பேச்சிலர்ஸ் பேரடைஸ் - திருவல்லிக்கேணி


"..திருவல்லிக்கேணியில் வசித்த ஒருவர் வேறு வீடு போகவேண்டும் என்றாலும் திரும்பத் திரும்பத் திருவல்லிக்கேணிக்கே வந்துவிடுவான். அவனுக்கு இந்த உலகத்திலேயே வேறெந்த இடமும் மனதுக்குகந்ததாக இருக்காது.." - கு.அழகிரிசாமி, எழுத்தாளர்.


சென்னையில் வாழ்வது ஒரு சுகமென்றால், சென்னையில் பேச்சிலராக இருப்பதும் 'ஒரு வகையில்' சுகமே??? இதற்கு முன் பெங்களூரு, பெங்களூர்-ஆக இருந்த பொழுது அங்கே ஒரு 15 மாதங்கள் குப்பை கொட்டியிருக்கிறேன். அப்பொழுது பல விஷயங்களில் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறோம். Cost of living, போக்குவரத்து நெரிசல் முக்கியமாக உணவு. இரவு 8.30-க்குள் சாப்பிட்டுவிட வேண்டும். இல்லையென்றால் அவ்வளவு தான், வண்டியை எடுத்துக் கொண்டு அலையவேண்டியிருக்கும். அதுவும் 'அந்த' சாப்பாட்டுக்கே! சாம்பாரில் அதிகமான மிளகாய் பொடியும் பின் அதனை ஈடுகட்ட இனிப்பான பூசணிக்காய் அல்லது வெல்லம் கரைத்திருப்பார்கள். ஒரே இரத்த நிறமாக இருக்கும். வட இந்திய உணவு வகைகள் இருக்கும், ஆனால் இட்சி, தோசை, சாதம் சாப்பிட்டு பழக்கம் ஆனதால் லேசில் பிடிக்காது.

சுனாமி வந்து மூன்றாவது நாள், நண்பர்களின் பயமுறுத்தலையும் மீறி(?) ஒரு வழியாக சென்னை வந்து கால்வைத்தேன். (வரும்போதே திருப்பெரும்புதூரில் பேருந்து break down வேறு). முதல் நாள் வேலைக்கு சென்று கஃபேயில் காலை உணவை சாப்பிட்டேன். அங்கு பரிமாறப்பட்ட சாம்பாரை அவ்வளவு ரசித்து ருசித்து சாப்பிட்டேன், காஞ்ச மாடு கம்பங் கொல்லையில் பாய்ந்தது மாதிரி. அப்பொழுது தான் சென்னையில் அருமை பெருமை தெரிய ஆரம்பித்தது.

அல்லிப் பூக்கள் நிறைந்த குளம் கொண்டதால் பெயர் பெற்ற திரு-அல்லி-கேணி (எ) திருவல்லிக்கேணியில் ஒரு மேன்ஷனில் நண்பர்களுடன் வாசம். அருகாமையில் மெஸ், பார், கடற்கரை என்று சகல வசதிகளும் உண்டு. உலகில் உள்ள பசியெல்லாம் தீர்ந்தது போல ஒரு உணர்வு. எங்கெங்கு காணினும் மெஸ்கள், மேன்ஷன்கள்.

மேன்ஷன் வாடகையும் நமக்கு ஏற்றாற்போல இருக்கும். மாத வாடகை 500-ல் ஆரம்பித்து 2500-க்கும் மேல் இருக்கிறது. திருவல்லிக்கேணியில் எங்கு பார்த்தாலும் மேன்ஷன்கள் இருக்கும். ஒவ்வொரு சந்திலும் இறுக்கமாகவும் சிறிய அறைகள் கொண்ட புறா கூண்டுகள் போல இருக்கும். மூன்று ஒரு நபர் கட்டில்களைச் சேர்த்தால் வரும் அளவுக்கு இருக்கும் அறையில் நாங்கள் நான்கு பேர் தங்கியிருக்கிறோம். இருவர் இரு கட்டிலில், அந்த இரு கட்டிலுக்கு இடையில் இருக்கும் இடைவெளியில் இருவர். காசுக்கு தகுந்தாற் போல பொது/தனி குளியல் + கழிப்பறை மற்றும் சுகாதாரம். காற்றோட்டம் தேவையென்றால் சன்னலுடன் கதவையும் சேர்த்தே திறந்து வைத்திருக்க வேண்டும். (எங்கள் அறையில் இருந்த ஒருவனிடம், எங்காவது பூகம்பம் வந்தால் உடனே மொபைல் மற்றும் மின்சாரம் தடைபடும் என்று சொல்லிவைத்திருக்கிறோம். சுனாமி வந்து சில நாட்களே ஆன நேரம். ஒரு முறை இரவில் திடீரென்று மின்சாரம் போனது. அப்புறம் அவனை பார்க்கவேண்டுமே. வெளியே வந்து படுத்து விட்டான். ரிசப்ஷனில் இருக்கும் பாய் வெளியில் இருக்கும் கேட்டை பூட்டிவிடுவதால் அங்கே வராண்டாவிலேயே சில நேரம் நின்றிருந்தான்).

சில வருடங்களுக்கு முன்பு கூட சிறு நில அதிர்வுகள் தோன்றியது. அன்று இரவு மெரீனா முழுவதும் குவியல் குவியலாக பேச்சிலர்கள். ஜாலியான இரவு அது! என்ன தான் கோடை காலமாக இருந்தாலும், கடல் அருகே இருப்பதனால், மாலை மற்றும் இரவு வேளைகளில் குளிர்ந்த காற்று வீசும். அதற்காகவே திருவல்லிக்கேணியை விட்டு வர மனது வராது.

இங்கு கொடுமை என்னவென்றால் தண்ணீர். பற்றாக்குறையெல்லாம் இல்லை. 'கடல்ல இருந்து ஸ்ட்ரெய்ட் கனெக்க்ஷன் போல' உப்பு கரிக்கும். சாப்பிட கையைக் கழுவும் பொழுது அந்தத் தண்ணீர் வாயில் பட்டாலே உப்பு கரிக்கும். அந்தத் தண்ணீரில் குளித்தால் நிச்சயம் முடி உதிரும். துணி துவைத்தால் நுரை அடங்காது. அதனால் சோப்பு போனதா இல்லையா என்பது கூட தெரியாமல் குத்து மதிப்பாகத்தான் அலச வேண்டும்.

ரத்னா கஃபே, முருகன் இட்லி கடை தவிர மதிய சாப்பாட்டிற்கு மேன்ஷன் பக்கத்தில் உள்ள காசி விநாயகா, ஆந்திரா மெஸ். காலை மற்றும் இரவு உணவுக்கு அம்பாள் மெஸ் உண்டு. அங்கு தினமும் ஒரு ஸ்பெஷல் மசாலா தோசை. சில நேரங்களில் சுற்றுலா வரும் வெளிநாட்டினர் அந்த மெஸ்சுக்கு வந்து இட்லியையும் சாம்பாரையும் ரசித்து சாப்பிடுவதை பார்க்கலாம்.

பிரதான பெல்ஸ் சாலையில் இருந்து அண்ணா சாலை நோக்கி செல்லும் வழியில் உள்ளது சாரதா மெஸ். இங்கு மதுரையின் அயிரை மீன் குழம்பு சிறப்பு. என்ன, வஞ்சிரம் மீனாக இருந்தால் ஒரு மீனை துண்டாக்கி ஒரே துண்டு மட்டும் சாப்பிடுவதால் கஷ்டம் தெரியாது. ஆனால், அயிரை மீன் குழம்பை ஒரு கிண்ணத்தில் போட்டு தரும்பொழுது அதில் சுமார் 50-75 குட்டி குட்டி மீன்கள் வெந்து கிடக்கும். ஆனால் ருசி அந்த கஷ்டத்தை மறைத்து விடும்.

இவை தவிர திருவல்லிக்கேணியில் எங்கு இருக்கும் மெஸ்சில் சாப்பிட்டாலும் ருசியாக இருக்கும். இரவு 2 மணிக்கு வெளியே வந்தாலும் ஏதாவது ஒரு கையேந்தி பவன் இருக்கும். ஆக பட்டினியாக தூங்க வேண்டியது இல்லை. சில சமயம் நேரமாகிவிட்டால் இரவு காட்சி முடிந்து வரும்பொழுது சாப்பிட்டுக் கொள்வோம். சாந்தி தியேட்டர் - சேப்பாக்கம் திரும்பும் பொழுது இருக்கும் மூலையில் ஒரு கையேந்தி பவன் இருக்கும். இரவு எவ்வளவு நேரம் ஆனாலும் அங்கு உணவு கிடைக்கும். (Hygenic எல்லாம் பார்க்கப்படாது).

இரவு உணவு முடிந்ததும் சற்று காலாற நடக்கலாம். கையில் சில வாழைப்பழங்கள், பெல்ஸ் சாலையின் ஓரத்தில் இருக்கும் 3/-ரூபாய் இத்தாலியன் சாஃப்டி ஐஸ்கிரீம் மற்றும் சில கடலை மிட்டாய்களுடன் (ஆ)சாமிகள் புறப்பாடு. அங்கிருந்து கண்ணகி சிலை சென்று பின் கடற்கரை சாலை, காமராசர் சாலை வந்து மறுபடியும் பெல்ஸ் சாலை முடிந்து இரவு உலாவை முடித்து அறைக்கு வந்து படுத்தால் சுகமான நித்திரை வரும், கனவுகளோடு.

போக்குவரத்தை பொறுத்த வரையில் அங்கிருந்து மத்திய இரயில் நிலையம் 4 கி.மீ. அதனால் ஊருக்கு போகவேண்டும் என்று தோன்றினால் போதும், உடனே 10 நிமிட நேரத்தில் இரயில் நிலையத்தில் ஆஜர். சென்னை எழும்பூரும் அருகாமையிலேயே. அதனால் வெளியூருக்கு செல்பவர்கள் கஷ்டப்பட தேவை இல்லை. பேருந்தும் அடிக்கடி இருப்பதால் பிரச்சினை இல்லை. அங்கிருந்து கோயம்பேடுக்கும் நேரடி பேருந்து உண்டு.

நிறைய கடைகள் உண்டு என்பதால் ஷாப்பிங்கை அங்கேயே முடித்துவிடலாம். சிலருக்கு ஷாப்பிங் என்றாலே தியாகராய நகர் தான் என்பதால் 13 / 13B பிடித்தால் நேராக தி.நகர் பேரூந்து நிலையத்துக்கு lift(?) கொடுத்துவிடுவார்கள், டிக்கட்டுடன். 2001-ல் வேலை பார்த்தபொழுது காலையில் தி.நகரில் இருக்கும் அலுவலகத்துக்கு 13/13B-ஐ எதிர்பார்த்து நிற்போம். அந்த கூட்டத்தில் ஏறி கசங்கி, அலுவலகத்துக்கு வந்து சேர 1 மணி நேரம் ஆகிவிடும். அதுவும் கூட்டம் அதிகம் என்றால் நடத்துனர் பயணச்சீட்டு கொடுக்க ராயப்பேட்டையில் வண்டியை சில நிமிடங்களுக்கு நிறுத்தி விடுவார். ("ஏங்க! நீங்க ஓட்டுனரா? நடத்துனரா? வண்டியை நடத்தியே கூட்டிகிட்டு போரீங்க?"). அந்த வெயிலில், இறுக்கத்தில், புழுக்கத்தில் சட்டை முழுவதும் நனைந்து விடும்.

பொழுதுபோக்கு? திருவல்லிக்கேணியை சுற்றி உள்ள பொழுதுபோக்கு இடங்கள் என்னவென்று பார்த்தால் கூப்பிடும் தூரத்தில் கடற்கரை, பார்த்தசாரதி கோவில், அருகில் மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், இரண்டு வருடங்களுக்கு ஒரு முறையேனும் 'மழை' ஆட்டம் நடைபெறும் சேப்பாக்கம் கிரிக்கெட் அரங்கம், சினிமா பிரியர்களுக்கு சத்யம், தேவி, சாந்தி, ஆர்பர்ட், உட்லாண்ட்ஸ், மெலோடி, அண்ணா என்று எண்ணற்ற சினிமா கொட்டகைகள், பழைய பைக்குகள் வாங்க பெல்ஸ் சாலை என்று பட்டியலே போடலாம்.

இந்தியாவில் எங்கும் கிடைக்காத பாடநூல்கள் இங்கிருக்கும் பைகிராப்ட் சாலை என்று அழைக்கப்படும் பாரதி சாலையில் கிடைக்கும். கண்ணகி சிலையை நோக்கி செல்லும் சாலையில் வரிசையாக புத்தக கடைகள் இருக்கும். அந்த புத்தகக் கடையின் வாசல்களில் பழைய புத்தகங்கள் அடங்கிய நடைபாதை கடைகள் இருக்கும். புத்தகம் வாங்க வருபவர்கள் முதலில் இந்த நடைபாதை கடைகளில் விசாரித்துவிட்டு அங்கு இல்லை என்றால் புதிய புத்தகங்கள் வாங்க கடையினுள் நுழைவார்கள். சில சமயம் பல உபயோகமான புத்தங்கங்கள் கிடைக்கும். சாவியின் 'வாஷிங்டனில் திருமணம்' மற்றும் சில .NET புத்தகங்கள் எனக்கு இங்கு கிடைத்திருக்கின்றன (CD-உடன்).

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் எழுந்தருளியிருக்கும் கோவிலான பார்த்தசாரதி கோவில் பல்லவர்களால் கட்டப்பட்ட சென்னையின் புராதான கோவில். 8ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவில் ஆழ்வார்களால் பாடப்பட்ட தளம். மகாகவி பாரதி வாழ்ந்து காலமாகிப் போன வீடு இந்த கோவிலுக்கு எதிரில் உள்ளது. அரசு அந்த வீட்டை 'பாரதி நினைவு' இல்லமாக்கியது.


இந்துக்கள் மட்டும் அல்லாது பிற மதத்தவரும் கணிசமாக வாழும் இடம் திருவல்லிக்கேணி. ஆற்காடு நவாப் வீடான அமீர் மகால், வாலாஜா மசூதி, சேப்பாக்கம் பேலஸ் போன்றவையும் உண்டு.



பேச்சிலர்கள் Saturday-வை Water-day ஆக்கிய பிறகு Sunday-ஐ Fun-day ஆக்கும் முயற்சியின் அடுத்த கட்டமாக சரண்புகுவது சினிமா கொட்டகைகள் தாம். சனிக்கிழமை இரவுக் காட்சி என்பது special. காரணம், முதல் ஆட்டத்தினை பாரில் முடித்துவிட்டு இரண்டாம் ஆட்டம் ஆடும் இடம் சினிமா கொட்டகைகள். நகரத்தில் அத்தனை சிறந்த கொட்டகைகளும் 10 முதல் 30 நிமிட பயண தூரத்திலே இருப்பது சிறப்பு. சத்யம் தவிர தேவி, உட்லாண்ட்ஸ், ஆல்பர்ட், மெலோடி ஆகியவற்றில் பெரும்பாலும் ப்ளாக்கில் தான் வாங்க வேண்டும் என்பதால் 'நிதானமில்லாமல்' நிதானமாகப் போகலாம். வேண்டிய படம் கிடைக்கவில்லையென்றாலும் வேறு ஏதாவது ஒரு படத்திற்கு போய் வரலாம். எதுவும் கிடைக்கவில்லையென்றால் இருக்கவே இருக்கிறாள் கடல அன்னை. அப்படியே கடற்கரையை ஒரு சுற்று சுற்றிவிட்டு வந்தால் ரம்மியமாக இருக்கும்.

இவையெல்லாவற்றையும் விட திருவல்லிக்கேணியில் ஒரே ஒரு பெருங் கொடுமை என்னவென்றால், வெளியே வந்தால் அதிகம் தென்படுவது ஆண்களின் தலைகள் தான். சைட் அடிக்க பெண்களே இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும் பசங்களுக்கு? அது தான் இந்த நூற்றண்டின் மிகப் பெரும் கொடுமைங்க.

Comments

Unknown said…
unmailiye meendum antha idathirku elaam poi vanthaar pola oru thonal. enna antha mansion room elaam paathathu illai..elaam veliye irunthu paarthathu, nanbargal solla kettathu avalavu thaan. naan ange thaan 3 varudam thangi padithen. sugamaana ninaivugal - varanda ninaivugalum undu [thani kastathaal]...tharpozhu arugil illai eninum...eppothaavathu poi varum paarthasarthy kovil, marina kadarkarai....eppothum sollum antha iniya ninaivugalai...mikka nandri.
//இவையெல்லாவற்றையும் விட திருவல்லிக்கேணியில் ஒரே ஒரு பெருங் கொடுமை என்னவென்றால், வெளியே வந்தால் அதிகம் தென்படுவது ஆண்களின் தலைகள் தான். சைட் அடிக்க பெண்களே இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும் பசங்களுக்கு? அது தான் இந்த நூற்றண்டின் மிகப் பெரும் கொடுமைங்க.//

தல.. இதையெல்லாம் இப்படி ஓப்பனாக சொன்னா பின்னூட்டம் எப்படி வரும்.. யோசிக்கிறது இல்லையா? அட!போங்கப்பா.. :-((((
கோயிலுக்கு எதிருலேயா பாரதியார் வாழ்ந்த வீடு?

எத்தனைதடவை கோயிலுக்கு வந்துருக்கேன். இது தெரியாமப்போச்சே(-:
சீனு said…
//எத்தனைதடவை கோயிலுக்கு வந்துருக்கேன். இது தெரியாமப்போச்சே//

கோவிலுக்கு இரு வாசல்கள் உண்டு. பின் வாசல் வழியாக வந்தால் அந்த வாசல் எதிரில் பாரதியின் வீடு.
இந்தத் திருவல்லிக்கேணி எங்களுக்கெல்லாம்
கிடைக்கலியே.

அனுமார்கோவில் தெருவில்
கனித மேதை படித்த ரூம் இருக்கே.
ஆறு பை ஆறு.
லேடஸ்ட் அடிஷன், நம்ம ரைட்டர் சுஜாதா பிறந்த இடம் தெற்கு மாட வீதியில் இருக்கிறது.
கலக்கிட்டீங்க சீனு, இந்த இடுகைக்கு மார்க் பத்துக்கு பத்துதான் :-)))

***

நல்லா ஊர் சுத்தி காமிச்சிருக்கீங்க..ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.. நான் ரொம்ப நாளைக்கு முன்னாடி இப்படித்தான் திருச்சியை பத்தி ஒரு பதிவு போட்டேன்...

***

//திருவல்லிக்கேணியில் ஒரே ஒரு பெருங் கொடுமை என்னவென்றால், வெளியே வந்தால் அதிகம் தென்படுவது ஆண்களின் தலைகள் தான்//

சீக்கிரமே நிறைய கேர்ள் ப்ரண்ட்ஸ் ப்ராப்திரஸ்து :-)))

***

ராஜா அனுமந்தலால் தெருவில்தான் எங்க தாத்தா வீடு... கோடை விடுமுறைகளில் வருவதுண்டு :-)))
மெட்ராஸ்ல நான் பார்த்த ஆச்சரியம் அதான்ங்க.... கைலியை மடிச்சுக் கட்டிக்கிட்டு செகண்ட்ஷோ சினிமா பார்க்குற நம்மாளு அப்புறமா ஒரு ஆறு மாசம் கழிச்சு எங்கடான்னு பார்த்த கலிபோர்னியாவில சன்னிவேல்ல ஏதாவது ஒரு கம்ப்யூட்டர் கம்பெனில இருப்பான். அப்புறம் இந்த மாதிரி பதிவு எழுத ஒருத்தர், அதை நினைத்துப்பார்க்க இப்படி என்னை மாதிரி ஆயிரம்பேர்... ஆச்சரியமாத்தான் இருக்கு
சீனு கலக்கிட்டீங்க போங்க......

அப்புறம் அமீர் மஹால் பக்கத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தங்கிய வீடு ஒன்று உள்ளது.


////இவையெல்லாவற்றையும் விட திருவல்லிக்கேணியில் ஒரே ஒரு பெருங் கொடுமை என்னவென்றால், வெளியே வந்தால் அதிகம் தென்படுவது ஆண்களின் தலைகள் தான்.//

என்ன அண்ணாத்த, இப்படி சொல்லிட்ட, ஏகப்பட்டது இருக்குதே.... ராக்கூத்து அடிச்சா புள்ளங்களை எப்படி பாக்க முடியும்.
Sivabalan said…
அடடா, பழைய நியாபங்களை வரவைத்துவிட்டீர்களே..

நல்ல பதிவு.

//பேச்சிலர்ஸ் பேரடைஸ் - திருவல்லிக்கேணி" //

உண்மைதான்..
சீனு,
சில நாட்களுக்கு முன்னாடியே தங்களுடைய இந்தப் பதிவைப் படித்து விட்டாலும் உடனே பின்னூட்டம் இட முடியவில்லை. இருபது வருட காலம் திருவல்லிக்கேணியில் வாழ்ந்தவன் (பேச்சிலராக மேன்சனில் அல்ல, எங்க வீடே திருவல்லிக்கேணியில் தான்) என்ற முறையில் திருவல்லிக்கேணியைப் பற்றி ஒரு பதிவிட வேண்டும் என்று பல நாளாக எண்ணியதுண்டு. ஆனால் இதை விடச் சிறப்பாக எழுத முடியுமா என்பது ஐயமே. நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

//"..திருவல்லிக்கேணியில் வசித்த ஒருவர் வேறு வீடு போகவேண்டும் என்றாலும் திரும்பத் திரும்பத் திருவல்லிக்கேணிக்கே வந்துவிடுவான். அவனுக்கு இந்த உலகத்திலேயே வேறெந்த இடமும் மனதுக்குகந்ததாக இருக்காது.." //
இதுவும் உண்மை தான். பல முறை நான் உணர்ந்த ஒன்று.

13,13பி, புத்தகக் கடை, மதுரை சாரதா மெஸ், ரத்னா கஃபே - பழைய நினைவுகளை எல்லாம் பசுமையாக்கி விட்டீர்கள். மிக்க நன்றி.
அன்புடையீர்,

திருவல்லிக்கேணி குறித்து நான் எழுதிய எண்சீர் விருத்தத்தினை இங்கே பின்னூட்டமாக இடுகின்றேன்.

சற்றே நீளம் அதிகம். பின்னூட்டத்தில் சரியாக வரவில்லையென்றால் நிராகரித்துவிடுங்கள், மாலையில் தனிப்பதிவாக இட்டு பின்னர் சுட்டி தருகின்றேன்.

அன்புடன்
ஆசாத்

நான் (ஆசாத்) எழுதியது:

கடற்கரையோ நடைபழகும் தூரத் தில்தான்!
.கடைவீதி பைகிராப்ட்சு சாலை யோரம்!
உடற்பயிற்சிக் கூடங்கள் மாஸ்டர்4 ·ப்ரெண்சும்5
.உருவாக்கும் இளங்காளை இரும்புத் தோள்கள்!
இடமில்லை இனியென்று திண்ணை எல்லாம்
.இரண்டடியில் கடையான கோலம் எங்கும்!
நடமாடும் கைவண்டி பழக்கூ டைகள்!
.நகர்ந்திடவோர் இடமில்லா அல்லிக் கேணி!

முக்காடு போட்டவர்கள் ஹோபார்ட்ஸ்6 என்றால்
.முள்ரோஜா நிறத்தினிலே என்கே டீக்கள்7
அக்மார்க்கு மாதுளையில் வெலிங்டன் லேடி8
.அழகுத் தேவதையெல்லாம் அணியில் நிற்பார்!
ஹக்கீமும்9 கெல்லட்டும்10 ஆச்சார் யாவும்11
.அறிவுக்கண் திறக்கும் கல்விச் சாலைகள்!
எக்காலும் நிலைக்கின்ற ஒருமைப் பாட்டை
.எங்களிடை கொண்டோமே பேதம் இல்லை!

அரசியலும் தேரடியில்12 கூட்டம் போடும்!
.ஆன்மீகம் சாரதியின் கோயில்13 வாழும்!
உரசிப்பொன் விலைபேசும் பொற்கொல் லர்கள்
.உள்ளதொரு கடைவீதி நெடுஞ்சா லைதான்!14
அரசமரத் தடியினிலே15 அசைவ மென்றால்
.அழகுறவே ரத்னாவில்16 இட்லி சாம்பார்!
வரமென்ன வாங்கினனோ இங்கே வாழ!
.வருவீரே ஒருநாள்நீர் அல்லிக் கேணி!

பேச்சிலர்கள் விடுதிகளில் சீட்டாட் டங்கள்!
.பெரியதெரு முனையினிலே உலவி மையம்!
ஆச்சரிய நடைபாதை அறிவுத் தீனி!
.அண்ணாந்து பார்த்தாலோ பறக்கும் பாதை!
வீச்சறிவாள் வீரமணி வீடும் உண்டு!
.விண்ணளக்கும் பலமாடி சிலவும் உண்டு!
மூச்சினிலே கலந்துவிட்ட எனதூ(ர்) இங்கே
.முழுமையுறு திருவல்லிக் கேணி தானே!


4. மாஸ்டர் = மாஸ்டர் ஜிம்
5. ·ப்ரெண்ஸ் = ·ப்ரெண்ஸ் ஜிம்
6. ஹோபார்ட்ஸ் = அரசு ஹோபார்ட்ஸ் பெண்கள் பள்ளி (உருது)
7. என்கேடி = என்.கே.திருமலாச்சாரியார் பெண்கள் பள்ளி (பிங்க் வண்ண சீருடை)
8. வெலிங்டன் லேடி = லேடி வெலிங்டன் பெண்கள் பள்ளி (மரூன் வண்ண சீருடை).
9. ஹக்கீம் = அப்துல் ஹக்கீம் ஆண்கள் பள்ளி
10. கெல்லட் = வெஸ்லியன் மிஷனின் கெல்லட் ஆண்கள் பள்ளி
11. ஆச்சார்யா = என்.கே.திருமலாச்சாரியார் ஆண்கள் பள்ளி
12. தேரடி = அரசியல் பொதுக்கூட்டங்கள் நடக்கும் தேரடித் தெரு
13. சாரதியின் கோயில் = பார்த்தசாரதி கோயில்
14. நெடுஞ்சாலை = திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை (இப்போது வேறு பெயர்)
15. அரசமரத்தடி = கபாப் கடைகள் இருந்த இடம்
16. ரத்னா = ரத்னா கபே

*****

கவிமாமணி இலந்தை இராமசாமி அய்யா வர்கள் எழுதியது:

கடற்கரையை ஒட்டியுள நகரின் காட்சி
கணக்கிலதான், காலையிலே, கொழுத்த தொந்தி
உடல்கரைய நடக்கின்ற செல்வக் கூட்டம்,
உலர்மீன்கள், சுதத்திரநாள் பேச்சுயிர்த்த
திடல்கரையை ஒட்டியுள திலகர் கட்டம்
சிறப்பான வகையினிலே கவிதைச் சீட்டு
மடல்வரைந்த மகாகவிஞன் வாழ்ந்த இல்லம்
வளர் கீதை உரைத்தவனின் மாண்புக் கோவில்

குடுக்கைகளே பெரியதெனக் காட்டு கின்ற
குடியிருப்பு, நடைபாதை ஓரம் தன்னில்
உடுக்கைகளே இல்லாத சிறுவர் காற்றே
உடுக்கையெனத் திரிகின்ற நிர்வாணங்கள்
படுக்கையதோ தெருவோரம் என்றே வாழ்க்கைப்
பயன்காணும் பெரியவர்கள்,இறக்க ஏற்றம்
கொடுக்கின்ற திருவல்லிக்கேணி பற்றி
கூறுவது மணலெண்ணிக் கூறல் தானே!

*****

அன்புடன்
ஆசாத்
//வரமென்ன வாங்கினனோ இங்கே வாழ!
.வருவீரே ஒருநாள்நீர் அல்லிக் கேணி!//

மிகவும் உண்மை. ஆசாத் சார். தங்கள் பாடல் மிகவும் அருமை. திருவல்லிக்கேணியின் அனைத்து பெருமைகளையும் எடுத்துக் கூறும் விதத்தில் அமைந்துள்ளது தங்கள் பாடல்.
Anonymous said…
நான் கூட திருவல்லிக்கேணியில் 1 வருடம் இருந்தேன். 1990 களில். சென்ற வருடம் பார்த்தபோது அதிகம் மாறினாற்போல் தெரியவில்லை. இன்றும் கூட ஒற்றை ஆண்களின் (பேச்சிலர் - தமிழ்) சொர்க்கமாக இருந்து வருகிறது ஒரு அதிசயமே.
coolzkarthi said…
சிறப்பாக எழுதியுள்ளீர்கள்....சகா...நானும் திருவல்லிகேணியில் இருந்தேன் என்பதை பெருமையாக கொள்கிறேன்....
சீனு said…
எஸ்ரா...

http://www.sramakrishnan.com/?p=610

Popular posts from this blog

மெட்ராஸ் பாஷை - ஒரு இலக்கண பார்வை

ஏதோ வண்டி ஓடிக்கினுகீது சார்! - ஜெயகாந்தன்

27D