சென்னை சந்திப்பு - 22 ஏப்ரல் - 1

போன ஆண்டு ஆகஸ்டு மாதம் 15ம் தேதி நடேசன் பூங்காவில் ஒரு வலைப் பதிவர் சந்திப்பு நடந்தது. கவிஞர் மதுமிதாவைச் சந்திக்க சில பதிவர்கள் போயிருந்தோம். அருள் குமார், வீரமணி, ஜெய்சங்கர், நான், பாலபாரதி, ப்ரியன், சிங் ஜெயகுமார் எல்லோரும் இந்தச் சந்திப்பு முடிந்ததும் அருள் குமாரின் தூண்டுதலால் இரு சக்கர வண்டிகளில் மாமல்லபுரம் போக முடிவு செய்தோம்.

அந்தப் பயண விபரங்களை ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொருவர் எழுதி பதிவு செய்தோம். அதைப் படித்த நண்பர்கள் இது போல சென்னையின் வெவ்வேறு பகுதிகளை படம் பிடித்து போடலாம், சென்னை குறித்து எழுத ஒரு கூட்டு பதிவு உருவாக்கலாம் என்று சொன்னார்கள். (சொன்னது மதி கந்தசாமி).

பாலபாரதி, பொன்ஸ், அருள் குமார், ஜெய்சங்கர், பிரியன் இவர்களுடன் என்னையும் சேர்த்து ஒரு கூட்டு வலைப்பதிவை உருவாக்கி விட்டார்கள். சென்னப் பட்டிணம் என்று இந்தக் குழுவினர் சேர்ந்து செயல்பட பல திட்டங்களை சொல்வார் பாலபாரதி. அவரது புத்தகக் கடையில் எல்லோரும் சந்தித்தோம். ஒருவர் ஒரு நாள் வீதம் வாரம் ஆறு பதிவுகள் என்று நான் சொன்ன அதி ஆர்வத் திட்டத்தைக் கைவிட்டு மாதம் ஆறு பதிவுகளாவது போடுவது என்று குறைந்த பட்ச செயல் திட்டம்.

நான்கு நாட்கள் இடைவெளி விட்டு வரிசையாக எழுதுவது. முறை தவறியவர் எல்லோரையும் சாப்பிட அழைத்துப் போவது என்று வைத்துக் கொண்டோம். முதல் இரண்டு சுற்றுகள் ஒழுங்காக போனது. அதன் பிறகு முறை தவறி, பதிவுகள் குறைந்து போயின.

மைலாப்பூரில் ஒரு சந்திப்பு ஏற்பாடானது. அதைத் தொடர்ந்து அருள் குமாரின் அலுவலகத்தில் குழுவினர் சில முறை சந்தித்தோம். சென்னையின் பல பகுதிகளில் போய் அந்தந்த பகுதியின் சிறப்புகளைக் குறித்து எழுதுவது (பாலபாரதி சுண்டக் கஞ்சி குறித்து எழுதுவதாகச் சொன்னார்), சென்னையில் பேல்பூரி விற்கும் கடை தொடங்குவது, சென்னைப் புத்தகக் காட்சியின் போது முழுமையாக அலசி எழுதுவது, மைலாப்பூர் திருவிழாவிற்குப் போய் எழுதுவது என்று பல விவாதங்கள் நடந்தன.

பார்வதி ராமசாமி ஹாலில் பாலபாரதி பெருமுயற்சி செய்து ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தார். அதில் கலந்து கொண்ட அனைவருக்கும் நிறைவாக சந்திப்பு நிகழ்ந்தது. பதிவர்கள் சேர்ந்து செயல்படும் முயற்சியின் அடுத்த நிலைகளை அடையலாம் என்று ஆர்வும் ஆற்றலும் உண்டாயின. இட்லிவடை புகைப்படம் வெளியிட்டதிலிருந்த ஆரம்பித்து அனானிகளைக் குறித்த வாதத்தை ஆரம்பித்து வைத்து எல்லோரையும் உடைத்துப் போட்ட புண்ணியத்தை சம்பாதித்துக் கொண்டார்கள் சிலர்.

தமிழ் இளைஞர்கள் சேர்ந்து செயல்படுகிறார்கள் என்று வரும் போது அதற்கு எதிர்ப்பு வரும் திசைகளின் மாறாத்தன்மை ஆச்சரியத்தைத் தருகிறது. நேரடியாக எதிர்ப்பவர்களை எளிதாக சமாளித்துப் போய் விட்டாலும், பக்கவாட்டிலிருந்து, நமது நோக்கங்களை சந்தேகித்து, எடுத்துக் கொண்ட இலக்குக்குத் தொடர்பில்லாத திசையில் விவாதங்களைத் துவக்கி, கோபப்படச் செய்து குழுவினரின் ஆற்றலை வீணடிக்கும் வேலையைச் செய்து விடுகிறார்கள்.

அதன் பிறகு தாளி உடைந்தது போல முயற்சிகள் தேங்கிப் போய் விட்டன. பாலபாரதி கூடத் தனது பெயரைப் பின்னணியில் வைத்து செயல்படப் போவதாகக் கூற ஆரம்பித்தார்.

திரு சென்னை வருவதை முன்னிட்டு நடேசன் பூங்காவில் சந்திப்பு ஏற்பாடானது. துளசி கோபால் கலந்து கொண்டதை முன்னிட்டு பல பெண்பதிவர்களும் வந்திருந்தார்கள். சந்திப்பின் இறுதியில் சாகரன் வந்து தேன்கூட்டின் ஆண்டு நிறைவைக் கொண்டாடி இனிப்பு வழங்கினார்.

அடுத்த கட்டமாக செந்தழல் ரவி சென்னை வருவதாக சந்திப்புக்கு அழைத்தார். அதிலும் பலர் ஆர்வமாகக் கலந்து கொண்டார்கள்.

தமிழ்வலைப்பதிவர் தொழில் நுட்ப உதவிக் குழுவை உருவாக்கினோம். பாலபாரதி போன்று ஆற்றலும் வழிகாட்டல் முனைப்பும் இல்லாமல் எந்தக் குழுவும் தொடர்ந்து செயல்படுவது சிறப்பாக பணியாற்றுவது நடப்பதில்லை.

இப்போது 22ம் தேதி சிறில் அலெக்ஸ், போஸ்டன் பாலா சென்னையில் இருப்பதை முன்னிட்டு சந்திப்பு ஏற்பாடாகிறது. இந்தச் சூழலில் ஆபாசப் போலிப் பதிவு, அதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், எதிர்வினைகள் என்று மீண்டும் திசைதிருப்பல் நடப்பதாக எனக்கு வருத்தம். நம்மிடம் இருப்பது 24 மணி நேரமும் 2 கைகளும்தான். அதை ஆபாசப் பதிவு போட, போட்டவரைக் கண்டு பிடிக்க, கண்டு பிடித்தவரை குற்றம் சாட்டப் பயன்படுத்தலாம் அல்லது பதிவர் சந்திப்பைச் சிறப்பாக நடத்தி அடுத்த நிலைக்கு பதிவுலகைக் கொண்டு போகப் பயன்படுத்தலாம்.

22ம் தேதி சந்திப்பு வரை தினமும் சந்திப்பு குறித்த எண்ணங்கள், எதிர்காலத் திட்டங்கள், புதிய முயற்சிகள் குறித்த விவாதங்களை தூண்டலாம் என்று திட்டமிட்டுள்ளோம். இந்த வாரத்தை வலைப்பதிவர் சந்திப்பு சிறப்பு வாரமாக பாவித்து பதிவுகள் தொடர்ந்து வெளியாகும். உங்கள் கருத்துக்களை பின்னூட்டமாகவோ, பதிவுகளாகவோ அனுப்பி வையுங்கள்.

Comments

//22ம் தேதி சந்திப்பு வரை தினமும் சந்திப்பு குறித்த எண்ணங்கள், எதிர்காலத் திட்டங்கள், புதிய முயற்சிகள் குறித்த விவாதங்களை தூண்டலாம் என்று திட்டமிட்டுள்ளோம். இந்த வாரத்தை வலைப்பதிவர் சந்திப்பு சிறப்பு வாரமாக பாவித்து பதிவுகள் தொடர்ந்து வெளியாகும். உங்கள் கருத்துக்களை பின்னூட்டமாகவோ, பதிவுகளாகவோ அனுப்பி வையுங்கள்.
//

நல்ல கருத்து மாசி அவர்களே!

அநாவசிய பிரச்சினைகளில் நேரத்தைச் செலவிடுவதை விட ஆக்கப்பூர்வமாய் செயல்படுத்துதல் சாலச் சிறந்தது!
சத்திப்பு நல்லபடியாக நடக்க வாழ்த்துகள்!

இவ்வாரம் வரவிருக்கும் இடுகைகளை எதிர்பார்க்கிறேன்.

-மதி
இந்தச் சந்திப்பும் நல்ல படியாக நடந்தேற வாழ்த்துகள்.

பதிவுகளை எதிர்பார்க்கிறொம்.
வலைப்பதிவர் சந்திப்பு வெற்றியடைய வாழ்த்து(க்)கள்.
ஆக்கப்பூர்வமா எதாவது செய்ய இயலுமுன்னு நினைக்கிறேன்.

"ஒன்று பட்டால் உண்டு வாழ்வு நம்மில்
ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு."
Unknown said…
//நம்மிடம் இருப்பது 24 மணி நேரமும் 2 கைகளும்தான். அதை ஆபாசப் பதிவு போட, போட்டவரைக் கண்டு பிடிக்க, கண்டு பிடித்தவரை குற்றம் சாட்டப் பயன்படுத்தலாம் அல்லது பதிவர் சந்திப்பைச் சிறப்பாக நடத்தி அடுத்த நிலைக்கு பதிவுலகைக் கொண்டு போகப் பயன்படுத்தலாம்.//

Repeatu
//அநாவசிய பிரச்சினைகளில் நேரத்தைச் செலவிடுவதை விட ஆக்கப்பூர்வமாய் செயல்படுத்துதல் சாலச் சிறந்தது!//

சரியான வார்த்தைகள்...
நல்லாதானே எழுதியிருக்கீங்க? அப்புறம் ஏன் பின்னூட்டங்கள் குறைவா இருக்கு?

"ஏற்பாடு" பண்ணட்டுமா?
//
"ஏற்பாடு" பண்ணட்டுமா?
//
:))))))))))
லக்கி பயககிட்ட சொன்னதும் எங்கேனு கொலவெறில இருகாய்ங்க! வேகமா மா.சி கிட்ட கேட்டுச் சொல்லுங்க! ஒரு லாரிய அப்படியே மடக்கி இங்க விட்டுறலாம்!

Popular posts from this blog

மெட்ராஸ் பாஷை - ஒரு இலக்கண பார்வை

27D

ஏதோ வண்டி ஓடிக்கினுகீது சார்! - ஜெயகாந்தன்