Sub-way கலாட்டா

இரு வாரங்களுக்கு முன்பு, வார விடுமுறைக்கு ஊருக்கு சென்று விட்டு கோவை விரைவுவண்டியில் கிளம்பி சென்னை வந்து சேர்ந்தேன். இரவு சுமார் 9:45 மணி இருக்கும். சென்னை மத்திய இரயில் நிறுத்தத்தில் இருக்கும் சுரங்க வழியில் புகுந்து, சுரங்கத்தில் சாலையை கடந்து, தாம்பரம் நோக்கிச் செல்லும் இரயில் பிடிக்க சுரங்க பாதையை உபயோகித்தேன். சுரங்கப்பாதையை உபயோகித்து சாலையை கடக்க வேண்டும் என்பது இலக்கு. நடந்தது?

அன்று என்ன ஆயிற்றோ? சுரங்கப்பாதை உள்ளே மின்சாரம் இல்லை. ஒரே (ஒரு?) இருட்டு. சுரங்க பாதையை உபயோகிப்பவர்கள் உள்ளே தங்கள் கைபேசியில் இருக்கும் சிறு வெளிச்சத்தின் மூலம் கடந்தார்கள். கைபேசி இல்லாதவர்கள், அடுத்தவர் வெளிச்சத்தை இரவல் வாங்கி உபயோகித்தார்கள். அதுவும் உள்ளே கடப்பவர்களைப் பார்க்க வேண்டுமே. உள்ளே இறங்கியதும் வேக வேகமாக நடக்க ஆரம்பித்தார்கள். எல்லாம் திருட்டு பயம் தான். அது அவர்கள் நடையில் நன்றாகவே தெரிந்தது. எனக்கோ geographical பிரச்சினை. கண்ணை கட்டி ஒரு சுற்று சுற்றி விட்டால் எந்த திசையில் இருக்கிறோம் என்பதே தெரியாது. (இந்த பிரச்சினை பெரும்பாலும் பெண்களுக்கு அதிகமாம்).

சுரங்க அமைப்புப் படி, நான் சுரங்கத்தில் இறங்கி நடந்து, கொஞ்ச தூரத்தில் இடது பக்கம் திரும்பி நடந்து, பின் படிகள் ஏற வேண்டும். உள்ளே அங்கிருந்த ஒரு நடை பாதை கடைக்காரர் இரு மெழுகுவர்த்திகளை ஏற்றி தொண்டு புரிந்தார். எனக்கு முன்னால் சென்ற பெண்மனி ஒருவர் அவசர அவசரமாக நடந்துக் கொண்டிருந்தார். உள்ளே நடந்த இந்த கலாட்டாக்களை கவனித்து குழம்பிப் போய், கவணிக்காமல், இடது பக்கம் திரும்பாமல் நேரே இருந்த படி வழியாக மேலே வந்தேன். புரிந்ததா என் குழப்பம். மேலே வந்து பார்க்கிறேன், ஒரு கணம் எங்கே இருக்கிறேன் என்று குழம்பி விட்டேன். சில வினாடிகளில் சுதாரித்துக் கொண்டு நான் செய்த தவறை தெரிந்து கொண்டு எனக்கு மனதுக்குள் ஒரே சிரிப்பு. என்னையும் அறியாமல் சிரித்து விட்டேன். எதிரில் இருந்த காவல்துறை ஊழியர் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார் (அல்லது, ஒரு மாதிரியாக பார்ப்பது போன்ற உணர்வு). என் முட்டாள்தனத்தை உணர்ந்து, பின் என்ன செய்ய, மீண்டும் சுரங்கப்பாதை உபயோகித்து சாலையை கடந்தேன்.

Comments

Popular posts from this blog

மெட்ராஸ் பாஷை - ஒரு இலக்கண பார்வை

27D

வாராரு ஆட்டோகாரரு....