சென்னை நினைவுகள் - உண்மைத்தமிழன் (விருந்தினர் பத்தி)

1995-ம் ஆண்டு ஜனவரி 1.

என் வாழ்க்கையில் நடந்த திருப்பங்களில் முதன்மையானது சென்னையில் கால் பதித்த இந்த நாள்தான்.

சென்னையில் நான் பார்க்கச் சென்று மீள முடியாமல் மூழ்கியது கன்னிமாரா நூலகத்தில்தான். திண்டுக்கல், மதுரை என்று வாசம் செய்த ஊர்களிலெல்லாம் நூலகங்களை இரண்டாவது வீடாக வைத்திருந்த நான் சென்னைக்கு வந்ததும் முதல் ஞாயிற்றுக்கிழமை கன்னிமாராவில்தான் கழித்தேன். எத்தனை, எத்தனை புத்தகங்கள்? படிக்க நேரம்தான் கிடைக்கவில்லை. இப்போதும் தொடர்ந்து பத்து வருடங்களாக அந்நூலகத்தின் உறுப்பினராக இருந்து வருகிறேன்.

தொடர்ந்து சென்னையை வலம் வர ஆரம்பித்தேன் புது மாப்பிள்ளை, பொண்ணுடன் ஊர், ஊராகச் சென்று விருந்து சாப்பிடுவானே அது மாதிரி..

எப்போதும் எனக்குப் பிரியத்திற்குரிய சினிமா தியேட்டர்களை, சாயந்தர வேளைகளில் குத்தகைக்கு எடுக்க ஆரம்பித்தேன். தமிழ்ப் படங்களைவிட ஆங்கிலப் படங்களே எனக்கு அதிகம் பிடித்தன. தேவி, சத்யம், ஆனந்த் மூன்று காம்ப்ளக்ஸ்களிலும் ஒரு விடுமுறை நாளில் நான்கு ஷோவும் பார்த்துவிட்டுத்தான் சைக்கிளில் அசோக் நகர் சென்றடைவேன். அன்றைக்கு எனக்கு இருந்த சினிமா ஆசையை வெறியாக மாற்றி என்னை வெறிநாய் கணக்காக அலையவிட்டது இந்த சென்னை மாநகரம்தான்.

நான் தொடர்ந்து பார்க்க நினைத்தது வண்டலூரில் வசித்து வரும் முதலையையும், நமது(யாருக்காவது ஆட்சேபணை உண்டா..?) மூதாதையரான கொரில்லா குரங்கையும்தான். பார்த்தேன். நமது மூதாதையர், நம்மைப் போலவே இருந்ததைக் கண்டு எனக்கு மகா ஆச்சரியம். கை குலுக்கி குசலம் விசாரிக்க நினைத்தேன். என்னைப் பார்த்தவுடன் மஞ்சள் கலர் பற்கள் முழுவதுமாகத் தெரிய காட்டியபடியே சிரித்ததைப் பார்த்து பயந்துபோய் கையைத் திருப்பி எடுத்துக் கொண்டேன். பரவாயில்லை.. என்றாவது ஒரு நாள் கை குலுக்கியே தீருவேன்..

முதலை, என்னை யானையை(!)விட பரவசப்படுத்திய ஒரு பிராணி. அதெப்படி இவ்ளோ பல்லு அதுக்கு? இதன் பற்களின் எண்ணிக்கையைவிட எனக்கு முதலையின் மீதான கேள்விக்குறிகளின் எண்ணிக்கை அதிகம். சர்க்கஸில் யானை, புலி, சிங்கம், கரடி, நரியெல்லாம் பார்த்தாச்சு.. இந்த முதலை மட்டும்தான் பாக்கியிருந்தது. அதையும் இங்கே டெண்ட் அடித்து பார்த்து, பின்பு சமயம் கிடைக்கும்போதெல்லாம் அவ்வப்போது வந்து பார்த்து இப்போது வண்டலூர் எங்கே இருக்கிறது என்று கேட்கும் நிலையில் இருக்கிறேன். காரணம் என்னை மாற்றிய சென்னை மாநகரம்..

மாதத்திற்கு 750 ரூபாய் சம்பளம் என்ற நிலையில் உழைக்க ஆரம்பித்த எனக்கு முதலில் சென்னை மாநகரம் வழங்கிய கொடை மலேரியா என்ற நோயை. திருவாளர் கொசு அவர்கள், கூவம் ஆற்றிலிருந்து படையெடுத்து வந்து அக்கரை ஓரமாகத் தங்கியிருந்த என்னை நொச்.. நொச்.. என்று நொச்சியெடுத்தார். கம்பெனி ஓனரின் அறிவுரைப்படி டார்டாய்ஸ் கொழுத்தியும் சாகாமல், டார்டாய்ஸின் தயாரிப்பையே கிண்டல் செய்வதைப் போல் போர்த்தியிருந்த போர்வைக்குள்ளும் வந்து கடித்து பேதியை உண்டாக்கியது.

நான் தங்கியிருந்த வீட்டின் பாத்ரூமைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் தினமும் ஒரு இடமாக மாறி மாறி படுத்துவிட்டேன். ம்ஹ¤ம்.. கொசுவார் என்னை விடவேயில்லை. கடைசியில் மானாவரி மகசூல் மாதிரி என்னை கொசுக்கூட்டம் என்னை அப்பிக் கொண்டதால் மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்லப்பட்டேன். அங்குதான் ஒரு பெண் மருத்துவர் மிகவும் அலட்சியமாகச் சொன்னார்.. வேறென்ன.. மலேரியாதான் என்று.. அன்று மாலையே என்னை மதுரைக்கு பார்சல் செய்தார்கள்.

ஆனாலும் மெரீனாவின் கடற்காற்றும், கன்னிமாராவின் புத்தகங்களும், சினிமா தியேட்டர்களும் "என்னை வா.. வா.. கண்ணா.." என்றழைக்க மீண்டும் சென்னை விஜயம். இப்போது சம்பளம் 250 ரூபாய் கூட கிடைத்து ஆயிரமானது.

காலை டிபன் 4 இட்லி, மதியம் 3 புரோட்டோ, இரவு 3 புரோட்டா, 1 ஆம்லேட் என்று சிக்கனத்திலும் சிக்கனமாகச் சாப்பிட்டு ஆறே மாதத்தில் மறுபடியும் டைபாயிடு காய்ச்சலை வாங்கிக் கொண்டுதான் மதுரை சென்றடைந்தேன்.

ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்களே.. அதேதான்.. உடல் நலமடைந்து சிக்கன் பிரியாணி சாப்பிடுகின்ற அளவுக்கு வந்தவுடன் அன்று இரவே சென்னைக்கு எடுத்தேன் டிக்கெட்டு. இப்போது வேறு ஒரு இடத்தில் வேலை. நல்ல வேலை. மூன்றரை மடங்கு சம்பள உயர்வுடன்.. கேட்கவா வேண்டும்..?

இதன்பின்தான் எனக்குள் புகுந்த விதி தலைகால் தெரியாமல் ஆட ரம்பித்தது. ஒரு நல்லவனை, பண்பானவனை எந்த அளவுக்கு அலைக்கழிக்க வைக்க முடியுமோ அத்தனையும் செய்தது இந்த சென்னை மாநகரம்.

வாங்குகின்ற சம்பளத்தில் அரைவாசி சினிமாவுக்கும், கால்வாசி டிரெஸ்ஸ¤க்கும், மீதி கால்வாசி வீட்டுச் செலவுக்கும் போய்விட.. வாழ்க்கை எப்போதும் கைல காசு, வாய்ல தோசை கதைதான்.. எந்தச் சேமிப்பையும் செய்யவிடாமல் என்னை ஆட்கொண்டன சென்னையின் வசீகரமான பக்கங்கள்.

இரவில் கொத்து புரோட்டா 3 ரூபாய்க்கு கிடைக்கிறதே என்றெண்ணி கையேந்தி பவனில் வெட்டு, வெட்டு என்று மூன்று வருடங்கள் வெட்டிய பிறகே எனக்குத் தெரிந்தது.. நான் வெட்டியது மே.. மே.. என்று ஈனஸ்வரத்தில் அனத்தும் ஆட்டின் கறியல்ல.. மா.. மா.. என்று அலங்காரமாக கனைக்கும் மாட்டின் கறி என்று.. அன்றைக்கு எத்தனை விரல்களை வாய்க்குள் விட்டால்கூட, வாந்தி வராது என்ற நிலை எனக்கு.. எப்படி வரும்?

வடபழனி ராம் தியேட்டரில் பிளாக்கில் டிக்கெட் வாங்கிவிட்டு பேண்ட்டின் பின்பாக்கெட்டைத் துழாவியபோது பர்ஸ் பிக்பாக்கெட்டில் காணாமல் போயிருந்தது.. தியேட்டர் முழுவதும் துழாவு துழாவென்று துழாவியபோது டிக்கெட் விற்றவனே நான்கு பேரை அழைத்து என் முன்னே நிறுத்தி சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி என்னுடைய பர்ஸில் இருக்கும் பணத்தில் 25 சதவிகிதம் எனக்கு.. 75 சதவிகிதம் அவர்களுக்கு என்று கையெழுத்திடாத சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி என் கண் முன்னாலேயே அவர்களிடமிருந்து பர்ஸை வாங்கி பணத்தைப் பிரித்துக் கொடுத்து "போய் படம் பாரு ராசா.." என்று சொல்லியனுப்பியபோது திரையில் 'கலைச்சேவை' செய்து கொண்டிருந்த ஷகீலாகூட, என் கண்ணுக்குத் தெரியாமல் என் காலியான பர்ஸே என் மனக்கண்ணில் அமர்ந்திருந்தது.

தங்கியிருந்த மேற்கு மாம்பலம் மேன்ஷனில் இரவு ஒரு வேளை மட்டும் தங்கிக் கொள்கிறேன் என்று வந்த தூரத்துச் சொந்தத்து நண்பன் ஒருவன் விடியும்போது என் அறை நண்பர்கள் மூன்று பேரின் பேக்கையும், பணத்தையும் அபேஸ் செய்து கொண்டு எஸ்கேப்பாயிருந்தபோது(என்ன கஷ்டமோ?) கட்டிய கைலியோடு மதியம்வரைக்கும் உட்கார வைத்து ஆளாளுக்கு கேள்வி மேல் கேட்க, திண்டுக்கல் மலைக்கோட்டை மாரியம்மனும், அபிராமியம்மனும், திருமலைக்கேணி முருகனும் துணைக்கு வராமல் நட்டாத்தில் என்னை விட்டபோதுதான் சென்னையின் தூர நேசம் எனக்குப் புரிந்தது.

தேவி தியேட்டரில் செகண்ட் ஷோ படம் பார்த்துவிட்டு எல்.ஐ.சி. பஸ்ஸ்டாப்பில் பஸ்ஸ¤க்கு காத்திருந்தபோது சந்தேக கேஸில் போலிஸிடம் மாட்டி, கடைசியில் பாக்கெட்டில் இருந்த சில்லரை காசுகளைகூட விடாமல் பிடுங்கிக் கொண்டு போன அந்த கான்ஸ்டபிள்களை இப்போது நினைத்தாலும் சுட்டுவிடலாம் என்று கோபம் வருகிறது. பின்ன தேவி தியேட்டர்ல இருந்து மேற்கு மாம்பலத்துக்கு நடந்து பாருங்க தெரியும்..

இந்தியக் குடிமகன்களில் நானும் ஒருவன் என்பதை நிரூபிக்க பாஸ்போர்ட் எடுக்க முயற்சித்தேன். வரிசையில் நின்றேன். என் முறை வருவதற்கே 3 மணி நேரம் ஆனது. அப்ளிகேஷனை வாங்கியவுடன் போட்டோ சரியில்லை. வேற போட்டா எடுத்திட்டு வாங்க என்று முகம் பார்க்காமலேயே சொன்ன அந்த ஊழியர் எனக்குப் பின்னால் வந்த மூஞ்சி இருக்கா இல்லையா என்ற தோரணையில் புகைப்படம் வைத்திருந்த ஒருவரிடமிருந்து 'கவரை'யும், அப்ளிகேஷனையும் வாங்கியது கண்டு என் காதில் புகை வந்ததுதான் மிச்சம்.

முதன்முதலாக டூவீலர் வாங்கிவிட்டு முதல் நாள் காலையிலேயே பீச் வரை வந்து கெத்தாக வாக்கிங் செய்துவிட்டு லஸ் கார்னரில் படு ஸ்பீடாகச் சென்று ஒரு மாருதி காரில் மோதி காரின் பின் பக்கக் கண்ணாடியை உடைத்தது எனக்கு நினைவிருக்கிறது. ஆனால் அக்காரில் இருந்து இறங்கிய அம்மணியைப் பார்த்து பரிதாபமாக முழிக்க, "புதுசா.. பார்த்து ஓட்டுங்க.." என்று சொல்லிவிட்டு அலட்சியமாகச் சென்ற அந்தத் தாரகையை இப்போதும் சினிமாவிலும், டிவியிலும் பார்க்கும்போதெல்லாம் கையெடுத்துக் கும்பிடுகிறேன்.

நான் பங்கு கொண்ட ஒரு ஷூட்டிங்கில் லேட்டாக வந்ததால் எனக்கு சாப்பாடு வராமல்போக, எனக்குச் சாப்பாடு போடாமல் நான் டேக்கிற்கு வரமாட்டேன் என்று சொல்லி என்னைச் சாப்பிட வைத்துவிட்டு பின்பு கேமிரா முன் வந்து நின்ற அந்த மிகப் பெரிய நடிகையின் செய்கையைப் பார்த்து(அன்றைக்குத்தான் நான் அவர்களை முதன் முறையாகப் பார்த்தேன்-இரண்டு மணி நேர நட்புதான்) சென்னையிலும் சில மக்கள் இருக்கிறார்கள் என்று உணர்ந்து கொண்டேன்.


எல்லாவற்றிற்கும் மேலாக,

1995-ம் ஆண்டு ஜனவரி 1. மாலை : 4.30 மணி. இடம் : சென்னை மெரீனா கடற்கரை.

12-B பஸ்ஸில் இருந்து இறங்கிய நான், கடலை நோக்கி நடந்த அந்தப் பத்து நிமிடங்கள் நான் நானாகவே இல்லை.

கடல் அருகில் நெருங்க, நெருங்க.. பிறந்த மண்ணில் இருந்து விலகி தூர தேசத்திற்குப் பயணமானவன் மீண்டும் பிறந்த மண்ணைத் தொட்டவுடன் அவன் இல்லம் அருகில் செல்லச் செல்ல அவனுக்குள் ஒரு கண் காணாத உற்சாகமும், தவிப்பும் ஏற்படுமே.. அது மாதிரியான ஒரு உணர்வு.

பிரமிப்பும், அச்சமும், பயமும், திகைப்பும் மனதில் மேலோங்கி நிற்க வங்காள விரிகுடா கடலில் கால் வைத்தவுடன் என்னையறியாமல் நான் சொன்ன வார்த்தை, "ஆத்தி.. எம்புட்டு தண்ணி.."

உண்மைதான். எனது பிரமிப்புக்கு காரணம், அந்த 25 வயதுவரை நான் கடல் என்ற ஒரு பூச்சாண்டியை நேரில் கண்டதில்லை.. திரைப்படங்களில் பார்த்ததோடு சரி..

இழுத்துச் செல்லும் அளவுக்கு பேராசையுடன் தேடி வந்த அலைகளில் புரண்டு எழுந்த நான் சிறுபிள்ளைத்தனமாக குதூகுலத்துடன் போட்டிருந்த உடையுடன் நனைந்து, நனைந்து எழுந்ததை வெட்கத்துடன் சொல்லித்தான் ஆக வேண்டும். இது வேறு வகை சந்தோஷம்.

சென்னை வாழ்க்கையில் நான் மிகப் பெரியதாக இன்றும் நினைத்துப் பார்ப்பது, கால் பதித்த அன்றைய மாலையே எனது வாழ்க்கையில் நான் பிரமிப்பாய் பார்த்தது, கேட்டது, நினைத்த வங்கக் கடலை நேரில் கண்டதுதான்.

அமைதியாய், அழகாய் பொங்கி வந்து கொண்டிருந்த கடலன்னை மூன்று வருடங்களுக்கு முன் சுனாமியாய் பொங்கியெழுந்து அவளை வணங்கி வந்த அப்பாவிகளை தன்னுள் இழுத்துக் கொண்ட செயல் சென்னையின் துரதிருஷ்டம்தான்.

சென்னை. வராதவர்களுக்கு சொர்க்கம். கேட்டவர்களுக்கு ஏக்கம். ஆனால் வந்தவர்களுக்கு.. விட்டுவிட்டுப் போகவும் முடியவில்லை. இருக்கவும் முடியவில்லை என்ற நிலைமை.

விலைவாசிகள் கிரையோஜெனிக் ராக்கெட்டில் மேலே மேலே போய்க் கொண்டிருக்க.. நியாயமான சம்பளம் கொடுக்கும் நல்லவர்களின் எண்ணிக்கை ஊழல் செய்யாத அரசியல்வாதிகளின் எண்ணிக்கையைப் போல் குறைந்து கொண்டே போக..

வரும்காலத்தில் சென்னையில் பிச்சைக்காரர்கள், பணக்காரர்கள், திருடர்கள்.. இந்த மூவர்கள் மட்டுமே இருக்க முடியும் என்றே நம்புகிறேன்.

Comments

வரும்காலத்தில் சென்னையில் பிச்சைக்காரர்கள், பணக்காரர்கள், திருடர்கள்.. இந்த மூவர்கள் மட்டுமே இருக்க முடியும் என்றே நம்புகிறேன்.

ரிப்பீட்டேய். . . ..
நந்தா said…
உங்க அனுபவம் உண்மையிலேயெ மிக அருமை.....

கலக்குங்க.
மிஸ்டர் சென்னைவாசி, நாங்களும் சென்னைலதான் இருக்கோம்.
//வெங்கட்ராமன் said...
வரும்காலத்தில் சென்னையில் பிச்சைக்காரர்கள், பணக்காரர்கள், திருடர்கள்.. இந்த மூவர்கள் மட்டுமே இருக்க முடியும் என்றே நம்புகிறேன்.
ரிப்பீட்டேய். . . ..//

வெங்கட்ராமன் ஸார்.. நிசமாத்தான் சொல்றேன்.. இதுதான் நடக்கப் போகுது.. அல்லாரும் சென்னையைத் தாண்டி காஞ்சிபுரத்துல போய் செட்டிலாகி அங்க இருந்து டெய்லி வந்து போகப் போறாங்க.. உள் கட்டமைப்பை மட்டும் வேகமாக செய்து முடித்தார்களானால் அடுத்து அதுதான் நடக்கும். என்னைக்கும் நடுத்தர வர்க்கம் நடுங்குகின்ற வர்க்கம்தான் ஸார்..
//நந்தா said...
உங்க அனுபவம் உண்மையிலேயெ மிக அருமை..... கலக்குங்க.//

நந்தா தம்பி.. உன் அனுபவத்தையும் கொஞ்சம் எழுதுப்பா. ஏதாவது புதுசா மேட்டர் ஒண்ணு கிடைக்கும்ல..
//சுகுணாதிவாகர் said...
மிஸ்டர் சென்னைவாசி, நாங்களும் சென்னைலதான் இருக்கோம்.//

அதான் எனக்கும் சத்தியமா புரியல சுகுணா ஸார்.. எப்படி ஸார் இருக்கீங்க..?
நானும் பிறந்ததில் இருந்து சென்னையில் தானே இருக்கேன்?

உண்மையண்ணா சொல்றதுல்லாம் வேறு கிரகத்துலே நடக்குறது மாதிரி இருக்கே?
//லக்கிலுக் said...
நானும் பிறந்ததில் இருந்து சென்னையில் தானே இருக்கேன்?
உண்மையண்ணா சொல்றதுல்லாம் வேறு கிரகத்துலே நடக்குறது மாதிரி இருக்கே?//

தம்பி லக்கி,

சென்னைல பொறந்து வளர்ந்தது வேற விஷயம்.. இருக்குற ஜனங்க எத்தனை பேர் மன திருப்தியோட சென்னைல இருக்க முடியும்ன்றதை பத்தித்தான் நான் கடைசி ஒரு பாரால சொல்லிருக்கேன்..

6 பக்க கட்டுரைல 1 பாரா மேட்டரை மட்டும் கச்சிதமா புடிச்சுக்கிட்டு கமெண்ட்ஸா..? நல்லாயிருப்பூ.. பொறந்த நாள் வேறயா..? அதான் இம்புட்டு அடக்கமா ஒரு பதில்..
உண்மைத்தமிழர்,

இது தான் உண்மையான பதிவு( அப்போ நீங்க போட்ட மத்தது எல்லாம் போலியா? !!!)

நீங்கள் சொன்னதில் பலவும் எனக்கும் பொருந்தும்.

சிலர் கேட்கலாம் இதெல்லாம் எங்கே நடக்குது அன்னிய லோகத்திலா என்று, நடுத்தரவர்க்கமாக, அதுவும் தனியே ஒண்டிக்கட்டையாக வாழ்ந்து பார்த்தால் சென்னையில் இவை எல்லாம் அனுபவிக்கலாம்.

கை ஏந்தி பவனில் சாப்பிட்டாலும் எப்போதும் சைவ உணவைக்கேளுங்கள், சாம்பார் ,சட்னி இதோடு முடித்துக்கொள்ளனும், அசைவம் எல்லாம் கொஞ்சமாவது நல்ல ஹோட்டல் அல்லது , செட்டி நாடு உணவு வகை ஹோட்டல் போகனும். இல்லையென்றால் , எல்லாம் ..மா... மா வகை தான்!

முடிந்த வரை பரோட்டா சாப்பிடாமல் இருப்பது நல்லது.

//வரும்காலத்தில் சென்னையில் பிச்சைக்காரர்கள், பணக்காரர்கள், திருடர்கள்.. இந்த மூவர்கள் மட்டுமே இருக்க முடியும் என்றே நம்புகிறேன்.//

இதை அடிக்கடி நானே சொல்வேன் , ஆனால் வருங்காலம் என்று சொல்லாமல் நிகழ்காலத்தில் சொல்வேன்.
//உண்மைத்தமிழர்,
இது தான் உண்மையான பதிவு( அப்போ நீங்க போட்ட மத்தது எல்லாம் போலியா? !!!)//

ஷகீலான்னு சொன்னவுடனே உண்மைன்னு தெரியுது.. ம்.. புரியுது வவ்வால்ஜி.. பாம்பின் கால் பாம்பறியுமே..?

//நீங்கள் சொன்னதில் பலவும் எனக்கும் பொருந்தும். சிலர் கேட்கலாம் இதெல்லாம் எங்கே நடக்குது அன்னிய லோகத்திலா என்று, நடுத்தரவர்க்கமாக, அதுவும் தனியே ஒண்டிக்கட்டையாக வாழ்ந்து பார்த்தால் சென்னையில் இவை எல்லாம் அனுபவிக்கலாம்.
கை ஏந்தி பவனில் சாப்பிட்டாலும் எப்போதும் சைவ உணவைக்கேளுங்கள், சாம்பார் ,சட்னி இதோடு முடித்துக்கொள்ளனும், அசைவம் எல்லாம் கொஞ்சமாவது நல்ல ஹோட்டல் அல்லது , செட்டி நாடு உணவு வகை ஹோட்டல் போகனும். இல்லையென்றால் , எல்லாம் ..மா... மா வகை தான்!
முடிந்த வரை பரோட்டா சாப்பிடாமல் இருப்பது நல்லது.//

உண்மைதான் வவ்வால்ஜி.. அவரவர் அனுபவங்கள் அவரவருக்கு.. அப்போதே எனக்கு இது மாதிரி அட்வைஸ் கொடுக்க யாருமில்லை. குறைவான விலையில் கிடைக்கிறதே என்றுதான் அதைச் சாப்பிட்டேன். இப்படியரு மகா பாவத்தைச் செய்து கொண்டிருக்கிறேன் என்பது அப்போது எனக்குத் தெரியவில்லை. இப்போது வருத்தப்படுகிறேன்.

இப்போது புரோட்டாவை கொஞ்சம், கொஞ்சமாக புறக்கணித்தே வருகிறேன். ஆனாலும் புரோட்டாவை மறந்தாலும் சால்னாவை மறக்க முடியவில்லை. நாக்கு ருசி கண்டு அலைகிறது..

இப்போது அசைவத்திற்கும் கட்.. எப்போதாவது அத்திப்பூத்தாற்போல்தான்.. அதிலும் செட்டி நாடு ஹோட்டலுக்குள் இன்னமும் கால் வைத்ததில்லை. ஆனால் என் பொருளாதரத்திற்கேற்ற கடைகளில்தான் என்னால் நுழைய முடியும்.

//வரும்காலத்தில் சென்னையில் பிச்சைக்காரர்கள், பணக்காரர்கள், திருடர்கள்.. இந்த மூவர்கள் மட்டுமே இருக்க முடியும் என்றே நம்புகிறேன்.//
இதை அடிக்கடி நானே சொல்வேன் , ஆனால் வருங்காலம் என்று சொல்லாமல் நிகழ்காலத்தில் சொல்வேன்.//

நிஜம்தான் ஸார்.. நிகழ்காலத்திலும்கூட சென்னையில் நிம்மதியாகஇ இருப்பவர்கள் மேலே சொன்ன மூவர்தான்.. நான் இவர்களில் எந்த வகையிலும் இல்லை என்பதால்தான் அடிக்கடி முருகனைத் துணைக்குக் கூப்பிட வேண்டியிருக்கிறது..
பாவம் உணமைத்தமிழன் நீங்கள்.
கொசுவில் இருந்து போலீஸ் வரை தேடிப்பிடித்து நொங்கு எடுத்திருக்கார்கள்,என்ன கார் உரிமையாளர் மற்றும் நடிகைகள் இருப்பது கொஞ்சம் ஆறுதலாக இருக்கு.
Anonymous said…
Like you, everybody got their own experience about chennai, because myself also a person like you and got the different experience. came to chennai in '68 aug 15th and got the chance of attend the 'anna's meeting and my dad gone to one of his friend's house, where a man with leprosy. in my life i met a man like that was first time and i was shocked. then he made me to got a job of store vendor. after my work in the night, i have to stay at a pappadam foctory, where they served me the meals with a large piece of fish. for which i cry all the night, because i never ate nonveg foodktill then.and the adventure goes on...
நல்லதொரு பதிவு! கடைசியில் நீங்கள் சொன்னது நடக்காமலிருக்க பிரார்த்திக்கிறேன்! ஆனால், நடந்துவிடுமென நம்புகிறேன்!

என் வீட்டிற்கு லக்கிலுக் வந்து போன போதையே இன்னும் தெளியவில்லை எனக்கு. இப்போது நீங்கள் வேறு வந்து பின்னூட்டம் இட்டிருக்கிறீர்கள். நன்றி எல்லாம் சொல்ல முடியாது. நிஜமாகவே உணர்ச்சிக் குவியலாய் இருக்கிறேன் நான் இப்போது!

உங்களையும், தல லக்கிலுக்கையும் என் profile -ல் எழுதியிருந்தது கோபமா உங்களுக்கு? (நிஜமாகவே உங்கள் இரண்டுபேரின் எழுத்தும் பிடிக்கும்) சரி, ஏன் பெரிய தலைகளோட மோதணும்-ன்னு மாத்தீட்டேன் சாரே!

அப்பபப்ப வந்துட்டது போங்க!
நல்ல முயற்ச்சி வாழ்த்துக்கள்

-கிளியனூர் இஸ்மத் துபாய்

www.kiliyanur-ismath.blogspot.com

Popular posts from this blog

மெட்ராஸ் பாஷை - ஒரு இலக்கண பார்வை

ஏதோ வண்டி ஓடிக்கினுகீது சார்! - ஜெயகாந்தன்

எழுத்தறிய நூலகங்கள்