சிங்காரச் சென்னை - தமிழ்நதி (விருந்தினர் பத்தி)

எழுத்துக்கும் எனக்குமிடையில் ஒருவித இடைவெளி விழுந்துவிட்டதை,தொடர்பறுந்த நிலையில் கைகட்டிப் பார்த்துக்கொண்டிருக்கும் இத்தருணத்தில்,சென்னைப் பட்டினம் பற்றி எழுதும்படி பொன்ஸ் கேட்டிருக்கிறார். சென்னையைப் பற்றி ஏற்கெனவே இரண்டு தடவைகள் எழுதிவிட்டேன். அதன் சாயல் இந்தப் பதிவிலும் இடம்பெறக்கூடும் என்ற அச்சம் மேலிடுகின்றபோதிலும் பிரியத்திற்குரியவர்கள் கேட்கும்போது மறுக்க முடியவில்லை. இந்த வரியை எழுதும்போது அடுத்த வரி என்ன எழுதப்போகிறேன் என்று எனக்குத் தெரியாது.

எந்த நகரமாக இருப்பினும் அவரவர் தனிப்பட்ட வாழ்க்கை முறை மற்றும் அப்போதைய மனோநிலையைப் பொறுத்தே பார்வைகளும் அமையும். மரணங்கள் மலிந்த பூமியில் சவப்பெட்டிகள் செய்பவன் மகிழ்ச்சியாக இருப்பதைப் போலொத்ததெனும் குரூரமான உதாரணத்தையே இங்கும் சுட்டவேண்டியிருக்கிறது. இரக்கமேயில்லாமல் வெயில் எறித்து எரிக்கும் கொடுங்கோடை நாட்களில் சென்னையைச் சபித்திருக்கிறோம். அதிலும் க்குவரத்து நெரிசலுள் மாட்டிக்கொள்ள நேரும்போது உடல் கொதித்துப் போகிறது. மனம் கோபத்தினால்
செய்யப்பட்டதாகிவிடுகிறது. உரசினால் பற்றிக்கொள்ளுமோ என்றஞ்சுமளவிற்கு உடல்கள் வெயிலை வேண்டுமளவிற்குக் குடித்தபிறகே வீடு வந்தடைகிறோம்.இம்மாநகரின் நடுத்தர வர்க்கத்தவர்களால் குடிதண்ணீரை மட்டுமே வாங்கமுடிகிறது. சுத்தமான காற்று இன்னும் விற்பனைக்கு வரவில்லை.மின்விசிறிகள் தோற்றுக்கொண்டிருக்கும் நெருப்புத்துண்டங்களாலாக்கப்பட்ட வீடுகளுள் வாழ்வதென்பதையும் வாழ்க்கை என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது.இடுப்புகளின் நொடிப்புகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் தொலைக்காட்சித் திரைகளில் எப்போதாவது பச்சைப் புல்வெளிகளும் மலர்களும் தென்படுகின்றன.

இன்றைக்கு சென்னையில் மழை பெய்தது நண்பர்களே! மழை என்றால் பெருமழை ஜன்னல்கள் சட்டங்களோடு அடித்துக் கும்மாளமிட்டன. 'பல்கனி'யில் கிடந்த 'அன்னா கரீனினா' நனைந்துபோனாள். வாசலில் நிற்கும் பெயர்தெரியாத மரம் மஞ்சளாய் பூத்திருக்கிறது. இந்த ஜன்னல் வழியாகப் பார்க்கும்போது மலைகளற்ற ஊட்டி போலிருக்கிறது என்று சொன்னால் நீங்கள் கோபித்துக்கொள்ள மாட்டீர்கள்தானே…? வேப்பமரங்களின் சிருங்காரமோ சொல்லத் தேவையில்லை.இலைகள் சுருண்ட கிளைகள் மழையின் அழகில் நாணித் தலையைத் தாழ்த்திக்கொண்டு விட்டாற்போலிருக்கின்றன. 'என்னைக் குளிர்த்து'என்று அவை தாழ்ந்து நிற்கிற அழகை அள்ளிக் கண்களுள் நிறைத்துக்கொள்ள இயலாமற் போனதையிட்டு வருத்தமாக இருக்கிறது. யன்னல் வழியாகத் தெரிந்த கடல் சற்று முன்னர் வரை வானத்தின் கருஞ்சேலையில் பாதியைத் தானும் இழுத்துப் போர்த்திக்கொண்டு
படுத்திருந்தது. கருமை தண்ணீராகக் கரைந்து வழிந்ததும் இப்போது நீலமாய் தன்னியல்பாய் அலையடித்துக்கொண்டிருக்கிறது.

சென்னையோ மடகாஸ்கரோ காலநிலையைப் பொறுத்தே நகரங்களின், கிராமங்களின் முகங்கள் எழுதப்படுகின்றன. இங்கே மழை தெருவெல்லாம் சிறுபிள்ளைபோல துள்ளிவிழுந்துகொண்டிருந்தபோது, விருதுநகரில் வசிக்கும் நண்பர் ஒருவர் கோபத்தோடு சொன்னார் 'இங்கே மொட்டை வெயிலடித்துக்கொண்டிருக்கிறது'என்று.'நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்'என்று கொசுறாய் ஒரு வரி சேர்த்துக்கொண்டார்.

மழை மலர்த்தும் வெயில் கொழுத்தும் சென்னையை வர வர பிடிக்கவாரம்பித்திருக்கிறது. பழகிய வீட்டைப் பிரிய மனம்வராத குடித்தனக்காரர்களைப் போல, இங்கு வாழும் நாட்கள் வளர வளர இந்த நிலத்துடனான நெருக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 'சென்னையில்
மரங்கள் இல்லை'என்பவர்களை ஒரு தடவை அடையாறு பக்கம் வந்து பார்க்கச் சொல்லவேண்டும். மரங்களடர்ந்த அந்தச் சாலையை மூடிய நிழல்கள் வெயிலுக்கு நிச்சயமாக வெறுப்பேற்றுவன.

'உலகம் அழிந்துபோகப்போகிறது... எல்லோரும் ஓடித் தப்பிக்கொள்ளுங்கள்'என்று யாரோ அப்போதுதான் வந்து அறிவித்துவிட்டாற்போல வீதிகளெங்ஙணும் வாகனங்கள் அலறியடித்துக்கொண்டு செல்வதைப் பார்க்கும்போது எரிச்சலாகத்தானிருக்கிறது.எங்கெங்கிலும் கையேந்தும் பிச்சைக்காரர்கள், தெருவோரங்களில் படுத்திருக்கும் நடைபாதைவாசிகள்,பசியோடு அலையும் தெருநாய்கள் இவர்களின்,இவற்றின் கண்களிலிருந்து குற்றவுணர்வோடு தப்பித்து ஓடவேண்டியுமிருக்கிறது. 'பக்கத்து வீட்டுக்காரனோடு தகராறு! குழந்தையைத் தரையில் அடித்துக் கொலை செய்த டீமாஸ்ரர்'என்ற பத்திரிகைத் தலைப்பைப் பார்த்துப் பதறவேண்டியிருக்கிறது. என்றாலும் 'போங்கடா… நீங்களும்…'என்று இந்த உயிரை எறிந்துவிட்டுப் பரலோகம் போய்விட முடிவதில்லை.

ஏனென்றால், இந்தச் சென்னையில் மரங்கள் இருக்கின்றன. பார்த்துக்கொண்டே…பார்த்துக்கொண்டே…. பார்த்துக்கொண்டே….இருக்கக்கூடிய கடல் இருக்கிறது.எப்போதாவது மழை பெய்கிறது. எனது புத்தக அலமாரியில் வாசிக்கப்படாத பல புத்தகங்கள் இருக்கின்றன.சில மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களுள் நல்ல இதயம் கொண்ட நண்பர்கள் இருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக நாங்கள்சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது விமானங்கள் வந்து குண்டு போடுவதில்லை.காலையில் நிச்சயமாக எழுந்திருக்க முடியும் என்ற நம்பிக்கையோடு உறங்கச்செல்ல முடிகிறது. மிக முக்கியமாக, பிள்ளைகள் உயிரோடு இருக்கிறார்கள்.

Comments

//மிக முக்கியமாக, பிள்ளைகள் உயிரோடு இருக்கிறார்கள்.//

மற்ற எல்லாவற்றிலும் கடைசி வரி சொல்லும் சேதி தான் .............
தமிழ்நதியின் எழுத்துக்கள் = பகலில் தனித்தலையும் சூரியன்...

ம்ம்ம்ம்ம்
உங்கள் பார்வையில் சென்னை அருமையாக சொல்லியுள்ளீர்கள்.
சென்னை என்ற நகரின் இயல்பென்பது அதன் மக்களின் இயல்பே. அதற்கு என எதுவும் இல்லை!

உங்கள் முந்தைய வசிப்பிட நினைவுகளின் அடிப்படையில் சொன்னது , மிகவும் யதார்த்தமாக இருக்கிறது. வாழ்கை முழுவதும் தேடல்களும் ஓடல்களும், நிர்பந்தங்களும் என மனுச பயலின் வாழ் நாள் ஓடிவிடுகிறது!
நந்தா said…
கட்டுரை எனும் வடிவத்திலும் தமிழ் நதியின் எழுத்துக்கள் அழகாகவே தெரிகின்றன. அது சரி சுறாமீனுக்கு நீந்தக் கற்றுத் தர வேண்டுமா என்ன???

சென்னையப் பற்றிய உங்களது பார்வை அழகாய் இருக்கிறது. கடைசிப் பகுதிகளில் சோகத்தை இழைத்திருக்கிறது.

கடைசி ப்குதியைப் பற்றி என்னென்னமோ சொல்லணும்னு ஆடைதான். என்னத்தை சொல்ல. போக்கா நீ ரொம்ப ஃபீல் பண்ண வெச்சுட்ட....

http://blog.nandhaonline.com/
நெடுநாட்களான பின் உங்களின் எழுத்தை வாசிக்க வாய்ப்பளித்த சென்னைப்பட்டினத்தாருக்கு நன்றி. :)
Rajkumar said…
Annae,
Neenga dindigul la engae iruntheenga? Naan East Govindapuram

Popular posts from this blog

மெட்ராஸ் பாஷை - ஒரு இலக்கண பார்வை

வாராரு ஆட்டோகாரரு....

27D