சென்னைக்கு இன்னொரு முகம் இருக்கு!

தினசரி புழங்கும் வீட்டைப் பூட்டிப்போட்டுவிட்டு, நாளைந்து நாட்கள் வெளியூர் சென்று திரும்புகையில் நம் வீடே நமக்கு சற்று அன்னியமாய்த் தோன்றுதல் போல, நள்ளிரவு சென்னைக்கென்று ஒரு தனி முகம் இருக்கிறது.


குல்ஃபி மணிச்சத்தம் கேட்கிறதா :)

இரவு எட்டு எட்டரைக்கெல்லாம் அசமடங்கி, காலை ஏழு மணிக்கு மேல் மெல்ல சோம்பி விழிக்கும் நகரங்கள் போலல்லாது, எப்போதும் விழித்தே இருக்கிறது சென்னை. ஒரு நாளின் எந்த நேரத்திலும் சென்னையில் ஆங்காங்கே ஏதாவது வேலைகள் நடந்தவண்ணம் இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.

சாலைப்பணிகள், கேபிள் பதிக்கும் பணிகள், துப்புரவுப் பணி, இந்த பணியாளர்களுக்கு தேனீர், சுக்கு காஃபி விற்க மிதிவண்டியில் சுற்றிக்கொண்டிருக்கும் ஆட்கள், குல்ஃபி விற்பவர்கள் என இரவு முழுக்க விழித்திருக்கிறது சென்னை. பெரும்பான்மையான சாலைகளில், ஒரு நிமிடத்திற்கு ஒன்று என்றாவது ஏதாவது வாகனங்கள் சென்றுகொண்டுதான் இருக்கின்றன. சில வருடங்களுக்கு முன், பார்ப்பவர்களை அலறவைக்கும் நள்ளிரவு ஆட்டோ ரேஸ்களை சென்னை சாலைகளில் பார்த்திருக்கிறேன். அதனால் சில மோசமான விபத்துகள் நிகழ்ததாகவும், பின் அவை போக்குவரத்து காவல் துறையினரால் நிறுத்தப்பட்டதையும் செய்தித்தாள்கள் மூலம் அறிந்தேன்!

இரவு 1.30 க்கு ஆற்காடு சாலை

நாள் முழுக்க பிதுங்கி வழியும் போக்குவரத்துச் சுமைகளை இறக்கிவைத்துவிட்டு, சோடியம் விளக்கின் கதகதப்பில் இளைப்பாறும் சென்னையின் நள்ளிரவுச் சாலைகள் மிக அலாதியானவை. சென்னை சாலைகளின் உண்மையான பரிமாணங்களை அறியவேண்டுமெனில் நள்ளிரவில் வந்துதான் தரிசிக்கவேண்டும்! வழக்கத்திற்குச் சற்று அகலமாகவே தோன்றுகிறது. கொசுக்கடிகளையும் பொருட்படுத்தாது நடைபாதையில் நிம்மதியாய்த் தூங்கும் இத்தனை பேரும், மழைக்கால இரவுகளில் எங்கு ஒதுங்குவார்கள் என ஆச்சர்யமாய் இருக்கும். ம்.. சென்னை சாலைகளுக்குத்தான் எத்தனை விதமான பயன்பாடுகள்!

சில்லென்று ஊருக்குள் உலவும் கடற்காற்று வருட, அங்கொன்றும் இங்கொன்றுமாய் விரையும் வாகனங்களை அலட்சித்து, மிதமான வேகத்தில் லட்சியமற்றுப் பயணிக்கும் சுகம் உணரவென்றே இரவுக்காட்சிகளுக்கு செல்வோம் நாங்கள். மந்தவெளியில் தங்கியிருந்தபோது கோயம்பேடு 'ரோகினி'க்கோ, கோயம்பெடில் தங்கியிருந்தபோது திருவான்மியூர் 'ஜெயந்தி'க்கோ இரவுக்காட்சிக்குச் செல்லத்தயங்கியதே இல்லை!

இத்தகைய நேரங்களில் கிடைக்கும் சூடான தேனீருக்கு இணை ஏதாகிலும் உண்டா எனத்தெரியவில்லை. பாதி ஷட்டர் மூடி, உள்விளக்கு மட்டும் எரியவிட்டு, இரண்டாம் ஆட்டம் முடிந்து திரும்பும் எங்களுக்காகவே காத்திருக்கும் தேனீர் கடைகள் நகரெங்கும் உண்டு! ஒழுங்கில்லாமல் நிறுத்திய இருசக்கர வாகன இருக்கையில் இருந்தபடியே, இதமான தேனீருடன் புதுப்படங்களின் உண்மையான திரை விமர்சனங்களையும் சுடச்சுட பருகிவிடலாம் இந்தக் கடை வாசல்களில்!

பகல் வேளைகளில் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத சுதந்திரம் இரவு நேரச் சாலைகளில் எளிதாக கிடைத்துவிடுகிறது. ஒரு முறை தி. நகர் பனகல் பார்க் சுற்றியுள்ள சாலையில், அனுமதிக்கப்பட்ட திசைக்கு எதிர்த்திசையில் பயணிக்க நேர்ந்தது. பகலில் சரியான திசையிலேயே அங்குலம் அங்குலமாக நகர்ந்து பழக்கப்பட்ட சாலையை, இப்படிக்கடக்க வாய்த்ததும் கிடைத்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. தேவையின்றி வெறுமனே இரண்டு முறை பனகல் பார்க்கை எதிர் திசையில் சுற்றி வந்தோம்!

RC புக், இன்ஷூரன்ஸ் இல்லாமல் இரவில் பயணித்து, வாகன சோதனையில் மாட்டி, நம்ம ஊர் காவலர்களுடன் ஒன்றிரண்டு மணி நேரங்கள் நட்பாய் பேசிக்கொண்டிருந்த அனுபவமும் உண்டு!

2000ம் ஆண்டின் ஒரு நள்ளிரவில், ஆழ்வார்பேட்டை 'லைஃப் ஸ்டைல்' மேம்பாலத்தின் உச்சியில், நடுச்சாலையில் எங்கள் வாகனங்கள் நிறுத்தி, சரியாய் 12 மணிக்கு கேக் வெட்டி கொண்டாடிய ஒரு நண்பனின் பிறந்தநாளை மறக்கவே முடியவில்லை இன்னும்! இத்தனைக்கும் போலீசுக்குப் பயந்து சில நிமிடங்களே நிகழ்ந்த கொண்டாட்டம் அது. இத்தகைய நேரங்களில், எல்லாம் தாண்டி, 'இது நம்ம ஊரு' என்கிற உரிமை தரும் துணிச்சலை மறுப்பதற்கில்லை!

Comments

நன்றாகவிருந்தது அருள்.

வாய்ப்புக்கிடைக்கும்போதெல்லாம் சென்னையை இரவு நேரத்தில் சுற்றியது நினைவுக்கு வந்தது. பைக்கில் செல்வதைவிட கார் போன்ற வாகனங்கள்தான் இரவு நேரப்பயணங்களுக்கு உசிதமானவை என்பது என் கருத்து.

-மதி
நன்றி மதி.

//பைக்கில் செல்வதைவிட கார் போன்ற வாகனங்கள்தான் இரவு நேரப்பயணங்களுக்கு உசிதமானவை என்பது என் கருத்து. //

பாதுகப்பு குறையாய் இருக்கும் எனலாமே ஒழிய, இரவில் பைக்கில் சுற்றும் சுகமே தனி என்பது என் கருத்து!
Muthu said…
//சென்னைக்கு இன்னொரு முகம் இருக்கு! //

தலைவர் பாட்சா சொன்ன "எனக்கு இன்னொரு பேரும் இருக்கு" என்ற வசனம் தான் ஞாபகம் வந்தது...

இரவு நேரம் அல்லது அதிகாலை மூன்று அல்லது நான்கு மணிவாக்கில் நகரத்தை சுற்றி வருவது சுவாரசியான அனுபவம்தான்...
//இரவு நேரம் அல்லது அதிகாலை மூன்று அல்லது நான்கு மணிவாக்கில் நகரத்தை சுற்றி வருவது சுவாரசியான அனுபவம்தான்... //

ஆம் முத்து, அதிகாலை சென்னை கொண்டிருப்பது இன்னொரு அழகிய முகம் :)

நான்கு அல்லது ஐந்து மணிக்கு கடற்கரையில் கிடைக்கும் அமைதியும் நிம்மதியும் மீண்டும் மீண்டும் அங்கு செல்லத்தூண்டும்.
G.Ragavan said…
ராக்கோழியா ஊரு சுத்தீருக்கீங்க.

சின்ன வயசுல சென்னைக்கு லீவுக்கு வருவோம். அப்பல்லாம் இருட்டுன பெறகு டிங்கு டிங்கு டிங்கு டிங்குன்னு அடிச்சிக்கிட்டு குல்பி விப்பாங்க. அப்பத்தைய பேரு சேட்டைசு. சேட்டுங்க விரும்பிச் சாப்பிடுற ஐசுன்னு அப்படியொரு பேரு. வெட்டி எலைல வெச்சிக் குடுப்பாங்க.

அதே மாதிரி ராத்திரி வேளைகள்ள டி.நகர் பிரில்லியண்ட் டுட்டோரியல் பக்கத்துல இருக்குற கையேந்திபவன் மெளகா பஜ்ஜி. ஷ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்!

மத்தபடி ராத்திரியெல்லாம் ஊரு சுத்தினதில்லைங்க.
//ராத்திரி வேளைகள்ள டி.நகர் பிரில்லியண்ட் டுட்டோரியல் பக்கத்துல இருக்குற கையேந்திபவன் //

ராகவன், இது பத்தி ஒரு தனிப்பதிவே போடலாம் :)
G.Ragavan said…
// அருள் குமார் said...
//ராத்திரி வேளைகள்ள டி.நகர் பிரில்லியண்ட் டுட்டோரியல் பக்கத்துல இருக்குற கையேந்திபவன் //

ராகவன், இது பத்தி ஒரு தனிப்பதிவே போடலாம் :) //

போடுங்கய்யா...ஏன் காத்துக்கிட்டு இருக்கீங்க ஹி ஹி
Radha N said…
சென்னைக் காவல்துறையில்,(Friends of Police) காவல் துறை நண்பர்கள் என்ற அமைப்பு உருவான காலகட்டத்தில், நானும் அதில் உறுப்பினராய் சேர்ந்து, காவலர்களுடன், ஜீப்பில் பந்தாவாக, இரவு ரோந்து சுற்றியிருக்கிறேன், விடிய விடிய. நீங்கள் சொல்வது போல் அந்த சூடான தேனீர்..... ஆகா....சும்மா சொல்லக்கூடாங்க....அருமையா இருக்கும்.
//போடுங்கய்யா...ஏன் காத்துக்கிட்டு இருக்கீங்க //
கூடிய சீக்கிரம் போட்டுடலாம் ராகவன்.

//காவலர்களுடன், ஜீப்பில் பந்தாவாக, இரவு ரோந்து சுற்றியிருக்கிறேன், விடிய விடிய.//

அட! இது நல்ல அனுபவமாக இருக்கிறதே!!
ரொம்ப நல்ல பதிவு அருள், நம் சென்னை இரவு வாழ்வை ஞாபகப்படுத்தி விட்டது. இரவில் யாரும் இல்லாத சாலையில் டூ வீலரில் போகும் சுகமே தனி தான்.

அதிலும் இந்த வடபழனி, திருவல்லிக்கேணி ஏரியாவில் எல்லாம் இரவு நேரம் தான் கலகலப்பாக இருக்கும்

Popular posts from this blog

மெட்ராஸ் பாஷை - ஒரு இலக்கண பார்வை

ஏதோ வண்டி ஓடிக்கினுகீது சார்! - ஜெயகாந்தன்

எழுத்தறிய நூலகங்கள்