வாராரு ஆட்டோகாரரு....

சென்னைக்கு போறோம் என்று முன்பெல்லாம் சொன்னதும் "அங்க தண்ணி பிரச்சனை ஆச்சே??!!" என்று பயப்படுத்துவது அதிகம் இருந்தது. இப்ப அந்த பிரச்சனை ஓர் அளவுக்கு முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் உண்மையில் இன்று நம்ம சென்னைவாசிகளுக்கு பிரச்சனையாக உருவாகிவருவது சென்னைக்குள் சுழன்று வரும் பொது போக்குவரத்து சாதனங்கள்தான்னு சொல்லணும். சென்னைக்குள் எந்த பகுதிக்கு செல்வதானாலும் பஸ், ரயில், MRTS (Mass Rapid Transit System) என பல வழிகள் இருந்தாலும், அதன் கூட்ட நெரிசல், சரியான நேரத்துக்கு வருவதில்லை, பஸ் ஸ்டாண்டுகளில் நிற்காமல் செல்வது போன்ற பல காரணங்களால் நடுத்தர மக்கள் பெரும்பாலும் ஆட்டோ என்னும் வசதியை நாட நினைக்கிறார்கள். அந்த வசதி எப்படி நமக்கு உபயோகமாயிருக்கு, அதன் நன்மைகள், அதன் பிரச்சனைகள், ஆட்டோ ஓட்டுனர்களின் நிலை என சில விசயங்களை இங்கு பார்ப்போம். மற்ற பொது போக்குவரத்து வசதிகளை பற்றி அடுத்து வரும் பதிவில் பார்ப்போம்.

ஆட்டோ:

இந்த வசதியை ஆச்சர்யமாக பார்க்கும் வெளிநாட்டினர், சென்னை வந்தால் ஒரு முறையாவது இதில் ஏறி ஒரு சவாரி( பயணம் - சென்னை வட்டாரப் பேச்சு) போக வேண்டும் என்று ஆசைப்படுவர். ஆனால் அதில் தினமும் சவாரி செய்யும் நமக்கு அதன் வசதிகள் தெரியாது. ஆட்டோவில் வசதிகளில் ஒன்று எப்படிப்பட்ட போக்குவரத்து நெரிசலிலும் இலகுவாக ஓட்ட முடியும், அதற்கு காரணம் மூன்று சக்கர வாகனம் என்ற வசதியே. ஆனால் அதுவே சில நேரங்களில் வில்லனாக மாறி பல விபத்துக்களுக்குக் காரணமாகிறது.

சில புள்ளிவிவரங்கள்:

சென்னையில் உள்ள ஆட்டோக்கள் பற்றிய சில புள்ளிவிவரம்..

மொத்தம் ஆட்டோக்கள் - 80, 000
அரசு அங்கீகரிக்கப்பட்ட (பெர்மிட்) ஆட்டோகள் - 45,000
ஷேர் ஆட்டோக்கள் - சுமார் நான்கு ஆயிரம்
பயன் பெறும் மக்கள் - பத்து லட்சம் (நாள் ஒன்றுக்கு)
ஓட்டுனர்களின் சொந்தமாக ஆட்டோ - 32,000
வாடகை வண்டிகள் - 58,000 (இதில் 90% போலீஸ்காரர்களுக்கு சொந்தமானது என்று சொல்லப்படுகிறது.)

மொத்தம் ஆட்டோ ஓட்டுனர்கள் - ஒரு லட்சத்துக்கு மேல்.

நாள் ஒன்றுக்கு சுமார் - நான்கு முதல் ஐந்து கோடி ரூபாய் வசூல் ஆகிறது.

ஆட்டோ:

நாம் வேண்டும் நேரத்தில் நினைத்த இடத்தில் அல்லது அதற்கு மிக அருகில் ஒரு ஆட்டோவை வாடகைக்கு எடுத்துக்கொள்ள முடியும்.

டாக்ஸி, கார் போன்றவைகளை விடக் குறைவான செலவில் இந்த வசதி நமக்குச் சுலபமாக கிடைக்கிறது.

ஒவ்வொரு தெருவிலும் குறைந்தது ஒரு ஆட்டோ ஸ்டாண்டும், நான்கு ஆட்டோவது வாடகைக்கு நிறுத்தப்பட்டிருக்கும்.

ஒவ்வொரு ஆட்டோ ஓட்டுனரும் இன்று கைப்பேசி வைத்துள்ளனர். பழக்கமாகி விட்டால் அவர்களின் கைப்பேசியில் அழைத்தாலே நம் வீட்டுக்கு வந்து அழைத்தும் செல்வர்.

கால் ஆட்டோ என்ற பெயரிலும் கைப்பேசி இணைப்பை வைத்து சில ஆட்டோக்கள் இங்கு ஓட்டுகிறார்கள்.

இது இப்படி இருந்தாலும், ஆட்டோ மீட்டர் வாடகை பின்பற்றப்படுவதில்லை, ஓட்டுனர்களின் பன்மடங்கு வாடகையை உயர்த்தி கேட்பது, பண்பற்ற பேச்சு என பல காரணங்களால் இன்றைய சென்னைவாசிகள் இந்த சேவையை பயன்படுத்த பயப்படும் நிலை உருவாகியுள்ளது.

ஆட்டோ ஓட்டுனர்களில் வாதங்களை விட்டு தள்ளுவதற்கில்லை:

1990களில் மாற்றப்பட்ட மீட்டர் வாடகை அதாவது குறைந்த பட்சம் ரூ7 (இரண்டு கி.மீ), ஒவ்வொரு கி.மீக்கு மூன்று ரூபாய் ஐம்பது காசுகள். அன்று பெட்ரோல் விலை ரூபாய் இருபது (ஆயிலுடன்), இன்று பெட்ரோல் விலை அறுபது ரூபாய்(ஆயிலுடன்), மூன்று மடங்காக உயர்ந்துவிட்டது ஆனால் இன்றும் அதே வாடகையில் ஓட்டினால் நஷ்டதில் ஓட்ட வேண்டும் என்கிறார்கள் ஆட்டோ ஓட்டுனர்கள்.

* 60% ஆட்டோக்கள் வாடகை ஆட்டோக்களாக உள்ளன, அதன் ஓட்டுனர்கள் நாள் ஒன்றுக்கு(காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை) ரூ 150 வரை ஆட்டோ உரிமையாளருக்கு வாடகையாக தரவேண்டியுள்ளது.

* பெட்ரோல் செலவுகள்.

* போலீஸ் மாமூல்.

* வண்டிக்கு ஆகும் பன்சர், பிரேக் கேபிள் மாற்றுவது, etc., என சிறு செலவுகளுக்கும் இவர்கள் மீதமுள்ள பணத்தில் தான் செய்யவேண்டும்.

இப்படி அவர்கள் சொல்லும் சிலவற்றில் நியாயம் இருந்தாலும், இன்று அவர்கள் வசூலிக்கும் குறைந்த பட்ச வாடகை இருபது ரூபாய் - அரை கி.மீ லிருந்து ஒரு கீ.மீ வரை, அதை தாண்டினால் ரூ 30 , 40 என்று ஏற்றிக்கொண்டே போவார்கள். மூட்டை முடிச்சுகளுடன் சென்றுவிட்டால் அதற்கும் தனி கட்டணம் வசூலிப்பவர்களும் உண்டு. ஊருக்குப் புதிதாக வந்திருக்கிறார்கள் என்று தெரிந்துவிட்டால் அவ்வளவு தான் வழக்கமாக போகும் வாடகையை விட இரண்டு மடங்கு உயர்த்திக்கேட்பார்கள்.

ஒரு ஸ்டாண்டில் ஒரு ஓட்டுனர் சொன்ன வாடகையைத் தான் அங்குள்ள ஓட்டுனர்கள் அனைவரும் கேட்பார்கள் (சில நொடிகளில் எப்படித்தான் தான் கேட்ட வாடகையை அனைவருக்கு சொல்லுவாங்களோ தெரியவில்லை!!! ), அந்த வழியாக போகும் ஆட்டோவை ஸ்டாண்டில் உள்ளவர்கள் சவாரியேற்ற விட மாட்டார்கள், எதிர்த்து பேசும் வாடிக்கையாளர்களுக்கு சில நேரம் ஸ்டாண்டில் உள்ள ஓட்டுனர்கள் அனைவரும் சேர்ந்து "டின்" கட்டுப்படுவதும் உண்டு.

குட்வில் என்னும் இயக்கம், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மக்களுக்கு இடையில் ஒரு பாலமாக இயங்குகிறது. இதில் உறுப்பினர்களாக பல ஆட்டோ ஓட்டுனர் சேர்ந்துள்ளனர். குட்வில் இது போன்ற ஆட்டோ வாடகை, மற்ற பிரச்சனைகளை கூடுமானவரை தீர்க்க மூயற்சி செய்கிறது, ஆனால் இதற்கு ஓரே தீர்வு அரசுதான் கொண்டுவர முடியும் என்பது சென்னைவாசிகளின் தீர்க்கமான நினைக்கிறார்கள். சென்னை வருபவர்களுக்கு ஆட்டோவை பற்றி ஒரு எச்சரிக்கை கட்டுரை ஒன்றை கண்டேன். இதோ அதன் சுட்டி. இப்படி அழிவுப் பாதையை நோக்கி ஒரு பொது போக்குவரத்து முறை செல்வதைத் தடுப்பது நம்முடைய அரசின் கடமையும் கூட.

ஷேர் ஆட்டோ:

கடந்த சில வருடங்களாக இது மக்களிடம் ஒரு பெருமளவு வரவேற்பை பெற்ற திட்டமாக மாறிவருகிறது. பஸ், ரெயில் போன்ற போக்குவரத்து சாதனங்களில் வழித்தடங்களும், அதன் நெரிசல், அதன் குறைப்பாடுகளை இந்த ஷேர் ஆட்டோ வெகுவாக குறைக்கிறது. பஸ் ஓட்டங்கள் குறைவாக உள்ள வழித்தடங்களை அந்த குறையை இந்த ஷேர் ஆட்டோக்கள் சரி செய்வதே உண்மை.

சுமார் பத்து முதல் பதினைந்து கிலோமீட்டர் தூரம் உள்ள வழித்தடங்களாக இவை செயல்படுகிறது. எட்டுப் பேர் மட்டுமே ஏற்ற கூடிய ஆட்டோக்கள் இதற்கு பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் விதிமுறைகளை மீறி இதில் 12 முதல் 14 பேர் வரை ஏற்றி செல்கிறது இந்த ஷேர் ஆட்டோக்கள். தலை ஒன்றுக்கு குறைந்த பட்சம் ரூ 5 முதல ரூ 10 வரை வசூலிக்கபடுகிறது(நம்ம ஊரு பஸ் கட்டணத்தின் அளவே!!). ஒவ்வொரு வழித்தடத்திலும் குறைந்த பட்சம் எண்பது ஷேர் ஆட்டோக்கள் ஓடுகின்றன.

ஒவ்வொரு வழித்தடத்தில் ஒரு ஆட்டோ சுமார் ரூபாய் 800 முதல் 1000 வரை வசூல் ஆவதாகவும், இதில் சுமார் ரூ 500 ஷேர் ஆட்டோவின் வாடகையாக அதன் முதலாளிக்கு கொடுக்கவேண்டும் என்று ஒரு ஷேர் ஆட்டோ ஓட்டுனர் தகவல் கொடுத்தார். அதனால் தான் இவர்கள் ஓவர் லோடிங்் செய்வதாகவும் சொல்கிறார். இந்த ஓவர் லோடிங்் சில நேரங்களில் விபத்துக்கு காரணங்களாகிறது. பல போலிஸ்காரர்களின் வசூல் வேட்டையில் சிக்கி சில நூறு ரூபாய்களும் செலவழிவது "மாமூலாம்". இவையனைத்தையும் அரசு ஒரு வரைமுறைக்குள் கொண்டுவருமானால் மக்களின் போக்குவரத்து பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு வரலாம்.

அரசிடம் சென்னைவாசிகள் என்ன எதிர்ப்பார்க்கிறார்கள்?

  • மீண்டும் ஆட்டோக்களுக்கு மீட்டர் திட்டத்தை கொண்டுவருவது/கட்டாயப்படுத்துவது.
  • பழைய ஆட்டோ கட்டணங்களை உயர்த்துவது (முதல் இரண்டு கி.மீக்கு ரூ14, ஒவ்வொரு கி.மீக்கு ஏழு ரூபாய் வரை உயர்த்தலாம்).
  • மின்னணு மீட்டர் கொண்டுவந்து சீரமைப்பது. அதை திருத்தமுடியாத படி சீல் வைப்பது.
  • போலீஸின் "மாமூல்" என்ற முறையை ஒழிக்க நடவடிக்கை எடுப்பது. ("அது மாமூலான விசயம்" என்று சொல்லாமல் முயற்சிப்பது).
  • ஆட்டோ உரிமையாளர்களின் வாடகைக் கொள்ளையை கட்டுப்படுத்துவது.
எது எப்படியோ பேருந்துகளுக்கு இந்த ஆட்டோக்களும், ஷேர் ஆட்டோ நல்ல மாற்று ஏற்பாடாகவே தெரிகிறது. அரசு வரைமுறை படுத்திவிட்டால் மக்களுக்கு மென்மேலும் பயன் பெறுவார்கள் என்பது திண்ணம்.

உபசெய்தி: கடந்த ஜூலை மாதம் முதல் நம்ம ஊரு ஆட்டோ லண்டனிலும் ஓடத்துவங்கியுள்ளது, அதற்கு டக்டக் என்று பெயர் வைத்துள்ளனர். அதை தயாரித்து வழங்குவது நம்ம பஜாஜ் ஆட்டோ தாங்க!!!

Comments

போனமுறை ஒரு ஆட்டோக்காரர்( இப்ப அவர் நம்ம நண்பரா ஆயிட்டார்!) சொன்னது.

" எதோ ஒரு பத்து ரூபாய் எக்ஸ்ட்ரா கேக்கறொம்மா. அப்படி அநியாயத்துக்குக் கேக்கறதில்லை.
நமக்கும் புள்ளைகுட்டிங்க இருக்கேம்மா. எல்லாச்செலவும்போக தினம் அப்படி ஒண்ணும் பெருசா
நிக்கறதில்லைமா?

பத்து ரூபாயை வச்சு பங்களாவா கட்டமுடியும். எதோ உங்க பேரை(??!!) சொல்லி புள்ளைங்களுக்கு எதாவது
திங்கறதுக்கு வாங்கிப்போறதுதான். இல்லே தலையைக் காலை வலிச்சா ஒரு காப்பியோ டீயோ சாப்புட்டுக்குவோம்
அவ்வளவுதாம்மா"

வெளிநாடுகளிலே 40$ வாயை மூடிக்கிட்டு கொடுத்தடறோம். உள்ளூர்ன்னாதான் இப்படி ஒரு எண்ணம். பாவம், புழைச்சுப்
போகட்டுமுன்னு விட்டுடறதுதான். ஆனா ஒண்ணுங்க, அட்ரஸ் தெரியாட்டியும் அங்கெ இங்கே விசாரிச்சுக் கரெக்ட்டா
நம்மளைக் கொண்டுபோய் சேர்க்கற சேவையைப் பாராட்டியே ஆகணும்.

நம்ம ஸ்டேண்ட் ஆட்டோக்காரர் நண்பர் இல்லேன்னா, மத்த ஆட்டோக்காரர்கள்.'கணேஷ் இப்ப வந்துருவாரும்மா. வெயிட் பண்ணறிங்களா?
இல்லே அர்ஜண்ட்ன்னா நம்ம வண்டியிலே வாங்க'ன்னு மரியாதையாத்தான் சொல்றாங்க.

கொண்டுபோய் விட்டுக் காத்திருந்து நம்மைத் திரும்பக் கொண்டு வந்துவிடவும் செய்றாங்களே. அது எவ்வளோ நன்மை?

நாங்களும் ஆட்டொக்காரரை ஒரு நாளும் அவமரியாதையாப் பேசுனது இல்லை. அதுலெயும் நம்ம கணேஷ் ரொம்ப
நம்பகமான ஆள். இப்படிப் பலபேர் இருக்கலாம். நாங்க காபி,டிபன் சாப்புடப்போனா அவரையும் உள்ளெ வரச்சொல்லி
வாங்கித்தந்துருவோம். நம்மைப்போல அவரும் மனுஷர்தானே. பசின்றது எல்லாருக்கும் பொது இல்லையா?

அதெப்படி ஆட்டோக்காரர்கள் இப்படி ஒட்டுமொத்தமாக் கெட்ட பேரைச் சம்பாரிச்சு இருக்காங்க? ஆச்சரியமா இருக்கு.
இவனுங்களுக்குப் பயந்து பாதிநேரம் எவ்வளவு கூட்டமானாலும் பஸ்ஸிலையே போயிடறது. இல்லைன்னா கால் டாக்ஸிதான்.

என்னாதான் பிரச்சனை இருந்தாலும் இவர்கள் அடாவடியும், திமிரும், மரியாதை இல்லாத பேச்சும், ஒவ்வொரு முறை ஏறும் போதும் ரத்தக் கொதிப்புதான்.

என்றுதான் சண்டையின்றி ஆட்டோ ஏறுவேனோ தெரியவில்லை.
கட்டுரை நன்றாக வந்திருக்கிறது, வாழ்த்துகள்.

//"அங்க தண்ணி பிரச்சனை ஆச்சே??!!" என்று பயப்படுத்துவது அதிகம் இருந்தது. இப்ப அந்த பிரச்சனை ஓர் அளவுக்கு முடிவுக்கு வந்துவிட்டது.
//
நெசமாவா? போன முறை பதிவில் இது மாதிரி நீங்க சொன்னிங்களே என்று வேளச்சேரியில் இருந்த நண்பனை என்னடா தண்ணி பிரச்சினையை அம்மா தீர்த்துட்டாங்களாமே என்று கேட்டபோது எவன் சொன்னது, என்ன நக்கலா என்று எகிற ஆரம்பித்துவிட்டான், இப்போ எனக்கு சென்னையில் தண்ணீர் பிரச்சினை தீர்ந்ததா? இல்லையா? சரியான ஒரு முடிவா சொல்லுங்க....
முந்தைய பின்னூட்டத்தில் சொன்ன நண்பனின் தந்தை அதிமுக சார்பில் அவருடைய கிராமத்தில் சென்ற முறை பஞ்சாயத்து தலைவராக இருந்தவர், பாவம் அந்த நண்பருக்கு திமுக முத்திரை குத்திடாதிங்க, அதுக்கு தான் சொல்றேன்...
BadNewsIndia said…
நல்ல பதிவு.
நன்றாக விஷயங்களை சேகரித்து எழுதியது மட்டுமல்லாமல், இருக்கும் சில பிரச்சனைகளுக்கு தீர்வும் நீங்களே சொல்லியிருப்பது அருமை.

ஆட்டோ நமக்கு ஒரு வரப்பிரசாதம் என்றுதான் சொல்ல வேண்டும்.
என்னதான் பேரம் பேசினாலும், கடைசியில் படிந்து விடுவார்கள். அவர்களும் வாழட்டும்.

சில சமயம் 20 குழந்தைகளை ஒரே ஆட்டோவில் ஏற்றிச் செல்வதை பார்த்திருக்கிறேன். அதை செய்யாமல் கைவிட வேண்டும்.
We The People said…
//வேளச்சேரியில் இருந்த நண்பனை என்னடா தண்ணி பிரச்சினையை அம்மா தீர்த்துட்டாங்களாமே என்று கேட்டபோது எவன் சொன்னது, என்ன நக்கலா என்று எகிற ஆரம்பித்துவிட்டான்//

குழலி உங்க நண்பரை மெட்ரோ வாட்டர் டிப்பார்ட்மெண்டை கொஞ்சம் அணுகச்சொல்லுங்க. அவர் வீட்டு கனெக்ஷன்ல ஏதாவது பிரச்சனை இருக்கும் போல... கடந்த இரண்டு வருடங்களா எங்களுக்கு எல்லாம் தினமும் தண்ணி வருது தல... போதா குறைக்கு நிறைந்து ரோட்டுல வழிய நிலைதான் பல இடங்களில் நான் பார்க்கிறேன்.
We The People said…
//அந்த நண்பருக்கு திமுக முத்திரை குத்திடாதிங்க, அதுக்கு தான் சொல்றேன்...//

அண்ணா நம்மக்கு அது தானா வேலை!!?? ஏங்க இப்படி!!??
RBGR said…
"'ஆட்டோ' 'ஆட்டோ' என்று ஆட்டுவதாலோ உனக்கு ஆட்டோ என்று பெயர்!!"

:)

என்ன்வோ போங்க..
நேத்து தான் குற்றம் நடந்தது என்ன? அப்படின்னு ஷேர் ஆட்டோகாரர் சிலரின் கைங்கரியம் சில விஜய் டி.வி.யில் பார்க்க நேர்ந்தது..

இன்னிக்குப் பார்த்தால் உங்க பதிவு..

ஆமா..ஏன் அந்த மேட்டரைச் சொல்லாமல் விட்டீங்க..

ஆமா! அவங்க நல்லவரா ! கெட்டவரா..!!
We The People said…
ஆமா ஆட்டோகாரர்கள் நாயகன் வேலு நாயக்கர் பாரு!! நல்லவரா கெட்டவரான்னு கேட்க!! எழுதினதை வைத்து முடிவு பண்ணுங்க தலைவா. எல்லா இடத்திலயும் நல்லவங்களும் இருங்காங்க, கெட்டவங்களும் இருக்காங்க. பாருங்க நம்ம துளசி மேடம் கமெட்டை.
RBGR said…
அய்யா!
நாங்களும் பாட்ஷா பாத்தவங்க தான்..

ஆனால் ..எப்பொழுதும் ஒரு நட்புறவு ஒரு சிலரோடு பயணிக்கும் போது மட்டுமே வருகிறது,..ஆனால் பெரும்பான்மை தானே மேட்டர்..

மிகக் களைப்புடன் ஊர் வந்து சேர்ந்ததும் கடுப்பாக்குவத்து யார் என்று மக்களை கேளுங்க..



எத்தனை பேர் ஏமாந்துள்ளனர் என்று கேட்டுப்பாருங்கள்.

மேலும் இப்போதைய முக்கிய சமூக குற்றவாளிகள் இந்த ஆட்டோகாரர் என்ற ஆடையை அணிந்து தான் வலம் வருகின்றனர் என்பது ஊர் அறிந்த விபரம்..

விதி விலக்குகள் உதாரணங்களாகாது.
ரவி said…
////என்னாதான் பிரச்சனை இருந்தாலும் இவர்கள் அடாவடியும், திமிரும், மரியாதை இல்லாத பேச்சும், ஒவ்வொரு முறை ஏறும் போதும் ரத்தக் கொதிப்புதான். ////

கொத்தனார் சொல்வது 100 சதவீதம் சரி...

இரவு இரண்டு மணிக்கு அதிகம் காசு கேட்டு தகறாறு செய்த ஆட்டோக்காரனை திருவாண்மியூர் பீச்சுக்கு அழைத்து சென்று (நானும் என் நன்பரும்) வாங்கு வாங்கென்று வாங்கியது நினைவுக்கு வர - சின்னதாக சிரித்துக்கொண்டேன்...!!!
We The People said…
//ஆட்டோக்காரனை திருவாண்மியூர் பீச்சுக்கு அழைத்து சென்று (நானும் என் நன்பரும்) வாங்கு வாங்கென்று வாங்கியது//

ரவி இந்த வேலையெல்லாம் கூட பார்ப்பீங்களா?? அப்ப உங்ககிட்ட பார்த்து தான் நடந்துக்கவேணும் போல... :))))
//வெளிநாடுகளிலே 40$ வாயை மூடிக்கிட்டு கொடுத்தடறோம். உள்ளூர்ன்னாதான் இப்படி ஒரு எண்ணம்.//

டீச்சர், நீங்க எந்த எண்ணத்தைச் சொல்லறீங்களோ தெரியலை. வெளிநாட்டுல ஆகட்டும் இந்தியாவிலாகட்டும் ஒரு போர்டு போட்டு இந்த ஏரியாவுக்கு இந்த ரேட்டுன்னு போடறான், இல்லை மீட்டர் வெச்சு இதான் கட்டணமுன்னு சொல்லறான். நம்ம ஊர் அநியாயம் வேற எங்கையும் கிடையாது.

எனக்கு ரொம்ப பிரச்சனை (கவனிக்கவும், பிரச்சனையே பண்ணாமன்னு சொல்லலை) பண்ணாம ஒரு ஆட்டோகாரர் வந்தாருன்னா இறங்கி பேசுனதை விட ஐந்தோ பத்தோ அதிகம்தான் கொடுப்பேன்.
We The People said…
துளசி மேடம்,

இலவசக்கொத்தனார் சொல்லறது கரெக்ட். அஞ்சோ பத்தோ அதிகம் கொடுக்கறது தப்பில்ல... கொடுக்கமாட்டோம் என்று சொல்லவில்லை. வாய்க்கு வந்த மாதிர் கேக்கறது தான் தப்புன்னு சொல்லியிருக்கேன்.

உங்க கணேஷ் மாதிரி ஆளே இல்லைன்னு நான் எங்கயும் சொல்லவில்லை. அப்படியும் சிலர் இருக்காங்க.. ஆனால் பெரும்பாலும் ரகளை பண்ணறவங்க தான் அதிகம்.
Syam said…
துளசியக்கா சொல்றாமாதிரி நான் இருந்த வீட்டுக்கு பக்கத்துல எங்க ரெகுலர் ஆட்டோகாரர் இருந்தார் பேரு பச்சை ரொம்ப நல்ல மனுசன்...
அதே மாதிரி கொத்ஸ் சொல்றதும் அடிக்கடி நடக்கும் :-)

//அரசு அங்கீகரிக்கப்பட்ட (பெர்மிட்) ஆட்டோகள் - 45,000//

இதுல எத்தனை அரசாங்க அதிகாரிகளுக்கு சொந்தம்னு சொல்லாம விட்டுட்டீங்களே :-)
ஒரு வாரமாகச் சென்னை மழையில் ஆட்டோக்காரர்கள் பாடு
சந்தோஷம்தான். நேற்று நாகேஷ் தியேட்டர் வரை போய் வர 100ருபாய் கேட்டார்.

கொடுக்கத்தான் கொடுத்தேன்,
என்னதான் வயசானாலும் தனியா போயிட்டு வர பயமா இருக்கே.
என்ன வெல்லாம் நடக்கிறது நம்ம ஊரில!!அதற்குமேல் அவர் பள்ளம் மேடு எல்லாவற்றிலும் வண்டியை ஓட்டும் வேகத்தைக் குறைக்க சொன்னால் அப்படித்தாம்மா ஓட்டமுடியும் என்னால் என்கிறார்.
We The People said…
Syam,

//இதுல எத்தனை அரசாங்க அதிகாரிகளுக்கு சொந்தம்னு சொல்லாம விட்டுட்டீங்களே :-)//

அந்த விசயத்தை பற்றி தகவல் இல்லை. ஆனால் வாடகை ஆட்டோக்களில் 90% போலீஸ்காரர்களின் ஆட்டோக்கள் என்று சில ஆட்டோ ஓட்டுனர்கள் சொல்லறாங்க.

பின்னூட்டமிட்ட துளசி கோபால், இலவசக்கொத்தனார், குழலி, Bad News India, TAMIZI, செந்தழல் ரவி, வல்லிசிம்ஹன் மற்றும் Syamமுக்கும் நன்றி
சூடு!சூடு!! என்கிறார்களே.., அப்படி யென்றால் என்ன விளக்க முடியுமா?
ரவி said…
////பின்னூட்டமிட்ட துளசி கோபால், இலவசக்கொத்தனார், குழலி, Bad News India, TAMIZI, செந்தழல் ரவி, வல்லிசிம்ஹன் மற்றும் Syamமுக்கும் நன்றி///

இந்த மாதிரி மொத்தமா நன்றி சொல்லுறது கெட்ட பழக்கம்...ஒவ்வொருத்தருக்கு தனித்தனியா சொல்லனும் ஆமாம்...!!!

கல்யானப்பத்திரிக்கையை ஒவ்வெரு ஆளுக்கும் தனித்தனியா பேர்போட்டு கொடுத்தாதானே மரியாதை !!!!!

//இந்தவேலை எல்லாம் பார்ப்பீங்களா//

அதான் சொன்னேனே நாங்க எல்லாம் ரொம்ம்ம்ப நல்லவங்க என்று..!!!
ஓகை said…
இலவச கொத்தனார் சொல்வது 90% சரி. ஏனென்றால் 90% ஆட்டோக்கள் காவல்துறையினருக்கும் அரசியல் பிரமுகர்களுக்கும் சொந்தமானவை.

என் கருத்துக்கள்:

1. இப்போதுள்ள மீட்டர் கட்டணம் கிமீக்கு 3.50 என்பது மிக மிகக் குறைவு. ஒரு லிட்டருக்கு 25கிமீ ஓடினாலே இப்போதுள்ள எண்ணெய் விலைப்படி கிமீக்கு ரூ2 க்கு மேல் ஆகிறது. கிமீக்கு ரூ7 என்பது சரியாக இருக்கும்.

2.பங்களூரில் இருப்பதுபோல் வாயு எரிபொருளை அனுமதிக்க வேண்டும். இப்போது சில ஆட்டோக்களில் மட்டுமே lpg உபயோகிக்க இயலும். இந்நிலையில் சொந்த ஆட்டொ வைத்திருப்பவ்ர்களுக்கே சிறிய அளவு இலாபம்தான் கிடைக்கிறது.

3.பல ஆட்டொ ஓட்டிகள் பயங்கரமான ஓட்டும் திறமை பெற்றவர்கள். ஆனால் இந்த ஓட்டும் திறமை சாலை உபயோகிக்கும் அனைவரையும் - சரக்குந்துகள் மற்றும் மாநகர பேருந்துகள் உட்பட - பெரும் பீதிக்குள்ளாக்குகிறது. இவர்களுக்கு போதனை தேவைப் படுகிறது.

3. தொலைப்பேசியில் அழைத்தால் வருவதான சேவையை விரிவு படுத்தினால் பல ஆட்டோ ஓட்டுனர்களின் வருமானம் பல்மடங்கு பெருகிவிடும்.
அன்புடையீர்,

ஆட்டோ உலகம் தனி உலகம்.

நல்லவர்களும் இருக்கிறார்கள், கெட்டவர்களும் இருக்கிறார்கள். அன்றைய பொழுதுக்குத் தேவையான சவாரிகள் கிடைத்ததும் முடித்துவிட்டு வீட்டிற்குச் சென்று ஓய்வெடுப்போரும் இருக்கிறார்கள்.

அங்கொன்றும் இங்கொன்றுமாக நல்லவர்கள் இருப்பினும் பொதுவாக இவர்களுக்கு கெட்டபெயர்தான் இருக்கிறது.

வட்டிக்கு வண்டி வாங்கி, தவணை கட்டமுடியாமல், பணம் கொடுத்தவரின் பகுதிக்கு சவாரிகூட செல்லாமல் போக்குக் காட்டும் சிலரும் இருக்கிறார்கள்.

இவர்களை நைச்சியமாகப் பேசி அழைத்துச் சென்று வண்டியைப் பிடுங்குவதற்கு முகவர்களும் இருக்கிறார்கள்.

அது ஒரு தனி உலகம் அய்யா.

http://www.maraththadi.com/article.asp?id=1541

இந்தச் சுட்டியில் எனது ஆட்டோ ஓட்டுனர் நண்பருக்கு ஏற்பட்ட விபத்து குறித்து எழுதியுள்ளேன். நேரமிருந்தால் படிக்கவேண்டுகிறேன்.

அன்புடன்
ஆசாத்
We The People said…
azadak நீங்க சொன்னதை தான் நானும் சொல்கிறேன். சில நல்லவர்களாக இருக்கிறார்கள் நான் மறுக்கவும் இல்லை. மக்கள் பிரச்சனையை முன்நிறுத்தியே இந்த பதிவு. உங்கள் சுட்டியை பார்த்தேன். நன்றாக உள்ளது.

நன்றி azadak.

அன்புடன்,

ஜெயசங்கர்.நா
We The People said…
செந்தழல் ரவி,

//இந்த மாதிரி மொத்தமா நன்றி சொல்லுறது கெட்ட பழக்கம்...ஒவ்வொருத்தருக்கு தனித்தனியா சொல்லனும் ஆமாம்...!!!//

உங்க ஆசையை ஏன் கெடுப்பானேன். நாமே நமக்கு பின்னூட்டம் போட்டுகிற மாதிரி ஆகிவிடக்கூடாது என்பதால் தான் மொத்தமா நன்றி சொன்னேன். அது உங்களுக்கு புடிக்கலயா?? சர் விடுங்க...

கருந்துக்களுக்கு நன்றி செந்தழல் ரவி

Boldஆ போட்டுவிட்டேன் போதுமா??!

:))))

நன்றி,

நா.ஜெயசங்கர்
Anonymous said…
ஆட்டோ - இது ஒரு வரமா? சாபமா? இன்று வரை விடை கிடைக்கவில்லை. ஆனால் இந்த வார்த்தையைக் கேட்டவுடன் பலருக்கு ரத்தக் கொதிப்பு ஏறி விடுகிறது. பெரும்பாலும் மோசமான அனுபவங்களே. குட்வில் போன்ற அமைப்புகள் மட்டுமே இதை சரி செய்ய முடியும்.
//சூடு!சூடு!! என்கிறார்களே.., அப்படி யென்றால் என்ன விளக்க முடியுமா?//

ஆட்டோ மீட்டர்ல சூடு வைக்கிறதுனா வேற ஒன்னும் இல்லை , மீட்டர்ல ஒரு கியர் மெக்கானிசம் இருக்கும் , கியரில் உள்ள ஒவ்வொரு பல்லும் நகரும் போது ஒரு யூனிட் என மீட்டரில் ஓடிக்காட்டும் , மீட்டர் ஓடும் ஆட்டோவில் ஏறினால் தெரியும் 40 காசு என்ற அளவில் சீராக மாறி வரும்.

இதில் கொஞ்சம் பற்கலை சேதப்படுத்தி விட்டால் போதும், 5 ரூபாய்க்கு அடுத்து ஆறு ரூபாய் என நேராக ஜம்ப் அடிக்கும், அப்படி பல்லை சேதப்படுத்த சால்டரிங் அயர்ன் என்ற சூட்டுக்கோலை வைத்து மழுங்க அடிப்பார்கள் கியரை , அதான் சூடு வைக்கிறதுனு சொல்றது!

டிஜிட்டல் மீட்டரில் சூடு வைக்க முடியாது தற்போது அதனைக்கட்டாயம் ஆக்கி இருக்கும் போது பெரும்பாலனவர்கள் அதனை பின் பற்றவில்லை. விதி முறை என்பதே மீறத்தானே!

அடிக்கடி ஒரு இடத்திலே இருந்து ஆட்டோவில் சவாரி போக ஆரம்பித்தால் அங்கிருக்கும் ஆட்டோ ஓட்டுனர்கள் அன்பாகவே பழகுவார்கள். புதியவர்கள் கிட்டே தான் கைவரிசைலாம். எனக்குலாம் பேரமே பேசாமா வருவாங்க எங்க ஏரியாவில , கொடுக்கிறத கொடுங்க சார்னு தான் சொல்வாங்க, இதிலும் சில சமயம் விட்டை விட்டு தூரமான இடத்தில் பார்த்தால் ஸ்டேண்டுக்கு தான் போறேன் வாங்க , என்று கூப்பிட்டு ஏற்றிக்கொண்டவர்களும் உண்டு , நான் தூரம் அதிகமாக இருக்கே என்று எவ்வளவுனு கேட்டா அப்பவும் கொடுக்கிறத கொடுங்க என்று சொல்லி கொடுப்பதை வாங்கிக்கொள்வார்கள்.

என்ன எல்லாமே நல்லதா சொல்றேனு பார்க்கறிங்களா இதெல்லாம் எங்க ஏரியா வண்டிகளுக்கு மட்டும் தான், மற்ற இடத்தில் போய் ஆட்டோ பேசி சண்டை வராத குறைதான்! கடைசியில் சாவுகிராக்கினு சொல்லிகிட்டே வருவாங்க :-))

ஆட்டோக்காரர்கள் நடந்து கொள்ளும் விதம் இடத்திற்கு தக்க மாறும். செண்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்ல ஒரு மாதிரி, ஏர் போர்ட்ல ஒரு மாதிரி , பேருந்து நிலையத்தில் ஒரு மாதிரி, வீட்டுக்கு பக்கத்து ஸ்டேண்டில் ஒரு மாதிரி!

Popular posts from this blog

மெட்ராஸ் பாஷை - ஒரு இலக்கண பார்வை

27D