சென்னை/ பக்கத்துவீட்டு ஜன்னல் புன்னகை - த. அகிலன் (விருந்தினர் பத்தி)

சென்னை என்கிற வார்த்தை எனக்குத் தெரிகிறபோது. ஒரு 8 வயதிருக்கும். கட்டுங்கடங்காமல் காட்டுக்குள் குகைகளிற்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் விசத்திரக்குள்ளர்களையும், முகமூடி வீரர் மாயாவியையும் அவரது காதலி டயானாவையும் ராணி காமிக்ஸ் புத்தகத்தில் புரட்டி முடிந்து ஆவலடங்காமல் கடைசி மட்டைவரை படித்துவிடுகிறபோது எனக்கு தெரிந்த வார்த்தை சென்னை- 600018 என்று நினைக்கிறேன்.
பிறகு சென்னை இந்திய புத்தகங்கள் வழியாகவும் சினிமா வழியாகவும் மிகவும் பரிச்சயமான பக்கத்து வீட்டு ஜன்னலில் ஒளிர்கிற புன்னகை போலாகிவிட்டது. நான் சென்னையில் வசிக்கநேரிடும் என்று அப்போதெல்லாம் நான் நினைத்து பார்த்தது கிடையாது. இப்போது நான் ஒரு சென்னை வாசி. அதன் பிரமிப்புக்களை எல்லாம்தாண்டி அதன் வாழ்வியலுக்குள் என்னை நுழைத்துக்கொண்டு விட்ட சராசரி நகரவாசியான பின்பு எனது கற்பனையில் இருந்த சென்னை கொஞ்ச இடங்களில் தகர்ந்து போய்விட்டிருக்கிறது. கொஞ்ச இடங்களில் இன்னும் ஒரு பெரிய நாற்காலி போட்டு உட்கார்ந்து கொள்கிறது.

ஒரு திசை தெரியாப் பயணியைப்போல் நான் நுழைந்த ஆரம்பங்களில் சென்னை என்னை திக்குமுக்காட வைத்திருக்கிறது. இந்தப் பெருநகரின் வாய் எங்கே என்னை விழுங்கி ஏப்பம் விட்டுவிடுமோ என்கிற தயக்கம் இருந்துகொண்டே யிருந்தது. திருவிழாவில் தொலைந்து போன குழந்தையைப்போல் மிரள மிரள விழித்திருக்கிறேன். செம்மண் புழுதியுடன் குண்டுச்சத்தங்களால் நிறைந்து வழியும் ஊரிலிருந்து வந்த எனக்கு இந்த நகரத்தின் இரைச்சலும் பெற்றோல் புகையும் அதிசயமாகத்தான் இருந்தன. எனக்கு சென்னையில் முதல் முதலாக அழகாக தெரிந்தது விளம்பரத்தட்டிகள் தான். டயரில் இருந்து தங்கம் வரைக்கும் அழகழகான பிகர்களை போட்டோ புடீச்சு யப்பா எத்தினை வளைவுகள் நெளிவுகள் மேடுகள் ( நான் தெருக்களில் சொல்லேறன்.) எங்கெங்கு காணிலும் விளம்பரங்கள். எங்கேயாவது மண்டையோடு படம்போட்டு மிதிவெடி கவனம் என்கிற விளம்பரங்களை மட்டுமே பார்த்திருந்த எனக்கு இது ஆச்சரியமான ஒரு அனுபவமாக இருந்தது.

ஆனால் என்னதான் இருந்தாலும் எனக்கு சென்னை ஒரு அழுக்கு நகரம் என்கிற மாதிரியான உணர்வு இருந்து கொண்டேயிருக்கிறது. சென்னை குப்பையில் கிடக்கும் ஒரு வைரம் என்பதனாலோ!!.

சென்னைக்கு வந்த முதல்வாரத்தில் விக்கி அண்ணாவின் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது வியப்படங்கவில்லை எனக்கு. அது ஒரு அற்புதமான அனுபவம். எங்கேயோ ஒரு விமான நிலையத்தில் இருந்து இறங்கி வந்து குளிர்சாதன வசதி செய்யப்பட்ட வண்டிகளில் பயணித்து நட்சத்திர விடுதிகளில் தங்கி அப்படியே பறந்து விடுகிற எல்லோரும் சென்னையின் உயிரற்ற ஒரு வெறும் கூட்டை மட்டும் தான் பார்க்கலாம். சென்னையை உயிரும் துடிப்புமான சென்னையாகப் பார்க்க அதன் பேருந்துகளிலோ, மின்சார ரெயிலிலோ , அல்லது ஆட்டோக்களிலோ பயணம் செய்து பார்த்தால் மட்டுமே சென்னையை அதன் உயிர்த்துடிப்புடன் அதன் உயிரின் அசைவை அனுபவிக்கலாம்.

மெட்ராசை சுத்திப்பாக்க போறேன்
மெரினாவில் வீடு கட்டபோறென்….

ஒரு பாட்டிருக்கிறது இல்லையா. அப்படி மெரினாவில் ஒரு வீடுகட்டலாம் என்று ஒரு ஆசை வரும்.( சுனாமியும் தான் வரும்) மெரினாவை பார்க்கின்ற போதெல்லாம். தின்னத் தின்ன தீராத சுண்டலைப்போல மெரீனா நீண்டு கிடக்கும். அதன் அழகில் சொக்கிப்போய் கால்நனைக்கலாம் பூக்களாய் உடைந்து சிதறும் நுரையில் சென்னை அழுக்கல்ல அற்புதம் என்று தோன்றும் ஒரு கணம். இரவின் மெரீனா அழகோ அழகு. ஒரு பௌர்ணமி இரவில் மெரீனாவில் யாருமற்ற ஒரு மணற்பரப்பில் (அதைத் தேடிக் கண்டு பிடிப்பது கஸ்டம்) எனை மறந்து உட்கார்ந்து கொண்டிருந்திருக்கிறேன். அந்த அனுபவம் அற்புதமானதுதான். போன வருடப்பிறப்பன்று நான் சென்னையில் பார்த்த குதூகலம் என்னை ஆச்சரியப்படுத்தியது. அதை ஒரு பதிவாகவும் இட்டிருந்தேன். இரவின் மெரீனா மட்டுமா அழகு எங்காவது மொட்டைமாடியில் உட்கார்ந்து கொண்டு வெறுமனே கண்முன்னே விரிகிற சென்னையின் ஒளிப்புள்ளிகளை ரசித்தபடி இருக்கலாம் அதுவும் சுகானுபவம்.
மெரினா நிறைய வெள்ளந்திகளை அடையாளம் காட்டும். எங்கேயோ ஒரு கிராமத்தில் இருந்து தன் பொண்டாட்டியை கூட்டி வந்து எம்.ஜி.ஆர் சமாதியை காட்டி தொட்டு வணங்கிப்போகிறபோது எனக்கு புரிந்தது எம்.ஜி.ஆரின், அண்ணாவின் மீதும் மக்கள் கொண்டு அன்பும் அவர்களின் மக்கள் தொண்டும். அதற்கெல்லாம் ஒரு படி மேலே போய் எரிகிற தீபத்தின் வாயு வெளிவிடுகிற இரைச்சலை தலைவர் குரல் என்று பொண்டாட்டிக்கு விளக்கம் கொடுத்து அது கல்லறையில் காதுவைத்து "அப்படியா மாமா" என்று விழி விரிக்க ஒரு தெனாவெட்டாக வேட்டியை இன்னும் உயர்த்திக்கட்டியபடி நடக்கிற வெள்ளந்திகளை பார்த்துக்கொண்டேயிருக்கலாம்.


ஆட்டோக்காரர்கள் மீதான அச்சமும் கோபமும் எனக்கு ஏனோ ஊட்டப்பட்டிருக்கிறது. சென்னையின் துடிப்பு ஆட்டோக்கள் தான். ஆட்டோக்கள் இரையாத தெருக்கள் அனாதையைப்போல உணரும் என்று நினைக்கிறேன். மற்றபடி அட்ரஸ் இல்லாத தெருக்களையும் கூட ஆட்டோக்கள் அறியும். ஆட்டோக்காரர்கள் ஏமாற்றுக்காரர்கள் கடத்தல் காரர்கள் என்கிற மாதிரியான ஒரு பிம்பம் எனக்குள் இருந்தது. ஒரு வேளை சினிமாக்காரர்கள் பத்திரிகைகள் எற்படுத்திய பிம்பமாய் அது இருக்கலாம். ஆனால் சென்னையின் பஸ் ரூட்கள் இலக்கங்கள் தெரியாத ஆரம்ப நாட்களில் நான் ஆட்டோக்களின் ராஜாவாக இருந்தேன். எனக்கு ஆட்டோக்காரர்கள் ஊர் சுத்திகாட்டியதாய் தெரியவில்லை. (எனக்கே தெரியாம அல்வா கொடுத்துவிட்டார்களோ தெரியாது) ஆனால் ஒரு மழை நாளில் தீடீரென்று ஏறிய குமார் அண்ணாவின் ஆட்டோவில் இப்போதெல்லாம் போன்போட்டு வரச்சொல்லி ஏறிப்போகுமளவுக்கு நெருக்கமாகமுடிந்தது. அதனால் ஆட்டோக்காரார்களைக் குறை சொல்ல முடிவதில்லை. அதற்கெல்லாம் மேலாக போலீஸ்காரர்களின் பாசையில் சொன்னால் un timeல் பஸ்சைத் தவறவிட்டு மறித்த ஆட்டோக்காரக்கிழவர் சொன்ன கதைகள் அந்த மழைஇரவில் காக்கிச்சட்டையில் ஊறிய ஈரம்போல மனசில் பாரமாக அழுத்தியது. ஒரு புதிய தோழனைப்போல என்னிடம் ஏனோ கபகபவென்று எல்லாவற்றைப் பற்றியும் என்னுடன் பகிர்ந்து கொண்டாரே அந்த அந்நியோன்னியம். அந்த மழைஇரவில் சூடாகக் குடித்த ஒரு சிங்கிள் ரீக்கு நான் பணம் கொடுத்தேன் என்பதற்காக ஆட்டோவுக்குப்பணம் வேண்டாம் என்று அடம்பிடித்து மறுத்துவிட்டுப் போன அந்த கிழவரின் மனசு எல்லாமுமாக சோந்து ஆட்டோக்காரர்கள் பற்றிய அபிப்பிராயத்தை மாற்றியது. அந்த கிழவர் பேசும் போது சொன்னார் "சென்னைக்கு புதுசா அதான் பாத்தாலேதெரிதே. ரொம்ப உசாராஇருக்கணும் தம்பி. மோசக்காரப்பய ஊரு. நான் 46 வருசமா மெட்ராசில வண்டி ஓட்டுறேன். என்னை வாழவைக்கல தம்பி மெட்ராசு… அதிஸ்டம் வேணும்பா ஏமாத்துக்காரனுகதான் ஜயிக்கிறான். குரலுடைந்து பிறந்த அந்த வார்த்தைகள் இன்னமும் ஒலிக்கிறது.


ரங்கநாதன் தெருவுக்குள் முதல் முறைபோனால் மிரண்டு நசுங்கி வியர்த்துக் கொட்டிப்போகும். போகப்போகச் சரியாகும். என்னதான் கரும்புச் சக்கைகளை கவிழ்த்து தெருமுழுக்க கொட்டியிருந்தாலும் என்ன அழகு எத்தனை அழகு என்று பாடிக்கொண்டே திரும்பித் திரும்பி எதைப்பார்ப்பது எனத்தெரியாமல் (நான் கடைகளை சொல்றேன்) கழுத்து வலித்துப்போவதும் ஒரு சுகம்தான். அப்டியே ஒரு மாலை 5 மணிவாக்கில தி.நகர் போயிட்டு மாம்பலம் ரெயில்வே ஸ்ரேசன் வந்தீங்கன்னு வையுங்க பாக்கலாம் சென்னையின் ஜனத்தொகை எப்படிப்பட்டதென்று. ஏதாவது ஒரு கூபே வாசலுக்கு நேரே நிண்டீங்கண்டா சரி தானாவே உள்ள ஏத்துவாங்க. அவ்வளவு கூட்டம். என்னதான் ரயில்வேத்துறை பிரச்சாரம் பண்ணிணாலும் கம்பியைப்பிடித்து தொங்கிக்கொண்டே பயணம் செய்கிற வவ்வால்களின்(பதிவர் அல்ல) சாகசங்கள் காணச் சகியாதவை.

மற்றபடி மின்சார ரயில் அலைபாயுதே படத்தில் வருகிறமாதிரி மனசுக்குள் பூப்புக்கிற மத்தாப்பு அனுபவம் தான். ஏதோ அறியா வயதில் யாழ்தேவியில் பயணம் போன எனக்கு தடுக் துடுக் என்று அடிக்கடி கடக்கிற அல்லது வருகிற மின்சார ரயில் ஒரு புழகாங்கித அனுபவம் தான். ஆயிரம்தான் கூட்டம் இருந்தாலும் ரயில் பயணம் என்பது சிலிர்க்கும் அனுபவம் மெட்ரோ ரயிலில் ஏறாதவன் நரகத்துக்குப் போகட்டும் (யார்ப்பா யாரோ ஒரு ஆபீசர் குரல் கேக்குது அதுவே ஒரு நரகம் தான்னு) என்னதான் இருந்தாலும் சென்னையின் மின்சார ரயிலின் நிரந்தரப் பயணிகளை என்றைக்கு அது இறக்கிவிடப்போகிறதோ தெரியவில்லை.

அதான் நான் பிச்சைக்காரர்கனை சொல்கிறேன். என்னதான் சிலிர்க்கும் அனுபவமாயிருப்பினும். அவர்களின் பாடல் அல்லது இரக்கும் குரல் ஒலிக்கத் தொடங்குகையில் தண்டவாளத்தின் தடதடப்பு மனசுக்குள் தொற்றிக்கொள்கிறது. திடீரென்று வண்டியின் வேகத்தில் தொற்றி ஏறிக்கொள்கிற 5 வயது சிறுமியும் அவ ஆத்தாவும் வாசலருகில் உட்கார்ந்து கொள்கிறார்கள். ஆத்தா தோளில் முடிச்சுப்போட்டு இறுக்கிய இன்னுமொரு குழந்தை. அதுவும் சில ஆண்டுகளில் இப்படித்தான் ஆகும். அந்த 5 வயது சிறுமி திடீரென்று ஒரு ஜிம்னாஸ்டிக் காரியையைப்போல் சின்ன வளையத்தை வைத்துக்கொண்டு ஏதோ வித்தை மாதிரி செய்வாள் யாரும் பார்க்கிறார்களா என்பதெல்லாம் அவள் கவனிப்பதில்லை. பிறகு கைகளை நீட்ட தொடங்குவாள் மனிதர்களின் முகங்கள் இறுகத்தொடங்கும். அவள் பொருட்படுத்தாது நீட்டிக்கொண்டேயிருப்பாள் இன்னும் எவ்வளவு நாளைக்குத்தாள் நீட்டிக்கொண்டேயிருப்பாள்….

இன்னுமொரு மனவிழிப் பிச்சைக்காரர். வாயுள் அடங்கிப்போகும் குரலால் பாடியபடி பிச்சை எடுக்கிறார். அவர் குரல் வெளியே எழவேயில்லை கரங்கள் நீண்டிருக்கிறது. அவர் தனது தொழில் குறித்து வெட்கம் கொள்பவராய் எனக்கு பட்டது இருந்தும் அவர் கைகளை நீட்டுகிறார். என்னைக்கடக்கையில் நான் பார்த்தேன் அவரது மூடியவிழிகளில் நீரை. சென்னை கடக்க வேண்டிய துயரங்களில் முக்கியமானது இது.

கோடை வெயிலும், கூவத்தின் மணமும் இல்லாத சென்னையை யாரும் கற்பனை கூடச்செய்யமுடியாது. கூவத்தை கடக்கையில் எனக்குத் தோன்றும் "கந்தகத்தின் வாசனைவிடவும் கூவத்தின் மணம் மேலானது." எத்தனையோ சினிமாக்களில் பார்த்த நேப்பியர் பாலத்தை நேரில் பார்க்கிறபோது வியப்பேதும் எழவில்லை மாறாக ஏமாற்றம் மிஞ்சுகிறது. சின்னச்சின்ன துயரங்கள் இருந்தாலும் சென்னையில் மட்டும் தான் வாழ்வின் எல்லாத்தரப்பு வருமானமுள்ளவர்களாலும் பிழைக்க முடிகிறது அல்லது சாப்பிட முடிகிற நகரமாயிருக்கிறது. குப்பங்களும் கோபுரங்களும் இங்கேதான் சாத்தியம். ஆழ்வார் படத்துக்கு 600 ரூபாய்க்கு டிக்கெட்டும் பள்ளிக்கூடம் படத்துக்கு 60 ரூபாய் டிக்கெட்டும் இங்கேதான் சாத்தியம். பிளாட்பாரக்குழந்தையின் உலர்ந்த உதடுகளின் மேல் ஊற்றப்பட வேண்டிய பால் கட்டவுட்டுகளில் வழிவதும் இங்கேதான் சாத்தியம்.

நான் குப்பைபொறுக்கும் சிறுவர்கள் பற்றி விவரங்கள் சேகரிக்கசென்ற ஒரு நண்பருடன் தொற்றிக்கொண்டே போனபோது நிவேதா என்கிற எட்டு வயது சிறுமியைப் பார்த்தேன். நகரசபை குப்பை கொட்டுகிற இடத்தில் தார் சீட் போட்டு இருந்தது அவளது குடியிருப்பு. அண்ணா என்னைய போட்டோ பிடிப்பீங்களா என அப்பாவியாய்க் கேட்கிற அவளிடம் நீ பள்ளிக்கு போவியா எனக்கேட்டேன் மௌனமாயிருந்தாள். என்ன செய்வாய் பால்பாக்கெட் பொறுக்குவேன் என்கிறாள். குப்பைகளோடு குப்பைகளாய் வசிக்கிறார்கள்.

கடைசியில் அவளைப் போட்டோ எடுப்பதற்காக சரி எடுக்கிறன் நில்லு என்றபோது அவள் சொன்னாள் அண்ணா அந்த "விஜய் போட் பக்கத்தில வச்சி எடுங்க" அந்த குப்பை அள்ளும் மனிதர்கள் எல்லாருமாகச் சோ்ந்து விஜய்க்கு ஒரு வினைல் போர்ட்டு வைத்திருக்கிறார்கள். ரசிகர் மன்றமாம். அவள் வெள்ளந்தியாய்ச் சிரித்தாள் இங்க பாருங்கண்ணா என்பேரும் இருக்கு.

எல்லாவற்றைக் கடந்தும் சென்னை வாசிகளிடம் நேசமிருக்கிறது எங்கெங்கிருந்தோ வந்து அடைகிற கூடாயிருக்கிறது சென்னை.(ஹி ஹி ஹி நானும் ஒரு குஞ்சில்லையா அதாங் ஆ). ஆனாலும் நடுத்தர வர்க்கத்தின் குரலாய் எப்போதும் சென்னையில் எதிரொலித்துக்கொண்டேயிருக்கிறது.
சென்னைப்பட்டணம் எல்லாம் கட்டணம்.


என்னதான் இருந்தாலும் பக்கத்துவீட்டு ஜன்னலுக்குள்ளால் பார்த்த சென்னையின் புன்னகையை நேரில் பார்க்க இன்னமும் அழகு கூடித்தானிருக்கிறது. நான் இன்னமும் பார்த்துத்தீராத சென்னையின் பக்கங்கள் விரிந்து கொண்டேயிருக்கிறது. சென்னை தன் மாய இல்லை இல்லை நிஜ அழகால் எல்லாரையும் வளைத்துப்போட்டு விடுகிறது.

http://agiilankanavu.blogspot.com/

Comments

MSATHIA said…
Beautiful, Vivid, Splendid Profiling
Hats off!!

Sathia
MSATHIA said…
//மனவிழிப் பிச்சைக்காரர்//
அருமையான,அன்பான ஒரு வார்த்தையை (வாக்கியத்தை)அறிமுகப்படுத்தியதற்கு நன்றி
-சத்தியா
உங்கள் பதிவு நெஞ்சைத் தொட்டது. எம்ஜிஆர் சிலையை தொட்டுக்கும்பிடும் வெள்ளாந்தியான அந்த மனிதன், அவரது மனைவி,ரெயினில் பிச்சை எடுக்கும் மனவிழிப் பிச்சைக்காரர், பால் பக்கெற் பொறுக்கும் அந்த விஜய் ரசிகை, நேயமுள்ள அந்த ஆட்டோக்காரக் கிழவர் - எலலோரையும் நேரில் சந்தித்த உணர்வு. ஏனோ தெரியவில்லை. கண்கள் கசிகின்றன. அழுகின்றேனா?
சென்னையை நல்லவிதமாக வர்ணித்ததற்கு நன்றி அகிலன். கடந்த ஆண்டு நீங்கள் என்னிடம் சென்னையைப் பற்றி கொஞ்சம் மோசமாகவே சொல்லியிருந்தீர்கள்! அப்போது கொஞ்சம் சங்கடப்பட்டேன். இப்போது உங்கள் பார்வை கொஞ்சம் மாறியிருப்பதாக தெரிகிறது.
//வவ்வால்களின்(பதிவர் அல்ல) சாகசங்கள் காணச் சகியாதவை.//

என் சாகசத்தின் புகழ் உங்களுக்கும் தெரிந்து விட்டதா! :-))

சென்னை நல்லவர்களும், கெட்டவர்களும் சமவிகிதத்தில் கொண்ட எல்லா ஊர்களையும் போன்ற ஒரு ஊரே.

சில ஆட்டோக்காரர்கள் ஏமாற்றுவார்கள் , சிலர் வெகு நியாயமாக இருப்பார்கள். நியாயமாக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்காரர்களிடம் ஒரு வார்த்தையாவாது பாராட்டி சொல்லிவிட்டு வருவேன். ஏன் எனில் அவர்கள் நியாயமாக இருப்பதற்கும் ஒரு அங்கீகாரம் வேண்டுமல்லவா!

மனவிழி என்று புறவிழி பழுதானவரின் அக விழி செயல்படுவதை சுட்டிக்காட்டியது அருமை!

குப்பைகளும் ,கொசுக்களும் கூவத்தின் நாற்றமும் இரண்டறக்கலந்துவிட்ட சென்னை பலருக்கும் கனவு பிரதேசமாக இன்றும் தனது ஆளுமையை தக்க வைத்துக்கொண்டுள்ளது!

நீங்கள் பார்க்க வேண்டிய சென்னை இன்னும் இருக்கிறது. பாருங்கள் ... அனுபவியுங்கள். நன்றாக சொன்னீர்கள் உங்கள் அனுபவத்தை!
சீனு said…
அட்டகாசமான பதிவு அகிலன். ஏதேதோ நிகழ்வுகளை கொண்டுவந்துவிட்டது உங்கள் பதிவு.
சீனு said…
//சில ஆட்டோக்காரர்கள் ஏமாற்றுவார்கள் , சிலர் வெகு நியாயமாக இருப்பார்கள்.//

இதை இப்படி மாற்றிக் கொள்ளுங்கள்.

"சில ஆட்டோக்காரர்கள் ஏமாற்றுவார்கள் , வெகு சிலர் நியாயமாக இருப்பார்கள்" என்று. எனக்குத் தெரிந்து ஆட்டோக்காரர்கள் செய்யும் அட்டூழியத்தை நிறைய கண்டிருக்கிறேன்.
KARTHIK said…
அப்படியே நான் சின்ன வயசுல சென்னை பத்தி நினச மாதிரியெ நீங்கலும் நினைதிருக்கீங்க என்ன விதியசம் நீங்க நடிகர்கலை பாரதிருககீங்க நான இன்னும்
பாக்கலை மித்தபடி இன்னும் நெரையெ கதை கேக்குறோம் நம்ம த.நகர பத்தி சத்யம் சினிம மல்டிபிலக்ஷ் மாய்ஜால் ச்பென்செர் அபிராமி மால் இப்படியக நிரய கதையுன்டு
அழகான தலைப்பு ... உள்ள அதை விட அழகான வரிகளில் கதைப்பு .. அகிலன் ரொம்பவே நல்லாருக்கு பதிவு..

Popular posts from this blog

மெட்ராஸ் பாஷை - ஒரு இலக்கண பார்வை

ஏதோ வண்டி ஓடிக்கினுகீது சார்! - ஜெயகாந்தன்

27D