கண்ணதாசன் பதிப்பகம் என்ற பலகை வைத்திருந்த தெருவினுள் நுழைந்து வண்டியை பூங்காவின் பின் வாசலில் நிறுத்தி விட்டு நுழைந்தேன். வெயில் இன்னும் தாழ்ந்திருக்கவில்லை. சிமென்டு பாவியிருந்த நடைபாதை வழியே சுற்றிக் கொண்டு வந்தால், தூரத்தில் பளபளக்கும் மொட்டைத் தலை தென்பட பாலபாரதியின் இருப்புப் பளிச்சிட்டது. பாலா, சிறில் அலெக்ஸ், உண்மைத் தமிழன் உட்கார்ந்திருந்தார்கள். வழக்கமான இடத்துக்குச் சற்று தள்ளி நிழலில் இருந்தார்கள். சிறில், இப்போது பழகிப் போனபடி, உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தார். (அருகிலிருந்த நிழல் மேடையில் இன்னொரு குழுவின் சந்திப்பு நடந்து கொண்டிருந்தது.) வெயில் குறையும் வரை இங்குதான் உட்கார வேண்டும். பாலா சரியாக மூன்றரை மணிக்கு சந்திப்பை ஆரம்பித்து விட்டார். தனியாகப் பேசிக் கொண்டிருந்த போஸ்டன் பாலா, விக்கி, ஐகாரஸ் பிரகாஷும் சேர்ந்து கொள்ள அதற்குள் ராமகி ஐயா, தருமி ஐயா, பாலராஜன் கீதா, வந்து சேர்ந்து விட வட்டம் பெரிதாகியிருந்தது. அப்போதே பத்து பேருக்கு கிட்ட சேர்ந்து விட்டோம் என்று நினைவு. முதலில் சாகரனுக்கு அஞ்சலி செலுத்தும் சிறுமலர் வெளியீடு, நான் கொடுக்க பாலராஜன் கீதா பெற்றுக் கொண்டார்....