒருங்குறிக்கு மாற்றிக் கொள்வார்கள்.

  2. தமிழில் எழுதப் படிக்க இலவசமாக கிடைக்கும் eகலப்பை, எழுத்துருக்களை பிரபலப்படுத்த வேண்டும்.

  3. குறுந்தட்டுகளை உருவாக்கி புத்தகக் கண்காட்சியில் வினியோகிக்க வேண்டும்.

  4. இணைய மையங்களில் தமிழ்க் கருவிகள் கிடைக்கும் இடங்களைக் குறிப்பிட்டு விளம்பர செய்திகளை ஒட்டுதல் செய்யலாம். செல்லா இதற்கான பக்கத்தை பிடிஎஃப் ஆக வலை ஏற்றி விடுவதாகச் சொன்னார். வலைப்பதிவர்கள் தத்தமது பகுதியில் இந்த விபரத்தை பரவச் செய்யலாம்.

  5. மக்கள் தொலைக்காட்சியில் பணியாற்றும் ஜிபோஸ்ட் கவுதம் மக்கள் தொலைக்காட்சியில் 3 நிமிடக் குறும்படங்களாகவோ, 30 நிமிட நிகழ்ச்சிகளாகவோ தமிழ் இணையம் குறித்த விபரங்களை ஒளிபரப்ப ஏற்பாடு செய்வதாகச் சொன்னார்.

  6. அவர்கள் குழுமத்தின் நாளிதழிலும் போதிய இடம் அளிப்பதாக உறுதி அளித்தார்.
மக்கள் தொலைக்காட்சி குழுமத்தின் மகளிர் இதழ் எல்லோருக்கும் வினியோகிக்கப்பட்டது. தனித்தனி குழுமங்களாகப் பேசிக் கொள்ளுதல் நடந்தது. பல நண்பர்களைப் பார்த்துப் பேச முடிந்தது. லக்கிலுக் விவாதக் களத்தை நடத்த ஒத்துக் கொண்டார். மோகன்தாசுடன் பேசும் போது இறுதி ஆண்டு மாணவர்களுக்கு திட்டப் பணி செய்ய வசதி செய்து கொடுக்க மாணவர்களையும் மென்பொருள் நிறுவனங்களையும் அணுகுவது குறித்துப் பேசினோம்.

செல்லாவுடன் அவரது பயணச் சீட்டை மாற்றப் போய் விட்டு வந்து பார்த்தால் கூட்டம் கலைந்து போயிருந்தது. அடுத்த தளத்தில் சேர்ந்து கொள்ள ஆர்வமாக இருந்த செல்லா, என்ன செய்வது என்று தவிக்க ஆரம்பித்தார். போஸ்டன் பாலா, ஐகாரஸ் பிரகாஷ், ரோசா வசந்த் மூவரும் தமது தனிக் கச்சேரியை முடித்து விட்டு வந்து சேர்ந்தார்கள்.

அப்போது பாலபாரதி வந்து கூட்டம் வெளியிலிருக்கும் டீக்கடைக்கு இடம் பெயர்ந்திருப்பதாகச் சொல்ல நாங்களும் அங்கு நகர்ந்தோம். கிட்டத்தட்ட எல்லோருமே இன்னும் நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்தார்கள். ஏழரை மணிக்கு வேலை இருப்பதால் நான் கிளம்ப வினையூக்கியும் என்னுடன் சேர்ந்து கொள்ள என்னளவில் சந்திப்பு முடிவடைந்தது.

இதுவரை கலந்து கொண்ட கூட்டங்களிலேயே சிறப்பாக பலனுள்ளதாக நிறைவாக நடந்து முடிந்த சந்திப்பு.
யாருமே பிரிய விரும்பாத ஒருங்குணர்வைத் தந்த கூட்டம் என்றால் மிகையாகாது.

Comments

வணக்கம் சிவக்குமார்

கூட்டத்தை நேரில் பார்த்ததை போல ஓர் உணர்வு. மக்கள் தொலைகாட்சியில் காண்பிக்க படும் நேரத்தை முதலில் தெரிந்து வைத்துக் கொண்டு அவசியம் அதனை பதிவு செய்து விடவும்.

தொடரட்டும் தமிழ் பணி

அன்புடன்
மயிலாடுதுறை சிவா...
நன்றி சிவக்குமார்.
இவ்வளவு பதிவர்களையும்
ஒன்று சேர்த்து கூட்டமும்
நன்கு நடந்தது என்று தெரிய மகிழ்ச்சி.
அங்கு இருந்தால் தொலைக்காட்சியும் பார்த்து இருக்கலாம்.
நல்ல சந்திப்பாக நடந்துள்ளது.

விவரங்கள் அருமை.
Vicky said…
சிவா,

விரிவான பதிவுக்கு நன்றி .

// சிறப்பாக செயல்படாததற்குக் காரணம் சிவகுமார், சிறில், விக்கி போன்றவர்கள் பங்களிக்காதது

இதில் விக்கிக்கு தான் முதலிடம் ;)
அருமையான நேரடி வர்ணனை!!!
மயிலாடுதுறை சிவா,

வடுவூர் குமார் பதிவு செய்து போட்டதை பாலாவும் சுட்டிக் காட்டி விட்டார்.

//இவ்வளவு பதிவர்களையும் ஒன்று சேர்த்து கூட்டமும் நன்கு நடந்தது என்று தெரிய மகிழ்ச்சி. அங்கு இருந்தால் தொலைக்காட்சியும் பார்த்து இருக்கலாம்.//

எல்லாப் பதிவர்களும், அனைத்து வாசகர்களும் ஒன்றாகச் சேர்ந்து சந்திக்க முடிந்தால் எப்படி இருக்கும் என்று ஒரு கனவு! தொலைக்காட்சி பதிவை மேலே சொன்ன சுட்டியில் பார்த்து மகிழுங்கள்.

//விவரங்கள் அருமை.//

நன்றி துள்சி அக்கா.

விக்கி,

பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கு நன்றி :-). ஒரு செயல் திட்டம் வகுத்து எல்லோருக்கும் வீட்டுப் பாடம் கொடுத்து விடுங்கள்.

நன்றி லக்கிலுக்.

அன்புடன்,

மா சிவகுமார்

Popular posts from this blog

மெட்ராஸ் பாஷை - ஒரு இலக்கண பார்வை

ஏதோ வண்டி ஓடிக்கினுகீது சார்! - ஜெயகாந்தன்

எழுத்தறிய நூலகங்கள்