எழுத்தறிய நூலகங்கள்

Connemara Public Libraryபள்ளியில் படிக்கும் போதே நூலகத்தில் உறுப்பினராகி புத்தகங்கள் படிக்க வேண்டும் என்ற ஆசை நிறைவில்லை. சென்னைக்கு வந்ததும் அந்த எண்ணம் மீண்டும் உயிர் விட்டது.

கல்லூரி விடுதியில் சேர்ந்த உடன் நடக்கும் ராகிங் வேடிக்கைகள் ஆரம்பித்த காலம். விடுதியில் தங்காத சில மாணவர்களுடன் சேர்ந்து கலாய்ப்பதற்காக ஒரு இரண்டாம் ஆண்டு மாணவர் மிதிவண்டியில் உட்கார வைத்து புரசைவாக்கம் கூட்டிப் போனார். போகும் வழியில் "இந்த ரோட்டில் அந்த பக்கம் அமெரிக்கன் லைப்ரரி இருக்கு, உனக்குப் புத்தகம் படிக்க ஆர்வம் இருக்கில்லையா, போய் மெம்பராயிக்கோ" என்று கைகாட்டி விட்டுக் கூட்டிப் போயிருந்தார்.

ஆனால், முதலில் வாய்த்தது கன்னிமரா போவதுதான்.

இரண்டாமாண்டு படிக்கும் போது உறுப்பினர் ஆகியே விட்டேன். கன்னிமராConnemara Public Library நூலகத்தில் உறுப்பினராவதில் அப்போது இருந்த சிரமம், விண்ணப்பப் படிவம் பெறுவதுதான். ஒவ்வொரு முறை போகும் போதும், படிவம் வைத்திருப்பவர் இருக்கையில் இருக்க மாட்டார், இருந்தால் படிவம் தீர்ந்து போயிருக்கும், என்று ஒரே இழுத்தடிப்பு. மனம் தளராமல் மீண்டும் மீண்டும் முயன்றதில் ஏழாவது அல்லது எட்டாவது முயற்சியில் ஒரு படிவம் கிடைத்தே விட்டது.

அதில் உத்தரவாதக் கையெழுத்துக்கு கல்லூரியில் பேராசிரியர் ஒருவரைப் பிடித்து விட்டேன். கட்டணம் மிகக் குறைவுதான். 23Cயிலோ அல்லது வேறு ஏதாவது தடத்திலோ ஏறி எழும்பூர் அருங்காட்சியகம், மகப்பேறு மருத்துவமனை இருக்கும் இடத்துக்கு வழி கேட்டுப் போக வேண்டும். பாந்தியன் சாலையில் அருங்காட்சியகம் இருக்கும் அதே வளாகத்தில் மரங்களால் சூழப்பட்ட ஒரு கட்டிடத்தில் இருக்கிறது இந்த கன்னிமரா பொது நூலகம்.

மூன்று தளங்களில் புத்தகங்கள், புத்தகங்கள், புத்தகங்கள். தமிழ், ஆங்கிலம், பிற தென்னிந்திய மொழிகள், பெரிய வட இந்திய மொழிகள் என்று இரவல் எடுத்துக் கொள்ள, புரட்டிப் பார்க்க மட்டும் என்று புத்தகங்களும் பத்திரிகைகளும் வெள்ளம் போலக் கிடைக்கும். எதைப் படிக்க எதை விட என்று திண்டாடிப் போகச் செய்யும் மாபெரும் தொகுப்பு இந்த நூலகம்.

பத்திரிகைகளின் பழைய இதழ்களை எழுதிக் கொடுத்து வாங்கிப் படிக்கலாம். பழைய அரிதான புத்தகங்களைத் தனியாகப் பரமாரிக்கிறார்கள்.

சென்னை மற்றும் சுற்றுப் புறங்களில் வசிக்கும் 17 வயதுக்கு மேற்பட்ட யாரும் இந்த நூலகத்தில் உறுப்பினராகச் சேரலாம். இரண்டு புத்தகங்களுக்கு நூறு ரூபாய் என்ற வீதத்தில் முன்பணம் செலுத்தி ஆறு புத்தகங்கள் வரை எடுத்துச் சென்று இரண்டு வாரத்துக்கு வீட்டில் படித்துக் கொள்ளலாம். ஆண்டுக்கு ஐம்பது ரூபாய் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும்.

இணையத் தளத்தில் உறுப்பினர் விண்ணப்பப் படிவப் படி கிடைக்கிறது. அதை அச்செடுத்து விபரங்களை நிரப்பி அரசு அலுவலர் ஒருவரின் உத்தரவாதக் கையெழுத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.

கன்னிமரா நூலகம் இந்தியாவின் நான்கு தேசிய நூலகங்களில் ஒன்று. 1861ல் ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்டது இந்த நூலகம். விக்கி சுட்டி.

கல்லூரியில் படிக்கும் போது உறுப்பினரான இன்னொரு நூலகம் அப்போது USIS என்றும் இப்போது அமெரிக்கன் லைப்ரரி என்றும் அறியப்படும் அமெரிக்க தகவல் மைய நூலகம்.

கல்லூரி அடையாள அட்டையுடன் ஒரு நாள் தைரியமாக உள்ளே புகுந்து பேச முடிந்த ஆங்கிலத்தில் உறுப்பினர் அட்டை வாங்கியே விட்டேன். பத்து ஆண்டுகளுக்கு முன்பு கட்டணம் எதுவும் இல்லாமலேயே உறுப்பினர்் ஆகிக் கொள்ளலாம். பொருளாதாரம், அரசியல், புதினம் என்று அமெரிக்க அறிவுக் களஞ்சியங்களின் கதவுகளைத் திறந்து விட்டது இந்த நூலகம்.

இப்போது அடையாள அட்டையுடன், நானூறு ரூபாய் பணமும் கட்டினால் உடனேயே உறுப்பினர் ஆகி நான்கு புத்தகங்கள் வரை எடுத்துச் செல்லலாம். அமெரிக்கா தொடர்பான ஒலிப்பட நாடாத் தொகுப்புகளும், குறுவட்டுக்களையும் வேண்டுகோளின் பேரில் அங்கேயே பார்த்துக் கொள்ளலாம்.

அண்ணா மேம்பாலத்தின் கீழ், கதீட்ரல் சாலையின் முனையில் இருக்கும் அமெரிக்கத் தூதரகத்தின் உள்ளே இருக்கிறது இந்த நூலகம். புகைப்படத்துடன் கூடிய ஒரு அடையாள அட்டையுடன் போய் பைகளையும், செல்பேசியையும் வாசலிலேயே பிரிந்து உள்ளே போய் உறுப்பினர் ஆகிக் கொள்ளலாம். உறுப்பினர் படிவம் இணையத் தளத்திலேயே கிடைக்கிறது.

சென்னை பிரிடிஷ் கவுன்சில் நூலகத்தில்British Council Library உறுப்பினராக இணையத்தளத்தில் படிவத்தை நிரப்பி விட்டால், அவர்களே நம்மைத் தொடர்பு கொள்வார்களாம். சென்னை அண்ணா சாலையில் இருக்கும் இதற்கு நான் போனதில்லை. இதுவும் மிகவும் பயனுள்ள நூலகம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

Max Mueller Bhavan Libraryஇவற்றைத் தவிர அரசு மைய நூலகம், கிளை நூலகங்கள், மாக்ஸ்முல்லர் பவனில் ஜெர்மன் நூலகம், தனியார் நடத்தும் லெண்டிங் லைப்ரரிகள் என்று புத்தகப் பிரியர்களுக்கு நூலகங்களுக்குக் குறைவே இல்லாத நகரம் சென்னை.

Comments

சென்னையில் கன்னிமாரா, மும்பை ஏஷியாட்டிக் சொசைடி மற்றும் கல்கத்தா தேசீய நூலகம் ஆகிய 3 நூலகங்களும் தேசீய முக்கியத்துவம் பெற்றுள்ளன. இந்தியாவில் அச்சிடப்படும் எல்லா - I erpeat - புத்தகங்களும் தலா 2 அல்லது 3 நகல்களாக இந்த 3 நூலகங்களுக்கும் அனுப்பப்பட வேண்டும் என்பது சட்டம். அமெரிக்கவில் உள்ள லைப்ரரி ஆஃப் காங்கிரஸ் போல என்று வைத்துக் கொள்ளலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Popular posts from this blog

மெட்ராஸ் பாஷை - ஒரு இலக்கண பார்வை

ஏதோ வண்டி ஓடிக்கினுகீது சார்! - ஜெயகாந்தன்