எழுத்தறிய நூலகங்கள்
பள்ளியில் படிக்கும் போதே நூலகத்தில் உறுப்பினராகி புத்தகங்கள் படிக்க வேண்டும் என்ற ஆசை நிறைவில்லை. சென்னைக்கு வந்ததும் அந்த எண்ணம் மீண்டும் உயிர் விட்டது. கல்லூரி விடுதியில் சேர்ந்த உடன் நடக்கும் ராகிங் வேடிக்கைகள் ஆரம்பித்த காலம். விடுதியில் தங்காத சில மாணவர்களுடன் சேர்ந்து கலாய்ப்பதற்காக ஒரு இரண்டாம் ஆண்டு மாணவர் மிதிவண்டியில் உட்கார வைத்து புரசைவாக்கம் கூட்டிப் போனார். போகும் வழியில் "இந்த ரோட்டில் அந்த பக்கம் அமெரிக்கன் லைப்ரரி இருக்கு, உனக்குப் புத்தகம் படிக்க ஆர்வம் இருக்கில்லையா, போய் மெம்பராயிக்கோ" என்று கைகாட்டி விட்டுக் கூட்டிப் போயிருந்தார். ஆனால், முதலில் வாய்த்தது கன்னிமரா போவதுதான். இரண்டாமாண்டு படிக்கும் போது உறுப்பினர் ஆகியே விட்டேன். கன்னிமரா நூலகத்தில் உறுப்பினராவதில் அப்போது இருந்த சிரமம், விண்ணப்பப் படிவம் பெறுவதுதான். ஒவ்வொரு முறை போகும் போதும், படிவம் வைத்திருப்பவர் இருக்கையில் இருக்க மாட்டார், இருந்தால் படிவம் தீர்ந்து போயிருக்கும், என்று ஒரே இழுத்தடிப்பு. மனம் தளராமல் மீண்டும் மீண்டும் முயன்றதில் ஏழாவது அல்லது எட்டாவது முயற்சியில் ஒரு படிவம் கிடைத்தே வ...