ரங்கநாதன் தெரு (அ) சென்னை-17.


தி. நகரின் பழைய பெயர் மாம்பலம் தான். 1930களில் மின்சார ரயில் ஓடத்தொடங்கிய பின் மாம்பலத்தை இரண்டாகப் பிரித்து தண்டவாளத்திற்கு அந்தப் பக்கம் இருப்பதை மேற்கு மாம்பலம் என்றும் இந்தப் பக்கமிருப்பதை கிழக்கு மாம்பலம் என்று குறிப்பிட்டு வந்திருக்கிறார்கள். பின் கொஞ்ச நாள் கழித்து அது புது மாம்பலமாகி இருக்கிறது. அதன் பின் தான் தியாகராய நகராகி இருக்கிறது.




டந்த வாரம் சில நண்பர்களுடன் ரங்கநாதன் தெருவுக்குப் போய் இருந்தேன். மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து வெளியே இறங்கி நடக்கும் போது மீண்டும் இனி இந்தப்பக்கம் வரக்கூடாது என்ற முடிவை எடுத்துக் கொண்டேன்.(இது போல பலமுறை முடிவு எடுத்த பலரும் உண்டு; ஆனால் எந்த அளவு அதில் உறுதியோடு இருந்திருக்க முடிந்தது என்பது கேள்வி)

ஆடை வகைகளும், கொஞ்சம் தங்கமும் வாங்க திட்டமிருந்தது. இறங்கி நடக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே தனித்து விடப்பட்டேன். உடன் வந்த நண்பர்கள் யாரையும் காணவில்லை. கூட்டத்தில் தொலைந்து போய் விடுவோமோ என்ற பயத்தில் உடன் வந்த ஒருவரின் கைப்பேசிக்கு அழைத்தேன். எடுத்தவர் பிரபலமான ஒரு கடையின் வாசலில் இருப்பதாகச் சொன்னார். நானும் அதே கடையின் வாசலில் தான் நின்றுகொண்டிருந்தேன். ஆனால் அவரைப் பார்க்க முடியவில்லை. அவ்வளவு கூட்டம். அந்த கடைக்கு ரங்கநாதன் தெருவிலேயே இரண்டு மூன்று கிளைகள் உண்டு என்பதால் எந்தக்கடை வாசலில் நிற்கிறார் என்று கேட்க, மீண்டும் போன் போட்டால்.. நண்பரின் குரலை விட கூட்ட இரைச்சலும், காவல் துறையினரின் அறிவிப்பும் தான் கேட்க முடிந்தது.



ஓரமாக ஒதுங்கி அவர்களைத் தேடலாம் என்றாலும் அதற்கான வழியையும் காணோம். நகர்ந்துகொண்டிருந்த மக்கள் வெள்ளம் முன்பக்கமாகவும், பின் பக்கமாகவும் தள்ளியபடியே நடந்து கொண்டிருந்தார்கள். என் கால்களும் தன்னிலையில் இல்லாது மக்களின் இழுவைக்கு ஏற்றபடி அந்தப் பக்கமாகவும் இந்தப் பக்கமாகவும் போய்க் கொண்டிருந்தது.

யிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளின் துவக்கம் என்றே நினைக்கிறேன், நான் முதல் முதலில் சென்னையைப் பார்த்தது. பத்துக்கும் குறைவான வயது அப்போது எனக்கு. மதுரையில் இருந்த மாமாவின் குடும்பத்தினருடன் தான் சென்னை வந்திருந்தோம். அவரின் மகள் திருமணத்திற்கு பொருட்கள் வாங்க மதுரையை விட சென்னை சரியானதாக இருக்கும் என்று பெரிசுகள் முடிவுகட்டி சென்னைக்கு வந்திருந்தார்கள். ஊர் சுற்றிப் பார்க்கும் ஆசையில் நானும் என் சின்ன அண்ணனும் அடம் பிடித்து வந்துவிட்டோம்.

எங்கே தங்கினோம் என்ற விபரமெல்லாம் இப்போது நினைவில் இல்லை. ஆனால் பொருட்கள் வாங்கப் போன இடம் மட்டும் இன்றும் மறக்காமல் இருக்கிறது. சென்னை-17 என்று எப்போது பார்த்தாலும் பழைய சம்பவங்கள் மனதில் தோன்றி மறையும்.

அப்போது எல்லாம் இன்றைய மாதிரி ரங்கநாதன் தெருவோ, தி.நகரோ மக்கள் நெருக்கடி மிகுந்த இடமாக இருக்கவில்லை. மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து ரங்கநாதன் தெருப்பக்கம் வெளியில் வந்தால் எங்கள் ஊரின் ஒரு தெருவுக்குள் போனது போல தோன்றியது. குறைவான கடைகள்; நிறைய வீடுகள். அந்த வீட்டு வாசல்களில் கோலம் போடப்பட்டிருக்கும். அந்த தெருவைக் கடந்து உஸ்மான் ரோட்டுக்கு போனால் பெரிய நகைக்கடையாக இருந்தது; லலிதா நகைக்கடை என்றே நினைக்கிறேன். மற்றொரு கடை பாலு ஜுவல்லர்ஸ் இதில் எங்கள் ஊர்காரர் ஒருவர் வேலை பார்த்து வந்தார். (ஆனால் இவர்களுக்கு முன்பே இந்த பகுதியில் பேமஸான மூன்று நகைக் கடைகள் இருந்திருக்கின்றன.)

இப்போது போல தி.நகரை அடைத்துக்கொண்டு நிற்கும் சாலையோர வியாபாரிகளை அப்போது இந்த அளவில் பார்த்ததாக நினைவு இல்லை.
அந்த மாமா சென்னையிலேயே பல வருடமாக வேலை பார்த்து வந்தவர். மணம் செய்து கொண்டதும் கூட சென்னையில் இருக்கும் போது தான். குழந்தைகள் வளரத் தொடங்கியவுடன் தாத்தா பாட்டியிடம் அவர்களை விட்டுவிட்டு சென்னையிலேயே வேலை பார்த்து பணி ஓய்வு பெற்றபின் தான் மதுரையில் செட்டிலானாராம்.

அவர் சென்னைக்கு வந்த போது பத்தொன்பது வயதாம். அவர் வந்த போது தி. நகர் பகுதி இப்போது (எண்பதுகளில்) இருப்பதை விட மிகவும் மோசமான நிலையில் இருந்ததாக சொன்னார். பழைய பார்க்குகள் மட்டும் தான் மாறவில்லை மற்றபடி எல்லாம் மாறி விட்டது என்பது அவருடைய கருத்து.

"1948-ம் ண்டில் தண்ணீர் வரை விறகு வரை கடும் பற்றாக்குறை. விறகுக்கு ரேஷன் கார்டு, காபிக்கொட்டைக்கு ஒரு ரேஷன் கார்டு, அரிசி, சக்கரை பற்றிக் கேட்க வேண்டியதில்லை.

ரங்கநாதன் தெருவில் 9 எண்ணிட்ட வீட்டில் இருந்தேன். குடிதண்ணீர் அடுத்த தெருவிலிருந்து. குளிப்பது அரைகிலோமீட்டர் தள்ளித் தாமோதர ரெட்டித் தெருவில் இருந்த ஓர் உறவினர் வீட்டில். அது நரி உலாவும் இடம் என்று சொல்லுவார்கள். பிசாசுகளும் உலாவலாம். அன்று தாமோதர ரெட்டித் தெருவில் இருந்து கண்ணம்மாப் பேட்டை மயானத்தில் எரியும் சடலங்களைப் பார்க்கலாம். அவை வேகும் மணத்தை சுவாசிக்கலாம். ஐந்தே ஆண்டுகளில் நானே தாமோதர ரெட்டித் தெருவாசியாகி விட்டேன்." என்கிறார் தி.நகர் பற்றி தன் 'ஒரு பார்வையில் சென்னை நகரம்' என்ற நூலில் எழுத்தாளர் அசோகமித்திரன்.

புத்தகம் வாசிக்கும் பலருக்கும் இப்பகுதி மிகவும் பரிட்சயமானது. ஆம்! நிறைய பதிப்பகங்கள் தி.நகரை தத்து எடுத்துக்கொண்டு விட்டன. இப்போது சென்னையின் மற்ற பகுதிகளில் காணப்படுவது போல மண்ணின் மைந்தர்கள் இப்பகுதிகளில் இல்லை. கணிசமாக குறைந்து விட்டார்கள். ஆனாலும் இப்பகுதியில் வாழ்ந்த பலரும் தாங்கள் வாழ்ந்த அந்த 'ப்ளாக் அண்ட் ஒயிட்' காலத்தை நினைவுகூறவுவதை பெருமையாகவே கருதுவதையும் பார்க்கலாம்.

ஆறோ ஏழோவென குறைந்த அளவே பேருந்துகள் ஓடிக்கொண்டிருந்த தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து இன்று தினம் இருபத்தி ஐந்து வழித்தடங்களுக்கு மேல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆரம்பகாலத்தில் இப்போதைய பேருந்து நிலையம் இருக்குமிடத்தில் கண்மாய் ஒன்று இருந்திருக்கிறது. தண்ணீர் இல்லாத சமயங்களில் அதில் பல அரசியல் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.

அண்ணா சாலையில் ஒரு இடத்தில் விலை சதுர அடிக்கு என்ன விலைக்குப் போகிறதோ அதே விலைக்கு தி.நகரிலும் இட விலை நிர்ணயிப்பார்களோ என்ற அளவிற்கு தி.நகர் பெரிய வியாபார சந்தையாகி விட்டது.


"அம்மா அப்பாவைத் தவிர கிடைக்காத சமாச்சாரங்களே தி.நகரில் கிடையாது" என்பான் சென்னையிலேயே செட்டிலாகிவிட்ட என் பழைய டவுசர் தோழன் ஒருவன். அவன் கூற்றில் உண்மை இருப்பதாகவே படும். அந்த அளவில் இங்கு எல்லாப் பொருட்களின் சந்தையையும் காண முடியும்.

எவ்வளவு மக்கள் வெள்ளம்; எத்தனை விதமான மனிதர்கள்; எத்தனை விதமான வண்ணங்கள்! எல்லோருக்குள்ளும் எத்தனை எத்தனை கனவுகள், எதிர்பார்ப்புகள்,ஏக்கங்கள். குழந்தைகள்,ஆண்கள், பெண்கள் என்று எல்லா மனித ஜீவராசிகளின் காலடிகள் நடந்துகொண்டே இருக்கிறது இங்குள்ள சாலைகளின் மீது. சாலைகள் தேயத்தேய மனித மனம் சந்தோசம் படுமிடம் இந்த ரங்கநாதன் தெருவாகத்தான் இருக்க முடியும். எதுவும் வாங்க வேண்டாம் கூட்டம் நிறைந்த ஒரு மாலைவேலையில் மனிதர்களை வேடிக்கைப் பார்த்தபடி இந்த தெருவுக்குள் இறங்கி நடந்து வாருங்கள் போதும். வாழ்க்கையின் புதிய தரிசனத்திற்கு வழி திறக்கும்.

சென்னை மாநகரின் மறுக்க முடியாத அடையாளங்களில் இன்று ரங்கநாதன் தெருவும் ஆகிவிட்டது என்றால் அது மிகையல்ல. இங்கு வந்து பெரிய பெரிய பைகளுடன் போகும் மக்களைப் பார்த்த பின் தமிழகத்தின் பணப்புழக்கமில்லை என்று யாரும் அவ்வளவு எளிதில் சொல்லிவிட முடியாது. சென்னையின் மற்ற பகுதிகளில் இருக்கும் சந்தையை விட தி.நகர் சந்தை கொஞ்சம் காட்ஸ்லி-யாகி விட்டது என்னவோ மறுக்க முடியாத உண்மை.

Comments

ரவி said…
இம்சை அரசனில் வடிவேல் சொல்வார், "நான் சாக்கடைக்குள் ஒரு மாமாங்கம் கூடுகட்டி வாழ்ந்த வித்தைக்காரன்" என்று...

சென்னையில் பணியாற்றியபோது இதே ரங்கநாதன் தெருவில் பி.ஆர்.எஸ் மேன்ஷனில் ஒருவருடம் தங்கியிருந்தேன்...

மறக்கவே முடியாத நினைவுகளை தூண்டியது உங்கள் பதிவு....
இதே ரங்கநாதன் தெருவில் 60 களில் வாழ்ந்தவன் நான். அசோகமித்ரன் நமக்கு பக்கத்து வீட்டில் இருந்திருக்கிறாரே!( நான் இருந்தது இலக்கம் 10). தி.நகர் காவல்நிலயம் அருகில் முளைத்த திடீர் பிள்ளையார் இபிசோடும் சுவாரசியமானது.
80களுக்குப் பிறகே அபரிமித வளர்ச்சி. என் பழைய 'அக்கம்பக்கத்தவர்கள்' யாரும் இப்போது அங்கு வசிப்பதாக தெரியவில்லை. தொடர்புடைய எனது பதிவு.
ரவி+மணியன் இருவரின்
அனுபவப் பகிர்தலுக்கு நன்றி!
மாப்பிளை உண்மையை சொல்லுங்க அப்புறம் எப்படி வீட்டுக்குப்போனீங்க.. போலீஸ்தான உதவி செய்தது...நீங்க திருவிழாவில கானாம போன குழ்ந்தைமாதிரி தவிச்சிக்கிட்டு நின்னத நாங்க (அருளும் +நானும்) பார்த்தோமே......
நிறைய அன்புடன்
வீரமணி

Popular posts from this blog

மெட்ராஸ் பாஷை - ஒரு இலக்கண பார்வை

ஏதோ வண்டி ஓடிக்கினுகீது சார்! - ஜெயகாந்தன்

27D