கோயம்பேடு - the buzz(s) world..

"சென்ட்ரலில் இறங்கி, CMBT என்று போட்டிருக்கும் பேருந்தில் ஏறி வந்துவிடு". 2002இல் அப்பா சொன்ன போது பேருந்து நிலையத்தைப் பற்றிய பெரிய யோசனை ஏதுமில்லை. அப்போது தான் நாங்கள் கோயம்பேட்டுக்குக் குடிவந்த புதிது. ஒரு மாதம் முன்னால் புது வீட்டுக்கு வருவதற்கு பேருந்துகள் அதிகம் இல்லாமல், ஆட்டோ பிடித்துப் போக வேண்டியது போலவே இப்போதும் இருக்கும் என்று நினைத்துக் கொண்டே தான் இறங்கினேன். CMBT என்பது அப்போது ஒரு புதுமாதிரியான மாயாஜால வார்த்தையாகத் தோன்றியது. பேருந்து மெல்ல அந்த வளாகத்துக்குள் நுழையும் வரை இத்தனை பெரியதாக இருக்கும் என்று எண்ணக் கூட இல்லை.



37 ஏக்கர் பரப்பில் விரிந்து கிடக்கும் புறநகர் பேருந்து நிலையம் நாட்டின் முக்கிய விமான நிலையங்களைப் போல் பளபளவென்று மின்னிக் கொண்டிருந்தது. சினிமாக்களில் வரும் ஆஸ்பத்திரிகள், கதாநாயகன் நாயகிக்குத் தயங்கிக் கொண்டே பூ கொடுத்து வழியனுப்பும் விமான நிலையங்கள் போல மொசைக் தரையும் சுமார் 100 பேர் அமரக் கூடிய காத்திருக்கும் இடமும், முன்புறத்தில் புல்வெளியும் ஏதோ புது யுகத்துக்குக் கடத்திப் போவது போலிருந்தது.



முன் ஹாலைத் தாண்டி உள்ளே போனபோது கூட பேருந்து நிற்குமிடங்களும், பிளாட்பாரங்களும் சுத்தமாக முகம் பார்க்கும் அளவுக்கு பளிச்சென்று இருக்க, அந்த அழகிலேயே கொஞ்ச நேரம் லயித்துப் போய் விட்டேன். இதை நம்மவர்கள் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமே என்ற கவலையும் கூடவே ஏற்பட்டது.




முப்பத்தாறே மாதங்களில் 103 கோடி ரூபாய் செலவில் கட்டப் பட்ட இந்தப் பேருந்து நிலையம், 2002 நவம்பரில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது போலவே, நான்காண்டுகள் கழித்து இப்போதும் தூய்மையாக இருக்கிறது. சமீபத்தில் ISO 9001 தரக் கட்டுப்பாட்டுச் சான்றிதழையும் பெற்றிருக்கும் இந்தப் பேருந்து நிலையம், ஆசியாவிலேயே மிகப் பெரிய பேருந்து நிலையமாகும். இங்கிருந்து வந்தவாசி, காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருச்சி, பெங்களூர், ஹைதராபாத் போன்ற 270 தடங்களுக்குப் போய்வரும் சுமார் 2000 பேருந்துகளில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் மக்கள் தினசரி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆறு பிளாட்பாரம்கள், முப்பது பேருந்து நிறுத்தங்கள் மட்டுமல்லாது தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகாவின் போக்குவரத்துக் கழகங்களின் முன்பதிவுக் கூடங்களும் இங்கே இருக்கின்றன.


பேருந்து நிலையத்தின் உள்ளே உள்ள 24 கடைகளில் பயணத்துக்குத் தேவையான எல்லா உபகரணங்களும் கிடைக்கும், அத்துடன் தமிழக சுற்றுலாத் துறை, மகளிர் சுயசேவைக் குழு அங்காடிகளும் கூட இங்கே உள்ளன.

பயணிகளுக்கு மிகப் பெரிய ஆறுதல் பேருந்து நிலையத்தில் பன்னிரண்டு இடங்களில் இருக்கும் கழிப்பறைகள். நகரத்தில் எங்கும் காணாத சுத்தத்துடன் பாதுகாக்கப்பட்டு வரும் இந்தக் கழிப்பறைகள் நகரில் எங்கும் காண முடியாதபடி, இன்னும் இலவசக் கழிப்பறைகளாகவே உள்ளன!

பழைய பாரீஸ் கார்னர் பேருந்து நிலையத்துடன் ஒப்பிட்டால், பின்னிரவுப் பேருந்துகளுக்குக் காத்திருந்து பயணப்படவும், மிகவும் அதிகாலைகளில் வந்திறங்கும் பயணிகள் காத்திருந்து சென்னையின் பிற பகுதிகளுக்கு வண்டியேறவும் மிகவும் பாதுகாப்பான, தன்னிறைவான தங்குமிடமாக இருக்கிறது.




பேருந்து நிலையத்தின் பிற வசதிகள்:



  • திடீர்ப் பணத் தேவைக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஏ.டி.எம்
  • காவல்துறைப் பிரிவு அலுவலகம்
  • தீயணைப்புப் பிரிவு
  • காணாமல் போகும் குழந்தைகளுக்கான உதவிமையம்
  • கட்டணத் தொலைபேசி நிலையங்கள்
  • பொருட்களுக்கான தள்ளுவண்டிகள்
  • உடல்நலம் குன்றிய பயணிகளுக்காக சுமார் 100 தள்ளு வண்டிகள்
  • அப்பல்லோவின் 24 மணிநேர, இலவச அவசரசிகிச்சை பிரிவு
  • அப்பல்லோவின் 24 மணிநேர மருந்தகம்
  • குடிநீர் சுத்தீகரிப்பு நிலையம்
  • 600KVA துணை மின் நிலையம்
  • மூன்று உணவகங்கள்



இத்தனை இலவசங்களுக்கும், பராமரிப்புக்கும் எங்கிருந்து இவர்களுக்குப் பணம் கிடைக்கிறது?

கடைகள், போக்குவரத்துக் கழக முன்பதிவு கவுண்ட்டர்களின் வாடகையைத் தவிர, பேருந்து நிலையத்தின் உள்ளும் புறமும் நிற்கும் விளம்பரப் பலகைகளில் தான் பராமரிப்புக்கான பெருமளவுக் கட்டணம் வந்து சேர்கிறது. அத்துடன், சுமார் பத்தாயிரம் வண்டிகள் நிற்கக் கூடிய வாகன நிறுத்தமும் ஒரு முக்கிய வருமான வழியாகும்.



இன்னும் ஆரம்பகால பளபளப்பு குறையாத இந்தப் பேருந்து நிலையத்தில் சென்னையின் பல்வேறு இடங்களுக்குப் போகும் உள்ளூர் பேருந்துகளின் எண்ணிக்கை குறைவு தான். இன்னும் அம்பத்தூர், ஆவடியிலிருந்து வரும் வண்டிகளையே மக்கள் நம்பவேண்டியிருக்கிறது. புறநகர் வண்டிகள் கிளம்பும் நேரங்களுக்கு ஏற்றாற்போல் சென்னையின் எல்லாப் பகுதிகளையும் இணைக்கும் பேருந்துகள், விழாக்காலங்களில் வாகன நிறுத்தங்களின் வாயிலில் பிதுங்கி வழியும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த அதிகமான நுழைவுச்சீட்டு வழங்குநிலையங்கள், தரமான உணவகங்கள் போன்றவை பேருந்து நிலையத்தின் இன்றைய கட்டாயத் தேவைகள்.
இத்துடன், நடுவண் தொடர்வண்டி நிலையம் போன்றே இணைய இணைப்புகள், தொடர்வண்டிக்கான முன்பதிவுக் கூடங்கள் இவற்றைப் பெருக்கினால், ஆசியாவின் மிகப் பெரிய பேருந்து நிலையம் ஒரு நல்ல முன்மாதிரியாகத் திகழ்வது உறுதி.

Comments

krishjapan said…
படிக்க மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. அப்போதைய பளபளப்பை படித்துக்கொண்டிருக்கும் போது, இப்போது என்று சொல்லி, எங்கே மோசமாகிவிட்டது என்று எழுதியிருப்பீர்களோ என பயந்தேன். இப்பொழுதும், நன்றாக பராமரிக்கப்பட்டு வருவதை அறிந்து மனம் மகிழ்ந்தேன். அழகான படங்களோடு கூடிய நல்ல பதிவு.
//முப்பத்தாறே மாதங்களில் 103 கோடி ரூபாய் செலவில் கட்டப் பட்ட இந்தப் பேருந்து நிலையம், 2002 நவம்பரில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது போலவே,//

திறந்துவைக்கப்பட்டது மட்டுமே ஜெயலலிதாவால்... எண்ணமும், ஆக்கமும் எங்கள் தலைவருடையது...

திறந்து வைக்கப்பட்டபோது கலைஞர் நாட்டிய அடிக்கல்லையும் பிடுங்கி எறிந்து விட்டார்கள்.... இப்போது புதிய அடிக்கல் வைத்திருக்கிறார்கள்....

- லக்கிலுக்,
திமுக இளைஞர் அணி, மடிப்பாக்கம்
பொன்ஸ் மேடம் ...நல்ல அழகான பதிவு...நல்ல படங்கள்...நாங்களும் பேருந்துநிலையத்தை எங்கள்திரைப்பட படப்பிடிப்பிற்கு எங்கெங்கோ அனுமதி கேட்டுப்பார்த்தோம் எவரும் கொடுக்கவில்லை..
நீங்க கலக்கிட்டீங்க....நம்ம பேருந்துநிலையத்திற்கு பெறுமை சேர்க்கும் கட்டுரை..
நிறைய அன்புடன்
வீரமணி..
Sivabalan said…
நல்ல பதிவு

நன்றி
பொன்ஸ்,

தூய்மை, திட்டமிட்ட நிர்வாகம் எல்லாமே நீங்கள் எழுதியது போல நானும் பலமுறை பார்த்து வியந்தவை. உள்ளே இருக்கும் கடைகளில் எல்லாப் பொருட்களுக்கும் MRP விலையை விடக் கூட்டி விற்பதற்குத்தான் சில தடவை சண்டை போட்டிருக்கிறேன்.

மொத்தத்தில் நாம் அனைவரும் பெருமை கொள்ளக் கூடிய ஒரு கட்டமைப்பு இந்தப் பேருந்து நிலையம்.

அன்புடன்,

மா சிவகுமார்
//சென்னையின் பல்வேறு இடங்களுக்குப் போகும் உள்ளூர் பேருந்துகளின் எண்ணிக்கை குறைவு தான். இன்னும் அம்பத்தூர், ஆவடியிலிருந்து வரும் வண்டிகளையே மக்கள் நம்பவேண்டியிருக்கிறது//

அன்புடையீர்,

சில விவரங்கள்.

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து...

1.வடபழனி, கே.கே.நகர்,அடையாறு, திருவான்மியூர் - 5E

2.அண்ணாநகர், கீழ்ப்பாக்கம், செண்ட்ரல், பாரிமுனை - 7F

3.ஆழ்வார்ப்பேட்டை, பட்டினப்பாக்கம் - 12B

4.சூளை - 14A

5.அமைந்தகரை - 15B

6.சின்மயா நகர், சாலிகிராமம் - 17எக்ஸ்டென்சன்

7.திருவல்லிக்கேணி - 27B

8.ஜெமினி, மயிலை, மந்தைவெளி - 29K

9.ஐ.சி.எஃப்., அய்னாவரம், பெரம்பூர் - 46

10.மூலக்கடை, மாதாவரம், மணலி - 121D

11.வேளச்சேரி, மேடவாக்கம், தாம்பரம் - 51C

12.மதுரவாயல், பூந்தமல்லி - 53M

13.எண்ணூர் - 56N-Ex.

14.தண்டையார்ப்பேட்டை - 59C

15.கிண்டி, மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை - 70M

16.பல்லாவரம், குரோம்பேட்டை - G70Ex.

17.விருகம்பாக்கம், போரூர் - 88கட்.

சில தடங்கள் விடுபட்டிருக்கலாம்.

சில சேவைகள் இப்போது அதிகப்படுத்தப்பட்டிருக்கலாம்.

அன்புடன்
ஆசாத்
பொன்ஸ்,
இந்த பேருந்து நிலையத்தை கட்டும் போது பல தடவை சென்று இருக்கின்றேன். சுத்தமாக பராமிக்கபடுவதற்கு அந்த வேலையை தனியாரிடம் விட்டதும் ஒரு காரணம்.

நீங்கள் சொன்னதோடு, அந்த பேருந்து நிலையத்தில் ஆவின் பூத் உள்ளது. சுமைகளை எடுத்து செல்ல இலவச டிராலி, ஆரம்பத்தில் ஒரு நல்ல உணவகம் காத்திருப்போர் இடத்திற்கு எதிரில் மாடியில் இருந்தது. என்ன காரணத்தாலோ அதை முடி விட்டார்கள்.

ப்ரி பேய்ட் ஆட்டோ, டாக்ஸி போன்றவைகள் ஏற்பாடு செய்யலாம்.
ஓகை said…
சென்னையின் சிறப்பொன்றைப் பற்றிய சிறப்பான ஒரு பதிவு. ஒரு இணைய மேய்மையம் இருந்தால் நன்றாக இருக்கும்.

நான்காண்டுகளுக்குப் பின்னும் அழகாகப் பராமரிக்கப் படுவது தனியார் துறையின் மற்றுமொரு சாதனை. இது நமக்கொரு சேதி சொல்லுகிறது. அல்லது பலமுறை சொல்லப்பட்ட சேதியை மீண்டும் உரக்கச் சொல்லுகிறது.
லக்கி,
நீங்கள் சொல்வது போல் இது கலைஞர் காலத்தில் திட்டமிடப்பட்ட பேருந்து நிலையம் என்று நானும் படித்திருக்கிறேன். நாங்கள் கோயம்பேட்டுக்கு வந்த புதிதில், இந்த ஒரே காரணத்துக்காக, புதிய ஆட்சியாளர்கள் இந்தத் திட்டத்தைக் கிடப்பில் போட்டுவிடுவார்களோ என்று பேசிக்கொண்ட நினைவிருக்கிறது. நல்லவேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை..

ஆசாத்,
பேருந்து எண்களைப் பட்டியலிட்டமைக்கு நன்றி.

ஓகை ஐயா,
பராமரிப்புகள் தனியாரிடம் விடப் பட்டிருந்தாலும், அதன் மேற்பார்வை இன்னும் அரசு வசம் தான் இருக்கிறது. பேருந்து நிலைய அதிகாரிகள் தான் இதை இப்போது மேற்பார்வையிட்டு வருகிறார்கள்.
சீனு said…
அங்கே போகிறவர்கள், உள்ளே நுழைந்தவுடன் இடது பக்கம் இருக்கும் Hot Chips-ல் ஒரு ஃகாபி அடித்து பாருங்கள்.
தாணு said…
ராம்கி வீட்டு மாடியிலிருந்து பார்த்தால் அந்த அலங்காரங்கள் நன்கு தெரியும். `ஞாபகம் வரூதே' பாணியில் பாடணும் போல் இருக்கு, 15 வருஷத்துக்கு முன் அந்த இடத்தில் குப்பை கொட்டிக் கொண்டு இருந்ததை நினைத்து!
அருமையான கட்டுரை பல தடவைகள் அந்த இடத்தை சுற்றி சுற்றி வந்திருக்கிறேன். அதன் அமைப்பு அப்போதே பிரமிப்பை தரும். ஆனால் இவ்வளவு அழகாய் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. அழகாய் இருக்கிறது வாழ்துக்கள்.
பாரீஸ்கோனர் இப்போது பிறியாகிவிட்டதா? அதற்குள் போய்வருவதே பெரிய சாதனைதான்.
Anonymous said…
ரொம்ப நல்லா சொல்லிருக்கீங்க. அப்படியே இந்த ஆம்னி பஸ் இருக்கும் இடத்துக்கும் எப்படி CMBT லிருந்து போகணும்னு ஒரு வழி சொல்லியிருக்கலாம். நான் ஆம்னி பஸ் இருக்குமிடத்தை கண்டுபிடிக்க ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்.
CMBTல் பஸ் ஸ்டேண்டு கட்டும்போது இருந்த போட்டா எல்லாம் போட்டு வைத்து இருப்பார்களே அதையேன் விட்டுவிட்டீர்கள்.

தமிழில் எழுத உதவிய விக்கிக்கு நன்றி

Popular posts from this blog

மெட்ராஸ் பாஷை - ஒரு இலக்கண பார்வை

27D

வாராரு ஆட்டோகாரரு....